டைனோசர்கள் அழிந்தபோது தப்பிய 'அணில்', மனிதர்கள் பிறக்க காரணமானது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், மார்த்தா ஹென்ரிகெஸ்
- பதவி, பிபிசி ஃப்யூச்சர்
இருள், சாம்பல், கொடிய வெப்பத்தின் மூலம், ஒரு சிறிய உடலில் முடிகளைக் கொண்ட உயிரினம், பூமியின் வரலாற்றில் நிகழ்ந்த மோசமான பேரழிவு விட்டுச் சென்ற நரகத்திற்கு நடுவில் ஒடியது. அது இடிபாடுகளுக்கு நடுவில் சாப்பிட ஒரு பூச்சியைப் பிடித்துக்கொண்டு தன் தங்குமிடத்திற்குத் திரும்பியது.
அந்த உயிரினத்தைச் சுற்றியும் பல தலைமுறைகளாகப் பாலூட்டி உயிரினங்களை அச்சுறுத்திய டைனோசர்களின் இறந்த, இறந்து கொண்டிருந்த உடல்கள் உள்ளன.
பத்து கிமீ அகலமுள்ள சிறுகோள் இன்றைய மெக்சிகோவின் கடற்கரையில் ஒரு பில்லியனுக்கும் அதிகமான அணுகுண்டுகளின் சக்தியுடன் மோதிய ஆரம்ப வாரங்கள், மாதங்களில் கிரெட்டேசியஸ் ஊழி அதன் முடிவை நெருங்கியது.
அதைத்தொடர்ந்து வந்த பேலியோசீன் ஊழிக்காலத்தின் தொடக்கத்தில், காட்டுத்தீ ஏற்பட்டது, கடற்கரைகளைத் தாக்கி சுனாமி பேரலைகள் தாக்கின, ஆவியான பாறைகள், வளிமண்டலத்தில் தூசுகளும் சாம்பல்களும் பல மைல்களுக்கு உயர்ந்திருந்தன.
ஆனால், அவ்வளவுக்கு நடுவிலும் இந்த உலகம் உயிர்கள் அற்றதாக இருக்கவில்லை.
அந்தப் பேரழிவில் தப்பிப்பிழைத்த உயிரினங்களில், முதன்முதலில் அறியபட்ட பிரைமேட்டான பர்க்டொரியஸ், மூஞ்சூறு மற்றும் சிறிய அணில் இரண்டும் கலந்த தோற்றம் கொண்டிருந்தது. இந்த உலகளாவிய பேரழிவுக்கு நடுவில், அதன் எண்ணிக்கை நிச்சயம் குறைந்திருக்கும். ஆனால், மொத்தமாக அழிந்துபோகாமல் உயிர் பிழைத்தன.
சிறுகோள் தாக்கி பூமியின் முக்கால்வாசி உயிரினங்களை அழித்தவுடன் இருந்த ஆரம்பக்கால பாலூட்டிகளின் வாழ்க்கை இப்படித்தான் இருந்தது. 252 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு நிகழ்ந்த இந்தப் பெருமரணம் (கிரேட் டையிங்), மிகவும் கொடியதாக இருந்தது. கடல்களில் 95% உயிர்களையும் நிலத்தில் 70% உயிர்களையும் கொன்றழித்தது.
நம் மூதாதைகள் உட்பட, சிறியளவில் பாதிக்கப்படக்கூடிய வகையில் இருந்த பாலூட்டி உயிரினங்கள் எப்படி டைனோசர்களை அழித்த பேரழிவிலிருந்து தப்பித்தன?
கிரெட்டேசியஸ் ஊழிக்காலத்தை முடிவுக்குக் கொண்டு வந்த சிறுகோள், டைரனோசோரஸ், டிரைசெராடாப்ஸ் போன்ற பிரபலமான டைனோசர்களையும் “நரகத்திலிருந்து வந்த கோழி” எனப் பொருள்படும் என்ற பெயருடைய அன்ஸு போன்ற அதிகம் அறியப்படாத வினோதமான உயிரினங்களையும் அழித்தது.
வாத்து போன்ற முக அமைப்புடைய டைனோசர்கள், நீண்ட கழுத்துடைய டைனோசர்கள், உடல் முழுவதும் கவசம் அமைப்பு கொண்ட டைனோசர்கள், என்று அனைத்தும் மிக விரைவாக இறந்துவிட்டன.
பிற்கால கிரெட்டேசியஸ் காலத்தில் ஆதிக்கம் செலுத்திய இந்த அரசர்கள், அரச்களின் நிழலில், பர்கடோரியஸ் போன்ற பாலூட்டிகள் மிகச் சிறியனவாகவும் மோசமான நிலையிலும் இருந்தன. அவற்றில் அலவும் இன்று எலி, அணில் போன்ற கொறி உயிரினங்கள் ஆக்கிரமித்திருக்கும் பல்வேறு வகையான சூழலியல் அமைப்புகளில் நிரம்பியிருந்தன.

பட மூலாதாரம், Andrey Atuchin
நம் மூதாதைகள் உட்பட, வெளித்தோற்றத்திற்கு மிகவும் பாதிக்கப்பட்டக்கூடிய நிலையில் இருந்த இந்த உயிரினங்களால், டைனோசர்களைப் போன்ற பேருயிர்களை அழித்த பேரழிவில் இருந்து தப்பிக்க முடிந்தது.
தி ரைஸ் அண்ட் ரெய்ன் ஆஃப் தி மாம்மல்ஸ் என்ற நூலின் ஆசிரியரான ஸ்டீவ் ப்ரூசாட்டேவும் எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் உள்ள அவரது சகாக்களும் இதே கேள்விக்கான விடையைத் தேடினார்கள்.
சிறுகொள் தாக்கிய நாள், பாலூட்டிகள், பறவகள் (பறவை டைனோசர்கள்), ஊர்வன உட்பட எந்த உயிரினத்திற்குமே உயிர் பிழைக்க வேண்டியிருந்த மிகவும் மோசமான நாள் தான் என்று வலியுறுத்துகிறார், ப்ரூசாட்டே.
“இது சாதாரண சிறுகோள் இல்லை. குறைந்தபட்சம் கடந்த அரை பில்லியன் ஆண்டுகளில் பூமியைத் தாக்கிய மிகப்பெரிய சிறுகோள் இது.
ஏற்கெனவே கிரெட்டேசியஸ் காலத்தின் பிற்பகுதியில் பாலூட்டிகளின் வியக்கத்தக்க அளவில் அதிகமான பன்மை பாலூட்டிகளிடையே இருந்தது என்று எடின்பரோவில் பாலூட்டி பழங்காலவியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் சாரா ஷெல்லி கூறுகிறார்.
“அவற்றில் பலவும் பூச்சிகளை உண்ணும் சிறிய உயிரினங்களாக மரத்தில் வாழக்கூடிய அல்லது துளையிட்டு வாழக் கூடியவையாக இருந்தன,” என்று ஷெல்லி கூறுகிறார்.
இருப்பினும், அனைத்து பாலூட்டிகளுமே பூச்சிகளை உண்ணக் கூடியவையாக இருக்கவில்லை. பழங்கள், விதைகள், பருப்பு வகைகளைச் சாப்பிடக்கூடிய பாலூட்டிகளும் இருந்தன, மாமிச உண்ணிகளும் இருந்தன. அந்தக் கால கட்டத்தில் சுமார் 5 கிலொ எடையுள்ள ஒரு வீட்டுப் பூனையின் அளவில் இருந்த டிடெல்ஃபோடான் என்ற மாமிச உண்ணி இருந்தது.
“அதன் மண்டை ஒடு, பல் ஆகியவற்றின் அமைப்பு மிகவும் சக்திவாய்ந்த கடிக்கும் திறனைக் கொண்டிருந்தது. எனவே அது நிச்சயமாக மாமிச உண்ணியாக, எலும்புகளைக் கடிக்கக்கூடியதாக இருந்திருக்க வேண்டும்,” என்று ஷெல்லி கூறுகிறார்.

பட மூலாதாரம், Sarah Shelley
ப்ரூசாட்டின் கூற்றுப்படி, சிறுகோள் தாக்கியபோது இந்தப் பன்மைத்தன்மையின் பெரும்பகுதியை பாலூட்டிகள் இழந்தன. பத்து பாலூட்டி இனங்களில் ஒன்பது இனங்களில் இறந்துவிட்டன. இது உயிர் பிழைத்தவற்றுக்கு எதிர்பார்க்காத வாய்ப்பைக் கொண்டு வந்தது.
“எலியின் அளவுக்கு, மறைந்து வாழும் ஒரு சிறிய சாந்தமான , நமது இந்தச் சிறிய மூதாதைகளில் நீங்களும் ஒருவர் எனக் கற்பனை செய்து பாருங்கள். மறைந்திருந்து வெளியே வரும்போது திடீரென டி.ரெக்ஸ்கள் அனைத்தும் இல்லாமல் போய்விட்டன, நீண்ட கழுத்துடைய டைனோசர்கள் போய்விட்டன, உலகம் உங்களுக்காகத் திறந்துள்ளது,” என்று கூறுகிறார் ப்ருசெட்.
இந்தப் பேரழிவு, இறுதியில் நீலத் தீமிங்கிலங்கள், சிறுத்தைகள், டார்மிஸ் ஆகியவற்றோடு நம்மையும் கொண்டுவந்த பன்முகத்தன்மை உருவாகும் வாய்ப்பை ஏற்படுத்தியது.
ஆனால், தொடக்கத்தில் ஒரு சிறு இடையூறு ஏற்பட்டது. உலகின் காடுகள் காட்டுத்தீயால் அழிக்கப்பட்டுவிட்டன. வானம் சாம்பல் நிறைந்து, சூரிய ஒளியை ஊடுருவவிடாமல் மறைத்திருந்தது. இது தாவரங்கள் ஒளிச்சேர்க்கையில் ஈடுபடுவதைத் தடுத்தது.
பூமியின் மேற்பரப்பு வெப்பம் மிகத் தீவிரமாக மாறியது. பிறகு, 3 ஆண்டுகளுக்கும் மேலாக சராசரி வெப்பநிலை 2 டிகிட் செல்ஷியஸை விடக் குறையும் அளவுக்கு குளிர்காலம் கடுமையாக இருந்தது.
பாலூட்டிகளின் மிகவும் ஆபத்தான வேட்டையாடிகள் பல அழிந்துவிட்டன. ஆனால், உலகமே கற்பனை செய்யமுடியாத அளவுக்கு வாழ்க்கைச் சூழலுக்கு விரோதமாகிவிட்டது.

பட மூலாதாரம், Sarah Shelley
இந்தச் சூழலில் பாலூட்டிகள் என்ன செய்தன?
பாலூட்டிகளின் உடல் அளவு, முன்பு டைனோசர்களுடனான வாழ்விடப் போட்டி, வேட்டையாடுதல் ஆகிய காரணங்களால் இயற்கையாகக் கட்டுப்படுத்தப்பட்டது. பிறகு, “பேரழிவு” இந்த உயிரினங்களுக்கு ஒரு வாய்ப்பை உருவாக்கியது.
“இந்தப் பாலூட்டிகள் ஒருவேளை எலி அல்லது எலியைப் போன்ற தோற்றத்தோடும் செயல்பாடுகளோடு இருந்திருக்கலாம். பொதுவாக அவர்கள் மிகவும் அநாமதேயமாக இருப்பார்கள். ஆனால், இப்போது புதிய உலகில், அவை பெருகின. ஏனெனில், பேரழிவுக்குப் பிறகான அந்த பயங்கரமான நிலைமை அவற்றுக்குப் பொருத்தமாக அமைந்திருந்தன,” என்கிறார் ப்ருசட்.
அளவில் சிறியதாக இருப்பதன் மூலம் உயிரினங்கள் தங்களின் எண்ணிக்கையப் பெருக்கிக் கொள்ள உதவியிருக்கலாம். நவீன உயிரினங்களில், “ஓர் உயிரினம் பெரிதாக இருந்தால், அதன் கர்ப்பகாலம் நிளமாக இருக்கும்,” என்று எடின்பர்க் பல்கலைக்கழகத்தில் பாலூட்டி பழங்காலவியல் துறையில் முதுகலை ஆராய்ச்சியாளராக இருக்கும் ஆர்னெல்லா பெர்ட்ராண்ட் கூறுகிறார்.
சான்றாக, ஆப்பிரிக்க யானை 22 மாதங்கள் கர்ப்பமாக இருக்கும். அதேநேரம், எலியின் கர்ப்பகாலம் 20 நாட்களே நீடிக்கும். பேரழிவை எதிர்கொண்டுள்ளதால், எலி அளவிலுள்ள உயிரினங்களுக்கு அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்கும் வாய்பை அதிகம் கொண்டிருக்கும்.
கர்ப்பகாலம் மட்டுமின்றி பெரிய உடல் கொண்ட உயிரினம் பாலியல் முதிர்ச்சியை அடைய அதிக நேரம் எடுக்கும். “டைனோசர்கள் வயது வந்தவையாக வளர சிறிது காலம் எடுத்தது. டி.ரெக்ஸ் போன்றவற்றுக்கு சுமார் 20 ஆண்டுகள் ஆனது,” என்கிறார் ப்ரூசட்.
நிலத்தடிக்குச் செல்ல வேண்டும்
சிறுகோளின் பின்விளைவுகளில் இருந்து பாலூட்டிகள் எவ்வாறு தப்பிப் பிழைத்தன என்பதற்கான மற்றொரு குறிப்பு, பேலியோசீன் வடிவங்களில் இருந்து வருகிறது. ஷெல்லி கணுக்கால் எலும்புகளை பகுபாய்வு செய்து, ஆரம்பக்கால பேலியோசீன் பாலூட்டிகள் ஒன்றுக்கொண்டு எப்படி ஒத்திருந்தன என்பதையும் இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பாலூட்டிகளையும் ஆராய்ந்து பார்த்தார்.
“பேலியோசீன் பாலூட்டிகள் வித்தியாசமானவை என்பதை நாங்கள் கண்டறிந்தோம். அவை நவீன பாலூட்ட்களில் இருந்து வேறுபட்டவை. அவற்றை ஒன்றாக இணைப்பது, அவை கொண்டிருக்கும் வலுவான உருவ அமைப்புகள் தான்,” என்கிறார் ஷெல்லி.
“இதன்மூலம், அவை நிலத்தடியில் தோண்டிச் சென்றுகொள்வதன் மூலம், பேரழிவுக்காலத்தின் உடனடித் தாக்கத்தின்போது கடுமையான வெப்பம், கடும் குளிர் ஆகியவற்றில் இருந்து தப்பித்துக்கொள்ள முடிந்தது. அவற்றின் சந்ததிகளும் அவற்றுக்கு இருப்பதைப் போலவே வலுவான உடல் வடிவத்தைப் பெற்றன. பேலியோசீன் காலத்தில் அந்த 10 மில்லியன் ஆண்டு காலத்திற்குள் நீங்கள் அதைப் பார்க்கலாம்,” என்கிறார் ஷெல்லி.
பாலூட்டிகள் உண்மையில் நிலத்தடியில் உயிர் வாழ்ந்தன என்றா, அவை தம்மைஹ் தாமே புதைத்துக் கொள்வதன் மூலமோ அல்லது மற்றவற்றின் நிலத்தடி தங்குமிடங்களைப் பயன்படுத்துவதன் மூலம் இருந்திருக்கலாம். “காடு இல்லாமல் போனதால், மரங்களில் வாழும் அனைத்து உயிரினங்களுக்கும் வாழ்விடம் இல்லாமல் போனது. ஆகவே, இந்தப் பாலூட்டிகளில் சுறுசுறுப்பான நடத்தைகளில் ஈடுபடும் உயிரினங்கள் குறைவாகவே இருந்தன என்பது இதுகுறித்த கருதுகோள்களில் ஒன்று,” எனக் கூறுகிறார் பெர்ட்ராண்ட்.

பட மூலாதாரம், Sarah Shelley
பிழைத்திருக்க எதை வேண்டுமானாலும் சாப்பிட வேண்டும்
சிறுகோள், பூமியின் உணவுச் சங்கிலிகளின் முதல் இணைப்பாக இருக்கும் பெரும்பாலான தாவரங்களை அழித்துவிட்டது. பொதுவான பாலூட்டிகள், குறிப்பிட்ட உணவுமுறைகளைக் கொண்ட பாலூட்டிகளைக் காட்டிலும் சிறப்பாகச் செயல்பட்டன.
“அழிவின் மூலம் முன்னிலைக்கு வந்த உயிரினங்கள், எந்தவித குறிபிட்ட உணவுமுறையும் இல்லாமல் இருந்ததன் அடிப்படையில் உயிர் பிழைத்தன,” என்கிறார் ஷெல்லி.
சான்றாக, டிடெல்ஃபோடான்(பூனை அளவில் இருந்த மாமிச உண்ணி, பேரழிவுக்குப் பிறகு எண்ணிக்கையில் குறைவாக இருந்த உயிரினங்களை வேட்டையாடியது. “அது குறிப்பிட்ட உணவுமுறையைக் கொண்டிருந்ததால், உயிர் பிழைப்பதில் அதற்கிருந்த முக்கிய இடத்தை இழந்தது,” என்று ஷெல்லி கூறுகிறார்.
“அதேநேரம் ஒரு சிறிய உயிரினம், உணவுமுறை, வாழ்வுமுறை ஆகியவற்றை விரைவாக மாற்றியமைத்துக்கொள்ள முடியும். அது அழிவிலிருந்து தப்பிக்க நல்ல வழி,” எனக் கூறினார்.
குறிப்பாக, விதை உண்ணிகளுக்கு அதிர்ஷ்டம் இருந்தது. “விதைகள் ஒர் உணவு வங்கி. அவை ஏற்கெனவே அவற்றை உண்ணும் திறன் கொண்ட எந்த உயிரினத்திற்கும் நல்வாய்ப்பு கிடைக்கும். பரிணாமம் வேட்டையாடிகளுக்கு விதை உண்ணும் திறனை வழங்கவில்லை. ஆனால், சில பாலூட்டிகளின் சிறபு விதை உண்பதாக இருந்தது. ஆகா, என்ன வகையான நல்ல திருப்புமுனை இது!” என்று வியக்கிறார் ப்ரூசட்.
பேரழிவு உயிரினங்கள் தம்மை நிலைநிறுத்திக்கொள்ள உதவியதையும் தாண்டி, கடும் குளிர்காலம் மங்கியபோது விதைகள், காடுகளும் பிற தாவரங்களும் தம்மை மீட்டுருவாக்கிக் கொள்ள உதவியது. “மண்ணுக்குள் விதைகள் உயிர்பிழைத்தன. பிறகு, சூரிய ஒளி மீண்டும் ஒளிரத் தொடங்கியதும் அவை வளரத் தொடங்கின,” என்கிறார் ப்ரூசட்.

பட மூலாதாரம், Getty Images
பாலூட்டிகளுக்குச் சாதகமான டைனோசர்களின் அழிவு
பேலியோசீன் காலம் செல்லச் செல்ல, சூழலியல் அமைப்புகள் மீண்டு வந்தன. பறவையல்லாத டைனோசர்கள் இல்லாமலிருந்த வாழ்விடங்களை பாலூட்டிகள் நிரப்பத் தொடங்கின.
“டைனோசர்கள் அழிந்தவுடன் பாலூட்டிகள் உடனடியாகப் பன்மைப்படத் தொடங்கின. மேலும், அவை சாத்தியமான அனைத்து வழிகளிலும் மிகவும் மாறுபட்டவையாக மாறத் தொடங்கின,” என்கிறார் பெர்ட்ராண்ட்.
அந்த மாற்றங்களில் ஒன்று, பாலூட்டிகளின் உடல் வேகமாகப் பெரிதாகின. ஆனால், பாலூட்டிகளின் மூளை அளவு அந்த வேகத்தோடு பெரிதாகவில்லை என்று எடின்பர்க் குழுவினர் கண்டறிந்துள்ளன.
“இதைக் கண்டறிந்ததை மிகவும் முக்கியமானதாக நான் கருதுகிறேன். ஏனென்றால், புத்திசாலித்தனம் தான் நம்மை உயிர் பிழைக்கச் செய்கிறது, பூமியில் ஆதிக்க செலுத்த வைக்கிறது என்று நாம் நினைக்கலாம். ஆனால், தரவுகளின்படி, சிறுகோள் தாக்கத்திற்குப் பிறகு உயிரினங்களை உயிர் பிழைக்க வைத்தது அளவில் பெரிய மூளை இல்லை,” என்கிறார் பெர்ட்ராண்ட்.
உண்மையில், ஆரம்பக்கால பேலியோசீன் பாலூட்டிகளின் உடல் அளவோடு ஒப்பிடும்போது பெரிய மூளையைக் கொண்ட பாலூட்டிகளுக்கு அதுவே பாதகமாக இருந்திருக்கலாம்.
“எதற்காக மூளை பெரிதாக இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மூளை பெரிதாக இருந்தால், அதைப் பராமரிப்பதும் சிரமமாகிறது. அதற்கேற்ப போதுமான உணவு இல்லாவிட்டால் உயிரிழக்க நேரிடும்,” என்கிறார் பெர்ட்ராண்ட்.
அதற்கு மாறாக, அளவில் பெரிதாகவும் துணிச்சலாகவும் இருப்பது சாதகமான தகவமைபாக இருக்கும். தாவர உண்ணியான, குளம்புகளைக் கொண்ட பாலூட்டிகளுடன் தொடர்புடைய எக்டோகோனஸ் என்ற உயிரினம் பேரழிவு நிகழ்ந்து சில லட்சம் ஆண்டுகளுக்குள் சுமார் 100 கிலோ அளவுக்கு பெரிதானது.
புவியியல் கால அளவுகோலின்படி இதுவொரு கண் சிமிட்டும் நேரம் தான். “அவை அவ்வளவு விரைவாக அளவில் பெரிதாகி, விரைவாக குறிப்பிட்ட உணவுமுறையைப் பெறுவது உண்மையில் சாதகமானது இல்லை. பெரிய தாவர உண்ணிகள் வந்தவுடன், கூடவே பெரிய மாமிச உண்ணிகளும் விரைவாகத் தோன்றத் தொடங்குகின்றன,” என்கிறார் ஷெல்லி.

பட மூலாதாரம், NASA
இன்னும் பல மர்மமான பாலூட்டிகளும் உள்ளன. அவை வேகமாகவே அளவில் பெரிதாகின. “டேனியோடோன்ட்ஸ் போன்றவை மிக விரைவாகவே பெரிதாகிவிட்டன,” என்கிறார் ஷெல்லி. பேரழிவில் பிழைத்த உயிரினங்களில் நிகழ்ந்த இந்த விரைவான மாற்றம் நீண்ட காலமாகக் கவனிக்கப்படவில்லை என்கிறார் ஷெல்லி.
“பேரழிவில் பிழைத்த உயிரினங்கள் பழைமையானவை, பொதுமைப்படுத்தப்பட்டவை என்று அழைக்கப்படுகின்றன. ஆனால், உண்மையில் இல்லை. அவை வேறுபட்டவை. அவற்றின் மூதாதையர்கள் வாழ்க்கை வரலாற்றில் இரண்டாவது பெரிய பேரழிவில் இருந்து தப்பின. அவை பொதுமைப்படுத்தப்பட்ட முட்டாள்கள் இல்லை, அவை உயிர் பிழைத்ததன் மூலம் தங்கள் வழியை ஒருங்கிணைத்தன. அவை உயிர் பிழைத்து, செழித்து வளர்வதை நன்றாகச் செய்தன.”
பல வழிகளில், இந்தப் பாலூட்டிகள் அற்புதமான, அதிசிறப்பு வாய்ந்த டைனோசர்கள் விட்டுச்சென்ற வெற்றிடங்களுக்குள் காலடி எடுத்து வைத்தன.
“இத்தனை கோடி ஆண்டுகளாக டைனோசர்கள் இருந்து, அவை விமானங்களின் அளவுக்கு ராட்சதர்களாகப் பரிணமித்ததைப் போன்ற உன்னதமான விஷயங்களை நினைத்தால் ஆச்சர்யமாக இருக்கிறது. பிறகு பூமி விரைவாக மாறியபோது அனைத்தும் ஒரு நொடியில் நொறுங்கியும் போயின. அவை அந்தப் புதிய நடைமுறைக்கு மிகவும் பொருத்தமற்றவையாகின. அவற்றால் தகவமைத்துக்கொள்ள முடியவில்லை,” என்கிறார் ப்ரூசட்.
“நம்முடைய இருப்பு இங்கு தற்செயலாக நிகழ்ந்தது. சிறுகோள் பூமியைத் தவறவிட்டிருக்கலாம். அது பூமியின் வேறொரு பகுதியில் பெருங்கடலில்கூட விழுந்திருக்கலாம். அது, உயிர் பிழைத்திருக்க வேண்டிய உயிரினங்கள் எவை என்பதில் வித்தியாசத்தை ஏற்படுத்தியிருக்கும்,” என்று எடின்பர்க் குழு கூறியது.
அந்தச் சிறுகோள் தற்செயலாக விழுந்த இடம், அதைத் தொடர்ந்து நடந்த நிகழ்வுகள், டைனோசர்களின் அழிவுக்கும் அங்கிருந்து பாலூட்டிகளின் பெருக்கம் தொடங்கவும் வித்திட்டது. மனிதர்கள் உட்பட இன்று வாழ்ந்து கொண்டிருக்கும் பாலூட்டி உயிரினங்களுக்கு அது தற்செயலாக நல்ல காரியமாக அமைந்துவிட்டது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் டிவிட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












