ஆகாஷ் மத்வால்: 5 ரன்னுக்கு 5 விக்கெட் சாய்த்துமும்பை இந்தியன்ஸ் 'மாயாவி'

MI vs LSG

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சிவகுமார் இராஜகுலம்
    • பதவி, பிபிசி தமிழ்

ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியைப் போலவே மும்பை இந்தியன்ஸ் அணியும் வரலாற்றை மாற்றி எழுதி இரண்டாவது தகுதிச்சுற்றுப் போட்டியை எட்டியுள்ளது. அதாவது, குஜராத் டைட்டன்சை முதன் முறையாக சிஎஸ்க. வென்றதைப் போல, மும்பை இந்தியன்சும் முதன் முறையாக லக்னௌ சூப்பர் ஜெயென்ட்ஸ் அணியை வீழ்த்தியுள்ளது.

இந்தப் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் வெற்றிக்கு வழிவகுத்தது எது? லக்னௌவின் திட்டங்கள் தோற்றுப் போனது எஙகே? மும்பையின் வெற்றிக்கு வழிகுத்த அந்த 2 ஓவர்களில் நடந்தது என்ன? 5 ரன்களை மட்டுமே கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்திய மும்பையின் மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் ஐ.பி.எல்,லில் புரிந்த சாதனை என்ன?

புள்ளிவிவரமும், முந்தைய வரலாறும் லக்னௌ அணிக்கே சாதகமாக இருந்தன. ஐபிஎல் தொடரில் புதிதாக உதயமான இரு ஜாம்பவான்ககளில் ஒன்றான லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியுடன் இதற்கு முன்பு மோதிய 3 ஆட்டங்களிலும் மும்பை அணி தோல்வியைச் சந்தித்திருந்தது. நடப்புத் தொடரில் லீக் சுற்றின் கடைசிப் போட்டி முடிவு தெரியும் வரை காத்திருந்த தட்டுத் தடுமாறியே அந்த அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியிருந்தது.

இந்த அம்சம் லக்னௌவுக்கு சாதகமாக அமைந்திருந்த அதேநேரத்தில், பிளேஆஃப் சுற்றில் அதிகபட்ச வெற்றி சதவீதத்தைக் கொண்டிருக்கும் அணி என்பது மும்பை இந்தியன்சுக்கு உத்வேகம் தரும் ஒன்றாக அமைந்திருந்தது.

சென்னை ஆடுகளத்தின் தன்மைக்கு ஏற்ப வியூகம்

சென்னை ஆடுகளம் மெதுவானது, சுழற்பந்துவீச்சுக்கு ஒத்துழைக்கக் கூடியது என்பதைக் கருத்தில் கொண்டே இரு அணிகளும் ஆடும் லெவனை தேர்வு செய்திருந்தன.

நடப்புத் தொடரில் லக்னௌ வீரர்கள் ஆஃப் ஸ்பின்னுக்கு திணறியதைக் கருத்தில் கொண்டு மும்பை அணி ஹிரித்திக் ஷோகீனுக்கு அணியில் இடம் கொடுத்தது. தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இம்பாக்ட் பிளேயர் லிஸ்டில் குமார் காத்திகேயாவையும் மும்பை தயாராக வைத்திருந்தது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

மறுபுறம் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியில் கேப்டன் குருணால் பாண்டியா, ரவி பிஷ்னோய், கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோருடன் தேவைப்பட்டால் பயன்படுத்திக் கொள்ள வசதியாக இம்பாக்ட் பிளேயர் லிஸ்டில் அமித் மிஸ்ராவும் இடம் பெற்றிருந்தார்.

லக்னௌவின் சுழல் வியூகத்தைத் தகர்த்த மும்பை தொடக்க ஜோடி

மும்பை அணி டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்ய, எதிர்பார்க்கப்பட்ட படியே லக்னௌ அணியின் கேப்டன் குருணால் பாண்டியா முதல் ஓவரை வீச வந்தார். ஐபிஎல் வரலாற்றில் அவர் முதல் ஓவரை வீசுவது இது 6வது முறை.

நடப்புத் தொடரில் லக்னௌவில் நடைபெற்ற ஆர்சிபிக்கு எதிரான போட்டியில் முதல் ஓவர் தொடங்கி பவர் பிளேவில் 3 ஓவர்களை வீசி, அபாயகரமான கோலி - டூப்ளெஸ்ஸி ஜோடியையே அவர் துரிதமாக ரன் சேர்க்க விடாமல் கட்டிப் போட்டிருந்தார். அதே நம்பிக்கையுடன் நேற்றும் முதல் ஓவரை வீச வந்த குருணால் பாண்டியாவை பவுண்டரியுடன் வரவேற்றார் இஷான் கிஷன்.

எனினும் அந்த ஓவரில் பெரிதாக ரன்கள் வரவில்லை. ஆஃப் ஸ்பின்னர் கிருஷ்ணப்பா கௌதம் வீசிய இரண்டாவது ஓவரின் கடைசி இரு பந்துகளையும் பவுண்டரிக்கு விளாசி மும்பையின் அதிரடியை ரிப்பன் வெட்டித் தொடங்கி வைத்தார் இஷான் கிஷன். அவ்வளவுதான்... அதன் பிறகு மும்பை அணியின் ரன் ரேட் எந்த இடத்திலும் கீழே இறங்கவில்லை.

குருணால் வீசிய, ஆட்டத்தின் மூன்றாவது ஓவரின் முதல் பந்தை சிக்சருக்கு அனுப்பிய ரோகித் ஷர்மா, 3வது பந்தில் பவுண்டரி விளாசினார். இந்த ஓவரில் மட்டும் குருணால் பாண்டியா 16 ரன்களை விட்டுக் கொடுத்தார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

ஏமாற்றிய சுழல் - கைகொடுத்த வேகப்பந்துவீச்சு

பெரிதும் எதிர்பார்த்த சுழற்பந்துவீச்சு காலை வார, லக்னௌ அணி வேறு வழியின்றி வேகப்பந்துவீச்சுக்கு மாறியது. மூன்றாவது ஓவரை வேகப்பந்துவீச்சாளர் நவீன் உல் ஹக் வீச வந்தார்.

சுழலுக்கு உதவும் சென்னை ஆடுகளத்தில் முதல் 3 ஓவர்கள் சுழற்பந்துவீச்சில் 30 ரன்களை விளாசிவிட்ட தெம்பில், தனக்கு விருப்பமான வேகப்பந்துவீச்சு வந்ததும் ரோகித் சர்மா அவசரப்பட, ஆயுஷ் படோனி கைகளில் கேட்சாகி வெளியேறினார்.

அடுத்த ஓவரிலேயே மற்றொரு தொடக்க வீரர் இஷான் கிஷனை யாஷ் தாகூர் தனது வேகப்பந்துவீச்சில் வெளியேற்றினார்.

அதிரடியில் மிரட்டிய கிரீன் - ஸ்கை கூட்டணி

மும்பையின் தொடக்க ஜோடி வீழ்ந்தாலும், அடுத்து கைகோர்த்த கேமரூன் கிரீன் - சூர்யகுமார் கூட்டணி லக்னௌ பந்துவீச்சாளர்களை அதிரடியில் மிரள வைத்தது.

முதல் பந்திலேயே பவுண்டரி விளாசிய கேமரூன் கிரீன், அடுத்தடுத்து பந்துகளை எல்லைக்கோட்டிற்கு விரட்டியபடி இருந்தார். மறுமுனையில் சூர்யகுமாரும் ஏதுவான பந்துகளை ஓடவிட்டதால் மும்பை இந்தியன்ஸ் அணியின் ரன்ரேட் வெகுவாக எகிறியது.

அவர்களுக்கு வசதியாக சுழலுக்கு ஏற்ற சென்னை ஆடுகளத்தில் லக்னௌ அணி வேகப்பந்துவீச்சாளர்களைத் தொடர்ந்து பயன்படுத்த, கிடைத்த வாய்ப்பை இருவரும் கெட்டியாகப் பிடித்துக் கொண்டனர்.

ரவி பிஷ்னோய் சிங்கிள்ஸ் வகையில் 4 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுக்க அடுத்து வந்த மோசின்கான் ஓவரில் கிரீன் - ஸ்கை கூட்டணி ரன்ரேட்டை ஈடுகட்டிவிட்டது. இருவருமே தலா ஒரு சிக்சரை பறக்கவிட்டனர்.

இதனால், மும்பை இந்தியன்ஸ் அணி 10 ஓவர்களிலேயே 2 விக்கெட்டிற்கு 98 ரன்களைத் திரட்டிவிட்டது. நடப்புத் தொடரில் சென்னை மைதானத்தில் இதற்கு முன்பு இருமுறை மட்டுமே 10 ஓவர்களில் இந்த ரன் கிடைத்துள்ளது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

ஒரே ஓவரில் கிரீன், ஸ்கையை சாய்த்த நவீன்

நடப்புத் தொடரில் சிறந்த பந்துவீச்சுக்காக அல்லாமல், நட்சத்திர வீரர் விராட் கோலியுடனான மோதலால் பெரிதும் அறியப்பட்ட வீரராகிப் போன நவீன் உல் ஹக் நேற்றைய ஆட்டத்தில் ஜொலித்தார்.

11வது ஓவரை வீச வந்த அவர், லக்னௌ அணி விரும்பிய திருப்பத்தை ஏற்படுத்திக் கொடுத்தார்.

அந்த ஓவரின் 4வது பந்தை 107 கி.மீ வேகத்தில் மெதுவாக லெக் கட்டர் வீசி கேமரூன் கிரீனை கிளீன் போல்டாக்கினார். அதேபோல், கடைசிப் பந்தை 105 கி.மீ. வேகத்தில் ஆஃப் கட்டராக வீசி நம்பர் ஒன் டி20 பேட்ஸ்மேனான சூர்யகுமாரை வெளியேற்றினார். இதன் பின்னரே மும்பை அணியின் ரன் குவிக்கும் வேகம் கட்டுக்குள் வந்தது.

18வது ஓவரில் மும்பையின் புதிய வளரும் வீரரான திலக் வர்மாவையும் காலி செய்த நவீன், நேற்றைய ஆட்டத்தில் 4 விக்கெட்டுகளை சாய்த்து நம்பிக்கை கொடுத்தார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

வதேரா அதிரடியால் சவாலான ஸ்கோரை நிர்ணயித்த மும்பை

மும்பை அணியின் ரன் ரேட் மெல்ல மெல்ல சரியத் தொடங்கிய நேரத்தில் உள்ளே வந்த நேஹல் வதேரா கடைசிக் கட்டத்தில் சிறிது நேரம் அதிரடி காட்டி அணி சவாலான இலக்கை எட்ட உதவினார்.

அவர் 12 பந்துகளில் 2 பவுண்டரி, 2 சிக்சர்களுடன் 23 ரன்களை சேர்த்தார். மும்பை அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 182 ரன்களை குவித்தது. அதிகபட்சமாக கேமரூன் கிரீன் 23 பந்துகளில் 41 ரன்களையும் சூர்யகுமார் 20 பந்துகளில் 33 ரன்களையும் சேர்த்தனர்.

லக்னௌ அணி தரப்பில் அதிகபட்சமாக நவீன் உல் ஹக் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதேபோல், வேகப்பந்து வீச்சாளர்களான யாஷ் தாகூர் 3 விக்கெட்டுகளையும், மோசின் கான் ஒரு விக்கெட்டையும் சாய்த்தனர்.

சுழற்பந்துவீச்சுக்கு உகந்த மெதுவான சென்னை ஆடுகளத்தில் லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணியின் சுழற்பந்துவீச்சாளர்கள் விக்கெட் எதையும் எடுக்கவில்லை.

ஐபிஎல் கிரிக்கெட் 2023

பட மூலாதாரம், BCCI/IPL

சீட்டுக்கட்டு போல சரிந்த லக்னௌ பேட்டிங் வரிசை

சென்னை ஆடுகளத்தில் 183 ரன்னை சேஸிங் செய்வது எளிதல்ல என்பதால் முதல் பாதி ஆட்டம் முடிந்தபோதே மும்பை இந்தியன்ஸ் அணியின் கையே ஓப்பீட்டளவில் ஓங்கிவிட்டது.

ஏனெனில், 170 ரன்களுக்கு மேல் சென்னை மைதானத்தில் சேஸிங் செய்யப்பட்டது அரிதானதுதான். புள்ளிவிவரம் தந்த உத்வேகத்துடன் களத்திற்கு வந்த மும்பை அணி, கச்சிதமாகத் தனது திட்டங்களை நிறைவேற்றியது.

முதல் ஓவரை வீசிய வேகப்பதுவீச்சாளர் ஜேசன் பெஹரன்டார்ஃப் 10 ரன்களை வாரிக் கொடுக்க இரண்டாவது ஓவரை மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வாலிடம் கொடுத்தது மும்பை அணி. அதற்கு கைமேல் பலன் கிடைத்தது. வெகு சிக்கனமாக பந்துவீசிய மத்வால் 2 ரன்களை மட்டுமே கொடுத்து மன்கட்டின் விக்கெட்டை வீழ்த்தினார்.

தடாலடி பேட்ஸ்மேன் கைல் மேயர்சை நான்காவது ஓவரில் கிறிஸ் ஜோர்டான் காலி செய்தார். மேயர்ஸ் 3 பவுண்டரிகளுடன் திருப்தியடைய வேண்டியதாயிற்று.

இதையடுத்து மூன்றாவது விக்கெட்டிற்கு சூப்பர் ஃபார்மில் இருக்கும் மார்கஸ் ஸ்டோய்னிஸ் உள்ளே வந்தார். 3 ரன்களில் 5 ரன்களை சேர்த்திருந்தபோது அவர் கொடுத்த கேட்ச் வாய்ப்பை வதேரா தவறவிட, கிடைத்த வாய்ப்பை அவர் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார்.

தனி ஒருவனாக மிரட்டிய ஸ்டோய்னிஸ்

மும்பையின் அசத்தல் பந்துவீச்சுக்கு எதிராக லக்னௌ அணியின் மற்ற வீரர்கள் ரன் சேர்க்கப் போராடிக் கொண்டிருக்க மார்கஸ் ஸ்டாய்னிசின் ஆட்டம் மட்டும் வேறு மாதிரியாக இருந்தது.

குறிப்பாக, லக்னௌவின் பலவீனத்தை அறிந்து அதற்காகவே மும்பை அணி உள்ளே கொண்டு வந்திருந்த ஆஃப் ஸ்பின்னர் ஹிரித்திக் ஷோகீனை அவர் கடுமையாக தண்டித்தார்.

அவரது ஒரே ஓவரில் அடுத்தடுத்து 2 பவுண்டரிகள், ஒரு சிக்சர் விளாசினார். அந்த ஓவரில் மட்டும் 18 ரன்களை விட்டுக் கொடுத்த ஷோகீனுக்கு அதன் பிறகு பந்து வீச மும்பை அணி வாய்ப்பு தரவே இல்லை.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

ஆட்டத்தை அடியோடு மாற்றிய 'அந்த 3 ஓவர்கள்'

7 ஓவர்களில் 2 விக்கெட்டிற்கு 65 ரன் என்று நல்ல நிலையில் இருந்த லக்னௌ அணி அடுத்த மூன்றே ஓவர்களில் தடம் புரண்டு விட்டது.

எட்டாவது ஓவரை கேமரூன் கிரீன் சிக்கனமாக வீசி 3 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்தார். இதனால், ரன்ரேட்டை உயர்த்தும் முனைப்பில் 9-வது ஓவரில் பியூஷ் சாவ்லா வீசிய புல்டாசை குருணால் பாண்டியா கிரீசில் இருந்து இறங்கி வந்து தூக்கி அடிக்க, டிம் டேவிட் கையில் அது எளிய கேட்ச்சாக மாறிப்போனது.

அடுத்த ஓவரை வீச வந்த மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால், லக்னௌ அணிக்கு இரட்டை அடி கொடுத்தார். அடுத்தடுத்த பந்துகளில் ஆயுஷ் படோனி, அதிரடி வீரர் நிகோலஸ் பூரன் ஆகிய இருவரையும் அவர் காலி செய்தார். அந்த அணியின் ஒரே நம்பிக்கையாக மார்கஸ் ஸ்டோய்னிஸ் மட்டுமே களத்தில் இருந்தார்.

ஸ்டாய்னிஸ் உள்பட 3 பேர் ரன் அவுட்

ஒருமுனையில் ஸ்டோய்னிஸ் அடித்தாடினாலும், மறுமுனையில் அவருக்கு சரியான பார்ட்னர்ஷிப் அமையவே இல்லை. இந்தச் சூழலில் விதியும் லக்னௌவுக்கு எதிராக விளையாடியது.

12வது ஓவரில் பந்தை அடித்துவிட்டு இரண்டாவது ரன்னுக்கு ஓடியபோது, மற்றொரு பேட்ஸ்மேனான தீபக் ஹூடாவுடன் மோதி ஆடுகளத்தின் நடுவே கீழே விழுந்தார் ஸ்டாய்னிஸ்.

அதன் பிறகு அவர் சுதாரித்து எழுந்து வருவதற்குள் டிம் டேவிட் பீல்டிங் செய்து பந்தை எறிய, விக்கெட் கீப்பர் இஷான் கிஷன் ஸ்டம்பை சாய்த்தார். ஸ்டாய்னிஸ் 27 பந்துகளில் 40 ரன்கள் சேர்த்து அவுட்டானார்.

தீபக் ஹூடாவும் அடுத்த சிறிது நேரத்தில் ரன் அவுட்டாகி சொற்ப ரன்களில் வெளியேறினார்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

101 ரன்களில் சுருண்டு போன லக்னௌ அணி

ஆறாவது விக்கெட்டாக ஸ்டாய்னிஸ் வீழ்ந்தபோதே லக்னௌ அணியின் ஒட்டுமொத்த நம்பிக்கையும் தகர்ந்துவிட்டது. அடுத்து வந்த வீரர்கள் மும்பை பந்துவீச்சாளர்களுக்கு எந்தவொரு சிரமமும் கொடுக்காமல் சரணடைந்துவிட்டனர்.

கிருஷ்ணப்பா கௌதமை கவர் திசையில் நின்றிருந்த ரோகித் ஷர்மா அபாரமாக ஃபீல்டிங் செய்து ஸ்டம்பை நோக்கி குறி தவறாமல் எறிந்து ரன் அவுட் செய்தார்.

கடைசிக் கட்டத்தில் ஆகாஷ் மத்வால் மேலும் 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ரவி பிஷ்னோய், மோசின்கான் ஆகிய இருவரும் ஆகாஷ் பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

லக்னௌ அணி 16.3 ஓவர்கள் மட்டுமே தாக்குப்பிடித்து 101 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்துவிட்டது. இதனால், லக்னௌவுக்கு எதிராக முதல் வெற்றியை, அதுவும் 81 ரன் என்ற அதிக வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணி பெற்றது.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

ஐ.பி.எல். வரலாற்றில் புதிய சாதனை படைத்த ஆகாஷ்

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிரான நேற்றைய ஆட்டத்தில் மும்பை அணியின் மித வேகப்பந்துவீச்சாளர் ஆகாஷ் மத்வால் 3.3 ஓவர்கள் வீசி 5 ரன்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஐ.பி.எல். தொடரில் 5 விக்கெட்டுகளை அவர் வீழ்த்துவது இதுவே முதல்முறை. அவரே ஆட்டநாயகனாகவும் தேர்வானார்.

அத்துடன், ஐ.பி.எல். வரலாற்றிலும் இதுவொரு சாதனையாகப் பதிவாகியுள்ளது. அதாவது, ஒரே போட்டியில் 5 விக்கெட் வீழ்த்தியதில் அனில் கும்ப்ளேதான் சிக்கனமாக பந்துவீசியிருந்தார்.

2009ஆம் ஆண்டு 3.1 ஓவர்களில் 5 ரன் கொடுத்து 5 விக்கெட் வீழ்த்தியதே அந்த வகையில் சாதனையாக இருந்து வந்தது. அதைத் தனது முதல் ஐ.பி.எல். தொடரிலேயே ஆகாஷ் மத்வால் முறியடித்துள்ளார்.

இருந்தும் கூடுதலாக 2 பந்துகளை வீசியிருப்பதன் மூலம் அவரது எகானமி ரேட் கும்ப்ளேவை காட்டிலும் குறைவாகவே இருக்கிறது.

போட்டியின் முடிவைத் தீர்மானித்தது எது?

சென்னை மைதானத்தின் மெதுவான ஆடுகளத்தின் தன்மையை ஒப்பீட்டளவில் லக்னௌவை காட்டிலும் மும்பை அணி சிறப்பாக்ோப் பயன்படுத்திக் கொண்டது.

லக்னௌ அணி வெகுவாக நம்பியிருந்த ரவி பிஷ்னோய் விக்கெட்டுகளை வீழ்த்தத் தவற, குருணால் பாண்டியா, கிருஷ்ணப்பா கௌதம் ஆகியோரின் பந்துகளும் எடுபடவில்லை.

இம்பாக்ட் விதி அறிமுகத்திற்குப் பின்னர் ஆல்ரவுண்டரின் தேவை குறைந்துவிட்ட நிலையில், அந்த கோட்டாவில் கிருஷ்ணப்பா கௌதமை கொண்டு வந்ததற்குப் பதிலாக, அனுபவம்மிக்க அமித் மிஸ்ராவை அணியில் சேர்த்திருக்கலாம்.

ஆகாஷ் மத்வாலும் ஆட்டத்தை மாற்றிய 3 ஓவர்களும்

பட மூலாதாரம், BCCI/IPL

நடப்புத் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் லக்னௌ வெற்றியில் அவர் முக்கிய பங்காற்றியது நினைவிருக்கலாம். லக்னௌ அணி வீழ்த்திய 8 விக்கெட்டுகளுமே வேகப்பந்துவீச்சாளர்களுக்கே கிடைத்தன. சுழற்பந்துவீச்சாளர்கள் ஒரு விக்கெட்டைகூட வீழ்த்தவில்லை.

மறுபுறம் மும்பை இந்தியன்ஸ் அணியோ மெதுவான ஆடுகளத்தின் தன்மையைச் சரியாகப் பயன்படுத்திக் கொண்டது. சுழற்பந்துவீச்சு மற்றும் ஆகாஷ் மத்வாலின் மித வேகத்தைக் கொண்டே லக்னௌ அணியை ஒட்டுமொத்தமாக நிலைகுலையச் செய்துவிட்டது. ஆகாஷ் மத்வால் அவரது வாழ்நாளின் மிகச் சிறந்த பந்துவீச்சைப் பதிவு செய்தார்.

அதேபோல், சுழற்பந்துவீச்சு, வேகப்பந்துவீச்சு என்று மாறி மாறி ஓவர் வீசச் செய்த லக்னௌ அணி கேப்டன் குருணாலின் உத்தியும் தவறாகிப் போனது. ரவி பிஷ்னோய் சிக்கனமாக பந்துவீச, அடுத்து வந்த வேகப்பந்துவீச்சாளரின் ஓவரில் ரன்களைக் குவித்து அணிக்கு நெருக்கடி வராமல் மும்பை பேட்ஸ்மேன்கள் பார்த்துக் கொண்டனர்.

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு அடுத்தது என்ன?

லக்னௌ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணிக்கு எதிராக வரலாற்று வெற்றியைப் பதிவு செய்துள்ள மும்பை இந்தியன்ஸ் அணி அடுத்த கட்டமாக இரண்டாவது தகுதிச் சுற்றுப் போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக விளையாடும். இந்தப் போட்டி ஆமதாபாத்தில் நாளை இரவு 7.30 மணிக்குத் தொடங்கும்.

நாளைய இரண்டாவது தகுதிச் சுற்றில் வெற்றி பெறும் அணி ஐ.பி.எல். கோப்பைக்காக இறுதிப்போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் அதே மைதானத்தில் வரும் ஞாயிற்றுக் கிழமை பலப்பரீட்சை நடத்தும்.

சென்னையுடன் கோப்பைக்கு மல்லுக்கட்டப் போவது பரமவைரி மும்பை இந்தியன்ஸா அல்லது புதிய ஜாம்பவானான நடப்புச் சாம்பியன் குஜராத் டைட்டன்சா என்பது நாளை இரவு தெரிய வரும்.

  • சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: