கத்தார் உலக கோப்பை: எல்ஜிபிடி ஆதரவு பிரசாரம் கடைசி நேரத்தில் கைவிடப்பட்டது ஏன்?

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

கத்தார் உலக கோப்பை போட்டியின் போது மைதானத்துக்குள் விளையாடும் வீரர்கள் 'ஒன் லவ்' என்ற கைப்பட்டையை அணியப் போவதில்லை.

வானவில் வண்ணத்திலான இந்த கை பட்டையை அணியும் வீரர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என ஃபிஃபா எச்சரிக்கை விடுத்தது. எனவே ஐரோப்பிய நாடுகளின் கால்பந்து அணிகள் இந்த எதிர்ப்பு பட்டையை அணிவதில்லை என்ற முடிவை நோக்கித் தள்ளப்பட்டனர்.

இங்கிலாந்து அணியின் தலைவர் ஹாரி கேன் மற்றும் வேல்ஸ் அணியின் தலைவர் கரேத் பேல் உள்ளிட்ட அணி தலைவர்கள் போட்டிகளின் போது கைபட்டை அணிவது என திட்டமிட்டனர்.

பன்முகத்தன்மை, எல்லோரையும் உள்ளடக்கிய பங்கெடுப்பு, எல்ஜிபிடி ப்ளஸ் நபர்களின் (தன்பாலினத்தவர், ஒரினச்சேர்க்கையாளர்கள், திருநங்கையர் உள்ளிட்டோர்) சமூக உரிமைகள் ஆகிவற்றை வலியுறுத்தி 'கைப்பட்டை' அணிய திட்டமிட்டனர்.

எனினும், அப்படி அணிந்தால் அபராதம் விதிக்கப்படும் என அசோசியேட்டட் கால்பந்து சர்வதேச கூட்டமைப்புக்கான சர்வதேச கூட்டமைப்பின் (FIFA-ஃபிஃபா) அச்சுறுத்தலால் அந்த நோக்கம் கைவிடப்பட்டது.

பன்முகத்தன்மை மற்றும் அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய முன்னெடுப்பு

'ஒன் லவ்' கைப்பட்டை

பட மூலாதாரம், Getty Images

யூரோ 2020 போட்டிக்கு முன்னதாக வானவில் வண்ண பட்டையை 2010ஆம் ஆண்டு நெதர்லாந்து அணி அணியத் தொடங்கியது. பன்முகத்தன்மை மற்றும் அனைத்தரப்பினரையும் உள்ளடக்கிய முன்னெடுப்பதே இதன் இலக்காக இருந்தது.

கத்தாரில், தன்பாலினத்தவர்களுக்கு இடையேயான உறவுகளும் அதன் முன்னெடுப்புகளும் தண்டனைக்குரியவையாகும். இத்துடன் சேர்ந்து பெண்கள், புலம் பெயர் தொழிலாளர்களின் உரிமைகளிலும் கடந்த காலத்தின் அதன் மோசமான செயல்பாடுகளுக்கிடையே இந்த போட்டியை நடத்தும் நாடாக தேர்வு செய்யப்பட்டது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

"ஓரினச்சேர்க்கையாளர்களாக இருப்பது இஸ்லாமிய சட்டப்படி தடை செய்யப்பட்டுள்ளது. ஆகவே தடைசெய்யப்பட்ட ஒன்று, மற்றும் மனநல பாதிப்பை ஏற்படுத்தும். இதில் சகிப்புத்தன்மை இல்லை. இது போன்ற அனைத்து ரசிகர்களையும் கத்தார் வரவேற்கவில்லை," என உலக கோப்பை தூதுவரான காலித் சல்மான் இந்த மாத தொடக்கத்தில் ஜெர்மன் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியின் போது கூறினார்.

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், பிரான்ஸ், ஜெர்மனி, நார்வே, ஸ்வீடன், சுவிட்சர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய 10 ஐரோப்பிய நாடுகளின் அணித் தலைவர்கள், உலக்கோப்பை போட்டிகளில் லீக் போட்டிகளில் ஒன் லவ் என்ற பட்டையை அணிய உள்ளதாக கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தனர்.

இது மேற்கு நாடுகளின் கபட நாடகம் என, போட்டிகளை நடத்தும் கத்தாருக்கு ஆதரவாக ஃபிஃபா தலைவர் கியானி இன்ஃபான்டினோ கருத்துத் தெரிவித்தார்.

உலக கோப்பை Vs கொள்கைகள்

7 கால்பந்து சங்கங்களும் ஒன்றிணைந்து வெளியிட்ட அறிக்கையில், விளையாட்டுக்கு தடை விதிப்பதை எதிர்கொள்ளும் நிலைக்கு தங்களது வீரர்களை இட்டுச்செல்ல மாட்டோம் என்று கூறப்பட்டது.

"ஃபிஃபா முடிவால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்திருக்கிறோம். இது முன்னெப்போதும் இல்லாத ஒன்று என நாங்கள் நம்புகிறோம்," என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

LGBTI+ சமூகத்தின் மீதான கத்தார் நிலைப்பாடு சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, LGBT+ சமூகத்தின் மீதான கத்தார் நிலைப்பாடு சர்வதேச அளவில் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

இங்கிலாந்து, வேல்ஸ், பெல்ஜியம், டென்மார்க், ஜெர்மனி, நெதர்லாந்து மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய நாடுகளின் கால்பந்து சங்கங்கள், ஒன் லவ் பட்டை அணிவது குறித்து கடந்த செப்டம்பர் மாதம் ஃபிஃபாவுக்கு கடிதம் எழுதினோம்.

ஆனால், பதில் எதுவும் வரவில்லை என்று கூறியுள்ளன.

"மைதானத்துக்குள் எங்களது அணி தலைவர்கள் கை பட்டைகள் அணிந்தால், விளையாட தடைவிதிப்போம் என்று ஃபிஃபா தெளிவாக கூறியிருக்கிறது," என அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

"யூனிபார்ம் தொடர்பான விதிமீறல்களுக்கு பொதுவாக விதிக்கப்படும் அபராதத்தை செலுத்த தயாராக இருந்தோம். எனினும் அவர்களை தண்டனைக்கு உள்ளாக்கும் அல்லது விளையாட்டு மைதானத்தில் இருந்து கட்டாயமாக அவர்களை வெளியேற வழிவகுக்கும் சூழ்நிலைக்கு எங்கள் வீரர்களை நாங்கள் இட்டுச் செல்ல முடியாது," என அணிகளிடம் அவர்கள் விளக்கியுள்ளனர்.

இதற்கு பதிலாக, "பாரபட்சம் இல்லை" என்ற ஒரு சொந்த இயக்கத்தை ஃபிஃபா முன்னெடுத்துள்ளது. இந்த இயக்கம் காலிறுதி போட்டிகளின்போது தொடங்கும். அப்போது இருந்து அணி தலைவர்கள் சரிசமமான கருப்பு நிற பட்டையை போட்டிகள் முழுவதும் அணியலாம். இங்கிலாந்து அணி இரானை எதிர்கொண்ட போது கேன் ஃபிஃபாவின் கைபட்டையை அணிந்திருந்தார்.

கால்பந்து ரசிகர்களுக்கு இழைக்கப்பட்ட துரோகம்

கத்தார் உலக கோப்பை

பட மூலாதாரம், Getty Images

ஒன்லவ் கைபட்டையை அணிந்தால் வீரர்களுக்கு தடை விதிக்கப்படும் என்ற ஃபிஃபா அறிவிப்பினை, கால்பந்து ரசிகர்கள் சங்கம் விமர்சனம் செய்துள்ளது. துரோகம் இழைக்கப்பட்டதை உணர்ந்தாக கூறியுள்ளது.

வீரர்களுக்கு மஞ்சள் கார்டு மற்றும் சகிப்புத்தன்மைக்கு எதிராக சிவப்பு கார்டு வழங்குவதன் மூலம் அதன் உண்மையான மதிப்புகளை வெளிப்படுத்திய ஒரு நிறுவனத்துக்கு இன்றைக்கு நாங்கள் கடுமையாக கண்டனம் தெரிவிக்கிறோம்," என்று ஒரு அறிக்கையில் அந்த அமைப்பு கூறியுள்ளது.

"பணம் மற்றும் கட்டமைப்பு அடிப்படையை மட்டும் கருத்தில் கொண்டு ஒருபோதும் உலகக்கோப்பை போட்டிகள் நடத்துவதை இது போல மீண்டும் ஒருமுறை கொடுக்கக் கூடாது," என்று அந்த சங்கம் கேட்டுக்கொண்டுள்ளது.

"எல்ஜிபிடி ப்ளஸ் உரிமைகள், பெண்கள் உரிமைகள், தொழிலாளர் உரிமைகள் அல்லது இதர மனித உரிமைகளில் தரநிலையை சந்திக்கத் தவறிய நாட்டை கெளரவப்படுத்தும் வகையில் உலகக் கோப்பை போட்டியை நடத்தும் வாய்ப்புக் கொடுக்கப்பட்டதா?," என கால்பந்து ரசிகர்கள் சங்கம் தனது அறிக்கையின் இறுதியில் கேள்வி எழுப்பியுள்ளது.

3 லயன்ஸ் ப்ரைட் எனப்படும் எஜிபிடி ப்ளஸ் சமூகத்தின் ஆங்கில ஆதரவாளர்கள் தங்களது பங்குக்கு, இந்த முடிவு அதிருப்திக்கும் அப்பாற்பட்டது என்று கூறியுள்ளனர். அணி தலைவர்களின் கருத்து சுதந்திரத்தை ஃபிஃபா மீறியுள்ளது என்றும் தெரிவித்துள்ளனர். கிக் இட் அவுட் எனும் பாகுபாட்டுக்கு எதிரான குழுவும் இந்த முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. "இந்த போட்டியின் முன்னேற்பாடுகளில் மனித உரிமைகள் குழுக்கள் மற்றும் எல்ஜிபிடி ப்ளஸ் சமூகம் ஆகிய இரு தரப்பினரின் கவலைகளையும் ஃபிஃபா நிவர்த்தி செய்யத் தவறிவிட்டது, " என தெரிவித்துள்ளது.

பிபிசி ரேடியோ 5 நேரலையில் கருத்துத் தெரிவித்த இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் ஆலன் ஷீரர், முடிவு எடுக்கப்பட்ட நேரம் என்பது விளையாட்டு வீரர்களுக்கு நியாயமானதாக இல்லை என்று கூறினார். மேலும், தான் ஃபிஃபாவின் முடிவை மீறி எப்படியும் கைப்பட்டயை அணிவேன் என்று கூறியுள்ளார்.

"நான் கைப்பட்டைஅணிந்து தண்டனையை எதிர்கொள்வேன் என்று நிச்சயமாக நான் பயிற்சியாளரிடம் வெளிப்படையாகப் பேசியிருப்பேன்," என்று கூறினார். "அதை அணிவதை விடவும் ஃபிஃபாவுக்கு பெரிய விஷயமாக பிரச்னை எழுந்திருக்கும், என்னால் முடிந்தால் அதைத்தான் செய்வேன்" என்று முடித்தார்.

காணொளிக் குறிப்பு, கத்தார் மீது புதிய குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: