திருமதி உலக அழகியாக சர்கம் கௌஷல் வெற்றி - யார் அவர்?

பட மூலாதாரம், SARGAM_3
- எழுதியவர், சுசிலா சிங்
- பதவி, பிபிசி செய்தியாளர்
"என்னுடைய மகள் என் கனவை நிறைவேற்றி விட்டார். மூன்றாவது சுற்றில் அவர் தேர்வானபோது, என் இதயத்துடிப்பு உற்சாகத்தில் அதிகரித்தது. இப்போது கடவுளிடம் இருந்து எனக்கு வேறு எதுவும் கோரிக்கைகள் இல்லை," என்கிறார் சர்கமின் தந்தை ஜிஎஸ்.கெளஷல்.
"ஒவ்வொரு நாளும் உடை அணிந்த பின்னர் சர்கம் கெளஷல் முகம் பார்க்கும் கண்ணாடியால் தன்னைத்தானே பார்த்துக் கொள்ளும்போது அவர் ஏதோ ஒன்றை செய்யப்போகிறார் என்பது போல இருந்தது. அவர் ஒல்லியாக இருந்ததால், இது போன்ற போட்டிகளில் பங்கேற்பதற்கு தயக்கம் காட்டினார்."
"சர்கமின் கடின உழைப்பு அவரது குழுவினரின் முயற்சி ஆகியவற்றின் காரணமாக அவர் இந்த உயரத்தை அடைந்திருக்கிறார். இது எங்களை பெருமைப்படுத்தும் செயலாக இருக்கிறது. சர்கம் இந்தியாவின் பெயரை மட்டும் உயர்த்தவில்லை. எங்களையும் உயர்த்தியிருக்கிறார்," என்கிறார் சர்கமின் தாய் மீனா கெளஷல்.
"இந்தியாவில் இருந்து போட்டியிடுபவர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்வுக்குழுவில் நானும் இடம் பெற்றிருந்தேன். அப்போது, சர்கம் குறிப்பிடத்தக்க சிறப்பு திறன் பெற்றவராக இருந்தார் என்று நான் சொன்னேன். இந்த முறை நிச்சயமாக திருமதி உலக அழகி பட்டத்தை வெல்வோம் என்று சொன்னேன்," என்கிறார் முன்னாள் திருமதி உலக அழகி பட்டத்தை இதற்கு முன்பு வென்ற அதிதி கோவித்ரிகர்.
அமெரிக்காவில் லாஸ் வேகஸில் நடைபெற்ற 2021-2022ஆம் ஆண்டுக்கான திருமதி உலக அழகிப் போட்டியில் இந்தியாவின் சர்கம் கெளஷல் 'திருமதி உலக அழகி' ஆக முடிசூட்டப்பட்டார்.
சர்கம் கெளஷல் ஜம்முவை பூர்விகமாக கொண்டவர். இப்போது மும்பையில் வசிக்கிறார். அவருடைய தந்தை ஜிஎஸ். கெளஷல் ஜம்முவை சேர்ந்தவர். அவர் பிபிசியிடம் பேசும்போது, "என் மகள் இரண்டரை வயது குழந்தையாக இருந்தபோது அவரை அசாதாரணமான ஒருவராக கண்டேன். அவருடைய முகம் தனித்தன்மைவாய்ந்ததாக இருந்தது. அதே போல அவர் மிஸ் ஃபெமினா போட்டியில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். ஆனால், எந்த ஒரு அழகி போட்டியிலும் பங்கேற்பதில் அவருக்கு தயக்கம் இருந்தது," என்றார்.

பட மூலாதாரம், GS KAUSHAL
படிப்பு
சர்கம் கெளஷல் ஜம்முவில் உள்ள பிரசன்டேஷன் கான்வென்ட் உயர்நிலை பள்ளியில் 12ஆம் வகுப்பு வரை படித்தார்.
அதன் பின்னர் அவர் பிஎஸ்சி படித்தார். ஜம்மு பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார். இதன் பின்னர் பிஎட் முடித்த அவர் பள்ளியில் ஆசிரியை பணியைத் தொடங்கினார்.
"நான் எப்போதுமே அவர் அழகி போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்று விரும்பினேன். மிஸ் ஃபெமினா போட்டியில் பங்கேற்க வேண்டும் என்றும் சொன்னேன். 2017ஆம் ஆண்டு சர்கமுக்கு திருமணம் நடைபெற்றது. திருமணத்துக்குப் பின்னர் அவர் ஜம்முவில் இருந்து வெளியே சென்றார்," என்றார் அவரது தந்தை.
"திருமணத்துக்குப் பின்னர், இப்போதாவது ஏதாவது செய்ய வேண்டும் என்று சொன்னேன். விசாகப்பட்டினம் சென்றபின்னர், அவர் மும்பை சென்றார். இதன் பின்னரும் கூட, கனவு நகரான மும்பையில் எண்ணற்ற வாய்ப்புகளைப் பயன்படுத்தி ஏதேனும் செய்யும்படி கூறினேன்."
"அப்போதுதான் போட்டிகளில் பங்கெடுப்பதற்காக தயார் படுத்திக் கொள்ள தொடங்கினார். நான் இதற்காக சர்கம் கணவருக்கு நன்றி சொல்ல கடமை பட்டுள்ளேன். அவர் என் மகளுக்கு முழு ஆதரவு அளிக்கிறார்," என்றார்.
சர்கம் கெளஷல் கணவர், இந்திய கப்பற்படை அதிகாரியாக உள்ளார்.

பட மூலாதாரம், GS KAUSHAL
சர்கம் தன்னை தயார் படுத்திக் கொள்ள தொடங்கியபின்னர், 2022ஆம் ஆண்டுக்கான திருமதி இந்தியாவாக தேர்வு பெற்றார். அந்தப் போட்டியில் 51 பேர் பங்கேற்றனர். அதன் பின்னர் அவர்கள் திருமதி உலக அழகிப் போட்டியில் பங்கேற்றனர்.
திருமதி உலக அழகிப் போட்டியில் 63 நாடுகளைச் சேர்ந்த போட்டியாளர்கள் பங்கேற்றனர்.
"சர்வதேச அளவில் பல போட்டியாளர்கள் பங்கேற்றதை பார்த்த பின்னர், சர்கம் இந்த போட்டியில் வெற்றி பெறமுடியாமல் போகலாம் என்று நான் நினைத்திருந்தேன். ஆனால், என் மகளின் நம்பிக்கை எனக்கு வலுவைக் கொடுத்தது."
"முதல் சுற்றில் 44 போட்டியாளர்கள் நீக்கப்பட்டனர். அதன் பின்னர் கொஞ்சம் எனக்கு நம்பிக்கை வந்தது. அயல்நாட்டுப் பிரிவில் தேசிய உடையில் தேர்வு பெற்றார். இதன் பின்னர் ஆறு பேரில் ஒருவராக அவர் தேர்வானார். இதன் பின்னர், மகிழ்ச்சியில் என் இதயம் வேகமாக துடிக்க ஆரம்பித்தது," என்கிறார் அவரது தந்தை.
"நாங்கள் இதை தொலைகாட்சி நேரலையில் பார்த்துக் கொண்டிருந்தோம். எங்கள் மகள் மூன்று பேரில் ஒருவராக வெற்றி பெற்றபோது எங்களுடைய மனநிலை எப்படி சந்தோஷமாக இருந்தது என்று சொல்லத்தெரியவில்லை," என்றனர்.

பட மூலாதாரம், GS SKILLS
நம்பிக்கை தந்த வெற்றி
'சமூக வலைதளங்களில் சிலமாற்றங்கள் மேற்கொள்ள வாய்ப்புக்கிடைத்தால், நீங்கள் என்ன செய்வீர்கள்' என சர்கமிடம் கேட்கப்பட்டது.
அது பற்றி அவரது தாயார் கூறுகையில், "என் மகள் சில இணைய அச்சுறுத்தல்களை தடுத்து நிறுத்துவேன்,' என்று பதிலளித்தார். இதன் பின்னர் அவர் இரண்டாவது சுற்றுக்கு தேர்வானார். இப்போதுதான் சர்கம் நிச்சயமாக வெற்றி பெறுவார் என்று நான் உறுதியாக நம்பினேன்.
பிபிசியிடம் பேசிய சர்கமின் தாய் மீனா கெளஷல், "நான் தொலைகாட்சி நேரலையில் பார்த்துக்கொண்டிருந்தபோது, என் மகள் வெற்றி பெறுவார் என்று 100 சதவிகிதம் நம்பினேன். இதனை உங்களால் நம்ப முடியாவிடாலும் அதுதான் உண்மை. அதைப்போலவே என் மகள் வெற்றி பெற்றார்," என்கிறார்.
"அங்கிருந்த அனைத்து போட்டியாளர்களும் அவளை விட அழகாகவும், அவளை விட உயரமாகவும் இருந்திருக்க வேண்டும். ஆனால், என் மகள் மீது நான் முழு நம்பிக்கை வைத்திருந்தேன். என்னுடைய கனவு நிச்சயம் நனவாகும் என்று என் மகளின் கணவரும் கூறியிருந்தார். இப்போது அவரும் மகிழ்ச்சியாக இருக்கிறார்," என்று தெரிவித்தார் சர்கம் தாய் மீனா கெளஷல்.
இன்னொருபுறம், திருமதி உலக அழகி பட்டத்தை இந்தியா சார்பில் 2001ஆம் ஆண்டு முதன்முதலாக வென்ற அதிதி கோவித்ரிகர் கூறுகையில், சர்கம் ஒவ்வொரு சந்திப்பிலும் மிகவும் கண்ணியமாகவும் நல்ல குணத்துடனும் இருந்ததை தான் அறிந்ததாகக் கூறினார்.
"நான் முதலில் அவரை சந்தித்தபோது, அவர் முழு நம்பிக்கையுடன் இருந்தார். இருப்பினும், ஒவ்வொரு பங்கேற்பாளரும் பயிற்சியில் கற்பிக்கப்படுவதன் காரணமாக அவர்களின் ஆளுமையிலும் ஒரு பிரகாசம் இருந்தது. சர்கமின் உயரம், உடல் வடிவம், எல்லாமே மிகவும் அழகாக இருந்தது," என்றார்.

பட மூலாதாரம், ADITI GOVITRIKAR
தன்னுடைய அனுபவம் குறித்து பேசிய முன்னாள் திருமதி உலக அழகி அதிதி கோவித்ரிகர், தான் திருமதி உலக அழகி போட்டியில் பங்கேற்கப் போவதாகச் சொன்னபோது அது குறித்து யாருக்கும் எதுவும் தெரியவில்லை. மிஸ். பிரபஞ்ச அழகி, மிஸ். உலக அழகி என சுஷ்மிதா சென், ஐஸ்வர்யா ராய் ஆகியோர் பட்டம் சூடிக்கொண்டபோது மட்டும்தான் இதுபற்றி மக்கள் அறிந்திருந்தனர்.
"திருமணமான பெண்ணுக்கு கிளாமர் உலகத்துக்கான பாதை அடைக்கப்பட்டு, மணமான பெண் என்றாலும் அதை மறைத்து வைக்கும் சூழல் அப்போது இருந்தது. எனவே திருமணமாகி ஒரு பெண் நடிப்பு அல்லது மாடலிங் துறையில் இன்று ஏற்றுக்கொள்ள முடியாததாக இருக்கிறது," என அதிதி கோவித்ரிகர் விவரித்தார்.
திருமண வாழ்க்கையை மறைப்பது சரியல்ல என்று கூறிய அதிதி, திருமதி உலக அழகிப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றார்.
"நான் வெற்றி பெற்றதும், இதில் விழிப்புணர்வும் வந்தது, அதன் பிறகு திருமணமான பெண்களுக்கும் இதுபோன்ற பல போட்டிகள் நடத்தப்பட்டன."
மேலும் பல திருமணமான பெண்கள் என்னிடம் வந்து மிஸ் இந்தியா போட்டியில் பங்கேற்பது அவர்களின் கனவு என்று என்னிடம் சொன்னார்கள். ஆனால் சூழ்நிலை காரணமாக தங்களால் பங்கேற்க முடியவில்லை. ஆனால் உங்கள் பங்கெடுப்பு வெற்றியால் இதுபோன்ற போட்டிகள் நடப்பது நல்ல விஷயம் என்று அவர் கூறினர் .

பட மூலாதாரம், SARGAM_3
திருமதி உலக அழகிப் போட்டியின் வரலாறு
திருமணமான பெண்களுக்கான அழகிப் போட்டி என்பது 1984ஆம் ஆண்டு முதல் நடைபெறத் தொடங்கியது.
திருமணமான பெண்களும் கிளாமர் உலகில் வாய்ப்பு பெற வேண்டும், ஒருவேளை இது அதற்காகத் தொடங்கப்பட்டிருக்கலாம் என்று அதிதி கோவித்ரிகர் கூறுகிறார்.
டேவிட் மார்மெல் இந்தப் போட்டியை ஆரம்பித்திருந்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் போட்டியில் இதுவரை அமெரிக்கா, இலங்கை, பெரு, ரஷ்யா ஆகிய நாடுகளைச் சேர்ந்த பெண்கள் எட்டு முறை வெற்றி பெற்றுள்ளனர்.
இது தவிர, அயர்லாந்து, வியட்நாம், ஹாங்காங் ஆகிய நாடுகளைச் சேர்ந்த பங்கேற்பாளர்கள் தலா ஒரு முறை இந்தப் போட்டியில் வெற்றி பெற்றுள்ளனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












