இந்தியா vs பாகிஸ்தான்: சென்னையில் 25 ஆண்டுகளுக்குப் பிறகு மோதுவதால் ரசிகர்கள் உற்சாகம்

பட மூலாதாரம், Hockey India
- எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு
- பதவி, பிபிசி செய்தியாளர்
7ஆவது ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி போட்டிகள் வரும் ஆகஸ்ட் 3ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெறவுள்ளன.
சென்னையில் 16 ஆண்டுகளுக்கு பின் சர்வதேச ஹாக்கி விளையாட்டு போட்டி நடைபெறவுள்ளது ஹாக்கி ரசிகர்கள் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக 25 ஆண்டுகளுக்கு பின் சென்னையில் இந்திய அணியும்- பாகிஸ்தான் அணியும் மோதவுள்ளதால் இந்த ஆட்டத்திற்கு எதிர்பார்ப்பு அதிகமாக உள்ளதாக ஹாக்கி ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
சென்னையில் நடைபெறவுள்ள ஆசிய சாம்பியன்ஸ் கோப்பையில் இந்தியா, பாகிஸ்தான், சீனா, ஜப்பான், மலேசியா, தென் கொரியா ஆகிய 6 நாடுகள் பங்கேற்கின்றன. தமிழ்நாடு ஹாக்கி பிரிவு மற்றும் தமிழ்நாடு விளையாட்டு அமைச்சகம் இணைந்து இத்தொடரை நடத்துகிறது.

பட மூலாதாரம், Sports Tamil Nadu
ரசிகர்கள் அதிகம் வரவேண்டும் என்பதற்காக இந்திய அணி விளையாடும் ஆட்டங்கள் அனைத்தும் இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளன.
நீண்ட நாட்களுக்கு பிறகு சென்னையில் நடைபெறும் சர்வதேச ஹாக்கி போட்டி என்பதால் தமிழ்நாடு அரசு போட்டியை பிரபலப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துள்ளது. போட்டியின் இலச்சினையாக பொம்மன் என்ற யானை அறிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், ஆசிய சாம்பியன்ஸ் போட்டிக்கான கோப்பை தமிழ்நாடு முழுவதும் எடுத்து செல்லப்பட்டு வருகிறது.

பட மூலாதாரம், Hockey India
தமிழ்நாடுக்கு வாய்ப்பு கிடைத்தது எப்படி?
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரை நடத்த பலத்த போட்டி இருந்ததாகவும் தமிழ்நாடு அரசின் தொடர் நடவடிக்கையில் சென்னையில் போட்டி நடத்த வாய்ப்பு கிடைத்ததாகவும் கூறுகிறார் தமிழ்நாடு ஹாக்கி பிரிவின் தலைவரான சேகர் மனோகர்.
“இந்தியாவைப் பொறுத்தவரை ஒடிசா மாநிலம் ஹாக்கிக்கு புகழ்பெற்றது. பல்வேறு ஹாக்கி போட்டிகள் அங்கு நடைபெற்றுள்ளன. ஹாக்கி உலகக் கோப்பை 2023ம் ஒடிசாவில்தான் நடைபெறவுள்ளது. அப்படியிருக்கையில் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் நேரடியாக மோதக்கூடிய இந்த தொடரையும் தங்கள் மாநிலத்தில் நடத்தவே ஒடிசா விரும்பியது.
இந்நிலையில், தமிழ்நாடு விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், ஒடிசா முதலமைச்சர் நவின் பட்நாயக்கை நேரடியாக சந்தித்து பேசினார். அப்போது அங்கிருந்த உலக ஹாக்கி கூட்டமைப்பு, ஆசிய ஹாக்கி கூட்டமைப்பு ஆகியவற்றின் தலைவர்களிடன் கலந்துரையாடி இந்த தொடரை சென்னையில் நடத்தும் வாய்ப்பை பெற்றார்” என்றார்.

பட மூலாதாரம், Hockey unit of tamilnadu
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் புனரமைப்பு
இந்த ஹாக்கி தொடருக்காக மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் ரூ.16 கோடி செலவில் மேம்படுத்தப்பட்டுள்ளது. இதற்காக ஒடிசாவின் ரூர்கி மற்றும் கலிங்கா மைதானங்களுக்கு தமிழக அதிகாரிகள் நேரில் சென்று பார்வையிட்டிருக்கிறார்.
"பாரிஸில் அடுத்த ஆண்டு ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகள் நடைபெறவுள்ளன. பாரிஸ் ஒலிம்பிக் போட்டி நடைபெறும் மைதானத்தில் பயன்படுத்தப்படவுள்ள டர்ஃப் போன்றே ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த டர்ஃப் 80 சதவீதம் கரும்பில் இருந்து பெறப்படும் பொருளால் உருவாக்கப்பட்டுள்ளது. இதனை பராமரிக்க குறைந்த அளவு தண்ணீரே போதும்" என்று கூறுகிறார் சேகர் மனோகரன்
கிட்டத்தட்ட 90 நாட்களில் மொத்த ஸ்டேடியமும் புனரமைக்கப்பட்டுள்ளது. இதற்கு தமிழ்நாடு அரசு எடுத்த நடவடிக்கைகள் தான் காரணம் என்று கூறுகிறார் தமிழ்நாட்டைச் சேர்ந்த முன்னாள் ஹாக்கி வீரரான பாஸ்கரன். 1980ஆம் ஆண்டு மாஸ்கோவில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய ஹாக்கி அணியை பாஸ்கரன் வழிநடத்தியுள்ளார்.
மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் குறித்த நினைவலைகள் நம்மிடம் பகிர்ந்துகொண்ட அவர், "கடைசியாக 2007ஆம் ஆண்டு சென்னையில் ஆசிய ஹாக்கி போட்டி நடைபெற்றது. இதே மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 7-2 என்ற கோல் கணக்கில் கொரியாவை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது" என்றார்.

பட மூலாதாரம், Hockey India
தொடர்ந்து பேசிய அவர், " மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் தனிப்பட்ட முறையில் எனக்கு மிகவும் பிடித்த மைதானம். 11 வயதில் இருந்தே அங்கு விளையாடியுள்ளேன். பள்ளி, கல்லூரி, மாநில அளவிலான போட்டிகள் என 5000 போட்டிகள் வரை நான் இந்த மைதானத்தில் விளையாடியுள்ளேன்.
ராதாகிருஷ்ணன் ஸ்டேடியம் உள்ள எழும்பூரை சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான ஹாக்கி அணிகள் இருந்தன. தற்போது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகளுக்கு வரும் ரசிகர்கள் கூட்டத்தை நாங்கள் அந்த காலத்திலேயே ஹாக்கி போட்டியில் பார்த்திருக்கிறோம். தற்போது மீண்டும் சென்னையில் சர்வதேச ஹாக்கி போட்டி நடைபெறுவது ஒரு உத்வேகத்தை அளிக்கும் " என்றார்.

பட மூலாதாரம், Hockey unit of tamilnadu
இந்தியா- பாகிஸ்தான் போட்டிக்கு எகிரும் எதிர்பார்ப்பு
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரைப் பொறுத்தவரை இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இருநாடுகளும் பலம் வாய்ந்த அணிகளாக திகழ்கின்றன. இதுவரை நடைபெற்ற 6 தொடர்களில் 2011, 2016 ஆகிய ஆண்டுகளில் இந்திய அணியும் 2012, 2013 ஆகிய ஆண்டுகளில் பாகிஸ்தான் அணியும் வென்றுள்ளன.
2018ஆம் ஆண்டு நடைபெற்ற ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப்போட்டி மழையால் தடைபட்டதால் இறுதிப்போட்டிக்கு தகுதிப் பெற்ற இந்தியா- பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இரு அணிகளுமே தலா 3 முறை கோப்பையை வென்றுள்ளன. கடந்த ஆண்டு பங்களாதேஷ் தலைநகர் தாக்காவில் நடைபெற்ற தொடரின் இறுதிப் போட்டியில் ஜப்பானை வீழ்த்தி தென்கொரியா கோப்பையை வென்றது.
ஆசிய கோப்பையில் வெற்றிகரமாக அணிகளாக வலம்வரும் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் விளையாடும் ஆட்டம் ஆகஸ்ட் 9ஆம் தேதி இரவு 8.30 மணிக்கு திட்டமிடப்பட்டுள்ளது. கடைசியாக 1998ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் இந்த மைதானத்தில் நேருக்கு நேர் எதிர்கொண்டு விளையாடின. 25 ஆண்டுகளுக்கு பின் இரு அணிகளும் சென்னையில் நேருக்கு நேர் சந்திக்கவுள்ள இந்த ஆட்டத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு இருப்பதாக பாஸ்கரன் கூறுகிறார்.
“1998ல் இந்தியா- பாகிஸ்தான் அணிகள் மோதியபோது நான் இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்தேன். இந்த போட்டியைப் பார்க்க 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரசிகர்கள் திரண்டனர். கூடுதலாக இரண்டு கேலரிகள் ஏற்பாடு செய்யப்பட்டன. அந்தளவு ரசிகர்கள் திரண்டு வந்து ஆட்டத்தை ரசித்தனர். எனவே தற்போது நடைபெறும் போட்டியிலும் ரசிகர்களின் ஆதரவை நாம் பார்க்க முடியும்” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Sports Tamilnadu
இந்திய அணியில் தமிழக வீரர்
ஆசிய சாம்பியன்ஸ் டிராபி ஹாக்கி தொடருக்கான 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி,
கோல்கீப்பர்கள்: பி.ஆர்.ஸ்ரீஜேஷ், கிரிஷன் பஹதுர் பதக்
தடுப்பு ஆட்டக்காரர்கள்: ஹர்மன்பிரீத் சிங் (கேப்டன்), அமித் ரோஹிதாஸ், வருண் குமார், ஜர்மன்பிரீத் சிங், சுமித், ஜுக்ராஜ் சிங்,
நடுகளம்: ஹர்திக் சிங், விவேக் சாகர் பிரசாத், மன்பிரீத் சிங், நீலகண்ட சர்மா, ஷம்ஷேர் சிங்.
முன்களம்: கார்த்தி செல்வம், ஆகாஷ்தீப் சிங், மன்தீப் சிங், குர்ஜந்த் சிங், சுக்ஜீத் சிங்,
தமிழ்நாட்டைச் சேர்ந்த ஹாக்கி பிளேயர் கார்த்தி செல்வம் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார். இது மிகவும் பெருமைமிக்கத் தருணம் அவரது ஆட்டத்தை பார்க்க ஆவலாக உள்ளேன் என்று கூறிய பாஸ்கரன்,
“ இந்த தொடரில் வெற்றி பெறுபவர்கள் அடுத்து நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஹாக்கிப் போட்டிக்கு நேரடியாக தகுதி பெற முடியும். அதேபோல், செப்டம்பர் மாதம் நடைபெறும் ஆசிய விளையாட்டு போட்டிக்கு தங்களை தயார்படுத்திக்கொள்ள ஹாக்கி அணிகளுக்கு இந்த தொடர் உதவும். ஆசிய போட்டியில் வெல்லும் அணி ஒலிம்பிக் போட்டிக்கு செல்ல முடியும். எனவே, இந்த ஹாக்கி தொடர் மிகவும் முக்கியமான ஆட்டமாக பார்க்கப்படுகிறது” என்று தெரிவித்தார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்












