இலங்கை உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு: ஐந்து நாட்களுக்கு தொடர் விடுமுறை, நிச்சயமற்ற நிலைமையை உருவாக்குமா?

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், PMD SRI LANKA

    • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்துவதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகிறது.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தலைமையில் இன்று மாலை நடைபெற்ற விசேட அமைச்சரவை கூட்டத்தின் போது உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடர்பான யோசனைக்கு அனுமதி கிடைத்துள்ளது.

இதையடுத்து, உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு தொடார்பான யோசனை நாடாளுமன்ற நிதிக்குழுவில் சமர்பிக்கப்பட்டு, எதிர்வரும் சனிக்கிழமை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

இந்த நிலையில், வார இறுதி விடுமுறை நாளில் நடத்தப்படவுள்ள நாடாளுமன்ற அமர்வுகளில் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கலந்துக்கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

கடன் மறுசீரமைப்புக்கு எதிராக நீதிமன்றத்தில் மனுத் தாக்கல்

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், WASANTHA SAMARASINGE FB

படக்குறிப்பு, அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேரினால் அடிப்படை உரிமை மீறல் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதனையடுத்து உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைகளின் ஊடாக ஊழியர் சேமலாப நிதியம் மற்றும் ஊழியர் நம்பிக்கை நிதியம் ஆகியவற்றிலிருந்து பெற்றுக்கொள்ளப்பட்ட கடன், திரும்பச் செலுத்தாதிருப்பதை தடுக்கும் வகையிலான உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி உயர்நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நிறுவன ஊழியர் சங்கம் மற்றும் அதன் தலைவர் வசந்த சமரசிங்க உள்ளிட்ட 6 பேரினால் இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

“அரசாங்கம் என்ன செய்ய போகின்றது என்பதை முன்கூட்டியே அறிந்தமையினால், நாங்கள் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளோம். எமது நிதியத்தில் கைகளை வைக்க வேண்டாம் என்ற இடைகால தடையுத்தரவொன்றை பெற்றுத் தருமாறு உயர்நீதிமன்றத்திடம் கோரியுள்ளோம்,” என அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் தலைவர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

ஐந்து நாட்கள் தொடர் விடுமுறை அறிவிப்பு

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க

பட மூலாதாரம், CBSL

படக்குறிப்பு, தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சந்தை மூடப்படுவதன் ஊடாக, இந்த திட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புவதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்

இந்த மாதம் 30ம் தேதி விசேட வங்கி விடுமுறையொன்றை அரசாங்கம் அறிவித்துள்ளது.

இதன்படி, அன்றைய தினம் பங்குச்சந்தை வர்த்தகத்திற்கும் விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், எதிர்வரும் ஜூன் 29ம் தேதி ஆரம்பமாகும் விடுமுறையானது, தொடர்ச்சியாக ஐந்து தினங்களுக்கு விடுமுறையாக காணப்படுகின்றது.

புனித ஹஜ் பெருநாளை முன்னிட்டு 29ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதுடன், 30ம் தேதி விசேட விடுமுறையை அரசாங்கம் அறிவித்துள்ளது.

அதனைத் தொடர்ந்து, முதலாம் மற்றும் இரண்டாம் தேதிகளில் வார இறுதி விடுமுறை தினங்களாகும்.

மூன்றாம் தேதி பூரணை தின விடுமுறை காணப்படுகின்றது.

இதன்படி, தொடர்ச்சியாக ஐந்து தினங்கள் விடுமுறை காணப்படுகின்ற நிலையில், இந்த ஐந்து தினங்களில் உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தை அமல்படுத்த எதிர்பார்த்துள்ளதாக மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.

“உள்நாட்டுக் கடன் மறுசீரமைப்புத் திட்டத்தை அமல்படுத்துவதற்காகவே இந்த மாதம் 30ம் தேதியை வங்கி விடுமுறை தினமாக அறிவித்துள்ளோம்,” என்கிறார் அவர்.

மேலும் இத்திட்டத்தை அமல்படுத்த குறிப்பிட்ட கால எல்லையொன்று தேவைப்படுகின்றது எனவும், அமைச்சரவை அங்கீகாரத்தை பெற்றுக்கொள்ளுதல், நாடாளுமன்றத்திற்கு அதனை சமர்ப்பித்தல், நாடாளுமன்றத்தில் நிதி செயற்குழு உள்ளிட்ட குழுக்கள் கலந்துரையாடுவதற்கு ஒரு சில காலம் தேவைப்படுவதாகவும் தெரிவித்தார்.

“நாடாளுமன்றத்தில் விவாதம் நடத்தி, அதற்கான அனுமதியை பெற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தொடர்ச்சியாக ஐந்து நாட்கள் சந்தை மூடப்படுவதன் ஊடாக, இந்த திட்டத்தை நிறைவுக்கு கொண்டு வர முடியும் என அரசாங்கம் நம்புகின்றது,” என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிட்டார்.

இந்த காலப் பகுதியில் வங்கி, இணைய வழி பணக் கொடுக்கல் வாங்கல்கள், ஏ.டி.எம் பணப்பரிமாற்று நடவடிக்கைகள், வார இறுதி வங்கி சேவைகள் என அனைத்து வங்கி சேவைகளும் வழமை போன்று செயற்படும் என அவர் அறிவித்துள்ளார்.

'மக்களின் பணத்திற்கு பாதிப்பு இல்லை'

வங்கிகளில் பணத்தை வைப்பு செய்துள்ள எந்தவொரு நபருக்கும், இந்த உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் ஊடாக பாதிப்பு ஏற்படாது என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவிக்கின்றார்.

“வங்கிகளில் வைப்பு செய்துள்ள வாடிக்கையாளர்களின் பணத்திற்கு ஏதோ ஒரு வகையில் பாதிப்பு ஏற்படக்கூடும் என சிலர் கட்டுக் கதைகளை முன்வைத்து வருகின்றார்கள்,” என்றார் அவர்.

மேலும், உத்தேச உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தின் போது, உள்நாட்டு வங்கி மற்றும் வங்கி அல்லாத நிதி நிறுவனங்களில் வைப்பு செய்துள்ள பணம் மற்றும் அதற்காக தற்போது கிடைக்கின்ற வட்டி ஆகியவற்றில் எந்தவொரு குறைவும் ஏற்படாது என மத்திய வங்கி என்ற விதத்தில் உறுதியாக கூற முடியும், என்று கூறினார்.

“உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்தில் வங்கி கட்டமைப்பு மற்றும் வங்கிகளில் வைப்பு செய்துள்ள மக்களின் பணம் ஆகியவற்றின் பாதுகாப்பை மத்திய வங்கி உறுதி செய்கின்றது,” எனவும் கலாநிதி நந்தலால் வீரசிங்க குறிப்பிடுகின்றார்.

உள்நாட்டுக் கடன் சீரமைப்பு என்றால் என்ன, ஐந்து நாட்கள் விடுமுறை ஏன்? அதற்கான காரணம் என்ன? என்பது தொடர்பில் பிபிசி தமிழ், கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தியை தொடர்புக்கொண்டு வினவியது.

இலங்கை, கடன் மறுசீரமைப்பு, ரணில் விக்ரமசிங்க
படக்குறிப்பு, கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு என்றால் என்ன?

"கடன் மறுசீரமைப்பு என்பது வேறொன்றும் கிடையாது. வங்கிகளிடமிருந்து அரசாங்கம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அதேபோன்று, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றிலிருந்தும் அரசாங்கம் கடனை பெற்றுக்கொண்டுள்ளது. அந்தக் கடன்களின் ஒரு பகுதியை எப்படி பதிவளிப்பு செய்யலாம் என்பதே இதன் நோக்கம்.

"அரசாங்கத்திற்கு வழங்கிய கடனை, இந்த நிறுவனங்கள் பதிவளிப்பு செய்ய வேண்டும். அப்படியென்றால், குறைக்க வேண்டும். இந்த நிறுவனங்கள் அரசாங்கத்திற்கு எப்படி கடன் கொடுத்திருக்கும்? யாருடைய பணம்? இது பொதுமக்களின் பணம். பொதுமக்கள் வைப்பு செய்யும் பணத்தை திறைசேரி (Treasury) முறி, திறைசேரி (Treasury) உண்டியல் ஆகியவற்றில் முதலீடு செய்திருக்கும். அதிலிருந்து கிடைக்கும் லாபத்தில் வங்கி ஒரு வருவாய் லாபத்தை அனுபவிக்கும். அதில் ஒரு சிறிய பகுதியை வட்டி என்ற அடிப்படையில் பொதுமக்களுக்கு கொடுக்கும்.

"திறைசேரி வட்டி வீதம் 30, 32 வீதமாக இருந்தது. ஆனால் வைப்பாளர்களுக்கு கொடுத்த வட்டி வீதம் அண்மைக் காலமாக மிகக் குறைவு. அதேபோன்று ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியன திறைசேரி ஊடாகவே அரசாங்கத்திற்கு கடனை வழங்கியுள்ளது. இப்படி வழங்கப்பட்ட கடனில் ஒரு பகுதியை பதிவளிப்பு செய்யலாமா என்றே பார்க்கின்றார்கள்.

"நேரடியாகப் பார்க்கும் போது, பொதுமக்கள் வைப்பு செய்த பணத்தில் ஒரு பகுதியை இழக்க வேண்டிய நிலை ஏற்படும் என்ற ஒரு பார்வையும் இருக்கின்றது. அதேபோன்று, ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகியவற்றில் ஒரு பகுதியை இழக்க வேண்டி ஏற்படும் என்ற பார்வையும் இருக்கின்றது. வைப்பு செய்தவர்களின் பணம் ஒருபோதும் எடுக்கப்படாது என அரசாங்கம் தெரிவிக்கின்றது. ஊழியர் நம்பிக்கை நிதியம் மற்றும் ஊழியர் சேமலாப நிதியம் ஆகிய பணத்திற்கும் எந்தவித பாதிப்பும் வராது என அரசாங்கம் கூறுகின்றது.

"இந்த இரண்டிலும் கைவைக்காமல், அரசாங்கம் எப்படி கடன் மறுசீரமைப்பை செய்ய முடியும் என்று பார்த்தால், வங்கிகளில் செய்யப்படும் வைப்புக்களின் ஊடாக வருகின்ற லாபத்தில் ஒரு பகுதியை அரசாங்கம் வெட்டி விடலாம். அதாவது ஒரு பகுதியை தருமாறு கேட்கலாம்."

உள்நாட்டு கடன் மறுசீரமைப்பு திட்டத்திற்கு ஏன் நீண்ட விடுமுறை தேவைப்படுகின்றது?

"கடன் மறுசீரமைப்பு செய்யப்படும் இந்தக் காலப் பகுதியில் வங்கி நடவடிக்கைகள் மற்றும் பங்குச் சந்தை நடவடிக்கைகள் செய்யப்படாமல் இருப்பது அரசாங்கத்திற்கு உதவியாக இருக்கும். ஏனென்று சொன்னால், அடுத்து வரும் நாட்கள் மிகவும் சர்ச்சைக்குரிய நாட்களாக காணப்படுகின்றன.

"இந்தக் காலப் பகுதியில் பொதுமக்கள் மத்தியில் ஏற்படக்கூடிய நிச்சயமற்ற நிலைமைக்கு மத்தியில், எங்களுடைய பணத்தை மீள தாருங்கள் என மக்கள் வங்கிக்கு சென்று கேட்டால் என்ன நடக்கும்? அதேபோன்று, பங்குச் சந்தையிலுள்ள அனைவரும், பங்குகளை விற்க தொடங்கினால் என்ன நடக்கும்? இவ்வாறான நடவடிக்கைகளை தடுப்பதே இந்த விடுமுறை வழங்கப்பட்டமைக்கான நோக்கமாகும்."

‘ஏதோ ஒரு பெரிய பாதிப்பு வரக்கூடும்’

மேலும் இலங்கை அரசாங்கத்தினால் அடுத்து வரும் நாட்களில் முன்னெடுக்கப்படும் கடன் மறுசீரமைப்பு திட்டமானது, வெளிநாடுகள் மற்றும் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு தொடர்புப்படாது எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி தெரிவிக்கின்றார்.

இது உள்நாட்டு கடன் வழங்குநர்களுக்கே தாக்கத்தை செலுத்தும் என கூறிய அவர், வெளிநாட்டு கடன் வழங்குநர்களுடனான கடன் மறுசீரமைப்பு குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் குறிப்பிட்டார்.

இலங்கை அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட கடனை மீள செலுத்த முடியாது எனவும், தம்மால் குறிப்பிட்டளவு தொகையையே மீள செலுத்த முடியும் எனவும் கூறுவதே இந்த கடன் மறுசீரமைப்பு திட்டம் என அவர் தெளிவூட்டினார்.

அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் இவ்வாறான நடவடிக்கைகளினால், ஏதோ ஒரு வகையான பெரிய பாதிப்பு வரக்கூடிய சந்தர்ப்பம் உள்ளதாகவே தான் கருதுவதாக கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் எம்.கணேசமூர்த்தி பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: