வலியே தெரியாது; காயங்கள் உடனே குணமாகும் - 65 வயது 'அதிசயப் பெண்'

உடல்நலம், மரபணு குறைபாடு

உலகில் அறியப்பட்டுள்ள, ’இரண்டு மரபணு பிறழ்வுகளை’ கொண்டிருக்கும் ஒரே நபர் ஜோ கேமரூன் ஆவார். இதன் காரணமாக அவர் கிட்டத்தட்ட வலியை உணர்வதில்லை மற்றும் எந்த காயம் ஏற்பட்டாலும் விரைவிலேயே குணமடையும் திறனையும் அவர் பெற்றுள்ளார்.

பிறழ்வுகள் எவ்வாறு செயல்படுகின்றன என்பதைக் கண்டறிய ஆராய்ச்சியாளர்களுக்கு 10 ஆண்டுகள் தேவைப்பட்டன. 2013 ஆம் ஆண்டில் அப்போது 65 வயதாக இருந்த அவரது கையில் ஒரு வழக்கமான அறுவை சிகிச்சை செய்யப்பட்டபோது, ஒரு மரபணு பிறழ்வு கண்டுபிடிக்கப்பட்டது, இது அவரது வலி உணர்திறன் இல்லாமையை விளக்கியது.

"என் கையில் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை செய்து கொண்டேன். நான் மயக்க மருந்து நிபுணரிடம் பேசிக் கொண்டிருந்தேன். இது வலி மிகுந்த அறுவை சிகிச்சையாக இருக்கக்கூடும் என்றும், அதன் பிறகும் உங்களுக்கு வலி இருக்கும் என்றும் அவர் சொன்னார்,” என்று ஜோ கேமரூன் பிபிசியிடம் கூறினார்.

"அப்படி இருக்காது. ஏனென்றால் எனக்கு வலி என்ற உணர்வே இல்லை என்று நான் அவரிடம் சொன்னேன். அறுவை சிகிச்சைக்குப் பிறகு அவர் என்னிடம் வந்து, ‘வலிக்காக நீங்கள் எந்த மருந்துமே எடுத்துக்கொள்ளவில்லையே.. இது மிகவும் அசாதாரணமானது’ என்று சொன்னார்,” என்று ஜோ குறிப்பிட்டார்.

கேமரூனுக்கு வலியே இல்லை என்பதை மயக்க மருந்து நிபுணர் டாக்டர் தேவ்ஜித் ஸ்ரீவஸ்தவா, தெரிந்துகொண்டதும், அவரை லண்டன் பல்கலைக்கழக கல்லூரி (UCL) மற்றும் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் உள்ள வலி மரபியல் (Pain geneticists) நிபுணர்களிடம் பரிந்துரைத்தார். மரபணுவியலாளர்கள் குழு அவரது டிஎன்ஏவைப் பார்க்க திசுக்கள் மற்றும் ரத்த மாதிரிகளை சேகரித்தது.

FAAH-OUT மரபணுவின் முன்னர் அறியப்படாத பிறழ்வுகள் காரணமாகவே, ஸ்காட்டிஷ் ஹைலேண்ட்ஸில் உள்ள லாஷ் நெஸ் அருகே வசிக்கும் எம்.எஸ் கேமரூனுக்கு வலி, மன அழுத்தம் அல்லது பயம் ஆகிய உணர்வுகள் இல்லை என்பதை ஆறு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு அவர்கள் கண்டறிந்தனர்.

உடல்நலம், மரபணு குறைபாடு

FAAH-OUT மரபணு பிறழ்வு என்றால் என்ன?

FAAH-OUT மரபணு, "தேவையற்ற டிஎன்ஏ" என்று நீண்ட காலமாக கருதப்படும் மரபணுக்களின் குழுவில் இருக்கும் ஒன்றாகும். ஆனால் விஞ்ஞானிகள் இப்போது கருவுறுதல், முதுமை மற்றும் நோய் போன்ற செயல்முறைகளில் இந்த மரபணுக்களின் முக்கியத்துவத்தை உணர்ந்து வருகிறார்கள்.

எந்த மரபணுக்கள் வலி உணர்வை இல்லாமல் ஆக்குகின்றன, எந்த மரபணுக்கள் கவலை மற்றும் மனச்சோர்வு உணர்வுகளைத் தவிர்க்க உதவுகின்றன, மேலும் எந்த மரபணுக்கள் ஜோ கேமெரூனை வேகமாக குணமடையச்செய்வதில் உதவுகின்றன என்பதை ஆராய்ச்சியாளர்களால் அடையாளம் காண முடிந்தது.

FAAH-OUT பிறழ்வு FAAH மரபணுவின் வெளிப்பாட்டை "நிராகரிக்கிறது" என்று அவர்கள் கண்டறிந்துள்ளனர். FAAH மரபணு, வலி, மனநிலை மற்றும் நினைவாற்றலுடன் தொடர்புடையது. இந்தப்பிறழ்வு, FAAH என்சைம் உற்பத்தியையும் குறைக்கிறது.

ஜோவின் FAAH மரபணுவும் ஒரு பிறழ்வைக் கொண்டுள்ளது. அதாவது என்சைம் செயல்பாடு குறைவாக உள்ளது. நொதி( என்சைம்) ஒரு உயிரியல் வினையூக்கி ஆகும். இது ஒரு புரதத்தை உருவாக்குகிறது. இது பொதுவாக மனிதர்களில் எனானிமைட் எனப்படும் 'பிளிஸ் லைக்' மூலக்கூறை உடைக்கிறது. ஆனால் ஜோவுக்கு இது சரியாக வேலை செய்யவில்லை.

ஜோவுக்கு இருக்கும் இந்த இரண்டு பிறழ்வுகளும் வலி உணர்வை ஏற்படுத்தாததுடன் கூடவே, குணப்படுத்தலோடும் இணைக்கப்பட்டுள்ளன என்பதையும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

"அவை ஏதோ ஒரு விதத்தில் இணைக்கப்பட்டுள்ளன. அவரது செல்கள் 20% முதல் 30% வேகமாக குணமடைகின்றன. இது மிகவும் ஆச்சரியமான ஒன்று. எனவே காயம் குணமடையும் வேகத்தை நீங்கள் கற்பனை செய்யலாம்" என்று UCL இன் இணை பேராசிரியரும் ஆய்வின் மூத்த இணை ஆசிரியருமான டாக்டர் ஆண்ட்ரே ஒகோரோகோவ் கூறுகிறார். இந்த ஆய்வு மூளை நரம்பியல் இதழில் வெளியிடப்பட்டது.

" FAAH-OUT மரபணுவின் ஒரு பகுதியை இந்தப்பிறழ்வு நீக்கி, அதை மூடுகிறது. ஜோவிற்கு FAAH மரபணுவில் மற்றொரு பிறழ்வும் உள்ளது. இவரைத்தவிர உலகில் வேறு யாருக்கும் இந்த இரண்டு பிறழ்வுகளும் உள்ளதாக எங்களுக்கு இதுவரை தெரியவரவில்லை.”

வலி

பட மூலாதாரம், Getty Images

நாம் ஏன் வலியை உணர வேண்டும்?

தீங்கு விளைவிக்கும் மற்றும் உயிருக்கு ஆபத்தான நிகழ்வுகளிலிருந்து நம்மைப் பாதுகாக்க வலி அவசியம். வலியை உணராததால் ஏற்படும் விளைவுகள் தீவிரமாக இருக்கலாம்.

ஜோ அடிக்கடி தன் கைகளை அடுப்பில் சுட்டுக்கொள்கிறார். தன் தோல் எரிகிறது என்று உணர, எரியும் சதையில் இருந்து வரும் வாசனையை அவர் நம்ப வேண்டியுள்ளது.

"பிற மரபணுக்களில் ஏற்படும் பிறழ்வுகள் காரணமாக வலியை உணராத பிற நோயாளிகளையும் நாங்கள் பார்த்திருக்கிறோம். சில சமயங்களில் அவர்கள் கடுமையான காயங்களுக்கு ஆளாகின்றனர். எனவே, வலியை உணர்வது ஒரு நல்ல விஷயம். ஆனால் சில நேரங்களில் வலி எப்போதும் உடன்இருக்கும் ஒன்றாக மாறும். அப்போது அது நல்ல விஷயமாக இருக்காது,” என்று UCL இல் மனித வலி மரபியல் பேராசிரியரும் ஆய்வின் ஆசிரியருமான ஜேம்ஸ் காக்ஸ் கூறுகிறார்.

தான் மாறுபட்டவர் என்று வளரும்போது ஜோவுக்கு தெரியாது. வலியில் இருந்து விடுபட அவர் ஒருபோதும் எதையும் உட்கொண்டதில்லை.

"இது அசாதாரணமானது என்று நான் நினைக்கவில்லை. எனக்கு குழந்தைகள் உள்ளனர். கணவரும் இருக்கிறார். எனக்கு வலியை பொறுத்துக்கொள்ளும் உயர் திறன் இருப்பதாக அவர்கள் நினைத்தனர்,” என்று ஜோ குறிப்பிட்டார்.

இந்த மரபணு மாற்றங்கள் காரணமாக வருத்தமளிக்கும் உணர்வுகளை அவர் மிகவும் விரைவாக பிராஸஸ் செய்கிறார்.

"மோசமான விஷயங்கள் நடக்கும் போது நான் மற்றவர்களைப் போலவே உணர்கிறேன், மற்றவர்களைப் போலவே நான் உடனடியாக செயல்படுகிறேன்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் நான் ஏதாவது செய்ய வேண்டும் என்று உடனே நினைக்க ஆரம்பித்து விடுவேன். அதிலிருந்து வெளியேறுவதற்கான உத்திகளைப் பற்றி சிந்திக்கத் தொடங்குவேன்,” என்றார் அவர்.

வலி மேலாண்மை, காயத்தை குணப்படுத்துதல் மற்றும் மனநலம் ஆகியவற்றிற்கு உதவும் மருந்துகளின் புதிய ஆராய்ச்சியில் இந்த கண்டுபிடிப்புகள் உதவும் என்று பேராசிரியர் காக்ஸ் நம்புகிறார்.

"நாள்பட்ட வலி என்பது இந்த காலகட்டத்தில் காணப்படும் மிகவும் பொதுவான சுகாதார பிரச்சனையாகும். நமக்கு புதிய வலிநிவாரணிகள் அவசரமாக தேவைப்படுகின்றன. FAAH-OUT எவ்வாறு செயல்படுகிறது என்பதை மூலக்கூறு நிலையில் புரிந்துகொள்வதன் மூலம், புதிய மற்றும் சிறந்த வலி நிவாரண மருந்துகளை உருவாக்கமுடியும் என்று நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: