"பிழைப்பு தேடி வந்த அகதிகளை கிரீஸ் கடலோர காவல்படை கடலில் வீசியது" - நேரில் கண்ட சாட்சிகள் தகவல்

    • எழுதியவர், லூசில் ஸ்மித் மற்றும் ப்ன் ஸ்டீல்
    • பதவி, பிபிசி டிவி நடப்புச் செய்திகள்

மூன்று ஆண்டு காலப்பகுதியில், மத்தியதரைக் கடலில் டஜன்கணக்கான தஞ்சம் கோரிகள் இறந்ததற்கு கிரீஸ் கடலோரக் காவல்படை தான் பொறுப்பு என சாட்சிகள் கூறுகின்றனர். கடலோரக் காவல்படையினர் ஒன்பது தஞ்சம் கோரிகளை வேண்டுமென்றே கடலில் தூக்கி வீசினர் என்றும் சாட்சிகள் கூறுகின்றனர்.

கிரீஸ் கடல் எல்லையில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டதாலோ, கிரீஸ் தீவுகளை அடைந்த பிறகு மீண்டும் கடலுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாலோ 40-க்கும் மேற்பட்டவர்கள் இறந்ததாகக் கூறப்படுகிறது. இதில் அந்த ஒன்பது பேரும் அடங்குவர், என்று பிபிசி பகுப்பாய்வு கண்டறிந்துள்ளது.

கிரீஸ் கடலோரக் காவல்படை, சட்டவிரோத நடவடிக்கைகள் தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிப்பதாக பிபிசியிடம் கூறியது.

கிரீஸ் கடலோரக் காவல்படையின் படகில் 12 பேர் ஏற்றப்பட்டு, பின்னர் ஒரு சிறிய படகில் கைவிடப்படும் வீடியோ காட்சிகளை, முன்னாள் கிரீஸ் கடலோரக் காவல்படை அதிகாரி ஒருவரிடம் காட்டினோம். அவர் தனது நாற்காலியில் இருந்து எழுந்த போது, அவரது ‘மைக்’ இன்னும் அணைக்கப்படாத நிலையில், ‘இது தெளிவாகச் சட்டவிரோதமானது’ என்றும் ‘சர்வதேசச் சட்டப்படி குற்றம்’ என்றும் கூறினார்.

நீண்ட காலமாகவே தஞ்சம் கோரிகளை கட்டாயமாகத் திருப்பி அனுப்புவதாக கிரீஸ் அரசாங்கத்தின் மீது குற்றம் சாட்டப்படுகிறது. துருக்கியிலிருந்து வரும் அவர்களை அதே வழியில் திரும்பிச் செல்லக் கட்டாயப்படுத்துவதாகக் குற்றச்சாட்டுகள் உள்ளன. இது சர்வதேசச் சட்டத்தின் கீழ் சட்டவிரோதமானது.

ஆனால், கிரீஸ் கடலோரக் காவல்படையின் நடவடிக்கைகளால் உயிரிழப்புகள் ஏற்பட்டதாகக் கூறும் சம்பவங்களின் எண்ணிக்கையை பிபிசி கணக்கிட்டது இதுவே முதல் முறை.

பிபிசி பகுப்பாய்வு செய்த 15 சம்பவங்கள் (மே 2020-23 தேதியிட்டவை) 43 இறப்புகளுக்கு காரணமாக அமைந்தன. முதல்கட்டத் தரவுகளாக இருந்தவை, உள்ளூர் ஊடகங்கள், தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் மற்றும் துருக்கியின் கடலோரக் காவல்படை.

அத்தகைய கணக்குகளைச் சரிபார்ப்பது மிகவும் கடினம். சாட்சிகள் பெரும்பாலும் மறைந்துவிடுவார்கள் அல்லது பேசுவதற்கு மிகவும் பயப்படுவார்கள். ஆனால், இவற்றில் நான்கு வழக்குகளில் நேரில் கண்ட சாட்சிகளுடன் பேசி, அவற்றை உறுதிப்படுத்த முடிந்தது.

‘டெட் காம்: கில்லிங் இன் தி மெட்?’ என்ற புதிய பிபிசி ஆவணப்படத்தில் இடம்பெற்றுள்ள இந்த ஆய்வு, தெளிவான ஒரு வடிவம் இருப்பதாகக் கூறுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘நான் சாக விரும்பவில்லை’

ஐந்து சம்பவங்களில், கிரீஸ் அதிகாரிகள் தங்களை நேரடியாகக் கடலில் வீசியதாகத் தஞ்சம் கோரிகள் தெரிவித்தனர். அதில் நான்கு சம்பவங்களில் அவர்கள் கிரீஸ் தீவுகளை அடைந்ததாகவும், ஆனால் துரத்திப் பிடிக்கப்பட்டதாகவும் கூறினர். வேறு பல சம்பவங்களில், தாம் மோட்டார்கள் இல்லாமல் ஊதப்பட்ட மிதவைகளில் ஏற்றப்பட்டதாகத் தஞ்சம் கோரிகள் கூறினர். அதன்பின் அந்த மிதவைகளின் காற்று வெளியேறியது அல்லது துளையிடப்பட்டிருந்ததாகத் தோன்றியது என்றனர்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் சமோஸ் தீவில் தரையிறங்கிய பிறகு கிரீஸ் அதிகாரிகளால் பிடிக்கப்பட்டதாகக் கூறும் கேமரூன் நாட்டைச் சேர்ந்த ஒரு நபர் மிகவும் அதிர்ச்சிகரமான அனுபவத்தைப் பகிர்ந்துகொண்டார்.

நாங்கள் நேர்காணல் செய்த அனைத்து நபர்களையும் போலவே, அவர் ஒரு தஞ்சம் கோரியாக கிரீஸ் மண்ணில் பதிவு செய்யத் திட்டமிட்டதாகக் கூறினார்.

"நாங்கள் தரையிறங்கும் முன்பேபோலீசார் பின்னால் இருந்து வந்தனர்," என்று அவர் எங்களிடம் கூறினார். "கருப்பு உடையில் இரண்டு போலீசார், மேலும் மூன்று பேர் பொதுமக்கள் உடையில் இருந்தனர். அவர்கள் முகமூடி அணிந்திருந்தனர். அவர்களின் கண்களை மட்டுமே நீங்கள் பார்க்க முடியும்,” என்றார் அவர்.

அவரும் மற்ற இருவர் - கேமரூனைச் சேர்ந்த மற்றொருவர் மற்றும் ஐவரி கோஸ்ட்டைச் சேர்ந்த ஒருவர் - கிரீஸ் கடலோரக் காவல்படையின் படகிற்கு மாற்றப்பட்டனர். அங்கு நிகழ்வுகள் மேலும் அதிர்ச்சிகரமாக மாறின.

"அவர்கள் அந்த இன்னொரு கேமரூனிய நபரிலிருந்து துவங்கினர். அவரை தண்ணீரில் வீசினார்கள். ஐவரிகோஸ்டைச் சேர்ந்த நபர், ‘என்னைக் காப்பாற்றுங்கள், நான் சாக விரும்பவில்லை…’ என்றார். இறுதியில் அவரது கை மட்டுமே தண்ணீருக்கு மேலே இருந்தது, அவரது உடல் தண்ணீருக்கு அடியில் இருந்தது. "மெதுவாக அவரது கை கீழே நழுவியது, தண்ணீர் அவரை மூழ்கடித்தது," என்றார் அவர்.

நம்மிடம் பேசிய கேமரூனிய நபர், தன்னைக் கடத்தியவர்கள் தன்னை அடித்ததாகக் கூறுகிறார். “என் தலையில் சரமாரியாகக் குத்தினர். ஒரு மிருகத்தைக் குத்துவது போலக் குத்தினர்,” என்கிறார் அவர்.

பின்னர், அவர்கள் அவரையும் லைஃப் ஜாக்கெட் இல்லாமல் தண்ணீருக்குள் தள்ளினார்கள் என்று அவர் கூறுகிறார். அவரால் கரைக்கு நீந்திச் செல்ல முடிந்தது. ஆனால் சிடி கீதா, மற்றும் டிடியர் மார்ஷியல் குவாமோ நானா என அடையாளம் காணப்பட்ட மற்ற இருவரின் உடல்கள் துருக்கியின் கடற்கரையில் மீட்கப்பட்டன.

உயிர் பிழைத்தவரின் வழக்கறிஞர்கள், இரட்டைக் கொலை வழக்கைப் பதியுமாறு கிரீஸ் அதிகாரிகளைக் கோருகின்றனர்.

‘ஒவ்வொரு குழந்தையாக இறந்தது’

சோமாலியாவைச் சேர்ந்த மற்றொரு நபர், 2021-ஆம் ஆண்டு மார்ச் மாதம், கியோஸ் தீவுக்கு வந்தபோது கிரீஸ் ராணுவத்தால் எவ்வாறு பிடிக்கப்பட்டு கிரீஸ் கடலோரக் காவல்படையிடம் ஒப்படைக்கப்பட்டார் என்பதை பிபிசியிடம் கூறினார்.

கடலோரக் காவல்படையினர் அவரைத் தண்ணீரில் இறக்குவதற்கு முன்பு, அவரது கைகளைப் பின்னால் கட்டியதாகக் கூறினார்.

“என் கைகளைக் கட்டி நடுக்கடலில் வீசினார்கள். நான் இறக்க வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்,” என்று அவர் கூறினார்.

அவரது கைகளில் ஒன்று கட்டிலிருந்து விடுபடுவதற்கு முன்பு, அவர் அண்ணாந்து பார்த்தபடி மிதந்து உயிர் பிழைத்ததாகக் கூறினார். ஆனால் கடல் கொந்தளிப்பாக இருந்தது, அவரது குழுவில் இருந்த மூன்று பேர் இறந்தனர். பிபிசி-யுடன் பேசியவர் கரையை அடைந்தபோது, துருக்கிய கடலோரப் படையினரின் பார்வையில் பட்டார்.

2022-ஆம் ஆண்டு செப்டம்பரில், 85 புலம்பெயர்ந்தவர்களை ஏற்றிச் சென்ற படகு ஒன்று கிரீஸ் தீவான ரோட்ஸ் அருகே அதன் மோட்டார் துண்டிக்கப்பட்ட போது சிக்கலுக்குள்ளானது.

சிரியாவைச் சேர்ந்த முகமது, கிரீஸ் கடலோரக் காவல்படையை உதவிக்கு அழைத்ததாக பிபிசியிடம் கூறினார். அந்தக் காவல்படை அவர்களை ஒரு படகில் ஏற்றி, துருக்கியின் கடற்பகுதிக்குத் திருப்பி அனுப்பி, அங்கு அவர்களை ஒரு உயிர் காக்கும் படகில் ஏற்றினார்கள். தனக்கும் அவரது குடும்பத்தினருக்கும் வழங்கப்பட்ட படகின் ‘வால்வு’ சரியாக மூடப்படவில்லை என்று முகமது கூறுகிறார்.

"நாங்கள் உடனடியாக மூழ்கத் தொடங்கினோம், அவர்கள் அதைப் பார்த்தார்கள்... நாங்கள் அனைவரும் அலறுவதை அவர்கள் கேட்டார்கள், இருந்தும் அவர்கள் எங்களைக் கைவிட்டுச் சென்றனர்," என்று அவர் பிபிசியிடம் கூறினார்.

“இறந்த முதல் குழந்தை என் உறவினரின் மகன்... மற்றொரு குழந்தை, மற்றொரு குழந்தை என அதன் பிறகு ஒவ்வொருவராக இறந்தனர். பின்னர் என் உறவினர் காணாமல் போனார். காலையில் ஏழெட்டு குழந்தைகள் இறந்துவிட்டன. காலையில் துருக்கியின் கடலோரக் காவல்படை வருவதற்கு முன்புவரை, என் குழந்தைகள் உயிருடன் இருந்தனர்.

தஞ்சம் கோரிகள் அனைவரும் கிரீசின் பல தீவுகளில் உள்ள சிறப்புப் பதிவு மையங்களில் தங்கள் கோரிக்கையைப் பதிவு செய்ய அந்நாட்டுச் சட்டம் அனுமதிக்கிறது.

ஆனால் பிபிசி நேர்காணல் செய்தவர்கள் - புலம்பெயர்ந்தோர் ஆதரவு அமைப்பான ஒருங்கிணைந்த மீட்புக் குழுவின் உதவியுடன் நாங்கள் தொடர்பு கொண்டவர்கள் - அவர்கள் இந்த மையங்களுக்குச் செல்வதற்கு முன்பே கைது செய்யப்பட்டதாகக் கூறினர். கைது நடவடிக்கையை மேற்கொள்பவர்கள் ரகசியமாக சீருடை அணியாமல், பெரும்பாலும் முகமூடி அணிந்து செயல்படுவார்கள் என்று அவர்கள் கூறினர்.

ஐரோப்பாவில் தஞ்சம் கோரும் ஆயிரக்கணக்கான மக்கள் சட்டவிரோதமாக கிரீசில் இருந்து துருக்கிக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாகவும், தஞ்சம் கோருவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளதாகவும் மனித உரிமைக் குழுக்கள் குற்றம் சாட்டுகின்றன.

ஆஸ்திரியாவைச் சேர்ந்த மனித உரிமை செயற்பாட்டாளரான ஃபயாத் முல்லா எங்களிடம் கூறுகையில், கடந்த ஆண்டு பிப்ரவரியில் கிரீஸ் தீவான லெஸ்போஸில் இதுபோன்ற நடவடிக்கைகள் ரகசியமாக நடந்ததைக் கண்டுபிடித்ததாகச் சொல்கிறார்.

தகவல் கிடைத்து தஞ்சம் கோரிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவதாகக் கூறப்பட்ட இடத்தை நோக்கி வாகனம் ஓட்டிச்சென்ற போது, ​​​​அவரை ஹூடி அணிந்த ஒரு நபர் நிறுத்தினார் - பின்னர் அவர் காவல்துறையில் பணியாற்றுவது தெரியவந்தது. அப்போது அவரது காரின் முன்புறக் கேமராவில் இருந்து அவர் தடுத்து நிறுத்தப்பட்ட காட்சிகளை நீக்கவும், ஒரு போலீஸ் அதிகாரியை எதிர்த்ததற்காக அவர் மீது குற்றம் சாட்டவும் போலீசார் முயன்றனர்.

அதைத்தொடர்ந்து எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

‘இது ஒரு சர்வதேச குற்றம்’

இரண்டு மாதங்களுக்குப் பிறகு, இதேபோன்ற வேறொரு இடத்தில், தஞ்சம் கோரிகள் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுவதை முல்லா என்பவர் படம் பிடித்தார். இதனை ‘தி நியூயார்க் டைம்ஸ்’ வெளியிட்டது.

அதில், பெண்கள் மற்றும் குழந்தைகளை உள்ளடக்கிய ஒரு குழு அடையாளங்களற்ற ஒரு வேனின் பின்புறத்திலிருந்து இறக்கப்பட்டு ஒரு படகுத்துறைக்கு அழைத்துச்செல்லப்பட்டு, ஒரு சிறிய படகில் ஏற்றப்படுவது பதிவாகியிருந்தது.

பின்னர், அவர்கள் கடற்கரையிலிருந்து வெகு தொலைவில் உள்ள ஒரு கிரீஸ் கடலோரக் காவல்படை படகுக்கு மாற்றப்பட்டு, நடுக்கடலுக்குக் கொண்டு செல்லப்பட்டனர். பின்னர் அங்கு ஒரு மிதவையில் ஏற்றப்பட்டுக் கைவிடப்பட்டனர்.

இந்தக் காட்சிகளை பிபிசி சரிபார்த்துள்ளது. கிரீஸ் கடலோரக் காவல்படையின் சிறப்பு நடவடிக்கைகளின் முன்னாள் தலைவரான டிமிட்ரிஸ் பால்டகோஸிடம் இவற்றைக் காட்டியது.

நேர்காணலின் போது, ​​அந்தக் காட்சிகள் எதைக் காட்டுகின்றன என்பதைப் பற்றி அவர் பேச மறுத்துவிட்டார். உரையாடலின் போது, கிரீஸ் கடலோரக் காவல்படை எப்போதும் சட்டவிரோதமான எதையும் செய்ய வேண்டியிருக்கும் என்பதை மறுத்திருந்தார். ஆனால், ஒரு இடைவேளையின் போது, ​​அவர் காட்சியில் பதிவாகாத யாரிடமோ கிரேக்க மொழியில் பேசுவது பதிவானது:

“நான் அவர்களிடம் அதிகமாக எதுவும் சொல்லவில்லை, இல்லையா?... இது மிகவும் தெளிவாக இருக்கிறது. இது ஒன்றும் அணு இயற்பியல் அல்ல. அவர்கள் ஏன் பட்டப்பகலில் அதை செய்தார்கள் என்று எனக்குத் தெரியவில்லை... அது... தெளிவாகச் சட்டவிரோதமானது. இது ஒரு சர்வதேச குற்றம்."

இந்தக் காட்சிகள் தற்போது கிரீஸின் சுதந்திர தேசிய வெளிப்படைத்தன்மை ஆணையத்தால் விசாரிக்கப்பட்டு வருகின்றன.

சமோஸ் தீவை அடிப்படையாகக் கொண்ட ரோமி வான் பார்சன் என்ற புலனாய்வுப் பத்திரிகையாளரிடம் பிபிசி பேசியது. டேட்டிங் செயலியான ‘டிண்டர்’ மூலம் கிரீஸ் சிறப்புப் படையின் உறுப்பினர் ஒருவருடன் அவர் பேசத் துவங்கியதாகக் கூறுகிறார். ‘போர்க்கப்பல்’ என்று அழைக்கப்பட்ட ஒரு கப்பலிலிருந்து அந்த உறுப்பினர் பார்சனை அழைத்தபோது, பார்சன் அவரது வேலையைப் பற்றிக் கேட்டார். அவரது படைகள் அகதிகள் படகைக் கண்டபோது என்ன செய்தது என்பதையும் சொன்னார்.

அவர்கள் ‘அவர்களைத் திருப்பி விரட்டுகிறார்கள்’ என்று பதிலளித்த அவர், அத்தகைய உத்தரவுகள் ‘அமைச்சரிடமிருந்து வந்தவை’ என்று கூறினார். அவர்கள் ஒரு அகதிகள் படகை நிறுத்தத் தவறினால் தண்டிக்கப்படுவார்கள் என்று கூறினார்.

‘புஷ்பேக்’ என்று அழைக்கப்படும் இச்செயல்பாட்டை கிரீஸ் எப்போதும் மறுத்து வந்திருக்கிறது.

பல குடியேறிகளுக்கு ஐரோப்பாவிற்குள் நுழையும் வழி கிரீஸ் தான். கடந்த ஆண்டு, ஐரோப்பாவில் 2,63,048 குடியேறிகள் கடல் வழியே வந்தனர். அதில் 41,561 பேர் (16%) கிரீஸ் வந்தனர். கிரீஸில் குடியேறுபவர்கள் மற்றும் அகதிகள் நுழைவதைத் தடுக்க 2016-இல் ஐரோப்பிய ஒன்றியத்துடன் துருக்கி ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. ஆனால் 2020-இல் அதைச் செயல்படுத்த முடியாது என்று கூறிவிட்டது.

கிரீஸ் கடலோரக் காவல்படை சொல்வது என்ன?

எங்கள் விசாரணையின் கண்டுபிடிப்புகளை கிரீஸ் கடலோரக் காவல்படையிடம் காண்பித்தோம். ‘அதிகபட்ச நெறிமுறைகளுடன், மனித உயிர் மற்றும் அடிப்படை உரிமைகளுக்கான பொறுப்புணர்வு மற்றும் மரியாதையுடன் அயராது உழைப்பதாக’ அவ்வமைப்பு பதிலளித்தது. ‘நாட்டின் சர்வதேசக் கடமைகளுக்கு முழுமையாக இணங்குவதாகக்’ அது கூறியது.

மேலும், “2015 முதல் 2024 வரை, கிரீஸ் கடலோரக் காவல்படை, கடலில் 6,161 சம்பவங்களில் 2,50,834 அகதிகள்/தஞ்சம் கோரிகளை மீட்டுள்ளது. இந்த உன்னதப் பணியின் குறையில்லா நிறைவேற்றம், சர்வதேசச் சமூகத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது,” என்றது.

கிரீஸ் கடலோரக் காவல்படை, மத்தியதரைக் கடலில் ஒரு தசாப்த காலத்தில் நடந்த மிகப்பெரிய தஞ்சம் கோரிகளின் கப்பல் விபத்திற்கு ஒரு காரணமாக இருந்ததற்காக முன்னர் விமர்சிக்கப்பட்டது. கடந்த ஜூன் மாதம் கிரீஸின் எல்லை நிர்ணயம் செய்யப்பட்ட மீட்புப் பகுதியில் அட்ரியானா என்ற அந்தக் கப்பல் மூழ்கியதில் 600-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

ஆனால், அந்தப் படகு பிரச்னையில் இருக்கவில்லை என்றும், அது பாதுகாப்பாக இத்தாலிக்குச் சென்று கொண்டிருந்ததாகவும், அதனால் கடலோரக் காவல்படையினர் அதனை மீட்க முயற்சிக்கவில்லை என்றும் கிரீஸ் அதிகாரிகள் கூறுகின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)