தோல் புற்றுநோய் இருப்பதை கண்டறிய உதவிய 'ஃபேஷியல்' - ஒரே நாளில் தலைகீழாக மாறிய இளம்பெண்ணின் வாழ்கை

பெண்கள், ஆரோக்கியம்

பட மூலாதாரம், PERSONAL FILE

ஒரு முக்கியமான பயணம் செய்வதற்கு ஆயத்தம் ஆகிக் கொண்டிருந்ததால், பயணத்திற்கு முந்தைய நாள் ‘Facial’ எனப்படும் அழகு சிகிச்சை செய்துகொள்வதற்காக பார்லருக்கு சென்றார் டையானே லிமா என்ற 27 வயது பெண்.

ஆனால் அந்த ‘Facial’ தனக்கு மிகப்பெரும் உதவி செய்யப்போகிறது என்பதை அப்போது அவர் நினைத்துக்கூட பார்த்திருக்கமாட்டார். ஏனெனில் முகப்பொலிவுக்காகச் செய்யப்படும் அந்த அழகு சிகிச்சை, டேயின் லிமாவிற்கு அவர் தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள உதவியது. எப்படி தெரியுமா?

முகப்பொலிவுக்காக அவ்வபோது ‘Facial’ செய்துகொள்ளும் வழக்கம் உடையவர் லிமா. அந்த வகையில் 2022ஆம் ஆண்டின் மத்திய காலகட்டத்தில், தான் வசித்து வரும் நகரிலுள்ள ஓர் அழகு சிகிச்சை நிபுணரிடம் ‘Facial’ செய்துகொள்வதற்காகச் சென்றிருந்தார். ஆனால் அதைச் செய்தபிறகு லிமாவுடைய மூக்கின் ஓரத்தில் உள்ள பகுதி மிகவும் இளகுவாக மாறுவதை அவர் கவனித்திருக்கிறார்.

அதற்கு அடுத்த சில தினங்களில் அவருக்கு அதே இடத்தில் புண்களும் ஏற்பட்டிருக்கின்றன. அழகு சிகிச்சையின்போது நீக்கப்பட்ட `Black head’களால் அந்த புண்கள் ஏற்பட்டிருக்கலாம் என அவர் நினைத்திருக்கிறார். அதற்காக சில களிம்புகளையும் அவர் பயன்படுத்தியிருக்கிறார்.

சில காலத்திற்குப் பின், அந்தப் புண்கள் குணமானாலும் காயங்கள் முழுமையாக மறையவில்லை. ஒரு மாதத்திற்குப் பின் அந்த இடத்தில் இருந்து ரத்தம் கசியத் தொடங்கியிருக்கிறது. அதற்குப் பின்னர்தான் அதன் தீவிரத்தை லிமா உணர்ந்திருக்கிறார்.

"நான் காலையில் எழும்போது எனது மூக்குப் பகுதியில் இருந்து ரத்தம் வந்தது. அதன் பின்னர்தான் தோல் மருத்துவரிடம் சென்றேன்,” என்கிறார் அவர்.

"அவரது மூக்குப் பகுதியில் முழுமையாக ஆறாமல் இருந்த புண்களைப் பார்த்த தோல் சிகிச்சை நிபுணர், அது தோல் புற்றுநோய் பாதிப்பாக இருக்கலாம்,” என்று கூறியிருக்கிறார்.

"மருத்துவர் இதுகுறித்து என்னிடம் தெரிவித்தபோது நான் உடைந்துவிட்டேன். அழுகை பீறிட்டு வந்தது. ஆயிரம் எண்ணங்கள் மனதில் ஓடின. ஓர் இளம் பெண்ணான எனக்கு இது ஏன் ஏற்பட்டது என்று வேதனையடைந்தேன். எனது குடும்பத்தில் யாருக்கும் இத்தகைய பாதிப்பு இல்லை. என் உலகமே அப்போது இருண்டுவிட்டது,” என்று வேதனையுடன் தெரிவிக்கிறார் லிமா.

அதன் பின் எடுக்கப்பட்ட பயாப்ஸி பரிசோதனை முறை ‘Basal cell carcinoma’ என்ற ஒரு வகையான தோல் புற்றுநோய் அவருக்கு ஏற்பட்டிருப்பதை உறுதி செய்தது. அதை நீக்குவதற்காக லிமா அறுவை சிகிச்சைக்குச் சென்றார்.

கடந்த ஜனவரி மாதம் அவருக்கு புற்றுநோயை நீக்குவதற்கான அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. அதற்காக அவரின் முகத்தில் இருந்த ஒரு குறிப்பிட்ட தோல் பகுதி வெட்டி எடுக்கப்பட்டது. இந்த அறுவை சிகிச்சையில் அவரது முகத்தில் மட்டும் 27 தையல்கள் போடப்பட்டன.

"ஒரே நாளில் எல்லாம் மாறிவிட்டது. எனது முகத்தில் போடப்பட்ட தையல்கள் எனது தன்னம்பிக்கையைப் பாதித்தது. எனது முகத்தில் ஏற்பட்ட புற்றுநோய் பார்ப்பவர்களுக்குத் தெளிவாக தெரிந்தது,” என்கிறார் லிமா.

இந்த தையல்களின் தடயம் தவிர்த்து, தனக்கு ஏற்பட்ட அந்த தோல் புற்றுநோய், மனச்சோர்வையும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தியது என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

"என்னால் இப்போது கண்ணாடியில் என் முகத்தைப் பார்க்க முடியவில்லை. வெளியே செல்வதையும் தவிர்க்கிறேன். என் முகத்தைப் பார்த்து பிறர் செய்த கேலிகள் என்னை மிகவும் காயப்படுத்தின. நான் எத்தகைய பிரச்னையை எதிர்கொண்டிருக்கிறேன் என்பதைப் புரிந்துகொள்வதற்கான திறன் யாருக்கும் இல்லை,” என்று லிமா தெரிவிக்கிறார்.

அடித்தள செல் புற்றுநோய் ( Basal cell carcinoma) என்றால் என்ன?

பெண்கள், ஆரோக்கியம்

பட மூலாதாரம், PERSONAL FILE

பிரேசிலின் தேசிய புற்றுநோய் மையத்தின் தகவலின்படி, 'அடித்தள செல் புற்றுநோய்’ என்பது மெலனோமா அல்லாத தோல் புற்றுநோயின் மிகவும் பொதுவான வகையாகும். தோலில் உள்ள ’epidermis’ பகுதியின் அடித்தள செல்களில் இந்த புற்றுநோய் ஏற்படுகிறது.

இது பெரும்பாலும் புற்றுநோய் ஏற்படும் பகுதிகளில், இளஞ்சிவப்பு நிறத்தில் புண்களை ஏற்படுத்துகிறது. இந்தப் புண்கள் பெரும்பாலும் முழுமையாக ஆறுவதில்லை. புண்களை தீவிரப்படுத்தி ரத்தக்கசிவையும் ஏற்படுத்துகிறது.

ஆனால் “இது மற்ற புற்று நோய்களைப் போல கொடூரமான தீங்குகளை ஏற்படுத்துவதில்லை. ஏனெனில் இது மற்ற உறுப்புகளுக்கு புற்றுநோய் செல்களை கடத்துவதில்லை. ஒருவேளை புற்றுநோய் தீவிரமடைந்து, குணமாவதற்கு நீண்ட நாட்கள் எடுத்துகொண்டு, உடலின் எழும்பு பகுதிகள் வரை சென்றால் மட்டுமே சில தொந்தரவுகளை நாம் சந்திக்க வேண்டியிருக்கும். ஆனால் இத்தகைய நிலை மிகவும் அரிதாகவே ஏற்படும்,” என்று கூறுகிறார் தோல் சிகிச்சை நிபுணர் ரெய்னால்டோ டோவோ.

அதிகமான நேரம் சூரிய வெளிச்சத்தில் இருப்பதே, அடித்தள செல் புற்றுநோய் ஏற்படுவதற்கு முக்கியக் காரணமாக இருக்கிறது. குறிப்பாக வெளிர் நிற தோல் உடையவர்களே இதனால் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள்.

சூரிய ஒளிக்கு அதிகமாகத் தங்களை வெளிப்படுத்திகொள்பவர்கள், அதில் இருக்கும் புற ஊதா கதிர்களின் தாக்குதலுக்கு உள்ளாகிறார்கள்.

முகம், கழுத்து, முதுகு, நெஞ்சு பகுதிகள்தான் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகின்றன. குறிப்பாக 40 வயதிற்கு மேலுள்ளவர்கள் இதனால் அதிகமாக பாதிக்கப்படுகிறார்கள்.

அதேபோல் குழந்தைகள், இளம் வயதினர், கருப்பு நிற தோல் கொண்டர்வர்கள் ஆகியோர் இதனால் அரிதாகவே பாதிக்கப்படுகின்றனர். பெண்களைவிட ஆண்கள்தான் இதில் அதிகமாகப் பாதிக்கப்படுகிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

”இந்த தோல் புற்றுநோய் பாதிப்பிற்கு சூரிய ஒளியே முழுமையான காரணம். வெளிர் நிறமுடையவர்கள் வெயிலில் நிற்கும்போது சிவப்பாக மாறுவார்களே தவிர, கறுப்பாக மாற மாட்டார்கள். எனவே அவர்கள் வெயிலில் அதிகமான நேரம் இருக்கும்போது, புற்றுநோய் பாதிப்பிற்கு உள்ளாவதற்கான வாய்ப்புகள் அதிகமாக இருக்கின்றன,” என்கிறார் வனாசே அண்ட்ரிட்டா தனாகா என்ற தோல் சிகிச்சை நிபுணர்.

பரிசோதனை முறைகளும் சிகிச்சையும் என்ன?

பெண்கள், ஆரோக்கியம்

பட மூலாதாரம், PERSONAL FILE

இந்தப் பாதிப்பை முழுக்க முழுக்க மருத்துவ பரிசோதனை முறையின் மூலம் மட்டுமே கண்டறிய முடியும். தோல் மேல் ஏற்பட்டிருக்கும் பாதிப்பின் மீது சந்தேகம் இருந்தாலும், மருத்துவர்கள் தெர்மாஸ்கோபி பரிசோதனை முறையை மேற்கொள்வார்கள். தோல் பாதிப்பின் மீது லென்ஸை வைத்து அழுத்தி இந்த பரிசோதனை மேற்கொள்ளப்படும். அதேபோல் ‘அடித்தள செல் புற்றுநோய்’ இருக்கிறதா என்பதை உறுதிசெய்ய பயாப்ஸி (biopsy) பரிசோதனை மேற்கொள்ளப்படும்.

அதேபோல் இத்தகைய புற்றுநோய் பாதிப்புகளுக்கு பொதுவாக அறுவை சிகிச்சையின் மூலமே தீர்வு காண முடியும். இதுதான் அந்த புற்றுநோய் மற்ற பகுதிகளுக்கும் பரவாமல் தடுத்து, நிரந்தர தீர்விற்கு வழிவகுக்கிறது. புற்றுநோய் பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதியில் இருக்கும் புண்களையும் திசுக்களையும் முழுமையாக அகற்றுவதே இந்த அறுவை சிகிச்சையின் முக்கிய நோக்கம்.

"இது போன்ற அறுவை சிகிச்சைகள் மிகவும் பாதுகாப்பானதுதான். புண்கள் ஆரம்பகட்டத்திலேயே அகற்றப்படுவதால், புற்றுநோயால் ஏற்படும் ஆபத்துகளை நம்மால் தவிர்க்க முடிகிறது,” என்கிறா சா பாலோவின் இருக்கும் மருத்துவர் டியாகோ கென்ஜி.

தற்காப்பு பராமரிப்பு வழிகள் இருக்கிறதா?

"தோல் புற்றுநோய்களால் பாதிக்கப்படாமல் இருக்க, முதலில் நல்ல உணவுகள் எடுத்துக்கொள்ள வேண்டும். மது மற்றும் புகையிலை போன்றவற்றைத் தவிர்க்கவேண்டும். முக்கியமாக அதிகமான நேரம் வெயிலில் செலவிடுவதைத் தவிர்க்க வேண்டும்,” என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

"அதேபோல் வெயிலில் செல்லும்போது அனைவரும் கட்டாயம் ‘Sun Screen’ பயன்படுத்த வேண்டுமெனவும்” மருத்துவர்கள் வலியுறுத்துகின்றனர்.

"சூரிய ஒளியிலிருந்து தங்களைக் காத்துக்கொள்வதற்கு ஏதுவான தரமான உடைகளை அணிவது மற்றும் தொப்பி போன்ற உபகரணங்களைப் பயன்படுத்துவது போன்ற விஷயங்களை மேற்கொள்ளலாம்.

ஒருவேளை இதற்கெல்லாம் இவ்வளவு செலவு செய்ய முடியாது என்று எண்ணுபவர்கள், வெயிலில் செல்லும்போது தங்களின் உடலை முழுமையாக மறைக்கும் வண்ணம் துணிகளை அணிந்தாலே போதுமென்று” மருத்துவர்கள் கூறுகின்றனர்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: