கத்தார் 2022: கால்பந்து உலகில் பல ஆண்டுகளாக தொடரும் மதுபான சர்ச்சை - என்ன காரணம்?

கத்தார் உலகக் கோப்பை

கத்தார் கால்பந்து உலக கோப்பை மைதானத்தில் பீர் விற்பனை தடை செய்யப்பட்டிருப்பது மிகவும் ஏமாற்றமளிப்பதாக எக்வடோர் அணியின் ரசிகர் ஜோஸ் கூறுகிறார்.

“எனக்கு பூஜ்ஜிய சதவிகிதம் ஆல்கஹால் கொண்ட பீர் கிடைத்தது. குறைந்தபட்சம் அதன் சுவையாவது இருந்தது. பீர் கேட்டு அனைவரும் கத்திக்கொண்டு இருந்தனர்” என்கிறார் எமிலியோ.

கத்தார் மைதானங்களில் பீர் விற்கப்படாது என்ற முடிவு, மதுவிற்கு எதிராக ஃபிஃபா சந்திக்கும் நீண்ட போரட்டங்களின் வரிசையில் சமீபத்தியது.

உலக கோப்பை தொடர்களுக்கு மதுபான நிறுவனங்களிடம் இருந்து ஸ்பான்ஸர் பெறும் விவகாரத்தில், ரசிகர்களின் பாதுகாப்பை விட பணத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதாக ஃபிஃபா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன.

ஃபிஃபாவின் மது தடைக்கு ஆதரவான கொள்கை

ஃபிஃபாவின் சமீபத்திய மது தொடர்பான பிரச்னைகள், மதுவை வழங்குவதற்கு கத்தாரை வற்புறுத்த முயற்சிப்பதாக இருந்தாலும், மைதானங்களில் மது கூடாது என்றே ஃபிஃபா கோரிவந்தது.

2004ஆம் ஆண்டுவரை, முக்கிய நிகழ்வுகளுக்கான ஃபிஃபாவின் விதிகளில், மைதானங்களில் போட்டி ஏற்பாட்டாளர்கள் மது விற்பனை செய்யக் கூடாது என்றும், யாரேனும் மது அருந்தியிருந்தால் மைதானத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்றும் கூறப்பட்டிருந்தது.

ஆனால், பின்னர் தன்னுடைய கொள்கைகளை ஃபிஃபா மாற்றியது.

பிரேசிலில் தடை நீக்கம்

2014ஆம் ஆண்டு உலக கோப்பையை பிரேசிலுக்கு வழங்குவது பொருத்தமாக தெரிந்தது.

கால்பந்து விளையாட்டின் மீது தீவிர ஆர்வம் கொண்ட பிரேசில், 5 முறை உலகக் கோப்பையை வென்றுள்ளது. அந்த நாட்டில் பீர் மிகவும் பிரபலம்.

ஆனால் பல நாடுகளைப் போலவே, பிரேசில் ரசிகர்களின் ஆர்வம் சில நேரங்களில் வன்முறையாக மாறுகிறது.

இதன் விளைவாக, வன்முறை மற்றும் போட்டி அணிகளின் ரசிகர்கள் இடையே ஏற்படும் மோதலைத் தடுக்கும் பொருட்டு கால்பந்து போட்டிகளில் மதுபானங்கள் விற்க 2003ஆம் ஆண்டு பிரேசில் தடை விதித்தது.

ஆனால், ஃபிஃபாவின் நீண்டகால கூட்டாளியான பட்வைசர் என்ற மதுபான நிறுவனம் தொடரின் முக்கிய ஸ்பான்சராக இருந்ததால், இந்தச் சட்டத்தை மாற்ற வேண்டும் என்று பிரேசிலிடம் வெளிப்படையாக கூறப்பட்டது.

"மதுபானங்கள் ஃபிஃபா உலகக் கோப்பையின் ஒரு பகுதி. எனவே அவை இருக்க வேண்டும். என்னுடைய குரல் கொஞ்சம் திமிராக இருந்தால் மன்னிக்கவும். ஆனால் இந்த விவகாரத்தில் பேச்சுவார்த்தை என்பதற்கே இடமில்லை" என்று ஃபிஃபாவின் அப்போதைய பொதுச் செயலாளர் ஜெரோம் வால்கே கூறினார்.

"பீர் விற்க எங்களுக்கு உரிமை உண்டு என்பது சட்டத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்றும் அவர் கூறினார்.

பிரேசிலின் சுகாதார அமைச்சர் இந்தக் கருத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தார். மேலும், பிரேசில் அதிபரின் சிறப்பு ஆலோசகரான மார்கோ ஆரேலியோ கார்சியா, ஜெரோம் வால்கேவை காலனித்துவவாதி மற்றும் விவேகமற்றவர் என்று விமர்சித்தார்.

பின்னர், 2014ஆம் ஆண்டு போட்டிகளின் போது மது விற்பதை அனுமதிக்கும் வகையில் பிரேசில் சட்ட திருத்தம் செய்தது.

அந்தத் தொடரின் போது போட்டி அணி ரசிகர்களுக்கு இடையே பல மோதல்கள் ஏற்பட்டன. ரியோ டி ஜெனிரோவில் உருகுவேக்கு எதிராக நடந்த போட்டியின் போது, போட்டி அணி ஆதரவாளர்களை தனித்தனியே பிரிக்க பாதுகாவலர்கள் தேவைப்பட்டனர்.

கத்தார் மைதானத்தில் பட்வைசர் நிறுவனத்தின் விளம்பரம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கத்தார் மைதானத்தில் பட்வைசர் நிறுவனத்தின் விளம்பரம்

இந்தச் சம்பவங்கள் குறித்து பிரேசிலிய விளையாட்டு தொலைக்காட்சியான ஸ்போர்டிவியிடம் பேசிய ஜெரோம் வால்கே, "குடிபோதையில் இருந்தவர்களின் எண்ணிக்கை மற்றும் மதுவின் அளவு என்னை ஆச்சரியப்படுத்தியது" என்றார்.

எதிர்காலத்தில் தனது கொள்கையில் ஃபிஃபா மாற்றங்களைச் செய்ய வேண்டியிருக்குமா என்று அவரிடம் கேட்ட போது, மது விற்பனையைக் கட்டுப்படுத்துவது அவசியம் என்று நாங்கள் நினைத்தால், அவற்றைக் கட்டுப்படுத்துவோம்" என்றார்.

ரஷ்யா மீது அழுத்தம்

ரஷ்யாவில் நடந்த 2018 கால்பந்து உலகக் கோப்பையில் ஃபிஃபாவின் கொள்கையில் பெரிய மாற்றம் ஏற்படவில்லை.

பிரேசிலைப் போல முக்கிய விளையாட்டு போட்டிகளில் மதுவைக் கட்டுப்படுத்துவதில் ரஷ்யாவும் நீண்டகால கொள்கையைக் கொண்டுள்ளது.

விளையாட்டு மைதானங்களில் மது விற்பனை மற்றும் மது விளம்பரங்களுக்கு 2005ஆம் ஆண்டு ரஷ்யா தடை விதித்தது.

சோச்சியில் நடந்த 2014 குளிர்கால ஒலிம்பிக்கில் பெரிய மதுபான நிறுவனங்கள் யாரும் ஸ்பான்சர் இல்லை. இதற்கிடையே, 2012ஆம் ஆண்டு தொலைக்காட்சி, இணையதளம் மற்றும் அச்சு ஊடகங்களில் மதுபான விளம்பரங்களுக்கு முழுமையான தடையை ரஷ்யா அறிமுகப்படுத்தியது.

ஆனால் அடுத்த ஆண்டே, அதிபர் விளாடிமிர் புடின் உலகக் கோப்பை போட்டிகளில் மது விற்பனையை அனுமதிக்கும் புதிய சட்டத்தில் கையெழுத்திட்டார். மேலும் பீர் விளம்பரம் மீதான புதிய கட்டுப்பாடுகளையும் தற்காலிகமாக தளர்த்தினார்.

மைதானத்தில் மதுபானம்

பட மூலாதாரம், Getty Images

ரோஸ்டோவ் பிராந்தியம் அதன் உள்ளூர் மைதானங்களை ‘வெகுஜன மக்கள் கூடும் பகுதிகள்’ என்று மறுவரையறை செய்து மது விற்பனையை தடை செய்ய முயற்சி செய்தது. ஆனால், சட்ட நடவடிக்கை குறித்து எச்சரிக்கப்பட்டதும் அந்த முயற்சியைக் கைவிட்டது.

மத ரீதியிலான எதிர்ப்புகள்

முக்கிய போட்டிகளில் மது மற்றும் கால்பந்து பற்றிய பிரச்னைகள் ஃபிஃபா மற்றும் உலகக் கோப்பை நடத்தும் நாடுகளைப் பற்றியது மட்டுமல்ல.

யூரோ 2022இன் போது, தொடரின் ஸ்பான்சர்களில் ஒருவரான ஹெய்னெக்கனின் பீர் பாட்டில்களுடன் பத்திரிகையாளர் சந்திப்புகளில் பங்கேற்க எதிர்ப்பு தெரிவித்த வீரர்களுடன் ஐரோப்பிய கால்பந்து சங்க ஒன்றியம் (UEFA) மோதலைச் சந்தித்தது.

பிரான்ஸ் அணியைச் சேர்ந்த இஸ்லாம் மதத்தைப் பின்பற்றும் பால் போக்பா ஓர் ஆட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்கள் சந்திப்பின் போது, ஹெய்னெக்கனின் பீர் பாட்டிலை அகற்றினார். பிரான்ஸ் அணியின் மற்றொரு வீரரான கரீம் பென்ஸேமாவும் பீர் பாட்டில்களின்றி செய்தியாளர்களிடம் பேசினார்.

மதுவுக்கு தடை

பட மூலாதாரம், Getty Images

பின்னர், செய்தியாளர்கள் சந்திப்பின் போது மேஜைகளில் ஹெய்னெக்கனின் பீர் பாட்டில்களை வைக்க பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களிடம் முன் அனுமதி பெற ஐரோப்பிய கால்பந்து சங்க ஒன்றியம் ஒப்புக்கொண்டது.

ஆனால், தொடரில் ஸ்பான்சர்களை அவமதித்தால் அணிகளுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் எச்சரித்தது.

கத்தார் தடை

நாடு முழுவதும் மது விற்பனையில் கடுமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட கத்தாரின் மத ஆட்சேபனைகள், 2022 உலகக் கோப்பை மைதானங்களில் பீர் விற்பனை தடைக்கு ஃபிஃபா ஒப்புக்கொள்ள வழிவகுத்தது.

எனினும், விஐபி டிக்கெட் வைத்திருப்பவர்கள் போட்டிகளுக்கு முன்பும், போட்டியின் போதும் மற்றும் போட்டிகளுக்கு பின்பும் மது வாங்க முடியும்.

இந்த முடிவு பட்வைசர் மதுபான நிறுவனத்துடனான ஃபிஃபாவின் உறவை எவ்வாறு பாதிக்கும் என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.

1980களில் இருந்து உலகக் கோப்பை தொடரின் முக்கிய ஸ்பான்சராக இருக்கும் அமெரிக்க நிறுவனமான பட்வைசர், ஒரு தொடருக்காக 75 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவழிப்பதாகக் கூறப்படுகிறது.

2026 உலக கோப்பையை நடத்தும் மூன்று நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருப்பதால், அடுத்த தொடரில் பெரும் அதிர்ஷ்டசாலிகளாக நாம் இருப்போம் என்று பட்வைசரின் தாய்நிறுவனமான AB InBev நம்பிக்கை கொண்டிருக்கலாம்.

காணொளிக் குறிப்பு, கத்தார் மீது புதிய குற்றச்சாட்டு

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: