You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
இலங்கை காவல் தலைமையகத்திற்கு வந்த குண்டு தாக்குதல் எச்சரிக்கை - பள்ளிவாசலில் கடும் பாதுகாப்பு
இலங்கையில் மீண்டுமொரு தாக்குதல் நடைபெற போவதாக வந்த புலனாய்வு தகவலின் காரணமாக அக்குரணை பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ, பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
மேலும் இந்த தகவலின் உறுதித்தன்மை குறித்து ஆராய்ந்து வருவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நடந்தது என்ன?
கண்டி மாவட்டத்தின் அக்குரணை பகுதியிலுள்ள பள்ளிவாசல் நிர்வாகத்துடன், போலீஸ் உயர் அதிகாரிகள் நேற்று மாலை விசேட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளனர்.
இந்த கலந்துரையாடலின் போதே, போலீஸ் குண்டுத் தாக்குதல் நடத்தப்படவுள்ளமை தொடர்பில் தமக்கு அறிவித்ததாக அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக், பிரதேச மக்களுக்கு அறிவித்திருந்தார்.
ரமலான் பெருநாள் காலப் பகுதியில் குண்டு வெடிப்பு தாக்குதல் ஒன்று நடத்தப்படலாம் என புலனாய்வு தகவல் கிடைத்துள்ளதாகவும் போலீஸ் உயர் அதிகாரிகள் தமக்கு அறிவித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.
தாக்குதல் நடத்தப்படுவதை தவிர்க்கும் வகையில் வீதி தடைகளை ஏற்படுத்துவதாகவும் போலீஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
அதேபோன்று, ரமலான் காலப் பகுதி என்பதனால், மக்களை அவதானத்துடன் செயற்படுமாறும் போலீஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
இதையடுத்து, போலீஸாரின் அறிவிப்பு தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் மிக நீண்ட கலந்துரையாடலொன்றை நடத்தியுள்ளது.
இந்த கலந்துரையாடலை அடுத்து, பள்ளிவாசல் தலைவரினால், சமூக வலைத்தளங்களில் பகிரும் விதத்திலான குரல் பதிவொன்று அனுப்பி வைக்கப்பட்டது.
இவ்வாறு அனுப்பி வைக்கப்பட்ட குரல் பதிவை, அனைத்து தரப்பினருடனும் பகிர்ந்துக்கொள்ளுமாறு பள்ளிவாசல் தலைவர், மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
அத்துடன், தமது கட்டளைகளை மீறி பயணிக்கும் வாகனங்கள் மீது துப்பாக்கி சூடு நடத்துவதற்கான அனுமதியுள்ளதாகவும் போலீஸார், பள்ளிவாசல் நிர்வாகத்திற்கு அறிவித்துள்ளனர்.
பெண்கள் மற்றும் சிறார்கள் அதிகளவில் ஒன்று கூடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் போலீஸார் அறிவித்துள்ளனர்.
முஸ்லிம் பெண்களை பரிசோதிக்க முடியாது என்ற நிலையில், ஹபாயா போன்ற ஆடைகளை அணிந்து ஆண்கள் உள்ளே வருவதற்கான சாத்தியம் உள்ளதாகவும் போலீஸார் கூறியுள்ளனர்.
இதேவேளை, அவசர ஊர்தி வாகனங்களை தயார் நிலையில் வைத்துக்கொள்ளுமாறு போலீஸார், மருத்துவர் ஒருவரை பள்ளிவாசலுக்கு அழைத்து வந்து அறிவித்ததாகவும் அக்குரணை பள்ளிவாசல் தலைவர் சட்டத்தரணி அஸ்மீன் பாரூக் குறிப்பிட்டார்.
போலீஸாரின் பதில்
அக்குரணை பகுதியில் ஏற்பட்டுள்ள நிலைமை தொடர்பில் பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவியது.
''எங்களுக்கு கிடைக்கப் பெற்ற தகவலை அடிப்படையாகக் கொண்டே, நாம் அக்குரணை பகுதியில் அவ்வாறான அறிவிப்பை விடுத்திருந்தோம். தற்போதும் அந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த தகவலின் உண்மை தன்மை தொடர்பில் விசாரணைகளை நடத்தி வருகின்றோம்." என அவர் பதிலளித்தார்.
நாட்டின் ஏனைய பகுதிகளின் பாதுகாப்பு தொடர்பிலும் போலீஸ் ஊடகப் பேச்சாளர் கருத்து தெரிவித்தார்.
''நாட்டின் ஏனைய பகுதிகளில் வழமை போன்று பாதுகாப்பு காணப்படுகின்றது. இந்த பகுதி தொடர்பில் தகவலொன்று கிடைத்தமையினாலேயே, இந்த பகுதியில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது."
இலங்கையிலுள்ள மூன்று கிறிஸ்தவ தேவாலயங்கள் உள்ளிட்ட நட்சத்திர ஹோட்டல்கள் மீது 2019ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 21ம் தேதி தற்கொலை குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டது.
இந்த தாக்குதல் நடத்தப்பட்டு, நாளை மறுதினத்துடன் நான்கு வருடங்களாகின்றன.
கொச்சிகடை முதல் கட்டுவாபிட்டிய வரை 21ம் தேதி மக்கள் கூட்டம்
ஈஸ்டர் தாக்குதலுக்கான உண்மை மற்றும் நியாயத்தை கோரி, எதிர்வரும் 21ம் தேதி வலுவான மக்கள் கூட்டமொன்றை கூட்டுவதற்கு கொழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை பகிரங்க அழைப்பு விடுத்துள்ளார்.
கொழும்பில் நேற்றைய தினம் ஊடகவியலாளர் சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து, அவர் இந்த அழைப்பை விடுத்தார்.
இன, மத வேறுபாடின்றி, அனைத்து மக்களையும் இந்த மக்கள் கூட்டத்தில் இணைந்துக்கொள்ளுமாறு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஈஸ்டர் தாக்குதல் நடத்தப்பட்ட 21ம் தேதி பாரிய மக்கள் கூட்டமொன்றை இணையுமாறு காழும்பு பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்ஜித் ஆண்டகை அழைப்பு விடுத்துள்ளார் இதற்கான பாதுகாப்பு நடவடிக்கைகள் எவ்வாறு காணப்படும் என்பது தொடர்பிலும் பிபிசி தமிழ், போலீஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட போலீஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவவிடம் வினவியது.
கத்தோலிக்க மக்கள் இருக்கின்ற மற்றும் இந்த மக்கள் கூட்டம் கூடுகின்ற பகுதிகளில் அந்த பகுதிக்கு பொறுப்பாக உயர் போலீஸ் அதிகாரியின் தீர்மானங்களுக்கு அமைய, பாதுகாப்பு வழங்கப்படும் என போலீஸ் ஊடகப் பேச்சாளர் கூறினார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்