You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
தமிழ்நாடு மழை: எத்தனை நாளைக்கு நீடிக்கும்? எங்கெங்கு விடுமுறை?
தமிழ்நாட்டில் தலைநகர் சென்னை உள்பட பல்வேறு மாவட்டங்களில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது. இதனால், சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகள் வெள்ளக்காடாக காட்சியளிக்கின்றன. சாலைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது- சுரங்கப்பாதைகள் மழைநீரில் மூழ்கியுள்ளன. இதையடுத்து, மழைநீரை வழிந்தோடச் செய்யும் நடவடிக்கைகளில் மாநகராட்சி அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.
மழை தொடர்ந்து பெய்து வருவதால் 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த 24 மணி நேரத்தில் சென்னை சுற்றுவட்டாரத்தில் இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சட்டென்று மாறிய வானிலை
தமிழ்நாட்டில் கடந்த 2 வாரங்களாக வெயில் வாட்டியெடுத்து வந்தது. கத்தரி வெயில் முடிவுக்கு வந்த பின்னரும் கூட சென்னை உள்பட தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களில் வெப்பநிலை சதம் அடித்து வந்தது. வெயிலின் வாதை தாங்காமல் மக்கள் அவதிப்பட்டு வந்த நிலையில், நேற்று திடீரென வானிலை மாறியது.
வெப்பச்சலனம் காரணமாக மழை பெய்யக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் முன்பே கணித்திருந்தாலும், எதிர்பார்ப்புக்கு மாறாக கனமழை கொட்டி வருகிறது. சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் சூறைகாற்றுடன் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கிண்டி, மீனம்பாக்கம், மாம்பலம், சைதாப்பேட்டை, குரோம்பேட்டை, எழும்பூர், சேத்துப்பட்டு, நூங்கம்பாக்கம், வேளச்சேரி, ஈக்காட்டுதாங்கல் உள்பட சென்னையின் பல்வேறு பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை நீடித்து வருகிறது. இதனால், தாழ்வான இடங்களில் உள்ள வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
சாலைகள், சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேக்கம்
கத்திப்பாரா மேம்பாலத்தில் கீழ் உள்ள சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கியுள்ளது. பழவந்தாங்கல் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சுரங்கப் பாதைகளில் மழைநீர் குளம் போல் தேங்கியுள்ளது. வேப்பேரியில் சாலைகளின் இருபுறமும் மழைநீர் தேங்கியுள்ளது. பழைய மகாபலிபுரம் சாலையில் பருவமழைக்காலத்தைப் போல வெள்ளமென மழைநீர் பாய்ந்தோடுகிறது.
சுரங்க பாலங்களில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுவதை தடுக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். அண்ணா சாலையில் தேங்கிய நீரை வெளியேற்றும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட சுரங்க பாலங்களில் அதிகாலை 2.30 மணி முதல் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.
கனமழை காரணமாக சென்னையில் ஆங்காங்கே சாலையோர மரங்கள் முறிந்து விழுந்துள்ளன. இதனால், சில இடங்களில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் முறிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணியில் மாநகராட்சி ஊழியர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
யாருக்கெல்லாம் விடுமுறை?
சென்னை மற்றும் புறநகரில் சாலைகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் வாகனங்களை இயக்குவது சிரமமாகியுள்ளது. இதனால், காலையிலேயே அலுவலகங்களுக்குச் செல்வோர் பெரிதும் அவதிப்படுகின்றனர்.
தொடரும் மழையால், மாணவர்களின் சிரமங்களைக் கருத்தில் கொண்டு சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர் ஆகிய 6 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
எத்தனை நாட்களுக்கு மழை நீடிக்கும்?
சென்னையில் நள்ளிரவு முதல் கனமழை தொடரும் நிலையில், அடுத்த 48 மணி நேரத்திற்கு இதே நிலை நீடிக்கக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். இடி-மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக் கூடும். அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்யசை ஒட்டியே இருக்கக் கூடும்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் வியாழக்கிழமை வரை அடுத்த 4 நாட்களுக்கு லட்சத்தீவுகள், கேரள -கர்நாடக கடலோரப் பகுதிகளில் சூறாவளிக் காற்று அதிகபட்சமாக மணிக்கு 55 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்பதால் அப்பகுதிகளில் மீனவர்கள் அங்கே செல்ல வேண்டாம் என்றும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
சென்னையில் திடீர் கனமழை ஏன்?
தமிழ்நாட்டைப் பொருத்தவரை, குறிப்பாக சென்னை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் ஜூன் மாதம் கனமழை பெய்வது என்பது அரிதான நிகழ்வுதான். தென் மேற்கு வங்கக்கடல் பகுதியில் நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சியே இதற்குக் காரணம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் கடந்த 27 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஜூன் மாதத்தில் கனமழை தற்போது பதிவாகியுள்ளது.
தனியார் வானியல் ஆய்வாளரான பிரதீப் ஜான், தனது ட்விட்டர் பக்கத்தில் இதுகுறித்த விரிவாக பதிவிட்டுள்ளார். அதில், "சென்னையில் பெருங்குடி, அடையார், ராயபுரம், வளசரவாக்கம், அண்ணா நகர், மதுரவாயல், அண்ணா பல்கலைக் கழகம் உள்ளிட்ட இடங்களில் 15 சதவீதத்திற்கும் அதிகமான மழை பதிவாகியுள்ளது. செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலந்தூர், மீனம்பாக்கம் உள்ளிட்ட இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் செம்பரம்பாக்கம் ஆகிய இடங்களிலும் 15 சதவீதத்திற்கும் மேல் மழையளவு பதிவாகியுள்ளது." என்று குறிப்பிட்டுள்ளார்.
சென்னை மண்டலத்தில் கடந்த 200 ஆண்டுகளில் 1991, 1996 மற்றும் 2023 ஆகிய 3 ஆண்டுகளில் மட்டுமே ஜூன் மாதத்தில் ஒரே நாளில் 15 சென்டிமீட்டருக்கும் அதிகமான கனமழை பதிவாகியுள்ளதாக புள்ளிவிவரங்களுடன் அவர் பதிவிட்டுள்ளார். கனமழைக்காக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்படுவது இது மூன்றாவது முறை என்று அவர் கூறியுள்ளார்.
அதிலும், 1996-ம் ஆண்டு ஜூனில் பெய்த கனமழை ஒரு சாதனை அளவாகவே தொடர்கிறது. ஏனெனில் அந்த ஆண்டு 14-ம் தேதியன்று திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கம், சோழவரம் ஆகிய இடங்களில் அதிகபட்சமாக 45 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது. சென்னையில் துறைமுகம், நுங்கம்பாக்கம் ஆகிய இடங்களிலும், காஞ்சிபுரம் மாவட்டம் செம்பரம்பாக்கத்திலும் அன்றைய தினம் சுமார் 35 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
"கடந்த 200 ஆண்டுகளில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மண்டலம் ஜூன் மாதத்தில் ஒரே நாளில் கண்ட பெருமழை அதுதான், அந்த சாதனையளவை இதுவரை எந்தவொரு ஆண்டிலும் முறியடிக்கப்படவில்லை" என்று பிரதீப் ஜான் குறிப்பிட்டுள்ளார்.
மழை பாதிப்புகளை முறையிட 1913
சென்னையில் மழை பாதிப்புகள் குறித்த புகார்களை 1913 என்ற எண்ணில் தெரிவிக்கலாம் என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றும் தொடர்பான புகார்களுக்கு 044 4567 4567 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். குடிநீர் வாரியத்தின் கட்டணமில்லா தொலைபேசி எண் 1916ஐ மக்கள் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுமக்கள் யாரும் மரங்கள், மின்கம்பங்களுக்கு அருகில் நிற்க வேண்டாம் என்றும் சென்னை மாநகராட்சி சார்பில் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்