You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ரூ.100 கோடி கிரிப்டோகரன்சி மோசடி புகார்: எட்டாயிரம் பேரிடம் பணம் வசூலித்து ஏமாற்றியது எப்படி?
- எழுதியவர், பிரபுராவ் ஆனந்தன்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கும்பகோணம் சுற்று வட்டாரத்தில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்வதாகக் கூறி எட்டாயிரம் பேரிடம் சுமார் 100 கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பதாக புகார் எழுந்துள்ளது. பணத்தை வசூலித்த 5 பேர் கொண்ட கும்பல் தலைமறைவாகிவிட்டது. அவர்கள் பயன்படுத்திய அலுவலகங்களும் 5 மாதங்களாக மூடப்பட்டிருப்பதால் ஏமாந்து போன பொதுமக்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
வழக்கமான கிரிப்டோ கரன்சி முறைகேடுகளைப் போலல்லாமல், இந்த மோசடியில் சிக்கியவர்களில் பெரும்பாலானோர் நடுத்தர, ஏழை, எளிய மக்கள்தான். மருத்துவ சிகிச்சை, உயர் கல்வி போன்ற செலவுக்கென வைத்திருந்த சேமிப்பின் பெரும்பகுதியை இந்த கும்பலிடம் அளித்து ஏமாந்துவிட்டு இப்போது கண்ணீர் விட்டு கதறிக் கொண்டிருக்கிறார்கள். ஏமாந்தவர்களில் பெரும்பாலானோர் இஸ்லாமியர்கள், அதிலும் வெளிநாடுகளில் பணிபுரிபவர்கள். அவர்கள் இந்த கும்பலிடம் சிக்கி ஏமாந்து போனது எப்படி? அந்த கும்பல் அதற்காக எத்தகைய தந்திரங்களை கையாண்டது?
ஒரே முகவர் மூலம் 750 பேரிடம் ரூ.6.37 கோடி மோசடி
கும்பகோணம் மேம்பாலம் அருகே ஸ்ரீ சாய் கிரிப்டோ கன்சல்டன்சி என்ற பெயரில் கிரிப்டோ கரன்சியில் ரூபாய் ஒரு லட்சம் முதலீடு செய்தால் மாதம் தோறும் ரூபாய் 15 ஆயிரம் வீதம் 18 மாதங்கள் கிடைக்கும் என ஆசை வார்த்தை கூறியதால் திருவாரூர் மாவட்டம், அத்திக்கடை கிராமத்தை சேர்ந்த அமானுல்லா (60), கடந்த 2021ம் ஆண்டு மார்ச் மாதம், முதற்கட்டமாக ரூபாய் 2 லட்சம் முதலீடு செய்துள்ளார்.
முதலீட்டை பெற்று கொண்ட அந்த நிறுவனம் சில மாதங்கள் வரை கூறியபடி அதற்கான தொகையை வழங்கியுள்ளனர். மேலும், அமானுல்லாவை முகவராக நியமித்து ஒரு லட்சம் முதலீடு பெற்று தந்தால் அதற்கு மாதம் தோறும் ரூபாய் ஆயிரம் வருவாய் கிடைக்கும் என கூறியுள்ளனர். அமானுல்லாவும், 791 நபர்களிடம் இருந்து குறைந்தபட்சம் ரூபாய் 1 லட்சம் முதல் 15 லட்சம் வரை மொத்தம் பல கோடி ரூபாய் முதலீடாக பெற்று தந்துள்ளார்.
"கடந்த 5 மாதங்களாக அலுவலகம் பூட்டப்பட்டுள்ளதால் எனக்கும், என் மூலம் முதலீடு செய்தவர்களுக்கும் பணம் எதுவும் கிடைக்கவில்லை. இது குறித்து அதன் உரிமையாளர் அர்ஜுன் கார்த்தியை தொடர்பு கொண்டு கேட்ட போது, விரைவில் பணம் தருவோம் என கூறி நாட்களை கடத்தி பணத்தை தராமல் இழுத்தடித்து விட்டார்" அமானுல்லா தெரிவிக்கிறார்.
"என் மூலம் முதலீடு செய்தவர்கள் என்னிடம் வந்து முறையிடுவதால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன், எனக்கு மட்டும் தற்போது வரை ரூபாய் 6 கோடியே 37 லட்சத்து 12 ஆயிரம் வர வேண்டியுள்ளது, என்னை போல எண்ணற்ற முகவர்கள் வாயிலாக, கும்பகோணம், லட்சுமாங்குடி மற்றும் புதுச்சேரி அலுவலகம் என 3 அலுவலகங்களின் வாயிலாக சுமார் 8 ஆயிரம் நபர்களிடம் சுமார் நூறு கோடி வரை முதலீடாக பெற்று, மிகப்பெரிய அளவில் மோசடி நடைபெற்றுள்ளது" என்று அமானுல்லா கூறுகிறார்.
இதற்கு காரணமான அர்ஜுன் கார்த்தி, ஈவாஞ்சலின், கார்த்திக் ராஜா மற்றும் ராதாகிருஷ்ணன் ஆகிய 5 பேர் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுத்து, தனக்கும், தன் மூலம் பணம் முதலீடு செய்தவர்களுக்கும் பணம் திரும்ப கிடைக்கச் செய்ய வேண்டும் என்று தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் அவர் நேரில் புகார் அளித்துள்ளார்.
மோசடி நடந்தது எப்படி?
கிரிப்டோ கன்சல்டன்சி மூலம் எவ்வாறு ஏமாற்றபட்டேன் என அமானுல்லா பிபிசி தமிழிடம் விரிவாக பேசுகையில், ”கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு என் நண்பர் ஒருவர் மூலம் அர்ஜுன் கார்த்திக் என்பவருக்கும் எனக்கும் பழக்கம் ஏற்பட்டது.
ஒரு நாள் என் வீட்டிற்கு வந்த அர்ஜுன் கார்த்திக் தன்னிடம் ஒரு பிராஜெக்ட் இருப்பதாகவும் அதில் ஒரு லட்ச ரூபாய் முதலீடு செய்தால் மாதம் 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் எனவும், நீங்கள் கொடுக்கும் பணம் கிரிப்டோகரன்சியில் முதலீடு செய்யப்பட்டு அதிலிருந்து கிடைக்கும் பணம் மாதம் மாதம் வழங்கப்படும் என்றார்.
அதை நம்பி நான் முதலில் 2 லட்சம் முதலீடு செய்தேன் அதற்கு மாதம் 30 ஆயிரம் ரூபாய் ஊக்கத் தொகை வழங்கினார். அவர் மிகவும் நம்பகத்தன்மையுடன் பேசிப் பழகினார். இதனால் எனக்குத் தெரிந்த நபர்கள் மற்றும் சென்னை, துபாய், சிங்கப்பூர், சவுதி உள்ளிட்ட பகுதிகளில் இருக்கக்கூடிய எனது நண்பர்கள் என 791 பேரை இந்த திட்டத்தில் அவரிடம் சேர்த்து விட்டேன்.” என்றார்.
மேலும் தொடர்ந்த அவர், "முதல் பத்து மாதம் அவர் சொன்னபடி அந்த தொகையை எங்களிடம் வழங்கினார். மிகவும் நம்பகத்தன்மையாக பேசி வந்த நிலையில் ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் கிடைத்தவுடன் அவருடைய பேச்சு சற்று மாற்றம் ஏற்பட்டது.
இதனால் எங்களுக்கு ஏற்பட்ட சந்தேகத்தின் பேரில் கிரிப்டோ கரன்சியில் முதலீடு என்பதால் எங்களுக்கு பிட் காயின் வழங்குமாறு கேட்டதற்கு சிஸ்டம் தற்போது பிரச்சனையாக உள்ளது அதனால் உடனடியாக பிட் காயின் எடுக்க முடியாது பிட் காயின் வேண்டும் என்றால் 12 லட்சத்திற்கு மேல் முதலீடு செய்ய வேண்டும் என அர்ஜுன் கார்த்திக் தெரிவித்தார்" என்று கூறினார்.
மோசடியில் 98% இஸ்லாமிய பெண்கள் பாதிப்பு
தொடர்ந்து பேசிய அமானுல்லா, "எங்களிடம் பணம் பெற்றுக் கொண்டு எங்களுக்கு வழங்கும் ஊக்கத்தொகையை பணமாக வழங்கப்பட்டது வங்கியில் எந்த விதமான பணப்பரிவர்த்தனை செய்யவில்லை.
எங்களிடம் பெரும் பணத்திற்கு எங்களுடைய வாட்ஸ்ஆப் எண்ணுக்கு ஓ.டி.பி. எண் வரும் அதன் அடிப்படையில் ஊக்கத்தொகை மாதம் ஒரு முறை வழங்கப்படும். எங்களிடம் பெற்று கொண்ட பணத்திற்கு பத்திரம் மட்டும் வழங்கப்பட்டது. அந்த பத்திரத்தில் கிரிப்டோ கரன்சியில் பணம் முதலீடு செய்யப்படுவதாக குறிப்பிடப்பட்டிருந்தது.
அர்ஜுன் கார்த்திக் மன்னார்குடி, அத்திக்கடை, பொதக்குடி, பூதமங்கலம் உள்ளிட்ட பகுதியில் இருக்கக்கூடிய இஸ்லாமிய பெண்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டுள்ளார். இதுவரை இந்த மோசடியில் பாதிக்கப்பட்டவர்களில் 98 சதவீதம் பேர் இஸ்லாமிய பெண்கள்.
கும்பகோணம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பெரும்பாளான இஸ்லாமிய ஆண்கள் வெளிநாட்டில் வேலை செய்து வருவதால் அந்த பெண்களிடம் அதிக லாபம் கிடைக்கும் என கூறி பணத்தை முதலீடு செய்ய சொல்லி மோசடி செய்துள்ளார்.
நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த 7 ஆயிரம் முதல் 8 ஆயிரம் நபர்கள் இதுவரை இந்த நிறுவனத்திடம் பணம் முதலீடு செய்து ஏமாந்துள்ளனர்.
வைத்திய செலவுக்கு, குழந்தைகள் படிப்பு செலவுக்கு வைத்திருந்த பணத்தை கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் நல்ல ஊக்கத்தொகை கிடைக்கும் என நம்பி முதலீடு செய்தார்கள். ஆனால் தற்போது பணம் ஏமாந்ததை நினைத்து மிகவும் மன உளைச்சலில் உள்ளனர். சிலர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். எனவே உடனடியாக நாங்கள் முதலீடு செய்த பணத்தை திரும்ப பெற்று தருவதுடன், மோசடியில் ஈடுபட்ட நபர்களை கண்டறிந்து காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்" என அமானுல்லா கண்ணீர் மல்க தெரிவித்தார்.
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் முதல் கிரிப்டோ கரன்சி முதலீடு வரை
பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் புகார் அளித்துள்ள வழக்கறிஞர் விவேகானந்தன் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கடந்த மூன்று ஆண்டுகளாக கும்பகோணம் மக்களை குறி வைத்து மோசடி நிறுவனங்கள் ஏமாற்றி வருகின்றனர்.
ஹெலிகாப்டர் பிரதர்ஸ் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பல கோடி ரூபாய் மோசடியில் ஈடுபட்டனர். ஆனால் அவர்கள் வசதி படைத்த நபர்களை குறிவைத்து மோசடியில் ஈடுபட்டனர். ஆனால் தற்போது கிரிப்டோ கரன்சி என்ற மோசடியில் சாமானிய மக்கள் அதிகளவு பாதிக்கப்பட்டு பணத்தை இழந்துள்ளனர்.
கிரிப்டோ கரன்சி மோசடியில் இஸ்லாமியர்கள் அதிக அளவு குறி வைக்கப்பட்டுள்ளனர். அதற்கு காரணம் வெளிநாடுகளில் இருந்து வந்தவர்கள், பணத்தை எதில் முதலீடு செய்வது என ஒரு குழப்பத்தில் இருப்பார்கள். அந்த குழப்பத்தை இந்த மோசடி கும்பல் பயன்படுத்தி கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்தால் அதிக லாபம் கிடைக்கும் எனவும் தங்களுக்கு கீழ் நபர்களை சேர்த்து விட்டால் கமிஷன் தருவதாகவும் ஆசை வார்த்தை கூறுவதால் அதிகமாக இஸ்லாமியர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர்.
கும்பகோணத்தை சுற்றியுள்ள நபர்கள் மட்டும் சுமார் 6 கோடி ரூபாய்க்கு மேல் பணத்தை முதலீடு செய்து ஏமாந்துள்ளனர். நாளுக்கு நாள் அந்த நிறுவனம் மீது தொடர்ந்து புகார் எழுந்து வருகிறது.
பொதுமக்களிடம் பெற்ற பணத்தை கிரிப்டோ கரன்சியில் தான் முதலீடு செய்தார்களா என்று இதுவரை தெரியவில்லை.
மோசடியில் ஈடுபட்ட நபர்கள் ஐந்து பேரும் தலைமறைவாக இருக்கின்றனர். உடனடியாக கண்டுபிடித்து அந்த ஐந்து பேருடன் தமிழகம் முழுவதும் தொடர்புடைய நபர்களையும் பிடித்து தண்டிக்கப்பட வேண்டும்" என வழக்கறிஞர் விவேகானந்தன் கேட்டு கொண்டார்.
மக்கள் ஏமாற வேண்டாம்: மாவட்ட காவல்துறை
இது குறித்து தஞ்சை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் பிபிசி தமிழிடம் பேசுகையில், "கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பாதிக்கப்பட்ட நபர்கள் அளித்த புகாரின் பேரில் துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் தீவிர விசாரணை நடத்த உத்தரவிட்டுள்ளேன்.
புகாரில் குறிப்பிட்ட நபர்களின் முழுமையான தகவல் இல்லாததால் அவர்களை கண்டு பிடித்து விசாரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. விரைவில் அவர்கள் கண்டுபிடிக்க படுவார்கள் குற்றம் சாட்டப்பட்ட நபர்கள் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டால் நிச்சயம் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.
பொதுமக்கள் இவ்வாறான மோசடியில் கும்பலிடம் மாட்டி கொண்டு பணத்தை இழந்து விட வேண்டாம் என்பதற்காக சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இருப்பினும் சிலர் இன்னும் போலியான விளம்பரங்கள் மற்றும் அதிக முதலீடு தருவதாக கூறுவதை நம்பி பொதுமக்கள் பலரும் ஏமாந்து வருகின்றனர்.
கிரிப்டோ கரன்சி குறித்து இதுவரை அரசு முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவிக்கவில்லை. இருப்பினும் மக்கள் ஏன் அதில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை.
மக்கள் அதிக லாபம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் முதலீடு செய்கிறார்கள் இந்த நம்பிக்கையை மோசடிக்காரர்கள் பயன்படுத்தி கொள்கிறார்கள். பிட் காயின் வைத்திருந்தால் என்ன பயன் கிடைக்கும் என்று தெரியாமல் பலரும் இந்த மோசடி நபர்களிடம் சிக்கி கொள்கின்றனர்.
அரசு கிரிப்டோ கரன்சி குறித்து முறையான வழிகாட்டு நெறிமுறைகளை அறிவித்த பின் நன்கு ஆராய்ந்து விருப்பம் இருந்தால் அதில் முதலீடு செய்யுங்கள் அதுவரை யாரும் ஏமாற வேண்டாம்" என மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆஷிஷ் ராவத் கேட்டுக்கொண்டார்.
வங்கிக்கணக்கை முடக்கி பணத்தை திரும்ப பெறலாம்
இதுகுறித்து சைபர் கிரைம் நிபுணர் மற்றும் சைபர் கிரைம் வழக்கறிஞருமான கார்த்திகேயன் பிபிசி தமிழிடம் பேசுகையில்,
"கிரிப்டோ கரன்சி என்பது பங்கு சந்தையை போல கட்டுப்படுத்தப்பட முடியாதது. பங்கு சந்தையின் முதலீட்டை கண்காணிப்பதற்கு செபி SEBI உள்ளது. ஆனால் கிரிப்டோ கரன்சியை கண்காணிப்பதற்கு யாரும் இல்லை, அதற்கான சட்டம் ஏதுமில்லை.
கிரிப்டோ கரன்சி எந்த நாட்டில் செல்லுபடியாகும் மாற்றத்தக்கது, முதலில் பிட்காயின் பத்து வகைகள் இருந்த நிலையில் தற்போது 15 ஆயிரம் வரை பிட் காயின்கள் உள்ளன.
கிரிப்டோ கரன்சி முதலீடு செய்பவர்கள் சூதாட்டத்தில் முதலீடு செய்வதற்கு சமமானது. இதில் அதிகமான ஆபத்து அதிகம் உள்ளது. கிரிப்டோ கரன்சி குறித்து முழுமையான சட்டம் வரும் வரை மக்கள் அதில் முதலீடு செய்ய வேண்டாம்.
கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்ய விரும்புபவர்கள் இந்தியாவில் இதற்கான அதிகாரப்பூர்வமான பணம் மாற்றும் நிறுவனங்கள் உள்ளது. இது குறித்து முழுமையாக தெரிந்து கொண்டு பின் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யலாம்.
ஆன்லைன் மூலம் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து பண பரிமாற்றம் செய்யும் போது உங்களுக்கு தெரியாமல் தீவிரவாத அமைப்புகளின் வங்கி கணக்கிற்கு பண பரிவர்த்தனை செய்து விட கூடும் என்பதால் மிக கவனம் தேவை.
கும்பகோணத்தில் நடந்த மோசடியை பொறுத்த அளவு அவர்கள் நேரடியாக கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்யாததால் இந்த வழக்கு சைபர் கிரைமுக்கு கீழ் வராது. இது மோசடி வழக்காக பதிவு செய்தால் குற்றம் சாட்டப்பட்டுள்ள நபர்களின் சொத்துகள் மற்றும் வங்கி கணக்குகளை முடக்கி முதலீடு செய்த பணத்தை திரும்ப பெறலாம். எனவே பொதுமக்கள் முதலீடு செய்வதில் மிக கவனத்துடன் செயல்பட வேண்டும் என சைபர் கிரைம் வழக்கறிஞர், சைபர் கிரைம் நிபுணருமான கார்த்திகேயன் கேட்டுக் கொண்டுள்ளார்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்