You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
ஆதிபுருஷ்: "சனாதன தர்மத்திற்கு சேவை செய்யவே இந்த படம்" - வசனகர்த்தா ஆதங்கப்படுவது ஏன்?
கடந்த வெள்ளிக்கிழமையன்று வெளியான ஆதிபுருஷ் திரைப்படம் முதல் நாளில் 140 கோடிகளை உலக பாக்ஸ் ஆபிஸில் வசூலித்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.
இந்தப் படத்தில் ராகவ் வேடத்தில் பிரபாஸும் ஜானகியாக கீர்த்தி சனோனும், லங்கேஷ் வேடத்தில் சைஃப் அலிகானும் நடித்துள்ளனர்.
இந்தப் படம் இந்தி, தெலுங்கு, தமிழ், கன்னடம், மலையாளம் ஆகிய மொழிகளில் 6,000க்கும் அதிகமான திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
பெரும் எதிர்பார்ப்புகளோடு இப்படம் வெளியிடப்பட்டது. ஆனால் படத்தின் தயாரிப்பு, கிராபிக்ஸ் காட்சிகள் எனப் பலவும் கடும் விமர்சனங்களில் சிக்கின.
இந்நிலையில், ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்ற சில வசனங்களும் தற்போது மக்களிடையே கடும் விமர்சனங்களுக்கு ஆளாகியுள்ளன. சமூக ஊடகங்களில் இதுகுறித்துக் கடும் விவாதங்கள் எழுந்த நிலையில், அந்த வசனங்களை மாற்றப் போவதாக படக்குழு அறிவித்துள்ளது.
ஆதிபுருஷ் படத்தில் உள்ள சில வசனங்களை, மக்களின் அதிருப்தியை கருத்தில் கொண்டு மாற்ற உள்ளதாக, அப்படத்தின் வசனங்களை எழுதிய மனோஜ் முந்தாஷிர் தெரிவித்துள்ளார்.
’படத்தின் வசனங்களில் மொழிப் பயன்பாடு சரியில்லை என்று சமூக ஊடக பயனர்கள் விமர்சித்து வருகின்றனர்.
ஆகவே, மக்களின் அதிருப்தியைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக’ மனோஜ் முந்தாஷிர் கூறுகிறார்.
மனோஜ் முந்தாஷிர் ட்விட்டர் பதிவு
அவர் தனது ட்விட்டர் பதிவில், “ஒவ்வொரு உணர்ச்சிக்கும் மதிப்பளிப்பதுதான் ராமாயணக் கதையில் ஒருவர் கற்றுக்கொள்ளும் முதல் பாடம். சரியோ தவறோ, காலம் மாறினாலும் உணர்வுகள் அப்படியே இருக்கும். ஆதிபுருஷில் 4,000 வரிகளுக்கு மேல் வசனங்கள் உள்ளன. அதில் ஓர் ஐந்து வரிகள் சிலரைக் காயப்படுத்தியுள்ளன,” என்று குறிப்பிட்டார்.
“ஸ்ரீராமரை போற்றிய அந்த நூற்றுக்கணக்கான வரிகளில், அன்னை சீதையின் கற்பு வர்ணிக்கப்பட்டது, அவளைப் போற்றியும் இருந்தது. அதையெல்லாம் எழுதிய எனக்கு ஏன் பாராட்டு கிடைக்கவில்லை என்பதும் எனக்குப் புரியவில்லை, வியப்பாக இருக்கிறது.
நான் என் சகோதரர்களைப் போல் கருதியவர்கள், என்னை சமூக ஊடகங்களில் அநாகரீகமான வார்த்தைகளைக் கொண்டு பேசுகிறார்கள். நான் எந்தப் பெண்களுக்காக தொலைக்காட்சியில் பலமுறை கவிதைகளைப் படித்தேனோ அவர்கள் என் சொந்த அம்மாவை அநாகரீகமான வார்த்தைகளால் பேசுகின்றனர்,” என்று ட்வீட்டில் தனது கவலையை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும், “வேறுபாடுகள் இருக்கலாம் என்று நினைத்துக்கொண்டே இருந்தேன். ஆனால், அனைத்து தாய்மார்களையும் தனது சொந்தத் தாய் போல் கருதும் ஸ்ரீராமரை மறந்துவிடும் அளவுக்கு என் சகோதரர்களைப் போன்றவர்கள் திடீரென வெறுப்பு கொண்டவர்களாக மாறிவிட்டார்கள்.
ஒருவேளை 3 மணிநேரப் படத்தில், உங்கள் கற்பனைக்கு மாறான 3 நிமிடங்களை நான் எழுதியிருக்கலாம். ஆனால், என் நெற்றியில் ‘சனாதன துரோகி’ என்று எழுதுவதற்கு ஏன் இவ்வளவு அவசரப்படுகிறீர்கள் என்று என்னால் புரிந்துகொள்ள முடியவில்லை,” என்று மனோஜ் முந்தாஷிர் சுக்லா தெரிவித்துள்ளார்.
அத்தோடு, “ஜெய் ஸ்ரீராம் பாடலை நீங்கள் கேட்கவில்லையா? சிவோஹம் பாடலை நீங்கள் கேட்கவில்லையா? ராம் ராம் பாடலை கேட்கவில்லையா?
ஆதிபுருஷில் சனாதனத்தைப் புகழும் பாடல்களும் என் பேனாவிலிருந்து பிறந்தவைதான். உங்கள்(ரசிகர்கள்) மீது எனக்கு எந்த வருத்தமும் இல்லை. நாம் ஒருவரை ஒருவர் எதிர்த்து நின்றால்தான், சனாதனம் தோற்கடிக்கபடும்.
சனாதன சேவைக்காகவே நாங்கள் ஆதிபுருஷ் படத்தை உருவாக்கினோம். இதை நீங்கள் அதிக எண்ணிகையில் பார்க்கிறீர்கள், எதிர்காலத்திலும் பார்ப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்,” என்றும் தனது நீண்ட ட்வீட்டில் மனோஜ் முந்தாஷிர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இவ்வளவு நீண்ட ட்விட்டர் பதிவுக்கு என்ன தேவை என்றும் விளக்கியுள்ளார் ஆதிபுருஷ் திரைப்படத்தின் வசனங்களை எழுதிய மனோஜ் முந்தாஷிர்.
“என் வசனங்களுக்கு ஆதரவாக எண்ணற்ற வாதங்களை என்னால் முன்வைத்திருக்க முடியும். ஆனால், அது உங்கள் வலியைக் குறைக்காது. எனக்கு உங்கள் உணர்வுகளைத் தவிர வேறு எதுவும் முக்கியமில்லை.
ஆகவே, நானும் படத்தின் தயாரிப்பாளர், இயக்குநர் ஆகியோரும் ஒரு முடிவுக்கு வந்துள்ளோம். உங்களைப் புண்படுத்தும் வசனங்களை மாற்றியமைப்போம்,” என்று தெரிவித்துள்ளார்.
ஆதிபுருஷ் படத்தில் சர்ச்சையை ஏற்படுத்திய வசனங்கள்
ஆதிபுருஷ் திரைப்படத்தில் வரும் சில வசனங்கள் ராமாயணத்தில் வரும் கதைக்கு முரணாக இருப்பதாகவும், சில வசனங்கள் கொச்சையாக இருப்பதாகவும் மக்கள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
குறிப்பாக ஆதிபுருஷ் படத்தில் சீதையை குறித்து வரும் வசனம் ஒன்றுக்கு நேபாளத்தில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
‘ஜானகி இந்தியாவின் மகள்’ என்று இப்படத்தில் வரும் வசனம் உண்மைக்கு முரணாக இருப்பதாக நேபாள மக்கள் கூறுகின்றனர்.
”சீதை நேபாளத்தில் உள்ள ஜானக்பூரில் பிறந்தவர்” என்றும் அவர்கள் கூறுகின்றனர்.
“எனவே ஜானகி இந்தியாவின் மகள் என்று வரும் வசனத்தை படக்குழுவினர் நீக்காவிட்டால், காத்மாண்டு நகரத்தில் இனி எந்தவொரு ஹிந்தி படமும் வெளியாக முடியாது. இந்த வசனத்தை நீக்குவதற்கு அவர்களுக்கு 3 நாட்கள் மட்டுமே அவகாசம் இருக்கிறது” என்று காத்மாண்டூவின் மேயர் பலேந்திரா ஷா கடந்த வெள்ளியன்று எச்சரிக்கை விடுத்திருந்தார்.
சீதை குறித்து வரும் இந்த வசனம் தொடர்பாக நேபாளத்தின் தணிக்கை குழுவினரும் ஆட்சபேனை தெரிவித்துள்ளனர்.
"கடந்த புதன்கிழமை ஆதிபுருஷ் திரைப்படம் தணிக்கைக்கு உட்படுத்தப்பட்டது. படத்தை முழுவதுமாகப் பார்த்த பிறகு, சீதையை குறிப்பிட்டு வரும் வசனத்தை நீக்கினால் மட்டுமே, படம் திரையிடுவதற்கு அனுமதி வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது” என நேபாளத்தின் திரைப்பட தணிக்கை குழுவினர் பிபிசியிடம் தெரிவித்தனர்.
அதேபோல, இப்படத்தில் வரும் அனுமன் கதாபாத்திரத்திற்காக எழுதப்பட்ட சில வசனங்கள் கொச்சையாகவும், அர்த்தமற்றதாகவும் இருக்கிறது என ட்விட்டரில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ராமாயணத்தை மையமாகக் கொண்டு வெளிவந்த பழைய திரைப்படங்கள், தொலைக்காட்சித் தொடர்களோடு ஆதிபுருஷ் திரைப்படத்தை ஒப்பிட்டு, பலரும் பதிவுகளைப் பகிர்ந்து வருகின்றனர்.
அனுமன் கதாபாத்திரத்திற்கு எழுதப்பட்ட வசனங்கள் மோசமாக இருப்பதாகவும், ராமாயணத்தை மையப்படுத்தி வெளிவந்த படத்தில் இப்படி கொச்சையான வசனங்கள் இடம்பெறும் என்று நினைக்கவில்லை எனவும் ட்விட்டர் பயனர்கள் அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.
ஆதிபுருஷ் படத்தில் வரும் முரண்பாடான வசனங்கள்,கொச்சையான மொழிப் பயன்பாடு போன்றவற்றை எதிர்த்து ‘இந்து சேனா’ அமைப்பு வழக்கு தொடர்ந்துள்ளது.
அதேபோல், ஆதிபுருஷ் திரைப்படம் இந்து மதத்திற்கு அவமானத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும், இந்தப் படத்தால் ராமாயணாத்திற்கு இழுக்கு நேர்ந்துவிட்டது என்றும் கூறி ‘BanAdiprush’, ‘BoycottAdipurush’ போன்ற ஹேஷ்டேக்குகள் ட்விட்டரில் அதிகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் பதிவுகளில் படத்தின் இயக்குனர் ஓம் ராவத், வசனகர்த்தா மனோஜ் முந்தாஷிர் ஆகியோரைக் குறிப்பிட்டு, ட்விட்டர் பயனர்கள் தங்களது கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர்.
சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்:
- ஃபேஸ்புக் : பிபிசி தமிழ் ஃபேஸ்புக்
- டிவிட்டர் : பிபிசி தமிழ் ட்விட்டர்
- இன்ஸ்டாகிராம் : பிபிசி தமிழ் இன்ஸ்டாகிராம்
- யு டியூப் : பிபிசி தமிழ் யு டியூப்