பாகிஸ்தானில் பிறந்த உஸ்மான் கவாஜா, ஆஸ்திரேலியாவின் சிறந்த பேட்ஸ்மேனாக ஆனது எப்படி?

'இதற்கு முன்பு நான் இந்தியாவில் இரண்டு சுற்றுப்பயணங்களைச் செய்தேன். அந்த எட்டு டெஸ்ட் போட்டிகளிலும் நான் மைதானத்திற்கு ட்ரிங்ஸ் மட்டுமே எடுத்துச் சென்றேன். எனக்கு இந்தப்பயணம் மிக நீண்டதாக இருந்தது.’

வியாழனன்று மாலை உஸ்மான் கவாஜா இதைச் சொல்லிக் கொண்டிருக்கும் போது ​​அவரது முகத்தில் நிம்மதி உணர்வு தெளிவாகத் தெரிந்தது.

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்தில் (நரேந்திர மோதி ஸ்டேடியம்) அபாரமாக விளையாடி 180 ரன்கள் குவித்த உஸ்மான் கவாஜாவின் கிரிக்கெட் பயணத்தில் பல ஏற்ற இறங்கங்கள் இருந்தன.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாத்தில் 1986 இல் பிறந்த கவாஜாவின் குடும்பம் அவருக்கு நான்கு வயதாக இருந்தபோது ஆஸ்திரேலியாவுக்கு குடிபெயர்ந்தது.

சிறுவயதில் இருந்தே கிரிக்கெட் பார்ப்பது எனக்கு மிகவும் பிடிக்கும் என்று கவாஜா ஒரு பேட்டியில் கூறினார்.

வக்கார் யூனிஸ், சயீத் அன்வர், வாசிம் அக்ரம் போன்ற பாகிஸ்தான் அணி வீரர்களை அவருக்கு மிகவும் பிடிக்கும்.

பாண்டிங் காயத்தால் கவாஜாவுக்கு வாய்ப்பு

2011-ம் ஆண்டு ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து இடையே புகழ்பெற்ற ஆஷஸ் தொடர் நடந்து வந்தது.

சிட்னியில் நடந்த இந்தத்தொடரின் கடைசி டெஸ்டில் ஆஸ்திரேலிய அணியின் முக்கிய வீரரான ரிக்கி பாண்டிங் காயம் காரணமாக விளையாடவில்லை.

அவரது இடத்தில் கடைசி 11 பேரில் ஒருவராக விளையாட உஸ்மான் கவாஜாவுக்கு வாய்ப்பு கிடைத்தது. அவர் மூன்றாவது இடத்தில் களம் இறங்கினார்.

ஆஸ்திரேலியாவுக்காக விளையாடும் வாய்ப்பைப் பெற்ற முதல் முஸ்லிம் வீரர் உஸ்மான் கவாஜா.

இந்தப் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 37 ரன்களையும், இரண்டாவது இன்னிங்ஸில் 21 ரன்களையும் அவர் எடுத்தார்.

இருப்பினும் இதற்குப் பிறகு கவாஜா அணிக்கு உள்ளேயும் வெளியேயும் சென்றபடி இருந்தார்.

கவாஜாவின் பேட்டிங் சாதனைகள்

இடது கை பேட்ஸ்மேன் உஸ்மான் கவாஜா மொத்தம் 59 டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார்.

அவர் 50.89 என்ற சராசரியில் நான்காயிரத்திற்கும் அதிகமான ரன்களை எடுத்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டில் 14 சதங்கள் அடித்துள்ளார்.

தற்போதைய பார்டர் கவாஸ்கர் தொடரைப் பற்றி பேசினால் அதில் உஸ்மான் கவாஜா தான் அதிக ரன் குவித்தவராக உள்ளார்.

இந்தத் தொடரில் அவர் இதுவரை மொத்தம் 333 ரன்கள் எடுத்துள்ளார்.

முன்னதாக ஆஸ்திரேலிய அணி பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் சென்றபோது, ​​கவாஜா அதிலும் தனது பேட்டிங் திறமையை வெளிப்படுத்தினார்.

தனது ’கம் பேக்’ பந்தயத்தின் இரண்டு இன்னிங்ஸிலும் அவர் சதம் அடித்தார். இந்த ஆண்டு ஜனவரியில் டெஸ்ட் அணியில் மீண்டும் இடம்பிடித்ததில் இருந்து கவாஜா மொத்தம் 6 சதங்களை அடித்துள்ளார்.

கடந்த 12 மாதங்களில் ஆஸ்திரேலிய அணி இலங்கை, பாகிஸ்தான் மற்றும் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இதில் கவாஜா 74 க்கும் அதிகமான சராசரியில் ரன் அடித்துள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 180 ரன்கள் எடுத்த இன்னிங்ஸின் போது ​​கவாஜா ஒரு தனித்துவமான சாதனையையும் படைத்தார்.

இந்த இன்னிங்ஸில் அவர் மொத்தம் 422 பந்துகளை எதிர்கொண்டார். இந்திய மண்ணில் ஒரு இன்னிங்ஸில் இவ்வளவு அதிக பந்துகளை எதிர்கொண்ட முதல் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் அவர்தான்.

1979 இல் கிரஹாம் யலோப் நிகழ்த்திய சாதனையை அவர் முறியடித்துள்ளார்.

பைலட் ஆன உஸ்மான் கவாஜா

கிரிக்கெட் தவிர விமானத்தை பறக்கச்செய்வதிலும் விருப்பம் கொண்டவர் உஸ்மான் கவாஜா.

நியூ சவுத் வேல்ஸின் ஏவியேஷன் பள்ளியில் அவர் விமான பைலட் பயிற்சி பெற்றுள்ளார்.

அவர் ஒரு பயிற்சி விமானி ஆவார். அவரிடம் விமானத்தை இயக்கும் உரிமம் உள்ளது.

2019 ஆம் ஆண்டில் உலகின் மிகப்பெரிய பயணிகள் விமானமான ஏர்பஸ் ஏ 380 ஐ அவர் இயக்கும் வீடியோ வெளியானது.

'விமானத்தை பறக்கச்செய்வது கிரிக்கெட்டில் எனக்கு மிகவும் உதவியது. நான் ஒழுக்கத்தை கற்றுக்கொண்டேன். வாழ்க்கையில் என்ன ஏற்ற இறக்கங்கள் வந்தாலும் அவற்றை முறியடித்து, உச்சத்தை எட்ட முடியும் என்பதை உணர்ந்தேன்’ என்று கிரிக்கெட் மற்றும் விமானத்தின் மீதான தனது ஆர்வம் குறித்து கவாஜா குறிப்பிட்டார்.

கட்டுரை - நவீன் நேகி

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: