தினமும் 10,000 காலடிகள் நடந்தால் என்ன ஆகும் தெரியுமா?

உடற்பயிற்சி மற்றும் உடல்நலம்: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் காலடிகள் என்ற இலக்கு சரியானதா?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், கிளாடியா ஹேமொண்ட்
    • பதவி, பிபிசி

நம்மில் பலரும் தற்போது ஸ்மார்ட் வாட்ச் மூலமோ ஸ்மார்ட் போனில் ஃபிட்னஸ் செயலி மூலமோ நாம் நடக்கும் காலடியை கணக்கிட்டு வருவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறோம்.

அதில் இலக்காக வைக்கப்பட்ட 10 ஆயிரம் காலடியை (ஃபூட் ஸ்டெப்ஸ்) நாம் அடைந்துவிட்டால் ஒரு சாதனை உணர்வு நமக்குள் வந்து விடுகிறது.

ஆனால் இந்த 10 ஆயிரம் காலடி எதன் அடிப்படையில் நிர்ணயிக்கப்பட்டது என்பதை நீங்கள் யோசித்தது உண்டா?

இந்த 10 ஆயிரம் காலடிகள் என்ற இலக்கு ஏதோ பெரிய ஆராய்ச்சிகளை மேற்கொண்டு நிர்ணயிக்கப்பட்ட ஒன்று என்று நம்மில் பலர் நினைத்து கொண்டிருக்கலாம்.

அதாவது 8 ஆயிரம், 10 ஆயிரம், 12 ஆயிரம் இதில் எதை நிர்ணயிக்கலாம் என பலவிதமான ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கலாம் என நீங்கள் நினைத்தால் அது தவறு. அவ்வாறான எந்த விரிவான ஒரு ஆராய்ச்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை என்பதே உண்மை.

10 ஆயிரம் என்ற இலக்கு உருவான கதை

இந்த 10 ஆயிரம் அடி என்பது உருவானதற்கு ஒரு பின்னணி உண்டு. 1964ஆம் ஆண்டு நடைபெற்ற டோக்யோ ஒலிம்பிக் விளையாட்டு போட்டிகளின்போது நிறுவனம் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட விளம்பரம்தான் இந்த 10 ஆயிரம் காலடித்தடம் என்ற இலக்கு.

அதாவது இந்த நிறுவனம் ‘மன்போ – கெய்’ (Manpo-kei) என்ற பீடோமீட்டரை விற்பனை செய்ய தொடங்கியது. பீடோமீட்டர் என்பது நாம் எவ்வளவு தூரம் நடக்கிறோம் என்பதை கணக்கிடும் கருவி. மன்போ கெய் – என்ற பதத்தில் மன் என்றால் 10 ஆயிரம் என்று பொருள், போ என்றால் காலடித்தடம் என்று பொருள். கெய் என்றால் மீட்டர் என்று பொருள். இந்த பீடோமீட்டருக்கான விளம்பரம் பெரும் வரவேற்பை பெற்று இந்த 10 ஆயிரம் என்ற இலக்கும் நிலைக் கொண்டுவிட்டது.

ஆனால் அப்போதிலிருந்து 5 ஆயிரமா அல்லது 10 ஆயிரமா எது உடல்நலத்திற்கு நல்லது என பல ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. ஆனால் இடைப்பட்ட ஆயிரங்களில் எது நல்லது என்று எந்த ஆய்வும் இல்லை. 

ஆய்வில் கிடைத்த தகவல்

எனவே ஒரு புதிய ஆய்வு ஒன்று மேற்கொள்ளப்பட்டது. ஹார்வர்ட் மெடிக்கல் ஸ்கூலை சேர்ந்த மருத்துவ பேரசிரியர் மி-லி ஒரு புதிய ஆய்வை மேற்கொண்டார். அவரும் அவரின் குழுவும் வயதில் 70களில், இறக்கும் நிலையில் இருக்கும் பெண்களின் தினசரி காலடி எண்ணிக்கையை கணக்கிட்டனர்.

ஒவ்வொரு பெண்ணும் ஒரு வார காலம், தாங்கள் விழித்திருக்கும் சமயங்களில், காலடியை கணக்கிடும் கருவியை கைகளில் கட்டிக் கொண்டனர்,

பின் ஆராய்ச்சியாளர்கள் நான்கு வருடங்கள் மூன்று மாதங்களுக்கு இந்த பெண்களை கண்காணித்தனர். இந்த இடைப்பட்ட காலத்தில் 504 பேர் உயிரிழந்து விட்டனர்.

சரி... இதில் பிழைத்திருப்பவர்கள் எத்தனை தூரம் நடந்திருப்பார்கள் என நீங்கள் நினைக்கிறீர்கள்?

10 ஆயிரம் இலக்கை அவர்கள் அடைந்திருப்பார்களா?

உடற்பயிற்சி மற்றும் உடல்நலம்: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் காலடிகள் என்ற இலக்கு சரியானதா?

பட மூலாதாரம், Getty Images

மன ரீதியான தாக்கம்

அதுதான் இல்லை. பிழைத்திருப்பவர்கள் சராசரியாக 5 ஆயிரத்து 500 காலடிகளை பதித்துள்ளனர். அதேபோல அதிகமாக நடந்தவர்களுக்கு அதற்கான பலனும் கிடைத்தது. அதாவது 4000 நடைகளை எட்டிய பெண்ணை விட 2 ஆயிரத்து 700 அடிகள் நடந்த பெண் விரைவாக உயிரிழக்கும் நிலை இருந்தது.

ஒரு சிறு வித்தியாசம் என்பது இத்தனை பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது ஆச்சர்யமாக இருந்தது.

 ஆனால் இதை வைத்து பார்த்தால் அதிகமாக நடந்தவர்களுக்கு அதிக பலன் கிடைத்திருக்க வேண்டுமே என நீங்கள் எண்ணலாம். ஒரு அளவு வரை அது உண்மைதான். அந்த அளவு 7500 காலடிகள்.. அதன் பின்பு அதிகமாக நடந்தாலும் பெரிதாக எந்த பலனையும் அளிக்கவில்லை. ஆயுள்காலத்திலும் அது எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த ஆய்வில் ஒரு சிக்கல் உள்ளது.

உயிரிழந்தவர்களின் நோய்களின் படிநிலை குறித்து நமக்கு தெரியாது. அவர்கள் நோயின் எந்த கட்டத்தில் இருந்தார்கள் என்பது நமக்கு தெரியாது. வீட்டிற்கு வெளியே நடக்க கூடிய நிலையில் உள்ள பெண்களைதான் ஆராய்ச்சியாளர்கள் இதில் ஈடுபடுத்தினர். அவர்களின் உடல்நிலை குறித்து அவர்களிடமே கேட்டனர். இதில் சிலர் வெளியில் நடப்பதற்கான ஆற்றலை பெற்றிருந்தாலும், வெகு தூரம் வரை நடக்க முடியாமல் இருந்திருக்கலாம். 

அதாவது அவர்களால் வெகுதூரம் நடக்க இயலாமல் நடக்கவில்லை. எனவே காலடிகள் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை. ஆனால் இந்த வயதினருக்கு 7 ஆயிரத்து 500 காலடிகள் போதும் என இந்த ஆய்வில் தெரியவந்துள்ளது. அதேபோல சில மருத்துவ நிலைகளில் அதிகமாக நடப்பது நிச்சயமாக பலனைத் தருகிறது.

இதேபோல பொதுவாக தனது வாழ்நாளில் அதிகமாக நடக்கக்கூடியவர்கள் அதனால் நீண்ட ஆயுளை பெற்றிருக்கலாம். எனவே காலடிகளை வைத்து மட்டும் மருத்துவ பலன்களை கூற இயலாது.

அதைபோல இதை உளவியல் ரீதியாகவும் பார்க்க வேண்டும். இந்த 10 ஆயிரம் இலக்கு என்பது எளிதாக அடைய முடியாத ஒன்றாக உள்ளது. எனவே இதை பார்த்தவுடன் அடைய வேண்டும் என பலரும் எத்தனிக்க மாட்டார்கள்.

பிரிட்டனில் 13 - 14 வயதுக்குட்பட்ட பதின்பருவத்தினரிடம் இந்த ஆய்வை மேற்கொண்டபோது இந்த இலக்கை முதலில் அடைந்தபோது மகிழ்ச்சியாக இருந்தது என்றும் ஆனால் நாளடைவில் அது நடைமுறையில் தினமும் சாத்தியமற்றது என்பது தங்களுக்கு புரிந்ததாகவும் தெரிவித்தனர்.

உடற்பயிற்சி மற்றும் உடல்நலம்: ஒரு நாளைக்கு 10 ஆயிரம் காலடிகள் என்ற இலக்கு சரியானதா?

பட மூலாதாரம், Getty Images

அதில் ஒருவர், நான் எனது இலக்கை 10 ஆயிரத்திலிருந்து 9 ஆயிரமாக மாற்றிக் கொண்டேன். எனது அலைபேசியை கையில் வைத்திராத போது மீதமுள்ள 1000 அடிகளை நான் நடக்கிறேன் என விளையாட்டாக நினைத்து கொள்வேன்.

ஆனால் உண்மையில் நான் ஒரு எளிதாக அடையக் கூடிய இலக்கை நிர்ணயிக்க விரும்பினேன். எனவே எனக்கு தகுந்தாற் போல ஒரு இலக்கை நிர்ணயித்து கொண்டேன். அந்த இலக்கை அடைந்தால் எனக்கு மகிழ்ச்சி கிடைக்கிறது.

எது சரி?

அமெரிக்காவில் உள்ள ட்யூக் பல்கலைக்கழகத்தில் மனநல பேராசிரியராக இருக்கும் ஜார்டன் எட்கின், இம்மாதிரியாக இலக்கு வைத்து நடப்பவர்கள் அந்த இலக்கை அடைய வேண்டும் என்று நடந்தாலும் அதனை அவர்கள் மகிழ்ச்சியாக செய்யவில்லை என்று தெரிவிக்கிறார். நடையை கணக்கிடாமல் இயல்பாக நடப்பவர்களுடன் இவர்களை ஒப்பிட்டால் இவர்கள் குறைவாகவே மகிழ்ச்சியாக உணர்கிறார்கள் என்கிறார் ஜார்டன். 

மற்றொரு புறம் பார்த்தால், உடற்பயிற்சியில் ஈடுபடுவர்கள் 10 ஆயிரம் இலக்கை அடைந்தவுடன் அதை நிறுத்திவிடும் நிலையும் ஏற்படுகிறது. இலக்கு என ஒன்று இல்லாமல் இருந்தால் அவர்கள் அதற்கு மேலும் நடக்க கூடும்.

 சரி. என்னதான் முடிவு? ஒருவர் எத்தனை தூரம்தான் நடக்க வேண்டும்?

உங்களை எது உத்வேகமாக வைத்து கொள்கிறதோ அந்த இலக்கை நிர்ணயித்து கொள்ளுங்கள். 10 ஆயிரம் என்பதில் எந்த சிறப்பும் இல்லை என்பதை புரிந்து கொள்ளுங்கள். உங்களுக்கு எது நடைமுறையில் சாத்தியமோ அதை நிர்ணயித்து கொள்ளுங்கள். அது 10 ஆயிரத்தை விட அதிகமாகவும் இருக்கலாம் அல்லது குறைவாகவும் இருக்கலாம். அல்லது உங்கள் ட்ராக்கர் இல்லாமல்கூட நீங்கள் உடற்பயிற்சிகளை செய்து ஆரோக்கியமாக இருக்கலாம்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: