You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பாக்கெட்டில் ஒரு பிஸ்கட் குறைந்ததால் ஒரு லட்சம் ரூபாய் அபராதம் - நுகர்வோரின் புகார்கள் மூலம் நடக்கும் மாற்றங்கள்
- எழுதியவர், உமங் பொத்தார்
- பதவி, பிபிசி ஹிந்தி
கடந்த ஆண்டு டிசம்பரில், கேட்பரி நிறுவனம் தான் விற்கும் பொருட்களில் ஒன்றான போர்ன்விட்டாவை 15 சதவீதம் குறைவான சர்க்கரை கொண்டதாகக் கூறி சந்தையில் அறிமுகப்படுத்தியது.
சுவாரஸ்யமான விசயம் என்னவென்றால், சமூக ஊடகத்தில் பிரபலமான நபர் ஒருவர் வெளியிட்ட வீடியோவின் காரணமாகவே கேட்பரி நிறுவனம் தனது புதிய தயாரிப்பை அறிமுகம் செய்ய வேண்டியிருந்தது.
ரேவந்த் ஹிமாத்சிங்கா ஊட்டச்சத்தான உணவுகள் குறித்து, தான் நடத்தும், ஃபுட்ஃபார்மர் என்ற சேனலில் ஒரு வீடியோவை வெளியிட்டார். அந்த வீடியோவில், போர்ன்விட்டாவில் 50 சதவீதம் சர்க்கரை உள்ளது என்று கூறினார். இதையடுத்து மத்திய அரசு அமைப்புகள் கேட்பரி நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பியது. இதன் காரணமாக, அந்த நிறுவனத்தின் மீது பொதுமக்கள் மத்தியில் அதிருப்தி ஏற்பட்டது.
இப்படி ஏற்படுவது முதல் முறை அல்ல. இதற்கு முன்பும் கூட, தங்களது உணவு தயாரிப்புகள் குறித்து தவறாக விளம்பரப்படுத்தியதற்காக, நிறுவனங்கள் மீது நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதுபோன்ற சில சுவாரஸ்யமான வழக்குகள் குறித்து தெரிந்து கொள்ளலாம்.
செப்டம்பர் 2023 -ல், சென்னையில் உள்ள நுகர்வோர் நீதிமன்றம் ஒரு பிஸ்கட் பாக்கெட்டில் சொல்லியதை விட ஒரு பிஸ்கட் குறைவாக வைத்திருந்ததற்காக ஐடிசி நிறுவனத்துக்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்தது. அந்த நிறுவனம் தனது 'சன்ஃபீஸ்ட் மேரி லைட் பிஸ்கட்' பாக்கெட்டுகள் ஒவ்வொன்றிலும் 16 பிஸ்கட்டுகள் இருப்பதாக எழுதியிருந்தது. ஆனால், அதில் 15 பிஸ்கட்டுகள் மட்டுமே இருந்ததை சென்னையைச் சேர்ந்த பி.டிலிபாபு நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
ஒரு பிஸ்கட் குறைவாக வழங்குவதன் மூலம் நிறுவனம் ஒரு நாளைக்கு ரூ.29 லட்சம் லாபம் ஈட்டுகிறது என்று அவர் வாதிட்டார். ஆனால், பிஸ்கட்டுகளின் எடைக்கு ஏற்ப தான் அவை விற்பனை செய்யப்பட்டு வருவதாகவும், பாக்கெட்டில் எழுதப்பட்டிருந்த எடையும், 15 பிஸ்கட்டுகளின் எடையும் ஒன்றாக இருப்பதாக அந்த நிறுவனம் கூறியது.
ஆனால், பிஸ்கட் நிறுவனத்தின் வாதத்தை நீதிமன்றம் ஏற்கவில்லை. "நிறுவனம் நுகர்வோரை தவறாக வழிநடத்தியுள்ளது. இது வியாபாரம் செய்வதற்கான நியாயமற்ற வழியாகும், மேலும் நுகர்வோர் சேவையில் குறைபாடு ஏற்பட்டுள்ளது" என்று நீதிமன்றம் கூறியது.
இந்த விளம்பரத்தை நிறுத்துமாறு நிறுவனத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. நிறுவனத்திற்கு ரூ.1 லட்சம் அபராதம் விதித்ததோடு, நீதிமன்ற செலவுக்காக கூடுதலாக ரூ.10,000 செலுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
ஆம்வேயின் தயாரிப்புகள் பல முறை நீதிமன்ற சர்ச்சைகளில் சிக்கியுள்ளன. 2017-ம் ஆண்டில், டெல்லியில் உள்ள தேசிய நுகர்வோர் மன்றம் ஆம்வே மாட்ரிட் சஃபேத் முஸ்லி (ஆப்பிள்) மற்றும் கோஹினூர் இஞ்சி பூண்டு விழுது ஆகிய இரண்டு ஆம்வே தயாரிப்புகளை திரும்பப் பெற உத்தரவிட்டது.
இந்த தயாரிப்புகள் தொடர்பாக லாப நோக்கற்ற நுகர்வோர் உரிமைகள் அமைப்பான இந்திய நுகர்வோர் வழிகாட்டுதல் சங்கம் ஒரு வழக்கை தாக்கல் செய்தது.
முஸ்லியில் தரம் குறைவான பதப்படுத்தும் பொருள் பயன்படுத்தப்படுவதாக அந்த அமைப்பு கூறியது. அதே நேரம், லேபிள்களில் அந்த பொருள் பற்றி எந்த தகவலும் வழங்கப்படவில்லை என்பதையும் சுட்டிக்காட்டியது.
மறுபுறம், இஞ்சி பூண்டு விழுதில் சரியான பதப்படுத்தும் பொருள் பயன்படுத்தப்படவில்லை. எனவே இது கலப்படம் ஆகும்.
இதனை விசாரித்த நுகர்வோர் நீதிமன்றம், உட்பொருட்கள் குறித்த சரியான தகவல்களை பொதுமக்களுக்கு தெரியும் வகையில் விளம்பரப்படுத்த வேண்டும் என்று அந்நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டது. மேலும், இது நிறுவனத்தின் நியாயமற்ற வணிக நடைமுறைகளுக்கு சமம் என்றும் நிறுவனம் நுகர்வோர் நல நிதியில் ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.
முன்னதாக, 2015 -ம் ஆண்டில், உணவு பாதுகாப்பு நீதிமன்றம் ஆம்வே சப்ளிமெண்ட் நியூட்ரிலைட் மீது ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது. இதற்கு காரணம், அதை சாப்பிட்டால் பல்வேறு உடல் நலன்கள் கிடைக்கும் என்று நிறுவனம் தவறாகக் கூறிவந்தது.
தனது தயாரிப்பில் சிறப்பு இயற்கை பொருட்கள் உள்ளன என்பது உட்பட அதன் பல்வேறு கூற்றுக்களை நிரூபிக்கும் வகையிலான எந்த அறிவியல் ஆதாரத்தையும் நிறுவனம் வழங்கவில்லை என்று நீதிமன்றம் கூறியது. எனினும், இந்த விவகாரத்தில் நிறுவனம் மேல்முறையீடு செய்திருந்தது.
நிறுவனங்கள் பெரும்பாலும் தங்கள் விளம்பரங்களில் தங்கள் தயாரிப்புகளில் உள்ளதை விட அதிகமாக பலன் இருப்பதாகக் கூறுகின்றன. சமீபத்தில், டெல்லி உயர் நீதிமன்றம் இது போன்ற ஒரு விளம்பரத்தை டாபர் நிறுவனம் வெளியிட தடை விதித்தது.
தனது தயாரிப்பான டாபர் வீடா "இந்தியாவின் சிறந்த நோய் எதிர்ப்பு சக்தி நிபுணர்" என்றும், "வேறு எந்த சுகாதார பானமும் உங்கள் குழந்தைக்கு இதை விட சிறந்த நோய் எதிர்ப்பு சக்தியை வழங்க முடியாது" என்றும் நிறுவனம் தனது விளம்பரத்தில் கூறியது.
விளம்பரங்களுக்கான சுய ஒழுங்குமுறை அமைப்பான இந்திய விளம்பர தர நிர்ணய கவுன்சில், இந்த கூற்றுக்களுக்கு ஆதரவான அறிவியல் சான்றுகள் இல்லாதது குறித்து புகார்களைப் பெற்றது.
இதற்குப் பிறகு, இந்த கூற்று தவறானது என்றும், இது நுகர்வோரை ஏமாற்றுவதாக இருக்கும் என்றும் ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது. கவுன்சில் முதலில் டாபரிடம் விளம்பரங்களை திரும்பப் பெறுமாறு கேட்டுக்கொண்டது. ஆனால் டாபர், தனது கூற்றை உண்மை என்று நிரூபிக்க, டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தது.
விளம்பரங்களில் படைப்பு சுதந்திரத்திற்காக மிகைப்படுத்தல் அனுமதிக்கப்பட்டாலும், அது தவறான கூற்றுக்களைக் கூறக்கூடாது என்று நீதிமன்றம் கூறியது. குறிப்பாக உடல் ஆரோக்கியம் தொடர்பான விஷயங்களில் இத்தகைய கூற்றுக்களை தெரிவிக்கக் கூடாது என்று டெல்லி நீதிமன்றம் கூறியது. அது மட்டுமல்லாமல் விளம்பர கவுன்சிலின் உத்தரவில் தலையிடவும் நீதிமன்றம் மறுத்துவிட்டது.
கடந்த 2015-ம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (எப்எஸ்எஸ்ஏஐ) நெஸ்லே நிறுவனத்தின் தயாரிப்பான மேகியை சந்தையில் இருந்து திரும்ப பெறுமாறு உத்தரவிட்டது.
மேகி நூடுல்ஸில் "கூடுதல் எம்.எஸ்.ஜி இல்லை" என்று நிறுவனத்தின் விளம்பரங்கள் கூறிய போதிலும், மேகி நூடுல்ஸில் அதிக ஈயம் இருப்பதாகவும், மோனோசோடியம் குளுட்டமேட் (எம்.எஸ்.ஜி) இருப்பதாகவும் அந்த உத்தரவு கூறியது. இதையடுத்து, சந்தையில் இருந்து மேகி நூடுல்ஸ் திரும்பப் பெறப்பட்டது.
இருப்பினும், நூடுல்ஸ் சாப்பிட பாதுகாப்பானது என்றும், அதை நிரூபிக்க வாய்ப்பு வழங்கப்படவில்லை என்றும், அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களில் எஃப்எஸ்எஸ்ஏஐ சோதனைகள் நடத்தப்படவில்லை என்றும் கூறி நிறுவனம் மும்பை உயர் நீதிமன்றத்தை அணுகியது.
நாடு முழுவதும் உள்ள ஆய்வகங்களில் சோதனைகள் செய்யப்பட வேண்டும் என்றும், மேகியை உட்கொள்ள முடியும் என்று சோதனை காட்டினால், நிறுவனம் உற்பத்தியை மீண்டும் தொடங்கலாம் என்றும் மும்பை உயர் நீதிமன்றம் கூறியது. சோதனை முடிவுகளில் நூடுல்ஸில் நிர்ணயிக்கப்பட்ட வரம்பிற்குள் ஈயம் இருப்பது தெரியவந்தது . அதன் பின், நெஸ்லே நிறுவனம் மீண்டும் மேகி உற்பத்தியைத் தொடங்கியது. நிறுவனம் தனது பாக்கெட்டுகளில் “கூடுதல் எம்.எஸ்.ஜி இல்லை” என்ற விளம்பரத்தையும் நிறுத்திவிட்டது.
புகார் தெரிவிக்க என்ன செய்ய வேண்டும்?
இந்தியாவில் உள்ள நுகர்வோர் பாக்கெட்டுகளில் விற்கப்படும் உணவுப் பொருட்கள் தொடர்பாக தங்கள் புகார்களை பதிவு செய்ய பல வழிகள் உள்ளன.
முதலாவதாக, நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம், 2019 -ன் கீழ் நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகலாம். உயிருக்கு ஆபத்தான உணவுப் பொருட்கள் குறித்தும், மற்றும் தயாரிப்புகளின் தவறான விளம்பரங்கள் குறித்தும் புகார்கள் அளிக்கலாம்.
மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவில் நுகர்வோர் மன்றங்கள் உள்ளன. ரூ.1 கோடிக்கும் குறைந்த மதிப்பிலான பொருட்களுக்கு, நுகர்வோர் மாவட்ட மன்றத்தை அணுகலாம்.
ரூ.1 கோடி முதல் ரூ.10 கோடி வரையிலான பொருட்களுக்கு மாநில மன்றத்தையும், ரூ.10 கோடிக்கு மேலான பொருட்களுக்கு தேசிய மன்றத்தையும் அணுகலாம்.
தவறாக வழிநடத்தும் விளம்பரங்களுக்கு, அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனையும், பத்து லட்சம் ரூபாய் வரை அபராதமும் விதிக்க முடியும்.
இவை தவிர, இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்திலும் புகார் அளிக்கலாம். பல்வேறு உணவு பொருட்கள் மற்றும் அவற்றின் பேக்கேஜிங், லேபிளிங், முதலியவற்றின் தரத்தை இந்த அமைப்பே நிர்ணயிக்கிறது. இது நாட்டின் உணவுப் பாதுகாப்பிற்கான முதன்மை அமைப்பாகும்.
"கலப்படம், பாதுகாப்பற்ற மற்றும் தரமற்ற உணவு, லேபிளிங் குறைபாடுகள், தவறாக வழிநடத்தும் விளம்பரங்கள் தொடர்பான வழக்குகள் குறித்து நுகர்வோர் தங்கள் புகார்கள் மற்றும் கருத்துக்களை பதிவு செய்யலாம்" என்று உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் தெரிவித்துள்ளது.
சில நேரங்களில், இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் மோசடி மற்றும் சேதம் விளைவித்தல் போன்ற பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யவும் வழிகள் உள்ளன.
இருப்பினும், புகார்களை தீர்க்க பெரும்பாலானவர்கள், நுகர்வோர் மன்றத்தையே நாடுகின்றனர்.
டெல்லியின் தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் நுகர்வோர் சட்டம் மற்றும் கொள்கை ஆய்வு மையத்தின் ஆராய்ச்சி இயக்குனர் டாக்டர் சுஷிலா கூறுகையில், "வழக்குகளை விரைவாக தீர்ப்பதன் காரணமாகவே நுகர்வோர் மன்றங்களை அணுக மக்கள் விரும்புகிறார்கள்" என்றார்.
நுகர்வோர் நீதிமன்றத்தை அணுகும்போது, உணவுப் பொருள் எவ்வாறு தரமற்றது அல்லது விளம்பரப்படுத்தப்பட்ட தயாரிப்பிலிருந்து வேறுபட்டது என்பதை நுகர்வோர் காட்ட வேண்டும். உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய மத்திய ஆலோசனைக் குழுவின் உறுப்பினரான ஜார்ஜ் செரியன், "ஒரு வழக்கில் நுகர்வோர் வெற்றி பெற்றால், அவர் முழு செலவையும் திரும்பப் பெற முடியும்" என்று கூறினார்.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில், புகார் அளித்த பிறகு, அதற்காக நியமிக்கப்பட்ட அதிகாரி இந்த விவகாரத்தை முதலில் விசாரிப்பார்.
வளர்ந்த நாடுகளுடன் ஒப்பிடும்போது, இந்தியாவில் விழிப்புணர்வு மற்றும் சட்டத்தை பின்பற்றும் மனநிலை இன்னும் குறைவாக உள்ளது, ஆனால் அது படிப்படியாக அதிகரித்து வருகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)