You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மனித மூளையில் வயர்லெஸ் சிப் பொருத்தி கணினியுடன் நேரடி இணைப்பு - ஈலோன் மஸ்க் நிறுவனம் சாதனை
- எழுதியவர், பேட்ரிக் ஜாக்சன்
- பதவி, பிபிசி நியூஸ்
தொழில்நுட்பத்துறையில் முன்னோடியாக கருதப்படும் கோடீஸ்வரரான ஈலோன் மஸ்க், தனது நியூராலிங்க் நிறுவனம் மனித மூளையில் வயர்லெஸ் சிப் ஒன்றை முதன்முறையாக வெற்றிகரமாக பொருத்தியுள்ளதாக அறிவித்துள்ளார்.
ஆரம்பக்கட்ட ஆய்வு முடிவுகள் நம்பிக்கைக்குரிய நியூரானின் கூர்முனை அல்லது நரம்பு தூண்டுதல்களைக் கண்டறிந்தது என்பதுடன் இதன் மூலம் ஒரு நோயாளி நன்றாக குணமடைந்து வருகிறார் என்றும் அவர் கூறினார்.
மனித மூளையை கணினிகளுடன் இணைப்பதே நியூராலிங்க் நிறுவனத்தின் குறிக்கோளாக உள்ளது. சிக்கலான நரம்பியல் பிரச்னைகளைச் சமாளிக்க உதவ விரும்புவதாக அந்நிறுவனம் கூறுகிறது.
பல போட்டி நிறுவனங்கள் ஏற்கனவே இதேபோன்ற சாதனங்களை ஆய்வு செய்து வருகின்றன.
மனித மூளையில் சிப் செயல்படுவது எப்படி?
நியூராலிங்க் மற்றும் அமெரிக்காவின் மருத்துவ கட்டுப்பாட்டு அமைப்பான உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) ஆகிய இரண்டையும் பிபிசி நியூஸ் அணுகி கருத்து கேட்டது.
மனிதர்களின் உடலில் இதுபோன்ற சிப்பைப் பொருத்திப் பரிசோதிக்க மஸ்க்கின் நிறுவனத்திற்கு மே மாதம்அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகம் அனுமதி வழங்கியது. இதுபோன்ற அனுமதியைப் பெறுவதற்காக அந்நிறுவனம் மேற்கொண்ட பல்வேறு முயற்சிகளுக்குக் கிடைத்த வெற்றியாகவே இது கருதப்பட்டது.
ஆறு ஆண்டு கால ஆய்வின் தொடக்கத்திற்கு இது ஒரு அனுமதியை அளித்தது என்றே சொல்ல வேண்டும். இதையடுத்து மனித முடியை விட மெல்லியதாக 64 நெகிழ்வான நூல்களை அறுவை சிகிச்சை மூலம் "இயக்க எண்ணத்தை" கட்டுப்படுத்தும் மூளையின் ஒரு பகுதியில் வைக்க ஒரு ரோபோவை நியூராலிங்க் பயன்படுத்தியது.
இந்த நூல்கள் அதன் பரிசோதனை நடவடிக்கைக்கு உதவுகின்றன. இணைப்பு ஏதும் இல்லாமல் (வயர்லெஸ்) சார்ஜ் செய்யக் கூடிய பேட்டரி மூலம் இது இயக்கப்படுகிறது. இந்த தொழில்நுட்பத்தில் மூளையில் உருவாகும் சமிக்ஞைகளை வயர்லெஸ் முறையில் பதிவுசெய்து, அவை டீகோட் செய்யும் கணினி அமைப்புக்கு அனுப்பி வைக்கப்படுகின்றன.
'டெலிபதி' சாதனம் எவ்வாறு பயன்படும்?
முன்பு ட்விட்டர் என்று அறியப்பட்ட தனக்குச் சொந்தமான சமூக ஊடகத் தளமான ‘X’ இல் பதிவிட்ட மஸ்க், நியூராலிங்கின் இந்த முதல் தயாரிப்பு ‘டெலிபதி’ என்று அழைக்கப்படும் என்று தெரிவித்துள்ளார் .
"உங்கள் ஃபோன் அல்லது கம்ப்யூட்டரைக் கட்டுப்படுத்தவும், அவற்றின் மூலம் எந்தச் சாதனத்தையும், சிந்தனையின் மூலம் கட்டுப்படுத்தவும் இந்த டெலிபதி உதவும்," என்று அவர் கூறினார்.
"தங்கள் கை, கால்களைப் பயன்படுத்த முடியாதவர்களுக்கு அவர்களது பிரச்னையைக் குறைக்க இந்த டெலிபதி தொடக்கத்தில் பயன்படுத்தப்படும்," என்று அவர் விளக்கினார்.
மோட்டார் நியூரான் நோயால் பாதிக்கப்பட்ட மறைந்த பிரிட்டிஷ் விஞ்ஞானியைப் பற்றிக் குறிப்பிட்ட அவர், "ஸ்டீஃபன் ஹாக்கிங் ஒரு அதிவேக தட்டச்சு செய்பவரை விட வேகமாக தமது எண்ணங்களை பிறருட்ன் பகிர்ந்துகொள்ள முடியுமா என்று கற்பனை செய்து பாருங்கள். அதுதான் நியூராலிங்க்கின் குறிக்கோள்," என்றார்.
நியூராலிங்கின் போட்டியாளர்கள்
மஸ்க்கின் ஈடுபாடு நியூராலிங்கின் புகழை உயர்த்தும் அதே வேளையில், அவர் போட்டியாளர்களையும் எதிர்கொண்டு வருகிறார். அவர்களில் சிலர் இரண்டு தசாப்தங்களுக்கு முன்பே இது போன்ற சாதனைகளைப் புரிந்துள்ளனர். அமெரிக்காவின் யுட்டா மாகாணத்தை தளமாகக் கொண்ட பிளாக்ராக் நியூரோடெக் நிறுவனம் 2004 இல் மூளை மற்றும் கணினிக்கு இடையேயான தொடர்பை ஏற்படுத்த பல சிப்புகளைப் பொருத்தி பரிசோதித்தது.
நியூராலிங்க் இணை நிறுவனரால் உருவாக்கப்பட்ட ப்ரிசிசன் நியூராசைன்ஸ் நிறுவனம், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. அந்நிறுவனத்தின் சிப் மூளையின் மேற்பரப்பில் இருக்கும் மிக மெல்லிய டேப்பை ஒத்திருக்கிறது என்பதுடன் "கிரானியல் மைக்ரோ-ஸ்லிட்" மூலம் அது பொருத்தப்படலாம். இது மிகவும் எளிமையான செயல்முறை என்று அந்நிறுவனம் கூறுகிறது.
ஏற்கனவே உள்ள சாதனங்களும் கணிசமான முடிவுகளை உருவாக்கியுள்ளன. சமீபத்திய இரண்டு தனித்தனி அமெரிக்க அறிவியல் ஆய்வுகளில், ஒரு நபர் பேச முயற்சிக்கும் போது மூளையின் செயல்பாட்டைக் கண்காணிக்க இதுபோன்ற சிப்புகள் பயன்படுத்தப்பட்டன.
கடந்த 2021 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் நியூராலிங்க் நிறுவனம் தனது திட்டத்தின் ஒரு பகுதியாக, மண்டையோட்டில் (Skull) பொருத்தப்பட்ட சிப் மூலம் ஒரு குரங்கு வீடியோ கேம் விளையாடுவதை சாத்தியப்படுத்தியுள்ளதாக ஈலோன் மஸ்க் அறிவித்தார்.
அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோ நகரை தலைமையிடமாக கொண்டு செயல்படும் நியூராலிங்க் என்னும் இவரது புதிய ஸ்டார்ட்அப் நிறுவனம், மனித மற்றும் விலங்குகளின் மூளையை இயந்திரத்துடன் இணைக்கும் தொழில்நுட்பத்தை உருவாக்கி வருகிறது. இதன் மூலம் நரம்பியல் பிரச்னைகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு பெருமளவில் உதவிகரமான விளைவுகளைக் கொண்டுவர முடியும் என்று மஸ்க் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)