You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
உயர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் நியமனத்தில் உயர்சாதி இந்துக்களின் ஆதிக்கமே அதிகமாக உள்ளதா?
- எழுதியவர், நித்யா பாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
சமீபத்தில் பிபிசி செய்தியாளர் ஸ்டீபன் சாக்கர், ஓய்வு பெற்ற இந்திய தலைமை நீதிபதி டி.ஓய். சந்திரசூட்டுடன் நிகழ்த்திய ஹார்ட்டாக் (HARDTalk) நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது.
சந்திரசூட் தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்த காலத்தில் அவர் தீர்ப்பு வழங்கிய வழக்குகள், நீதித்துறையில் அவர் மேற்கொண்ட மாற்றங்கள், அன்று நிலவிய அரசியல் சூழல் குறித்து பல்வேறு கேள்விகள் கேட்கப்பட்டது.
நேர்காணல் ஆரம்பித்தவுடனே, ''இந்திய நீதித்துறையானது உயர்சாதி இந்து ஆண்களால் ஆதிக்கம் செலுத்தப்படும் ஒரு துறையா?'' என்ற கேள்வியை எழுப்பினார் சாக்கர்.
அதற்கு பதில் அளித்த சந்திரசூட், சாக்கரின் கூற்றை முழுமையாக மறுத்தார். மேலும் இந்திய நீதித்துறையில், பாலின விகிதாசாரத்தில் ஏற்படும் மாற்றங்கள் குறித்தும் அவர் விவாதித்தார்.
- 'நீதிபதி நாத்திகனாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை' - நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் பிபிசி பேட்டியில் கூறியது என்ன?
- அயோத்தி ராமர் கோவில்: மத சார்பின்மை கொள்கையை மோதி அரசு மீறிவிட்டதா? அரசியல் சாசனம் கூறுவது என்ன?
- தலைமை நீதிபதி சந்திரசூட்டிடம் எதிர்பார்த்தது என்ன, அவர் வழங்கியது என்ன?
- உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோதி - சர்ச்சையாவது ஏன்?
நேர்காணலின் போது, "உண்மையில் இந்திய நீதித்துறை, மேட்டுக்குடியைச் சேர்ந்த இந்து உயர்சாதி ஆண்களின் ஆதிக்கத்தில் உள்ளது. நீங்கள் மட்டுமல்ல, உங்கள் தந்தையும் கூட இந்திய உச்ச நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்துள்ளார். இது பிரச்னைக்குரிய அம்சமாக இல்லையா? இது வாரிசு அரசியல் போன்றது இல்லையா?" என்ற கேள்வியை எழுப்பினார் ஸ்டீபன் சாக்கர்
சந்திரசூட்டின் தந்தை யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட். அவர் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக அதிக காலம் பதவி வகித்த நீதிபதி என்பது குறிப்பிடத்தக்கது. 1978-ஆம் ஆண்டு முதல் 1985-ஆம் ஆண்டு வரை அவர் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தார்.
சந்திரசூட் அளித்த பதில் என்ன?
இந்த கேள்விக்கு மறுப்புத் தெரிவித்த சந்திரசூட், ''நீங்கள் இந்திய நீதித்துறையில் முதல்படியாக இருக்கும் மாவட்ட நீதிமன்றங்களை எடுத்துக் கொண்டால், அங்கு பணியாற்றும் நீதிபதிகளில் 50%க்கும் அதிகமானோர் பெண்கள். சில மாநிலங்களில் இந்த விகிதம் 60 முதல் 70% வரை உள்ளது'' என்று கூறினார்.
''நான் 2000-த்தில் நீதித்துறையில் காலடி வைத்தேன். ஓய்வு பெறுவதற்கு முன்பு 25 ஆண்டுகளாக நான் இந்த துறையில் பணியாற்றியுள்ளேன். தற்போது சட்டப்படிப்புகள் உட்பட முக்கிய படிப்புகள் பெண்களை அதிக அளவில் சென்று சேர்ந்துள்ளது. இதனால் சட்டப்பள்ளிகளில் நிலவும் பாலின சமத்துவம் தற்போது கீழமை நீதிமன்றங்களில் பிரதிபலிக்கிறது. பெண்களின் பங்களிப்பு குறித்த கருத்து நிலவுகின்ற சூழலில், மாவட்ட நீதிமன்றங்களில் அதிக அளவில் பெண்கள் பணியாற்ற ஆரம்பித்துள்ளனர். இந்த பெண்கள் வருங்காலத்தில் நீதித்துறையில் வளர ஆரம்பிப்பார்கள். '' என்றார் சந்திரசூட்
மேலும், ''நீங்கள் குடும்ப அரசியல் குறித்து குறிப்பிட்டீர்கள். ஆனால் இங்கு அது அப்படி செயல்படாது. என்னுடைய அப்பா இந்த நாட்டின் தலைமை நீதிபதியாக இருக்கின்ற காலம் வரை நான் நீதித்துறையில் காலெடுத்து வைக்கக் கூடாது என்று கூறினார். அதனால்தான் நான் மூன்று ஆண்டுகள் ஹார்வர்ட் சட்டப்பள்ளியில் படித்தேன். அவர் ஓய்வு பெற்ற பிறகே நான் நீதித்துறைக்கு வந்தேன்.
இந்திய நீதித்துறையில் இருக்கும் வழக்கறிஞர்கள் மற்றும் மாவட்ட நீதிபதிகள் பெரும்பாலானோர் முதன்முறையாக இந்த துறையில் காலடி வைத்திருக்கின்றனர். இது நீங்கள் கூறிய, உயர்சாதியினர் ஆதிக்கத்தில் நீதித்துறை உள்ளது என்ற கருத்துக்கு முற்றிலும் முரணானது. உயரடுக்குகளில் ஆண்கள் உள்ளனர். ஆனால் பெண்கள் தற்போது முன்னேறி வருகின்றனர்," என்று கூறினார் சந்திரசூட்.
'பெண் நீதிபதிகள் நியமனத்திலும் சாதிய பின்புலம் முக்கிய பங்காற்றுகிறது'
1989-ஆம் ஆண்டுதான் முதல் முறையாக ஃபாத்திமா பீவி பெண் என்ற ஒருவர் உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பேற்றார். அதன் பின்னர் தற்போது வரை 11 பெண்கள் மட்டுமே உச்ச நீதிமன்ற நீதிபதியாக பொறுப்பு வகித்துள்ளனர். உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சந்திரசூட் பதவி வகித்த காலத்தில் ஒரு பெண் நீதிபதி கூட உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்திய நீதித்துறை மற்றும் சாதியம் தொடர்பாக ஆய்வு செய்து வரும் ஆராய்ச்சியாளரும் வழக்கறிஞருமான கிருபா முனுசாமி பிபிசி தமிழிடம் பேசிய போது, "கீழமை நீதிமன்றங்களில் பெண் நீதிபதிகளின் எண்ணிக்கை உயர்ந்திருப்பது உண்மைதான். ஆனால் வெகு சிலரே உயர் நீதிமன்ற, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஆகின்றனர்," என்று குறிப்பிட்டார்.
"பெண்கள் நீதித்துறையில் இருக்கின்றனர். ஆனால் அந்த பெண்கள் யார்? எந்த சமூக பின்புலத்தில் இருந்து வருகிறார்கள் என்பது முக்கியம்," என்று கூறுகிறார்.
"பல்வேறு சமூக, சாதிய பின்புலத்தில் இருந்து நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டியது முக்கியம்'' என்கிறார் அவர்
குடும்ப பின்புலத்தின் தாக்கம் குறித்து பேசிய அவர், "பொதுவாக பிள்ளைகள், உறவினர்கள் நீதித்துறையில் கால் எடுத்து வைக்கும் போது, அவர்களுக்கு தேவையான அங்கீகாரமும், வளர்த்துவிடும் போக்கும் அதிகமாகவே உள்ளது," என்றும் குறிப்பிடுகிறார் கிருபா.
இத்தகைய கவனிப்பு முதல்தலைமுறை வழக்கறிஞர்களுக்கும், ஒடுக்கப்பட்ட சமூகத்தில் இருந்து வரும் வழக்கறிஞர்களுக்கும் கிடைப்பதில்லை என்று கூறுகிறார்.
ஓய்வுபெற்ற நீதிபதிகள் கருத்து
முன்னாள் சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் ஹரிபரந்தாமன் மற்றும் சந்துரு ஆகியோர் பிப்ரவரி 17-ஆம் தேதி அன்று சென்னையில் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பை நிகழ்த்தினார்கள்.
அப்போது பேசிய சந்துரு, "உயர் நீதிமன்றங்கள் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் நியமிக்கப்படும் நீதிபதிகள் அனைவரும் பலதரப்பட்ட வாழ்க்கை பின்புலத்தில் இருந்து வந்தவர்களா என்ற கேள்வியை எழுப்ப விரும்புகிறோம்," என்று கேள்வி எழுப்பினார்.
சமீபத்தில் சட்ட அமைச்சகம் வெளியிட்ட சுற்றறிக்கையில், பட்டியல் சாதியினர், பழங்குடியினர் மற்றும் பிற்படுத்தப்பட்ட மக்களின் பிரதிநிதித்துவம் நீதிமன்றங்களில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்று கூறியதை மேற்கோள்காட்டிய அவர், சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளின் சமூக பின்னணியை பட்டியலிட்டார்
''சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நியமிக்கப்பட்ட நீதிபதிகளில், 79% நீதிபதிகள் உயர்சாதி அல்லது இதர பிரிவை சேர்ந்தவர்கள். 2% நீதிபதிகள் பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். 2% நீதிபதிகள் சிறுபான்மையினர் என்று குறிப்பிட்டார்.'' சந்துரு
"உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகளாக இருக்கும் 34 நீதிபதிகளில் 12 நீதிபதிகள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்கள்," என்று குறிப்பிட்டார் சந்துரு.
சந்துரு கூறிய இந்த எண்ணிக்கையை பிபிசியால் உறுதிப்படுத்த முடியவில்லை.
இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வுபெற்ற சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், "தென்னிந்திய மாநிலங்களில் கூட ஓரளவுக்கு பிரதிநிதித்துவம் இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் உயர் சாதி இந்து சமூகத்தினரை தாண்டி வேறு சமூகத்தில் இருந்து வரும் நீதிபதிகள் குறைவாகவே உள்ளனர்," என்றார்.
"நீதிபதிகள் நியமனத்தின் போது இட ஒதுக்கீடு செயல்படுத்தப்பட வேண்டும் என்று திமுக எம்.பி வில்சன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த தனிநபர் மசோதா மற்றும் தற்போது விவாதத்தை ஏற்படுத்தியிருக்கும் சந்திரசூட்டின் கருத்து போன்றவை இது தொடர்பாக கவனத்தை அதிகரிக்கும். பொதுத்தளத்தில் இது விவாதத்தை ஏற்படுத்தும்," என்று அவர் குறிப்பிட்டார்.
'ஒருமைப்பாட்டிற்கே முக்கியத்துவம் அளிக்க வேண்டும்'
சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றும் எம். ராமமூர்த்தி, "இந்திய நீதித்துறையில் சீர்த்திருத்தங்கள் கொண்டு வர வேண்டும் என்பதில் துளியும் ஐயமில்லை. ஆனால் எதற்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பது முக்கியம்'' என்கிறார் அவர்
''நீதிபதிகள் ஒருமைப்பாடு மற்றும் நம்பகத்தன்மையுடன் செயல்பட வேண்டும். இடஒதுக்கீட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பதற்கு பதிலாக நீதிபதிகளின் நம்பகத்தன்மை மற்றும் ஒருமைப்பாட்டை கணக்கில் கொண்டு அவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்," என்று தெரிவித்தார்.
சந்திரசூட் மீது வைக்கப்படும் பாராட்டுகளும் விமர்சனமும்
சந்திரசூட் 8 ஆண்டுகளுக்கும் மேலாக இந்திய உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகித்தவர். இரண்டு ஆண்டுகள், (2022 நவம்பர் - 2024 நவம்பர் வரை) இந்திய தலைமை நீதிபதியாக பொறுப்பு வகித்தார்.
சட்டக் கொள்கைக்கான விதி மையத்தின் அர்கயா செங்குப்தா வழங்கும் தகவலின்படி, தலைமை நீதிபதியாக 93 வழக்குகளில் தீர்ப்பை வழங்கியுள்ளார். அவருக்கு முன்பு அந்த பொறுப்பை வகித்த நான்கு நீதிபதிகள் வழங்கிய மொத்த தீர்ப்புகளைக் காட்டிலும் இது அதிகமானது.
விடுதலை, கருத்து சுதந்திரம், பாலினம் மற்றும் பாலியல் சிறுபான்மையினரின் நலன் சார்ந்த அவருடைய கருத்துகள் பலவும் முற்போக்கு சிந்தனை கொண்டவையாக இருக்கிறது என்ற பாராட்டைப் பெற்றவர்.
கடந்த நவம்பர் மாதம் பிபிசி இணையத்தில் வெளியான கீதா பாண்டேவின் கட்டுரை, சந்திரசூட் பல விமர்சனங்களுக்கு ஆளானதையும் பட்டியலிடுகிறது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)