உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி இல்லத்திற்குச் சென்ற பிரதமர் மோதி - சர்ச்சையாவது ஏன்?

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாரே
    • பதவி, பிபிசி செய்தியாளர், டெல்லி

புது டெல்லியிலுள்ள தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட்டின் இல்லத்தில் புதன்கிழமை (செப்டம்பர் 11) இரவு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விநாயகர் பூஜையில் பிரதமர் நரேந்திர மோதி பங்கேற்றார்.

இந்தப் பூஜையில், நீதிபதி சந்திரசூட் உடன் தான் இருக்கும் படத்தை 'எக்ஸ்' பக்கத்தில் பதிவிட்ட பிரதமர் மோதி, “தலைமை நீதிபதி சந்திரசூட்டின் வீட்டில் விநாயகர் பூஜையில் கலந்து கொண்டேன். விநாயகர் நம் அனைவருக்கும் மகிழ்ச்சியையும், செழிப்பையும், நல்ல ஆரோக்கியத்தையும் வழங்கட்டும்,” என்று பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில், பிரதமர் ஒருவர் தலைமை நீதிபதியின் வீட்டில் நடக்கும் குடும்ப நிகழ்ச்சியில் கலந்து கொண்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் குறிப்பிடப்பட்டிருக்கும் சட்டம் இயற்றும் மன்றம், நிர்வாகம், மற்றும் நீதித்துறையில் சுதந்திரம் குறித்து பலர் தங்கள் கருத்தைத் தெரிவித்து வருகின்றனர்.

தலைமை நீதிபதி பிரதமரை வீட்டுக்கு அழைப்பதும், அதை பிரதமர் ஏற்றுக் கொண்டதும் தவறு என்று உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே கூறியுள்ளார். ஆனால், உச்சநீதிமன்றத்தின் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்த், பிரதமர் தலைமை நீதிபதியின் வீட்டிற்குச் சென்றதை ஒரு சிறந்த உதாரணமாகக் கருதுகிறார்.

"இதுவரை நடக்காதது இனியும் நடக்கக்கூடாது என்பதல்ல. பிரதமர் தலைமை நீதிபதியின் இல்லத்திற்குச் சென்றது ஒரு சிறந்த உதாரணம்,” என்கிறார்.

தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் வருகை

இந்தியாவின் புகழ்பெற்ற வழக்கறிஞர் இந்திரா ஜெய்சிங், “தலைமை நீதிபதி, நிர்வாகத்திற்கும் நீதித்துறைக்கும் இருந்த பிரிவு பாதிப்புக்கு உள்ளாகியிருக்கிறது. தலைமை நீதிபதியின் சுதந்திரத்தின் மீதிருந்த நம்பிக்கை தொலைந்துவிட்டது,” என்று தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்திருக்கிறார்.

மேலும், இதை உச்சநீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கம் (Supreme Court Bar Association - SCBA) விமர்சிக்க வேண்டும் என்றும் இந்திரா ஜெய்சிங் கோரிக்கை விடுத்துள்ளார்.

தலைமை நீதிபதி சந்திரசூட் எதிர் வரும் நவம்பர் 10ஆம் தேதி ஓய்வு பெறுகிறார். இதற்கிடையில், அவர் பல முக்கிய வழக்குகளையும் விசாரித்துள்ளார்.

ஆனால், பலர் இதுபோன்ற எதிர்ப்புகள் சரியானவையல்ல என்கின்றனர்.

இந்த சர்ச்சை குறித்து சிவசேனையின் ஷிண்டே பிரிவைச் சேர்ந்த மாநிலங்களவை எம்.பி மிலிந்த் தியோரா, இந்திய தலைமை நீதிபதியின் இல்லத்திற்கு விநாயகர் பூஜைக்குச் சென்றது குறித்து ஆதாரமற்ற கருத்துகள் தெரிவிக்கப்படுவது துரதிர்ஷ்டவசமானது என்று தனது ‘எக்ஸ்’ பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

அவரது கருத்துப்படி, “தீர்ப்பு சாதகமாக வரும்போது, ​​எதிர்க்கட்சிகள் உச்சநீதிமன்றத்தின் நம்பகத்தன்மையைப் பாராட்டுகின்றன. ஆனால் விஷயங்கள் தங்களுக்கு ஆதரவாக நடக்காதபோது, ​​​​அது நீதித்துறையின் நம்பகத்தன்மையை சமரசம் செய்வதாக அவர்கள் குற்றம் சாட்டுகிறார்கள். உச்சநீதிமன்றத்திற்கு எதிராக இதுபோன்ற ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளை முன்வைப்பது ஆபத்தான முன்னுதாரணமாக அமையும்,” என்று அவர் பதிவிட்டிருக்கிறார்.

இரு தரப்பிலும் இருந்து வரும் அறிக்கைகள்

ஆனால், சிவசேனையின் உத்தவ் தாக்கரே அணியைச் சேர்ந்த சஞ்சய் ராவத் கூறுகையில், ‘கணபதி பண்டிகையின் போது மக்கள் ஒருவருக்கொருவரது வீடுகளுக்குச் செல்கிறார்கள். பிரதமர் இதுவரை எத்தனை வீடுகளுக்குச் சென்றுள்ளார்?’ என்று கேள்வி எழுப்புகிறார்.

மேலும், “அரசியலமைப்புச் சட்டத்தின் பாதுகாவலர்கள் அரசியல் தலைவர்களை இப்படிச் சந்திப்பதுதான் எங்களது சந்தேகம். மகாராஷ்டிர அரசு தொடர்ந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து வருகிறது.

அந்த வழக்கில் பிரதமர் ஒரு தரப்பினராக உள்ளார். அப்படியிருக்க தலைமை நீதிபதியால் அந்த வழக்கில் நீதி வழங்க முடியுமா? வழக்கு தொடர்ந்து ஒத்திவைக்கப்படுகிறது. இந்த வழக்கில் இருந்து தலைமை நீதிபதி ஒதுங்க வேண்டும்,” என்று அவர் கூறியிருக்கிறார்.

மகாராஷ்டிராவில் சிவசேனை மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி இடையே ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு உருவான ஷிண்டே அரசு செல்லுபடியாகுமா என்ற வழக்கு உச்சநீதிமன்றத்தில் பரிசீலனையில் உள்ளது.

மகாராஷ்டிராவில் விரைவில் சட்டமன்றத் தேர்தலும் நடைபெற உள்ளது. அங்கு 10 நாட்கள் நடக்கும் விநாயகர் சதுர்த்தி பண்டிகை கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது. நாடு முழுவதும் வாழும் மகாராஷ்டிர மக்கள் தவிர, இந்தியா முழுவதும் இந்தப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

பா.ஜ.க செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலாவும் சஞ்சய் ராவத்தின் குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்தார். உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்த கே.ஜி.பாலகிருஷ்ணன், அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங்கின் இஃப்தார் விருந்தில் கலந்து கொண்டதாக அவர் கூறினார்.

'கை குலுக்கவில்லை என்றால் பகையா?'

இந்த சர்ச்சை குறித்து இந்திய பார் கவுன்சிலின் தலைவரும் பா.ஜ.க மாநிலங்களவை எம்.பி-யுமான மனன் குமார் மிஸ்ராவும் விளக்கம் அளித்துள்ளார்.

அவர் கூறுகையில், "இது நீதிமன்றத்தின் எந்த முடிவையும் பாதிக்காது என்று, இதுபோன்ற அறிக்கைகளைக் கொடுப்பவர்களுக்குத் தெரியும். இதுவொரு மத நிகழ்ச்சி. பிரதமர் அங்கு பூஜை செய்தார். வேறு ஏதாவது சந்திப்பாக இருந்திருந்தால் அது ரகசிய சந்திப்பாக இருந்திருக்கும்,” என்கிறார்.

இதற்கிடையில், பா.ஜ.க தலைவர் சம்பித் பத்ரா ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தி அதில் எதிர்க்கட்சிகளை விமர்சித்தார்.

“நாட்டின் பிரதமர் தலைமை நீதிபதியைச் சந்தித்தால் அது விமர்சிக்கப்படுகிறது. ஜனநாயகத்தின் இரண்டு தூண்களும் ஒன்றுக்கொன்று பகையாக இருக்க வேண்டுமா, கைகுலுக்கக் கூடாதா?” என்று கேள்வி எழுப்பினார்.

மன்மோகன் சிங்கின் இஃப்தார் விழாவில் தலைமை நீதிபதி கலந்து கொள்வார் என்றும் சம்பித் பத்ரா கூறினார். அதே நேரம் ராகுல் காந்தியின் வெளிநாட்டுப் பயணம் குறித்தும் எதிர்க்கட்சிகளிடம் பல கேள்விகளை எழுப்பினார்.

பிரபல வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண், கணேஷ் பூஜையில் கலந்து கொள்வதற்காக தலைமை நீதிபதி வீட்டிற்கு பிரதமர் மோதி சென்றதை நீதிபதிகளின் நடத்தை விதிகளுடன் இணைத்துள்ளார்.

அவர் கூறுகையில், “தனிப்பட்ட நிகழ்ச்சிக்காக தலைமை நீதிபதி இல்லத்துக்கு பிரதமர் செல்வது முற்றிலும் பொருத்தமற்றது. பிரதமரும் தலைமை நீதிபதியும் ஒரு மதத் திட்டத்தைப் பகிரங்கமாக வெளிப்படுத்துவதும் பொருத்தமற்றது” என்றார்.

வழிகாட்டு நெறிமுறைகள் இருக்கின்றனவா?

உச்சநீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துஷ்யந்த் தவே பிபிசியிடம் கூறுகையில், தன்னுடைய பணிக்காலத்தில் நீதிபதி வெங்கடாச்சலய்யா நீதிபதிகள் பின்பற்றுவதற்கென ‘நடத்தை விதிகளை’ வகுத்ததாகத் தெரிவித்தார். அனைத்து நீதிபதிகளும் அதைப் பின்பற்றுகின்றனர் என்றார்.

எம்.என். வெங்கடாச்சலய்யா 1993-1994 காலகட்டத்தில் இந்தியாவின் தலைமை நீதிபதியாக இருந்தார்.

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இல்லத்தில் நடைபெற்ற இஃப்தார் விருந்து ஒரு பொது நிகழ்ச்சி என்றும் அதனால் எல்லோருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டதாகவும் துஷ்யந்த் தவே கூறினார். இதற்கு முன்பு எந்தவொரு பிரதமரோ அல்லது அரசியல்வாதியோ தலைமை நீதிபதியின் தனிப்பட்ட நிகழ்வில் இதுபோன்று கலந்துகொண்டதில்லை.

அவர் கூறுகையில், “சந்திரசூட்டின் தந்தையே உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக இருந்தவர், அவர் இதுபோன்று செய்ததில்லை. பாரபட்சமற்ற தன்மை மற்றும் சுதந்திரத்துடன் நீதித்துறை செயல்பட வேண்டும்” என்றார்.

தலைமை நீதிபதியின் தந்தை ஒய்.வி.சந்திரசூட், உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக 1978-1985 காலகட்டத்தில் இருந்தார்.

பாஜகவின் மூத்த வழக்கறிஞர் பிங்கி ஆனந்திடம் இந்த சர்ச்சை குறித்து பிபிசி பேசியது. அவர் நீதிபதிகளுக்கென அத்தகைய ‘நடத்தை விதிகள்’ ஏதும் இல்லை எனத் தெரிவித்தார்.

அவர் கூறுகையில், பிரதமரும் தலைமை நீதிபதியும் வெவ்வேறு நிகழ்ச்சிகளில் சந்தித்துள்ளனர் என்றும் அதேபோன்று நீதிபதியின் அரசு இல்லத்திற்குத்தான் பிரதமர் சென்றதாகவும் அவருடைய தனிப்பட்ட இல்லத்திற்குச் செல்லவில்லை என்றும், அது பொது நிகழ்ச்சி என்றும் கூறியுள்ளார்.

“எந்தவொரு பிரதமரும் உச்சநீதிமன்றத்திற்குச் சென்றதில்லை. ஆனால், மோதி அங்கு சென்று எல்லோரையும் சந்தித்தார். முன்பு நடக்காத எதுவும் எப்போதும் நடக்கக்கூடாது என்பதில்லை. தலைமை நீதிபதியின் இல்லத்திற்கு பிரதமர் சென்றது சிறந்த உதாரணம்” என அவர் நம்புகிறார்.

உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்தாலும், பி.என். பகவதி, அப்போதைய பிரதமர் இந்திரா காந்திக்கு கடிதம் எழுதினார். இதனால், கடும் எதிர்ப்பு எழுந்தது.

நீதிபதி பகவதி 1980ஆம் ஆண்டில் இந்திரா காந்தி வெற்றி பெற்றதையடுத்து, அவருக்கு வாழ்த்து தெரிவித்து கடிதம் எழுதியிருந்தார்.

பிரதமருக்கு நீதிபதி சந்திரசூட் அழைப்பு விடுத்தது மற்றும் அதையடுத்து அவருடைய இல்லத்திற்கு பிரதமர் சென்றது இரண்டுமே தவறு என்றும் அந்தப் புகைப்படத்தை வெளியிட்டதும் தவறு எனவும் துஷ்யந்த் தவே நம்புகிறார்.

இதைச் செய்வதற்கு முன்பு தலைமை நீதிபதி ஆயிரம் முறை யோசித்திருக்க வேண்டும் என தவே தெரிவித்தார்.

- இது, பிபிசி-க்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)