You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி காலமானார்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி வியாழக்கிழமை (செப்டம்பர் 12) காலமானார். அவருக்கு வயது 72.
சிலகாலமாக நோய்வாய்ப்பட்டிருந்த அவர், நிமோனியாவால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. அவர் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
யெச்சூரி இன்று மதியம் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானதாக பிபிசி தெலுங்கு ஆசிரியர் ஜி.எஸ்.ராம்மோகனிடம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் புண்யாவதி தெரிவித்தார்.
செப்டம்பர் 10 அன்று அக்கட்சி வெளியிட்ட அறிக்கையில், யெச்சூரிக்குக் கடுமையான சுவாசத் தொற்று இருப்பதாக கூறப்பட்டிருந்தது.
மு.க.ஸ்டாலின், ராகுல் காந்தி அஞ்சலி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள அஞ்சலிக் குறிப்பில், யெச்சூரியை ‘இடதுசாரி இயக்கத்தின் வலிமையான தலைவர், இந்திய அரசியலின் உயர்ந்த ஆளுமை’ என்று வர்ணித்துள்ளார்.
“மாணவர் தலைவராக அவசரநிலையை எதிர்த்து நின்றதிலிருந்தே, அவர் நீதியின் மீது உறுதியான அச்சமற்ற தலைவராக இருந்தார். உழைக்கும் மக்கள், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம், முற்போக்கு ஆகிய கொள்கைகளுக்கான அவரது அர்ப்பணிப்பு வரும் தலைமுறைகளுக்கு வழிகாட்டும்'', என்று ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், “நான் அவருடன் பேசிய நுட்பமான உரையாடல்களை எப்போதும் நினைவில் வைத்திருப்பேன். இந்தக் கடினமான சமயத்தில் அவரது குடும்பத்தாருக்கும் தோழர்களுக்கும் எனது இதயப்பூர்வமான இரங்கல்கள்,” என்று ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.
சீதாராம் யெச்சூரியின் மரணம் குறித்து எக்ஸ் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, சீதாராம் யெச்சூரியை ‘எனது நண்பர்’ எனக் குறிப்பிடுள்ளார்.
"இந்தியா என்ற கருத்தின் பாதுகாவலர், நாட்டைப் பற்றிய ஆழமான புரிதலைக் கொண்டிருந்தார். எங்களுக்கிடையிலான நீண்ட விவாதங்கள் இனி நடக்காது. இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர், நண்பர்கள், மற்றும் ஆதரவாளர்களுக்கு எனது இரங்கல்கள்," என்று தெரிவித்திருக்கிறார்.
மேற்குவங்க முதல்வர் மமதா பானர்ஜி, தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில், “மூத்த அரசியல்வாதியான சீதாராம் யெச்சூரியின் மறைவு தேசிய அரசியலுக்கு ஒரு இழப்பு,” என்று பதிவிட்டிருக்கிறார்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாணவர் பிரிவான எஸ்.எஃப்.ஐ “அன்புக்குரியவரும், எஸ்.எஃப்.ஐ-யின் முன்னாள் தலைவரும், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளருமான சீதாராம் யெச்சூரிக்கு மரியாதை செலுத்தும் வகையில் இந்திய மாணவர் கூட்டமைப்பு தனது கொடியை அரைக்கம்பத்தில் பறக்க விடுகிறது,” என்று எழுதியுள்ளது.
தேசிய அளவில் முதல் மாணவர்
சீதாராம் யெச்சூரி 1952-ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 12-ஆம் தேதி சென்னையில் பிறந்தார். இவரது தந்தை யெச்சூரி சர்வேஸ்வர சோமயாஜி, தாயார் யெச்சூரி கல்பகம். அவர்கள் சென்னையில் குடியேறிய தெலுங்கு குடும்பத்தைச் சேர்ந்தவர்கள்.
சீதாராம் யெச்சூரி, ஹைதராபாத்தில் உள்ள ஆல் செயிண்ட்ஸ் உயர்நிலைப் பள்ளியில் படித்தார். 1969-ஆம் ஆண்டு, தனி தெலுங்கானாவுக்கான போராட்டம் நடந்து வந்ததன் காரணமாக, டெல்லி சென்று, பிரசிடெண்ட் எஸ்டேட் பள்ளியில் சேர்ந்தார்.
அங்கு சி.பி.எஸ்.இ தேர்வில் தேசிய அளவில் முதல் இடம் பிடித்தார். பின்னர், செயின்ட் ஸ்டீபன் கல்லூரியில் பொருளாதாரத்தில் இளங்கலைப் பட்டம் மற்றும் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் பொருளாதாரத்தில் முதுகலைப் பட்டம் பெற்றார்.
1975-ஆம் ஆண்டு, நாட்டில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டபோது அவர் கைது செய்யப்பட்டார். அதனால், ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப் படிப்புக்குச் சேர்ந்த போதிலும் அவரால் அதனை முடிக்க முடியவில்லை.
ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் இருந்தபோது, 1974-இல் இந்திய மாணவர் கூட்டமைப்பில் (எஸ்.எஃப்.ஐ) சேர்ந்தார். 1975-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். குறுகிய காலத்திற்குள், யெச்சூரி எஸ்.எஃப்.ஐ-யின் தலைவராக நியமிக்கப்பட்டார்.
யெச்சூரி 1984-இல் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்தியக் குழுவுக்கும், பின்னர் 1992-இல் உயர்மட்டக் குழுவுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டார். தனது திறமையாலும், அர்ப்பணிப்பாலும் குறுகிய காலத்திலேயே கட்சியில் அங்கீகாரம் பெற்றார்.
அவசரநிலைக்குப் பிறகு, ஒரே ஆண்டில் (1977-78) மூன்று முறை ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இந்திரா காந்தியை பதவி விலக வைத்தவர்
1977-ஆம் ஆண்டு அவசரநிலை முடிவுக்கு வந்து, தேர்தலில் இந்திரா காந்தி தோல்வியடைந்த பிறகு, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் வேந்தராக தொடர்ந்தார். இதை எதிர்த்து சீதாராம் யெச்சூரி தலைமையில் 500 மாணவர்கள் இந்திரா காந்தி வீட்டுக்குச் சென்று போராட்டம் நடத்தினர்.
பின்னர் அவர்கள் இந்திரா காந்தியை சந்தித்தனர். பல்கலைக்கழகத்தின் வேந்தர் பதவியில் இருந்து ஏன் ராஜினாமா செய்ய வேண்டும் என்பதை விளக்கி இந்திரா காந்தியிடம் யெச்சூரி ஒரு குறிப்பாணையை வாசித்தார்.
யெச்சூரி அதை வாசித்துக்கொண்டிருந்த போது, இந்திரா காந்தி எந்த உணர்ச்சியும் இல்லாமல் முழுமையாகக் கேட்டார். பின்னர் மாணவர்கள் அதே குறிப்பாணையை அவரிடம் வழங்க, இந்திரா காந்தி அதை ஏற்றுக் கொண்டார். சில நாட்களுக்குப் பிறகு அவர் ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக வேந்தர் பதவியை ராஜினாமா செய்தார்.
மூத்த அரசியல் தலைவர்
சீதாராம் யெச்சூரி இரண்டு முறை ராஜ்யசபா உறுப்பினராக பதவி வகித்துள்ளார். 2005-இல் முதல் முறையாகவும், 2011-இல் இரண்டாவது முறையாக மாநிலங்களவையில் மேற்கு வங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தினார்.
விவசாயிகள், உழைக்கும் மக்கள், அரசின் பொருளாதாரக் கொள்கைகள், வெளியுறவுக் கொள்கைகள், மதவெறி அச்சுறுத்தல் குறித்து ராஜ்யசபாவில் அவர் ஆற்றிய உரைகள் பெரிதும் கவனிக்கப்பட்டன.
அவர் போக்குவரத்து, சுற்றுலா, மற்றும் கலாசார துறை தொடர்பான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகவும் பணியாற்றியுள்ளார்.
1996-இல் ஐக்கிய முன்னணி அரசாங்கத்தின் குறைந்தபட்ச கூட்டுத் திட்டத்தை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றினார். 2004-ஆம் ஆண்டு ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தை அமைப்பதிலும் முக்கிய பங்கு வகித்தார்.
2015-ஆம் ஆண்டு விசாகப்பட்டினத்தில் நடைபெற்ற நடைபெற்ற மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூட்டத்தில் ஐந்தாவது பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2018-இல் இரண்டாவது முறையாகவும், 2022-இல் மூன்றாவது முறையாகவும் கட்சியின் பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
முதலில் இந்திராணி மஜும்தாரை மணந்த யெச்சூரி, அவரிடமிருந்து பிரிந்த பிறகு பத்திரிகையாளர் சீமா சிஸ்தியை இரண்டாவதாகத் திருமணம் செய்து கொண்டார். இந்திராணி மஜும்தாருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
யெச்சூரியின் மூத்த மகன் ஆஷிஷ் யெச்சூரி தனது 34 வயதில் ஏப்ரல் 2021-இல் கொரோனா தொற்றால் காலமானார். அவரது மகள் அகிலா யெச்சூரி இங்கிலாந்தில் உள்ள செயின்ட் ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
'வாட் இஸ் ஹிந்து ராஷ்டிரா', 'போலி இந்துத்துவம் அம்பலமானது', 'இந்திய அரசியலில் சாதியும் வர்க்கமும்', 'பற்றாக்குறையின் சகதி’ போன்ற நூல்களை எழுதியுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)