You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
கமலா ஹாரிஸின் தந்தை குறித்து அவரது தமிழ்நாட்டு மாணவர் கூறுவது என்ன?
- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் மற்றும் கமலா ஹாரிஸுக்கு இடையில் கடுமையான போட்டி நிலவுகிறது. இந்நிலையில், அவர்கள் இருவருக்கும் இடையிலான காரசார விவாதத்திற்குப் பிறகு கமலா ஹாரிஸின் தந்தை குறித்த பேச்சுகளும் எழுந்துள்ளன.
அதிபர் தேர்தலுக்கான விவாதத்தின்போது, “கமலா ஹாரிஸ் ஒரு மார்க்சியவாதி. அனைவருக்கும் அவர் ஒரு மார்க்சியவாதி என்று தெரியும். அவரது, தந்தை பொருளாதாரத்தில் மார்க்சிய பேராசிரியர் ஆவார். அவர் அவருக்கு (கமலாவுக்கு) நன்றாகக் கற்றுக் கொடுத்துள்ளார்” என்று டிரம்ப் கூறியிருந்தார்.
தமிழ்நாட்டைச் சேர்ந்த கமலா ஹாரிஸின் தாய் ஷியாமளா கோபாலன் பற்றி இந்தியாவில் பேசப்படுகிறது. கமலா ஹாரிஸும்கூட அவரது தாயைப் பற்றிப் பொதுவெளியில் பேசி வருகிறார்.
ஆனால் இந்தியாவில் அவரது தந்தை டொனால்ட் ஹாரிஸை பற்றி அதிகம் பேசப்படுவதில்லை. டிரம்பின் பேச்சுக்குப் பிறகு கமலாவின் தந்தை யார் என்று தெரிந்துகொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது.
பொருளாதார பேராசிரியரான டொனால்ட் ஹாரிஸுக்கு தற்போது 86 வயதாகிறது. 1972ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் பணியமர்த்தப்பட்ட முதல் கருப்பின பேராசிரியர் இவரே.
அவரது நியமனத்தை சிலர் எதிர்த்ததாக பல்கலைக்கழக இதழ் ‘தி ஸ்டான்ஃபோர்ட் டெய்லி’ 1976இல் குறிப்பிட்டிருந்தது. அங்கு அவர், முதலாளித்துவ வளர்ச்சியின் கோட்பாடு என்ற பாடத்தைக் கற்றுக் கொடுத்தார் என்று பல்கலைக்கழக இணையதளம் கூறுகிறது.
கடந்த 1998ஆம் ஆண்டு ஓய்வுபெற்ற டொனால்ட் ஹாரிஸ் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக்கழகத்தில் தற்போது கௌரவ பேராசிரியராக இருந்து வருகிறார். கனடா, பிரிட்டன், இந்தியா, கென்யா, மலேசியா, சிங்கப்பூர் உட்பட உலகின் பல்வேறு நாடுகளுக்குச் சென்று விரிவுரைகள் வழங்கியுள்ளார். டெல்லி பொருளாதாரப் பள்ளியில் 1968ஆம் ஆண்டு தற்காலிகப் பேராசிரியராக இருந்துள்ளார்.
பெர்க்லியில் உள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற டொனால்ட் ஹாரிஸ், ஜமைக்கா அரசுக்கு பொருளாதாரம் சார்ந்த விவகாரங்களில் ஆலோசனை வழங்கி வந்துள்ளார்.
டெலிகிராஃப் இதழின் செய்திப்படி, ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் நியமிக்கப்பட்டபோது, மாணவர் இதழில் அவர் “மார்க்சிய அறிஞர்” என்று குறிப்பிடப்பட்டிருந்தார். அந்தக் காலகட்டத்தில் சந்தைப் பொருளாதாரத்தின் ஆதரவாளராக அவர் கருதப்படவில்லை. மாணவர்களையும் சந்தைப் பொருளாதார கருத்துகளில் இருந்து விலக்கி வருவதாக அவர் விமர்சிக்கப்பட்டார்.
டொனால்ட் ஹாரிஸின் ஆரம்பக் காலம்
டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்காவில் 1938இல் மிஸ் பெரில் மற்றும் மாஸ் ஆஸ்கருக்கு பிறந்தார். ஹாரிஸ் என்ற பெயர் அவரது தந்தைவழி தாத்தா ஜோசப் அலெக்சாண்டர் ஹாரிஸின் பெயராகும். அவரது பாட்டி, கிரிஷி ஜமைக்காவின் ப்ரவுன் டவுனில் உலர் பொருட்களுக்கான கடை வைத்திருந்தார்.
தனது இளமை நாட்களில் பெரும் பகுதியை அவர் தொழில் நடத்தும் விதத்தைப் பார்த்தவாறு கழித்ததாகவும் அவரிடம் இருந்தே பொருளாதாரத்தின் மீதான தனது ஆர்வம் தொடங்கியதாகவும் 2018ஆம் ஆண்டு டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கா குளோபல் என்ற உலக ஜமைக்கர்களின் ஆன்லைன் தளத்தில் எழுதிய கட்டுரையில் கூறுகிறார்.
அவரது தாய்வழிப் பாட்டி மிஸ் ஐரிஸ் கரும்பு விவசாயம் செய்து வந்துள்ளார். அவருடன் கரும்புத் தோட்டங்களில் சுற்றித் திரிந்து, கரும்பிலிருந்து சர்க்கரை எப்படி தயாரிக்கப்படுகிறது என்று பார்த்து ஜமைக்க வரலாற்றின் முக்கியமான பகுதியைப் புரிந்து கொண்டதாகவும் குறிப்பிடுகிறார்.
கமலாவின் வார்த்தைகளில் டொனால்ட் ஹாரிஸ்
கமலா ஹாரிஸ், The Truths We Hold என்ற தனது நூலில் தனது தந்தை குறித்து, “அவர் ஒரு திறமையான மாணவர். பெர்க்லியில் கலிஃபோர்னிய பல்கலைக் கழகத்தில் சேர்க்கை கிடைத்த பிறகு அமெரிக்காவில் குடியேறினார். அங்கு பொருளாதாரம் படிக்கச் சென்றார். பின்னர் ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்தில் பொருளாதாரம் கற்பித்தார். அங்கு கௌரவ விரிவுரையாளராக இப்போதும் உள்ளார்” என்று குறிப்பிடுகிறார்.
தனது குழந்தைப் பருவத்தில் தன் தந்தை தன்னை பயமற்றவளாக இருக்க ஊக்கப்படுத்தியதாக கமலா ஹாரிஸ் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.
“அந்த ஆரம்ப நாட்கள் மிகவும் சந்தோஷமாக கவலையற்றதாக இருந்தது. எனக்கு வெளிப்புறங்கள் மிகவும் பிடிக்கும், நான் சிறியவளாக இருக்கும்போது நான் கவலையற்று ஓடவேண்டும் என்று என் தந்தை விரும்பினார் என்பது நினைவில் உள்ளது.
எனது அம்மாவை பார்த்து, 'அவளை ஓட விடு ஷியாமளா' என்பார். பிறகு என்னைப் பார்த்து, 'ஓடு, கமலா. எவ்வளவு வேகமாக முடியுமோ அவ்வளவு வேகமாக ஓடு' என்பார். முகத்தில் காற்று வேகமாக வீச, எதையும் செய்ய முடியும் என்ற எண்ணத்துடன் நான் ஓடத் தொடங்குவேன்” என்று எழுதியிருந்தார்.
தனது தந்தையின் இசை ஆர்வத்தைக் குறிப்பிட்டுச் சொல்லும் கமலா, “ஜாஸ் பாடல்களின் பெரிய தொகுப்பு அவரிடம் இருந்தது. ஒருபுறம் சுவரில் உள்ள அனைத்து அடுக்குகளையும் நிரப்பும் வகையில் பல ஆல்பங்கள் இருந்தன. ஒவ்வோர் இரவும் நான் தெலோனியஸ் மான்க், ஜான் கோல்ட்ரேன் அல்லது மைல்ஸ் டேவிஸ்-இன் பாடல்களைக் கேட்டுக் கொண்டே தூங்குவேன்” என்று எழுதியுள்ளார்.
கமலா ஹாரிஸின் தாயும் தந்தையும் கமலாவுக்கு ஐந்து வயது இருக்கும்போது பிரிந்துவிட்டனர். எனினும் விடுமுறை நாட்களை தந்தையுடன் கழித்ததாகக் குறிப்பிடுகிறார் கமலா. தனது பட்டமளிப்பு விழாவுக்கு இருவரும் வர வேண்டும் என்று விரும்பியதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
“அவர்கள் இருவரும் பேசிக்கொள்ள மாட்டார்கள் என்று தெரியும் என்றாலும் இருவரையும் நான் அழைத்திருந்தேன். எனக்காக இருவரும் இருக்க வேண்டும் என்று விரும்பினேன்” என்று தனது நூலில் குறிப்பிடுகிறார். இருவரும் பட்டமளிப்பு விழாவுக்கு வந்திருந்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
டொனால்ட் ஹாரிஸ்-இன் தமிழ்நாட்டு மாணவர் கூறுவது என்ன?
அமெரிக்காவில் மேடிசனில் உள்ள விஸ்கான்சின் பல்கலைக் கழகத்தில் 1969ஆம் ஆண்டு தமிழ்நாட்டைச் சேர்ந்த வெங்கடேஷ் ஆத்ரேயா பொருளாதாரத்தில் முனைவர் பட்டப்படிப்புக்காகச் சென்றிருந்தார்.
அப்போது டொனால்ட் ஹாரிஸ் அந்தப் பல்கலைகழகத்தில் பொருளாதார பேராசிரியராகப் பணியாற்றி வந்தார். அவர் நடத்தி வந்த “வளர்ச்சியின் பொருளாதாரம்” என்ற படிப்பில் மாணவர்கள் ஆர்வத்துடன் சேர்ந்து வந்ததாகவும் தானும் அதில் இணைந்ததாகவும் கூறுகிறார் வெங்கடேஷ் ஆத்ரேயா.
“அவரது வகுப்பில் நான் உட்பட வெள்ளையர்கள் அல்லாத பலர் இருந்தனர், அந்த வகுப்பு ‘வண்ணமயமாக’ இருக்கும் என்று கூறலாம். டொனால்ட் ஒரு நல்ல விரிவுரையாளர், வாசிப்பதற்கான கட்டுரைகளின் நீண்ட பட்டியலை வழங்குவார், எளிதில் தொடர்பு கொள்ளக்கூடியவராக இருந்தார்” என்று கூறினார்.
மேலும், “டொனால்ட் போராட்டங்களில் ஆர்வமாகவும் வெளிப்படையாகவும் தன்னை ஈடுபடுத்திக் கொள்பவர் அல்ல. கார்ல் மார்க்ஸ்-இன் கோட்பாடுகள் குறித்துப் பல்வேறு ஆய்வுகள் மேற்கொண்டுள்ளார். 1972ஆம் ஆண்டு ஸ்டான்ஃபோர்ட் பல்கலைக் கழகத்துக்குப் பணியாற்றச் சென்று பின்னர் மீண்டும் மேடிசன் திரும்பினார். அப்போது எனது ஆய்வை மதிப்பீடு செய்திருந்தார்,” என்றார்.
அவர் அரசியல் ரீதியாகத் தன்னை வெளிப்படுத்திக் கொண்ட நபர் கிடையாது என்று கூறும் ஆத்ரேயா, “அவர் முற்போக்கானவர், இடதுசாரி சிந்தனைகளைக் கொண்டவர். பொருளாதார அறிஞர்கள் மத்தியில் நன்கு அறியப்பட்டவர். தனது துறையில் சீரிய பணிகளைத் தொடர்ந்து மேற்கொண்டவர்” என்றார்.
ஆத்ரேயா அங்கு படித்துக் கொண்டிருந்த அதே காலக்கட்டத்தில் அதே பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டப்படிப்புக்காக, கமலா ஹாரிஸின் தாய்மாமா பாலச்சந்திரன் சேர்ந்திருந்தார் என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
டொனால்ட் ஹாரிஸ் கமலாவை பற்றிக் கூறுவது என்ன?
கடந்த 2018ஆம் ஆண்டு டொனால்ட் ஹாரிஸ் ஜமைக்கா குளோபல் என்ற உலக ஜமைக்கர்களின் ஆன்லைன் தளத்தில் எழுதிய கட்டுரையில் தனது இரு மகள்கள் – கமலா மற்றும் மாயாவுக்கு அவர்களது குழந்தைப் பருவத்தில் எப்படித் தனது ஜமைக்க வாழ்க்கையைக் கற்றுக் கொடுத்தார் என்று விரிவாகப் பகிர்கிறார்.
தனது மகள்கள், “எனது வாழ்வில் தாக்கம் செலுத்திய இரண்டு பெண்கள் மிஸ் கிரிஷி (தந்தைவழிப் பாட்டி) மிஸ் ஐரிஸ் (தாய்வழிப் பாட்டி) குறித்து நன்கு தெரிந்து கொள்ளவில்லை என்பது மிகப் பெரிய வருத்தம்,” என்று கூறுகிறார்.
அவரது விவாகரத்துக்குப் பிறகு தனது மகள்களை வளர்க்கும் வாய்ப்பை நீதிமன்றம் வழங்கவில்லை என்ற ஆதங்கத்தைத் தெரிவிக்கிறார். அவரது பாட்டி மிஸ் ஐரிஸ் தனது 78வது வயதில் தனது கொள்ளுப் பேத்தி கமலாவை தனது மடியில் வைத்துக் கொண்டு அமர்ந்திருந்ததை புகைப்படம் எடுத்துள்ளார் டொனால்ட் ஹாரிஸ். கமலா எதிர்காலத்தில் சாதிக்கப் போவது குறித்து தீர்க்கமான கணிப்பு தனது பாட்டிக்கு இருந்தது என்றும் அவர் கூறுகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)