இந்த ஆண்டின் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதை வென்றார் மனு பாக்கர்

உலகளாவிய பொது வாக்கெடுப்பை தொடர்ந்து, இந்த ஆண்டுக்கான பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருதுக்கு (ISWOTY) ஒலிம்பிக் வீராங்கனை மனு பாக்கர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியில் நடைபெற்ற விழாவில் பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவியும், இந்திய குத்துச்சண்டை வீராங்கனையான மேரி கோமும் இணைந்து மனு பாக்கருக்கு இந்த விருதை வழங்கினர்.

2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் இரண்டு பதக்கங்களை வென்றதன் மூலம், ஒரே ஒலிம்பிக்கில் 2 பதக்கங்களை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனையை அவர் படைத்தார். மனு பாக்கர் முன்னதாக பிபிசியின் சிறந்த வளரும் வீராங்கனையாக 2021-ல் தேர்வு செய்யப்பட்டிருந்தார்.

விருது பெற்றுக் கொண்ட பிறகு பேசிய மனு பாக்கர், "இந்த விருதை வழங்கியதற்காக பிபிசிக்கு நன்றி. எனது விளையாட்டு வாழ்க்கை ஏற்றத்தாழ்வுகள் நிறைந்த ஒரு பயணம். நான் பல போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளேன். தற்போது உங்கள் முன்பு இங்கு நிற்பது எனக்கு பெருமையாக உள்ளது" என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "இந்த விருது பெண்களுக்கு மட்டுமின்றி சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் ஊக்கமாக இருக்கும். 30 ஆண்டுகளுக்கு முன்பு, சமூகத்தில் பெண்களின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. ஆனால் பெண்கள் அதற்காக போராடினர். இன்னும் நாம் இந்த பயணத்தில் நீண்ட தூரம் செல்ல வேண்டி இருக்கிறது" என்று கூறினார்.

"நமது நாட்டில் முன்னோடியாக இருக்கும் பெண்களின் தியாகங்களும் கடின உழைப்பும் தற்போது உள்ள பெண்களுக்கு விஷயங்களை எளிதாக்கியுள்ளன. எந்த துறையாக இருந்தாலும் வரும் தலைமுறையினருக்கு அது இன்னும் எளிதாக இருக்கும் என்று நான் நம்புகிறேன்", என்றார் மனு பாக்கர்.

அவ்னி லேகரா - பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது

பாரா துப்பாக்கிச் சுடுதலில் படைத்த வரலாற்று சாதனைக்காக அவ்னி லேகராவிற்கு இந்த ஆண்டுக்கான பிபிசி பாராவிளையாட்டு வீராங்கனை விருது வழங்கப்பட்டது.

உச்ச நீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், காங்கிரஸ் மூத்த தலைவர் சச்சின் பைலட், நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திகேய சர்மா ஆகியோரிடம் இருந்து மெய்நிகர் வழியாக அவர் இந்த விருதினை பெற்றுக் கொண்டார்.

2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் தங்கம், வெண்கலம் மற்றும் 2024 பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் என பாராலிம்பிக்கில் மூன்று பதக்கங்கள் வென்ற முதல் இந்திய வீராங்கனை இவர்தான்.

விருது பெற்ற பிறகு காணொளி வாயிலாக பேசிய அவர், "டோக்கியோவில் நான் பதக்கம் வென்ற போது, ​​அடுத்து என்ன செய்ய விரும்புகிறீர்கள் என்று மக்கள் என்னிடம் கேட்டனர். அப்போது, 2024-ஆம் ஆண்டும் என் கையில் ஓரிரு பதக்கங்களும் சட்டம் பயின்றதற்கான பட்டமும் இருக்கும் என்று நான் கூறினேன். கடந்த ஆண்டில் அந்த இரண்டையும் சாதித்துவிட்டதால் நான் சட்டப் படிப்பை மேலும் தொடரவும், அதில் முதுநிலைப் பட்டம் பெறவும் போகிறேன் என்று நினைக்கிறேன்," என்றார்.

அவ்னி லேகராவுக்கு விருதை வழங்கிய இந்திய உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், வழக்கறிஞராகவும், வருங்காலத்தில் நீதிபதியாகவும் வெற்றி பெற அவ்னியை வாழ்த்துவதாக தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய சந்திசூட், "இந்தத விருதுகள் மூலம் இளம் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் மன உறுதியையும் விடாமுயற்சியையும் அங்கீகரிக்கும் பிபிசிக்கு எனது பாராட்டுகள். தியேட்டர், தொழில்நுட்பம், விண்வெளி ஆராய்ச்சி, போர் விமானங்களை ஓட்டுதல், கடற்படை போன்ற பல்வேறு துறைகளில் பெண்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இது பெண்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வளர்ந்து வரும் இந்தியாவின் ஒரு அடையாளம் என்று கருதுகிறேன். விளையாட்டு வீரர்களுக்கு அங்கீகாரம் அளிப்பது என்பது நான் சிறுவயதில் இருந்து கேள்விப்படாத ஒன்றாகும். நான் 2 பெண் குழந்தைகளை தத்தெடுத்துள்ளேன். அவர்கள் இருவரும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் செஸ் சாம்பியன்கள் ஆவர். இந்த விருதுகளை நான் பார்க்கும் போது, என் மகள்களுக்கும் மற்ற பெண்களுக்கும் இந்தியாவில் நம்பிக்கை இருக்கிறது என்பதை எனக்கு உணர்த்துகிறது", என்றார்.

ஷீத்தல் தேவி - பிபிசியின் சிறந்த வளரும் விளையாட்டு வீராங்கனை

பிபிசியின் சிறந்த வளரும் விளையாட்டு வீராங்கனைக்கான விருது, மிக இளம் வயதில் பாராலிம்பிக் பதக்கம் பெற்ற இந்திய வீராங்கனை என்ற புதிய மைல்கல்லை எட்டிய 18 வயதான ஷீத்தல் தேவிக்கு வழங்கப்பட்டது.

இந்த விருதைப் பெற்றுக்கொண்ட பின்னர் அவர், "இந்த அங்கீகாரத்தை எனக்கு வழங்கியதற்கு மிக்க நன்றி, இந்த மேடையில் இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது", என்று கூறினார்

மூன்றே ஆண்டுகளில், 2024 பாரிஸ் பாராலிம்பிக்கில் வெண்கலப் பதக்கம், 2022 ஆசிய பாராலிம்பிக் போட்டிகளில் இரண்டு தங்கம் மற்றும் ஒரு வெள்ளிப் பதக்கம் மற்றும் உலக பாரா வில்வித்தை சாம்பியன்ஷிப்பில் ஒரு வெள்ளிப் பதக்கத்தை அவர் வென்றுள்ளார்.

மிதாலி ராஜ் - பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருது

2004 முதல் 2022 வரை 18 ஆண்டு காலம் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வழிநடத்திய மிதாலி ராஜ், பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருதைப் பெற்றுள்ளார்.

"பிபிசி வாழ்நாள் சாதனையாளர் விருதை எனக்கு வழங்கியதற்காக பிபிசி மற்றும் நடுவர் குழுவுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பல பெண்கள் இந்த விளையாட்டை தேர்ந்தெடுத்து விளையாட இந்த விருது ஊக்கமளிக்கும் என்று கருதுகிறேன்", என்று விருதைப் பெற்ற பிறகு மிதாலி ராஜ் காணொளி வாயிலாக தெரிவித்தார்.

பிபிசி சேஞ்ச்மேக்கர் ஆஃப் தி இயர் 2024

  • செஸ் வீராங்கனை தானியா சச்தேவ் மற்றும் கோ கோ விளையாட்டில் இந்தியாவை வழிநடத்திய நஸ்ரின் ஷேக் ஆகியோருக்கு பிபிசி சேஞ்ச்மேக்கர் ஆஃப் தி இயர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.

பிபிசி நட்சத்திர வீரர் 2024

  • தமிழ்நாட்டை சேர்ந்த இறகுப்பந்து வீராங்கனை துளசிமதி முருகேசன் மற்றும் ஓட்டப்பந்தய வீராங்கனை பிரீத்தி பால் ஆகியோருக்கு பிபிசி நட்சத்திர வீரர் 2024 விருது வழங்கப்பட்டுள்ளது.

விருது பெற்றுக் கொண்ட பிறகு பிபிசி தமிழிடம் பேசிய துளசிமதி முருகேசன்,"தமிழ்நாட்டில் இருந்து வந்து பிபிசியின் நட்சத்திர வீராங்கனை விருதைப் பெற்றதில் எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்தியாவில் பெண் விளையாட்டு வீராங்களின் சாதனைகளை அங்கீகரித்து அவர்களை கௌரவிக்க வேண்டும் என்பதற்காக பிபிசி ஐந்தாவது முறையாக இந்த விருதை வழங்குவது அனைவருக்கும் ஒரு ஊக்கமாக இருக்கும். குறிப்பாக பாராலிம்பிக் விளையாட்டு வீராங்கனைகளுக்கும் உரிய அங்கீகாரம் அளித்துள்ளனர். என்னைப் போன்ற மாற்றுத் திறன் கொண்ட வீராங்கனைகளும் துணிச்சலாக வெளியே வந்து சாதிக்க வேண்டும்." என்று கூறினார்.

விழாவில் பங்கேற்றது குறித்து மேரி கோம் பெருமிதம்

விழாவில் பேசிய இந்திய குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், "பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை விருது வழங்கும் விழாவின் ஒரு பகுதியாக இருப்பது பெருமைக்குரிய விஷயம். இந்த தளம் சிறப்பானது, பாராட்டப்பட வேண்டிய ஒன்று. வெற்றியாளர்களுக்கு எனது வாழ்த்துகள்" என்று கூறினார்.

"கடந்த சில ஆண்டுகளில், பெண்கள் விளையாட்டுகளில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டுள்ளனர், ஒரு பெண்ணாக, இதுகுறித்து நான் மிகவும் பெருமைப்படுகிறேன். எனது பயணத்தைப் பற்றிப் பேசினால், நான் 20 ஆண்டுகளாக குத்துச்சண்டை விளையாடினேன். ஒரு பெண்ணாகவும் தாயாகவும் 20 ஆண்டுகளாகப் போராடுவது எளிதல்ல. நாங்கள் நிறைய சவால்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. என் வாழ்க்கையில் பல சவால்கள் இருந்தன." என்று மேரிகோம் தெரிவித்தார்.

பிபிசி டைரக்டர் ஜெனரல் டிம் டேவி பேச்சு

டெல்லியில் விருது வழங்கும் நிகழ்ச்சியில் பேசிய பிபிசியின் டைரக்டர் ஜெனரல் டிம் டேவி, "மனு பாக்கரின் வரலாற்றுச் சிறப்பு மிக்க ஒலிம்பிக் சாதனை இந்திய விளையாட்டில் தீர்க்கமான தருணம். திறமை வாய்ந்த இளம் துப்பாக்கிச் சுடுதல் வீராங்கனை என்பதிலிருந்து சாதனை படைத்த ஒலிம்பிக் வீராங்கனை வரையிலான அவரது பயணம் நாடு முழுவதும் உள்ள விளையாட்டு வீரர்களை மட்டுமல்லாது அதற்கு அப்பால் உள்ளவர்களையும் ஊக்குவிக்கிறது.

அவ்னி லேகராவை ஆண்டின் சிறந்த பாரா-விளையாட்டு வீராங்கனையாக கொண்டாடுவதில் நாங்கள் பெருமை கொள்கிறோம். அவரது நெஞ்சுரமும், சாதனைகளை தகர்த்த வெற்றியும், மேலும் அதிகம் பேரை உள்ளடக்கி, பாரா விளையாட்டுகளில் மேன்மையை அடைவதற்கான பாதையை வகுக்கிறது." என்றார்.

மேலும் தொடர்ந்த அவர், "இந்தியாவில் உள்ள பார்வையாளர்களுக்கான பிபிசியின் அர்ப்பணிப்பு, நமது உறவை தனிச் சிறப்புடையதாக்குகிறது. அற்புத ஆற்றல் பெற்ற இந்தியா விளையாட்டு வீராங்கனைகளின் சாதனைகளை கொண்டாடுவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். என்று குறிப்பிட்டார்.

கலெக்டிங் நியூஸ்ரூம் சி.இ.ஓ. ரூபா ஜா பேச்சு

பிபிசியின் ஐந்தாவது சிறந்த இந்திய விளையாட்டு வீராங்கனைக்கான விருது (ISWOTY) வழங்கும் நிகழ்ச்சியை தி கலெக்டிவ் நியூஸ்ரூம் நடத்தியது.

கலெக்டிங் நியூஸ்ரூமின் தலைமை செயல் அதிகாரி ரூபா ஜா, "இந்திய விளையாட்டுத் துறையில் இருக்கும் பெண்கள் மீது இந்த விருதின் தாக்கத்தை பார்த்து நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். இந்த விருது அவர்களின் சாதனைகளை எடுத்துக்காட்டி, தடைகளை தகர்த்து, எதிர்கால தலைமுறைகளுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது. இந்த விருதுகள் அங்கீகாரம் அளிப்பதற்கானது மட்டுமல்ல, மாறாக இந்திய விளையாட்டுத்துறை மற்றும் அதைத் தாண்டியும் நீடித்து நிலைக்கும் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும். "என்று கூறினார்.

இந்திய குடியரசுத் தலைவர் வாழ்த்து

இந்திய குடியரசு தலைவர் திரௌபதி முர்மு இந்நிகழ்வையொட்டி வெளியிட்ட வாழ்த்து செய்தியில், "2020 முதல் ஒவ்வொரு ஆண்டும் பிபிசி இந்திய விளையாட்டு வீராங்கனை என்ற விருதை வழங்குகிறது. இதன் மூலம் விளையாட்டுகளில் பெண்களின் சாதனைகளை முன்னிலைப்படுத்த பிபிசி தனது அர்ப்பணிப்பைக் காட்டியுள்ளது என்பதை அறிந்து மகிழ்ச்சி அடைகிறேன்." என தெரிவித்துள்ளார்.

மேலும், "இந்த முயற்சியின் மூலம் அங்கீகரிக்கப்படும் அசாதாரண விளையாட்டு வீரர்கள், தங்கள் விளையாட்டுகளில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், இளம் பெண்கள் தங்கள் கனவுகளை அச்சமின்றித் தொடரவும் ஊக்கமளித்துள்ளனர்." என கூறியுள்ளார்.

மதிப்புமிக்க இவ்விருது, 2024 ஆம் ஆண்டில் இந்திய விளையாட்டு வீராங்கனைகளின் பங்களிப்புகளை கௌரவிப்பதுடன், விளையாட்டில் ஈடுபட்டுள்ள அனைத்து பெண்களின் சாதனைகளையும் கொண்டாடுகிறது.

இந்த ஆண்டுக்கான விருதின் கருப்பொருள் 'சாம்பியன்களின் சாம்பியன்கள்' என்பதாகும்.

இது பதக்கம் வென்ற விளையாட்டு வீரர்களை ஆதரித்து வழிநடத்திய ஆளுமைகளை முன்னிலைப்படுத்துகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)