வங்கதேசத்தில் ஷேக் முஜிபுர் சிலை போல உலகில் சேதப்படுத்தப்பட்ட உருவச்சிலைகள் எவை?- இந்தியாவில் யார் சிலை அகற்றப்பட்டது?

    • எழுதியவர், ரெஹான் ஃபசல்
    • பதவி, பிபிசி ஹிந்தி

சமீபத்தில் வங்கதேச நிறுவனர் ஷேக் முஜிபுர் ரஹ்மானின் உருவச்சிலை சேதப்படுத்தப்பட்டு, காலணிகளால் ஆன மாலை அணிவிக்கப்பட்ட புகைப்படங்களை முழு உலகமும் பார்த்தது.

யாருடைய தலைமையில் வங்கதேசம் சுதந்திரத்திற்காகப் போராடியதோ அதே ஷேக் முஜிப்பின் உருவச்சிலைதான் அது.

முஜிப்பின் சிலை இந்த முறையில் அழிக்கப்பட்டது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. ஏனெனில் ஷேக் முஜிப் அந்த நாட்டின் தேசத் தந்தையாக கருதப்படுகிறார்.

ஆனால் ஒருகாலத்தில் தாங்கள் தலையில் வைத்துக்கொண்டாடிய தலைவர்களின் சிலைகளை மக்கள் குறிவைத்து சேதப்படுத்துவது இது முதல் முறையல்ல.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாக்தாத்தில் வீழ்த்தப்பட்ட சதாம் ஹுசைன் சிலை

2003 ஆம் ஆண்டு அமெரிக்க பீரங்கிகள் பாக்தாத்தில் நுழைந்து சதாம் ஹுசைனின் அரசை ஆட்சியிலிருந்து அகற்றியபோது நாலாபுறமும் மகிழ்ச்சி சூழல் காணப்பட்டது.

ஃபிர்தோஸ் சதுக்கத்தில் இருந்த சதாம் ஹுசைனின் பெரிய சிலையை இராக்கியர்கள் தகர்க்க முயன்றனர்.

ஆனால் அவர்களால் அதைசெய்யமுடியாமல் போனபோது அங்கு வந்த அமெரிக்க வீரர்கள் அவர்களுக்கு உதவினர்.

12 மீட்டர் உயரமான சதாமின் சிலை ஏப்ரல் 2002 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது. அமெரிக்க வீரர்கள் சதாமின் சிலையின் கழுத்தில் இரும்புச் சங்கிலியைக் கட்டி எம்88 பீரங்கி உதவியுடன் இழுத்தனர்.

சிலை விழுந்தவுடன் இராக்கிய மக்கள் அதன் துண்டுகளை சேகரித்து காலணிகளால் அடித்துக்கொண்டே பாக்தாத்தின் தெருக்களில் ஊர்வலமாகச்சென்றனர். இந்தக்காட்சி உலகின் எல்லா தொலைக்காட்சி சேனல்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. சதாம் ஹுசைனின் அதிகாரம் முடிவுக்கு வந்ததன் அடையாளமாக இது பார்க்கப்பட்டது.

1956 ஆம் ஆண்டில் ஹங்கேரியில் நடந்த புரட்சியுடன் இது ஒப்பிடப்பட்டது. அப்போது ஸ்டாலினின் சிலை அங்கே தகர்க்கப்பட்டது.

உடைக்கப்பட்ட கடாஃபி சிலையின் தலை

இதேபோல் 2011 ஆம் ஆண்டு லிபிய சர்வாதிகாரி கடாஃபிக்கு எதிரான கிளர்ச்சியின் போது, திரிபோலியில் உள்ள பாப் அல் அஜிசியா வளாகத்திற்குள் நுழைந்த மக்கள் கடாஃபியின் சிலையின் தலையை உடைத்து காலால் மிதித்தனர்.

ஆகஸ்ட் 23 ஆம் தேதி வளாகத்தின் காவலர்கள் கிளர்ச்சியாளர்களிடம் சரணடைந்தனர்.

கடாஃபி கொல்லப்பட்ட பிறகு இந்த வளாகம் ஒரு வகையான சுற்றுலா தலமாக மாறியது. ஆயிரக்கணக்கான மக்கள் இதைக் காண வரத் தொடங்கினர்.

2014 ஆம் ஆண்டு செப்டம்பர் 28 ஆம் தேதி அன்று யுக்ரேனின் கார்கிவ் நகரில் சுமார் ஐயாயிரம் போராட்டக்காரர்கள் ரஷ்ய புரட்சித் தலைவர் விளாதிமிர் லெனினின் சிலையை சுத்தியலால் உடைத்து சேதப்படுத்தினர்.

இந்த முழு செயல்முறைக்கும் நான்கு மணி நேரம் ஆனது. சிலை உடைக்கப்பட்ட பிறகு மக்கள் அதன் துண்டுகளை நினைவுச்சின்னமாக சேகரிக்கத் தொடங்கினர்.

அங்கு மக்கள் யுக்ரேன் நாட்டின் கொடியை ஏற்றினார்கள். இதை தொடர்ந்து நாடு முழுவதும் லெனின் சிலைகளை இடிக்கும் பணி தொடங்கியது.

கேஜிபி நிறுவனர் ஜெர்ரன்ஸ்கி சிலை அகற்றப்பட்டது

இதேபோல் 1991 ஆம் ஆண்டில் ரஷ்யாவில் அதிபர் கோர்பச்சேவை அகற்றும் முயற்சி தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, சோவியத் யூனியனின் முதல் ரகசிய காவல்துறையான ’செக்கா’ வை நிறுவிய பெலிக்ஸ் ஜெர்ரன்ஸ்கியின் சிலை மாஸ்கோவின் லுபியாங்கா சதுக்கத்தில் இருந்து அகற்றப்பட்டது.

கேஜிபியின் (ரஷ்ய பாதுகாப்பு முகமை) பழைய பெயர் 'செக்கா'. ஆயிரக்கணக்கான மக்களை கடத்தியதாகவும், சித்திரவதை செய்து கொன்றதாகவும் அந்த அமைப்பு மீது குற்றம் சாட்டப்பட்டது.

1991 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 22 ஆம் தேதி மாலை லுபியங்கா சதுக்கத்தில் உள்ள கேஜிபி கட்டிடத்தின் முன் ஆயிரக்கணக்கான மக்கள் கூடினர்.

ஜெர்ரன்ஸ்கியின் சிலையின் மீது ‘கொலையாளி’ என்ற வார்த்தையை அவர்கள் எழுதினார்கள். சிலையின் மீது ஏறி அதை கயிற்றால் கட்டினர். லாரியில் கட்டி சிலையை விழ வைப்பதே அவர்களின் எண்ணமாக இருந்தது.

ஆனால் இது லுபியங்கா மெட்ரோ நிலையத்திற்கு அருகிலுள்ள கட்டிடத்திற்கு அச்சுறுத்தலாக இருந்தது.

பின்னர் கூட்டத்தில் உரையாற்றிய மாஸ்கோ நகர சபையின் துணைத் தலைவர் செர்ஜி ஸ்டான்கேவிச், சிலையை அகற்றுவதற்கு தாமே பொறுப்பேற்பதாகக் கூறினார்.

இதையடுத்து இந்த சிலை கிரேன் உதவியுடன் அகற்றப்பட்டு, ‘ஃபாலன் மான்யுமென்ட் பார்க்’கில் வைக்கப்பட்டது.

சிலையை உருக்கி தயாரிக்கப்பட்ட தோட்டாக்கள்

அமெரிக்க சுதந்திரப் போரின் போது, பிரிட்டனின் மன்னர் மூன்றாம் ஜார்ஜின் இரும்புச்சிலையும் நியூயார்க்கில் இடிக்கப்பட்டது.

சுதந்திரத்திற்காகப் போராடிய அமெரிக்கர்கள் அதை பிரிட்டிஷ் அடக்குமுறையின் அடையாளமாகக் கருதினர்.

பின்னர் இந்த சிலை உருக்கப்பட்டு 42,000 தோட்டாக்கள் தயாரிக்கப்பட்டு அவை பிரிட்டிஷ் வீரர்களுக்கு எதிராக பயன்படுத்தப்பட்டன.

அந்த சிலையின் சில பகுதிகளை காப்பாற்ற பிரிட்டனுக்கு விசுவாசமான சிலர் அவற்றை நிலத்தடியில் புதைத்தனர். அந்த சிலையின் சில எச்சங்கள் இன்றும் கூட அகழ்வாராய்ச்சியின் போது வெளிவருகின்றன.

முசோலினியின் சிலைகளும் மோசமான விதியை சந்தித்தன

இத்தாலிய சர்வாதிகாரி முசோலினி 1945 ஆம் ஆண்டு வீழ்ந்தபோது, அவரும் அவரது ஆதரவாளர்கள் சிலரும் அவரது காதலி கிளாரா பிட்டாச்சியும் சுடப்பட்டனர்.

அவர்களது உடல்கள் வேனில் மிலன் நகருக்கு கொண்டு செல்லப்பட்டன. அங்குள்ள கம்பத்தில் உடல்கள் தலைகீழாக தொங்கவிடப்பட்டன.

இதற்குப் பிறகு பல மாதங்கள், முசோலினி மற்றும் சர்வாதிகாரத்தை குறிக்கும் நினைவுச்சின்னங்கள், கட்டிடங்கள் மற்றும் சிலைகள் தொடர்ந்து இடிக்கப்பட்டன.

இந்தியா கேட்டில் இருந்து அகற்றப்பட்ட மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலை

1947 ஆம் ஆண்டு இந்தியா சுதந்திரம் அடைந்தபோது, டெல்லியில் பல இடங்களில் ஆங்கிலேயர் ஆட்சியுடன் தொடர்புடையவர்களின் சிலைகள் இருந்தன.

அவற்றில் சில சிலைகள் பிரிட்டனுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. மேலும் சில வடக்கு டெல்லியில் உள்ள கொரோனேஷன் பூங்காவிற்கு மாற்றப்பட்டன.

அகற்றப்பட்ட சிலைகளில் முக்கியமானது இந்தியா கேட்டில் இருந்த 70 அடி உயரமுள்ள மன்னர் ஐந்தாம் ஜார்ஜின் சிலை. 1968 ஆம் ஆண்டு வரை அந்த சிலை அதன் முந்தைய இடத்தில் இருந்தது. ஆனால் இந்த சிலை டெல்லியில் ஒரு முக்கிய இடத்தில் இருப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்று பின்னர் கருதப்பட்டது.

அந்த சிலை அழிக்கப்படவில்லை. 1911 ஆம் ஆண்டு டெல்லி தர்பாரில் அவர் கலந்து கொண்ட இடத்தில் அந்த சிலை நிறுவப்பட்டது.

இந்தியா கேட் அருகே ஐந்தாம் ஜார்ஜ் சிலை இருந்த இடத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின் சிலை 2022 ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.

ஹெய்ட்டியின் சர்வாதிகாரி சிலை சேதப்படுத்தப்பட்டது

ஹெய்ட்டியின் சர்வாதிகாரி ஃபிரான்ஸுவா டுவாலியர் 1971 ஆம் ஆண்டு இறந்தபோது அவருக்கு கருப்பு கோட் அணிவிக்கப்பட்டு கண்ணாடி கதவுடன் கூடிய சவப்பெட்டியில் அடக்கம் செய்யப்பட்டார்.

அவரது உடல் முதலில் தேசிய கல்லறையில் அடக்கம் செய்யப்பட்டு பின்னர் அவரது மகனால் கட்டப்பட்ட அருங்காட்சியகத்திற்கு மாற்றப்பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது.

இறப்பதற்கு முன் அவர் தனது 19 வயது மகன் ஜிட்யான்-கிளவுட் டுவாலியரை தனது வாரிசாக அறிவித்தார். 1986 ஆம் ஆண்டில் அவரது மகன் பதவியில் இருந்து நீக்கப்பட்டபோது, டுவாலியரின் சிலை மற்றும் கல்லறை கும்பலால் அழிக்கப்பட்டது.

அவரது கல்லறை தோண்டப்பட்டபோது டுவாலியாரின் சவப்பெட்டியை அங்கு காணவில்லை. நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்பு அவரது மகன் தனது தந்தையின் சவப்பெட்டியை வெளியே எடுத்து வேறொரு இடத்தில் வைக்க ஏற்பாடு செய்தார் என்று நியூயோர்க் டைம்ஸ் நாளேட்டில் செய்தி வெளியானது.

எத்தியோப்பியாவின் தலைநகரான அடிஸ் அபாபா நகராட்சி வாகன நிறுத்துமிடத்தில் ரஷ்ய தலைவர் லெனினின் சிலை வைக்கப்பட்டுள்ளது. அதைச் சுற்றிலும் எண்ணற்ற சிலந்தி வலைகள் காணப்படுகின்றன. காலி பெட்ரோல் பீப்பாய்களும் அங்கு வைக்கப்பட்டுள்ளன.

மிகச்சிலரே அந்தச் சிலையை பார்க்க வருகின்றனர். அப்படி வருபவர்கள் கூட’லெனினை எழுப்ப வேண்டாம்’ என்று அங்கிருக்கும் ஊழியர்களால் எச்சரிக்கப்படுகிறார்கள்.

லெனின் சிலை பெரியது மட்டுமல்ல கனமானதும் கூட. அதை வீழ்த்துவது மிகவும் கடினமான பணியாக இருந்தது. சிலையை அந்த இடத்தில் இருந்து அகற்ற மெஷின்கள் பயன்படுத்தப்பட்டன.

1989 ஆம் ஆண்டு நவம்பரில் பெர்லின் சுவர் இடிக்கப்பட்ட பிறகு உலகின் பல்வேறு பகுதிகளில் லெனின் சிலைகள் தகர்க்கப்பட்டன.

இதேபோல் அல்பேனியாவில் 40 ஆண்டுகள் நாட்டை ஆண்ட என்வர் ஹோக்ஸ்ஹாவின் சிலைகளும் தரைமட்டமாக்கப்பட்டன.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)