சனி கிரகத்தை போலவே பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்தனவா? புதிய கண்டுபிடிப்பு

பூமிக்கு வளையங்கள் இருந்தனவா?

பட மூலாதாரம், Getty Images

சனி கிரகத்தைச் சுற்றி அமைந்துள்ள வளையங்களைப் போலவே, பூமிக்கும் ஒரு காலத்தில் வளையங்கள் இருந்திருக்கலாம் என்பதற்கான சான்றுகளை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

45 கோடி ஆண்டுகளுக்கு முன்

வல்லுநர்களின் கருத்துப்படி, சுமார் 45 கோடி ஆண்டுகளுக்கு முன்பு ஒரு பெரிய குறுங்கோள் (ஆஸ்டிராய்டு) பூமியுடன் கிட்டத்தட்ட மோதியுள்ளது. அதன் விளைவாக ஏற்பட்ட கழிவுகளைக் கொண்டதொரு வளையம் பூமியை சுற்றி உருவாகியுள்ளது. இவ்வாறு உருவான வளையங்கள் 'டெப்ரிஸ் ரிங்' எனப்படும். இவை, பூமியின் காலநிலையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

விஞ்ஞானிகளின் கண்டுபிடிப்பு என்ன?

46 கோடி ஆண்டுகளுக்கு முன்பு, "ஆர்டோவிஷியன் இம்பாக்ட் ஸ்பைக்" என்று அழைக்கப்படும் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அசாதாரணமான அளவில் விண்கற்கள் பூமியைத் தாக்கத் தொடங்கின.

இதனை ஆய்வு செய்துள்ள, ஆஸ்திரேலியாவின் மோனாஷ் பல்கலைக் கழகத்தின் ஆராய்ச்சியாளர்கள், பூமியில் இருக்கும் 21 பெரிய குறுங்கோள் தாக்கக் குழிகளை (இம்பாக்ட் கிரேட்டர்ஸ்) தங்கள் ஆய்வுக்கு உட்படுத்தினார்கள். இந்தக் குழிகள் அனைத்தும் உருவான சமயத்தில் அவை, பூமத்திய ரேகைக்கு அருகில் (30 டிகிரிக்குள்) இருந்ததை அவர்கள் கண்டறிந்தனர். இதுபோன்ற குழிகள் உலகின் வெவ்வேறு இடங்களில் ஏற்படவில்லை.

இதற்கு காரணம், பூமியை சுற்றி அமைந்திருந்த வளைய அமைப்புதான் என்று விளக்க முடிகிறது. ஒரு பெரிய குறுங்கோள் பூமியை நெருங்கி வந்ததால் உடைந்து சிதறியுள்ளது. அது பூமியை சுற்றி கழிவுகளாலான வளையத்தை உருவாக்கியிருக்கலாம். அந்த வளையம் இப்போது நாம் சனிக்கோளை சுற்றி இருக்கின்ற வளையங்களைப் போன்றதாக இருந்திருக்கலாம்.

இந்த ஆய்வை மேற்கொண்ட குழுவின் தலைவர் பேராசிரியர் ஆண்டி டாம்கின்ஸ் கூறுகையில், "இந்த வளையத்தில் இடம்பெற்றிருந்த பொருட்கள் பலவும் பூமியில் விழுவதற்கு பல லட்சம் ஆண்டுகளை எடுத்துக் கொண்டுள்ளன. அவையே இப்போது புவியியல் பதிவுகளில் காணப்படும் விண்கல் தாக்கங்களின் அதிகரிப்புக்கு வழிவகுத்திருக்கலாம்" என்றார்.

"இந்த காலத்திய படிவுப் பாறைகளின் அடுக்குகளில் அசாதாரண அளவு விண்கல் கலவைகள் இருப்பதையும் நாங்கள் கவனித்துள்ளோம்" என்றும் அவர் தெரிவித்தார்.

பூமிக்கு வளையங்கள் இருந்தனவா?

பட மூலாதாரம், OLIVER HULL

காலநிலை மாற்றத்தில் வளையங்களின் பங்கு

மேற்சொன்ன காலகட்டத்தில் பூமி குளிர்ச்சியடையும் போக்கு வேகமானதற்கும் இந்த வளையங்களே காரணமாக இருக்கலாம். அதாவது, அந்த வளையங்கள் பூமியின் மீது உருவாக்கிய நிழல், சூரிய ஒளியைத் தடுத்திருக்கலாம் என்றும் அவர்கள் அனுமானிக்கின்றனர்.

பேராசிரியர் டாம்கின்ஸ் மேலும் கூறுகையில், "இந்த கண்டுபிடிப்பை மிகவும் முக்கியமானதாக மாற்றுவது, அந்த வளையங்களால் பூமியின் காலநிலையில் ஏற்பட்ட தாக்கங்களை பற்றிய அம்சங்களே" என்றார்.

இவ்வாறு பூமியில் உருவான குளிர் காலம், "ஹிர்னான்ஷியன் ஐஸ் ஹவுஸ்" என்று அழைக்கப்படுகிறது. இது கடந்த 50 கோடி ஆண்டுகளில் பூமியின் மிகக் குளிரான காலங்களில் ஒன்றாகும்.

இப்போது கிடைத்திருக்கும் ஆய்வு தகவல்களின் மூலம், பூமியின் வரலாற்றில் ஒரு புதிய அத்தியாயம் வெளிப்பட்டுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு