அதிமுக - பாஜக: வேகமெடுக்கும் கூட்டணி கணக்குகள் - எடப்பாடி பழனிசாமியின் திட்டம் என்ன?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் சந்தித்ததைத் தொடர்ந்து அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையில் கூட்டணி ஏற்படும் என்ற பேச்சுகள் வலுவாகியுள்ளன.
ஆனால், கூட்டணி தொடர்பாக எந்தப் பேச்சுவார்த்தையையும் நடக்கவில்லை என்று எடப்பாடி கே. பழனிசாமி மறுப்பு தெரிவித்துள்ளார்.
மத்திய உள்துறை அமைச்சரும் பா.ஜ.கவின் மூத்த தலைவருமான அமித் ஷாவை அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரும் தமிழ்நாடு சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி செவ்வாய்க்கிழமை (மார்ச் 25) அன்று இரவில் சந்தித்துப் பேசினார்.
இதையடுத்து, 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு இரு கட்சிகளும் கூட்டணி அமைக்கப் போகின்றன என்ற பேச்சுகளும் விவாதங்களும் ஊடகங்களில் வெளிவந்தன.
இந்தச் சந்திப்பு முடிந்த பிறகு, அமித் ஷா வெளியிட்ட எக்ஸ் பதிவுதான், இந்த யூகங்களை மேலும் வலுப்படுத்தியது. அந்தப் பதிவில், "2026ஆம் ஆண்டில் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பிறகு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்" என தமிழிலும் ஹிந்தியிலும் குறிப்பிட்டிருந்தார் அமித் ஷா.

பட மூலாதாரம், SCREEN GRAB
எடப்பாடி பழனிசாமி பேசியது என்ன?
புதன்கிழமையன்று (மார்ச் 26) காலையில் சட்டமன்றத்திற்கு வந்த அ.தி.மு.க. தலைவர்களிடம் இந்தச் சந்திப்பு குறித்துக் கேட்டபோது, அவர்களும் இதுகுறித்து எதையும் தெரிவிக்க மறுத்துவிட்டனர்.
இருந்தாலும், 'அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையில் கூட்டணி கிட்டத்தட்ட அமைந்துவிட்டது' என்ற பேச்சுகள் அடிபட ஆரம்பித்திருக்கின்றன.
ஆனால், உள்துறை அமைச்சருடனான சந்திப்பின்போது கூட்டணி தொடர்பாக எதையும் பேசவில்லையென்றும் தேர்தல் நெருக்கத்தில்தான் இதெல்லாம் முடிவு செய்யப்படும் என்றும் எடப்பாடி கே. பழனிசாமி தெரிவித்துள்ளார்.
விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி கே. பழனிசாமி, "தமிழ்நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகளை உள்துறை அமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சேர்த்துள்ளோம். தமிழ்நாட்டில் செயல்படுத்தப்படும் பல்வேறு திட்டங்களுக்கு நிதி கிடைப்பது தாமதமாகிக் கொண்டிருக்கிறது. அதை விடுவிக்க வேண்டுமெனக் கேட்டிருக்கிறோம்" என்றார்.
அதைத் தொடர்ந்து பேசிய அவர், 100 நாள் வேலைத் திட்டத்திற்கு நிதியை விடுவிக்க வேண்டுமெனக் கேட்டிருப்பதாகவும் மேலும் பல கோரிக்கைகளை வைத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
அதாவது, "கல்வித் திட்டத்திற்கு விடுவிக்க வேண்டிய நிதியை உடனடியாக விடுவிக்க வேண்டும், தமிழ்நாட்டில் இரு மொழிக் கொள்கையைத் தொடர வேண்டும், தமிழகத்திற்கு எவ்வித பாதிப்பும் இன்றி தொகுதி மறுசீரமைப்பைச் செயல்படுத்த வேண்டும், காவிரி - கோதாவரி இணைப்புத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும், 'நடந்தாய் வாழி காவேரி' திட்டத்திற்குத் தேவையான நிதியை விடுவிக்க வேண்டும்" என்று கேட்டிருப்பதாகவும், டாஸ்மாக் முறைகேடு குறித்தும் தமிழக சட்டம் - ஒழுங்கு பிரச்னை குறித்தும், போதைப் பொருள் நடமாட்டம் குறித்தும் கோரிக்கை மனு அளித்திருப்பதாகவும் எடப்பாடி பழனிசாமி தெரிவித்தார்.
கூட்டணி அமைவது குறித்துப் பேசப்பட்டதா?

பட மூலாதாரம், EDAPPADI PALANISAMY/FB
எடப்பாடி பழனிசாமியிடம் அரசியல் ரீதியாக ஏதும் பேசப்பட்டதா எனவும் அ.தி.மு.க. - பா.ஜ.க. இடையே கூட்டணி ஏற்பட்டுவிட்டதாகக் கருதலாமா என்றும் செய்தியாளர்கள் கேட்டபோது, "நீங்கள் செய்திகளில்தான் இதுபோல வெளியிட்டுக் கொண்டிருக்கிறீர்கள். ஆனால் அப்படி எதுவும் கிடையாது. முழுக்க முழுக்க மக்களின் பிரச்னைகளுக்காகத்தான் வந்திருக்கிறோம். தேர்தலுக்கு இன்னும் ஓர் ஆண்டு இருக்கிறது.
'கூட்டணி பேசுகிறார்கள், பதினைந்து நிமிடம் தனியாகப் பேசினார்கள்' என்றெல்லாம் சொல்வது பத்திரிகையில் விறுவிறுப்பாக செய்தி வெளியிடுவதற்காகத்தானே தவிர உண்மையில் அப்படி ஏதும் கிடையாது. மக்களின் பிரச்னையைப் பேசவே சந்தித்தோம்" என்று பதில் அளித்தார்.
மேலும், "ஏற்கெனவே அ.தி.மு.க. அலுவலகத்தை காணொளிக் காட்சி மூலம் திறந்து வைத்திருந்தோம். அதை நேரடியாகப் பார்ப்பதற்காக வந்தேன். அப்படி வரும்போது நேரமிருந்தால் உள்துறை அமைச்சரைச் சந்திக்க வாய்ப்பு கேட்டிருந்தோம். அவர்கள் வாய்ப்புக் கொடுத்தார்கள்.
நாற்பத்தைந்து நிமிடம் பேசினோம். பல்வேறு திட்டங்கள் குறித்துப் பேசினோம். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி அமைப்போம். ஆகவே அதைப் பற்றிக் கேட்காதீர்கள். கூட்டணி என்பது வேறு, கொள்கை என்பது வேறு. கொள்கை நிலையானது, கூட்டணி சந்தர்ப்பத்திற்கு ஏற்றபடி மாறும். உங்களுக்கு விறுவிறுப்பான செய்தி வேண்டும் என்பதற்காக என்னிடம் கேட்காதீர்கள்," என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டார்.
அதிமுக - பாஜக கூட்டணி முறிய அண்ணாமலை காரணமா?

பட மூலாதாரம், Getty Images
ஆனால், அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணியின் பயணம் துவங்கிவிட்டது என்றுதான் பார்க்க வேண்டும் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஷ்யாம்.
"இரண்டு அரசியல்வாதிகள் சந்தித்துக்கொள்ளும்போது மக்கள் பிரச்னையைப் பற்றி மட்டுமே பேசினோம், அரசியல் பேசவில்லை என்று சொன்னால் குழந்தைகூட நம்பாது. நிச்சயமாக கூட்டணி குறித்துப் பேசியிருப்பார்கள்" என்கிறார் ஷ்யாம்.
இதே கருத்தையே எதிரொலிக்கிறார் மூத்த பத்திரிகையாளர் ப்ரியன்.
"அ.தி.மு.கவுக்கும் பா.ஜ.கவுக்கும் கொள்கை ரீதியாகப் பல விஷயங்களில் முரண்பாடுகள் இருக்கின்றன. ஆனாலும், எண்ணிக்கை ரீதியாகப் பார்த்தால் இந்தக் கூட்டணி நன்றாகச் செயல்படும் என்ற முடிவுக்கு இரு தரப்புமே வந்துவிட்டார்கள். கூட்டணி அமைவதாக இருந்தால் இரண்டு விஷயங்கள் தொடர்பாக முடிவெடுக்க வேண்டியிருக்கும்.
முதலாவதாக, கே. அண்ணாமலை பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் பதவியில் தொடர்வதா, இல்லையா என்பது முதல் கேள்வி. இரண்டாவதாக, ஓ. பன்னீர்செல்வம், சசிகலா போன்றவர்களை அ.தி.மு.கவில் இணைப்பதா, இல்லையா என்ற விவகாரத்தில் பா.ஜ.க. தலையிடக்கூடாது என்பது. இந்த இரண்டு விஷயங்களைத்தான் அவர்கள் முதல் கட்டமாகப் பேசியிருக்கக்கூடும்" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ப்ரியன்.
அவர் சொல்வதைப் போல, கூட்டணியை இறுதி செய்வதற்கு முன்பாக, இந்த இரு விவகாரங்கள் குறித்தும் இரு கட்சிகளும் ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
அ.தி.மு.க - பா.ஜ.க. கூட்டணி, 2019 நாடாளுமன்றத் தேர்தல், 2021 சட்டமன்றத் தேர்தல்களை ஒன்றாகச் சந்தித்தது. பின்னர், அ.தி.மு.கவின் மூத்த தலைவர்கள் குறித்த பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையின் கடும் விமர்சனங்களால்தான் இந்தக் கூட்டணி முடிவுக்கு வந்தது.
அதற்குப் பிறகும் பல தருணங்களில் அ.தி.மு.க. மீது விமர்சனங்களை முன்வைக்க அண்ணாமலை தவரவில்லை. மார்ச் மாத துவக்கத்தில்கூட, "பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்ததால்தான் தோற்றோம் என்றார்கள். இப்போது பா.ஜ.கவுடன் கூட்டணி வைக்க தவம் கிடக்கிறார்கள்," என்று குறிப்பிட்டார் அண்ணாமலை.
இது அ.தி.மு.கவை குறித்துப் பேசியதல்ல என பிறகு இரு தரப்புமே மறுத்தாலும், அ.தி.மு.க. - அண்ணாமலை இடையிலான உறவின் தன்மையையே இந்தப் பேச்சுகள் சுட்டிக்காட்டின.
அதேபோல, அ.தி.மு.க.வில் இருந்து வெளியேற்றப்பட்ட வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டி.டி.வி. தினகரன் ஆகியோரை அ.தி.மு.கவிலும் அ.தி.மு.க. கூட்டணியிலும் இணைக்க வேண்டுமென பா.ஜ.க., நீண்ட காலமாகவே அ.தி.மு.க.வை வலியுறுத்தி வருவதாக ஊடகங்களில் தொடர்ந்து பேசப்படுகிறது.
ஆனால், மூவரையும் அ.தி.மு.கவிற்குள் இணைக்கும் திட்டமே கிடையாது என எடப்பாடி கே. பழனிசாமி பலமுறை வெளிப்படையாகத் தெரிவித்துவிட்டார். இந்த நிலையில், மீண்டும் பா.ஜ.க. - அ.தி.மு.க. கூட்டணி அமைந்தால் இவர்களது நிலை என்னவென்ற கேள்வியும் இருக்கிறது.
ஆனால், இந்த இரு விவகாரங்களுக்குமே எளிதில் முடிவு கட்டுவார்கள் என்கிறார் ஷ்யாம். "அதாவது, அ.தி.மு.க. - பா.ஜ.க. கூட்டணி முறிவுக்கு அண்ணாமலை பேசிய பேச்சுகள்தான் காரணம் என நமக்குச் சொல்லப்பட்டதே தவிர, அதுதான் உண்மையான என்பது யாருக்கும் தெரியாது. அதுதவிர, அரசியலில் பழைய பேச்சுகளுக்கு எப்போதும் மதிப்பு கிடையாது.
ஆகவே, அதையெல்லாம் ஒரு பொருட்டாக எடுத்துக்கொள்ள மாட்டார்கள். இரண்டாவதாக, டி.டி.வி, ஓ.பி.எஸ். விவகாரம். இதில், ஓ.பி.எஸ். தனிமைப்படுவார் என்றுதான் தோன்றுகிறது. டி.டி.வி. தினகரனை பொறுத்தவரை, பா.ஜ.கவுக்கு அளிக்கப்படும் இடங்களில் சில இடங்களை அவர்களுக்குக் கொடுக்கலாம்," என்கிறார் அவர்.
ப்ரியனை பொறுத்தவரை, கூட்டணி அமைவதற்கு அண்ணாமலை மாநிலத் தலைவராக இருப்பதுதான் பிரச்னையாக இருக்கிறதென்றால், அவரைக் காவு கொடுக்கவும் அக்கட்சி தயங்காது, ஏற்கெனவே பல மாநிலங்களில் அதைச் செய்திருக்கிறது என்கிறார். "அதற்குப் பதிலாக, அண்ணாமலைக்கு தேசிய அளவில் வேறு ஏதாவது ஒரு பெரிய பதவியைக் கொடுக்கலாம்," என்கிறார்.
அ.தி.மு.க. - பா.ஜ.க. உறவு

பட மூலாதாரம், Facebook/K.Annamalai
கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவும் அ.தி.மு.கவும் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டன. அந்தத் தேர்தலில் கிடைத்த தோல்விக்குப் பிறகு, உடனடியாக பா.ஜ.க. கூட்டணியில் இருந்து ஜெயலலிதா விலகினார். பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்துத் தவறு செய்துவிட்டதாகவும் இனிமேல் அப்படிச் செய்ய மாட்டேன் என்றும் வாக்குறுதி அளித்தார் ஜெயலலிதா.
அதேபோலவே, 2006, 2009, 2011, 2016 ஆகிய தேர்தல்களில் பா.ஜ.கவை தனது கூட்டணியில் அவர் சேர்த்துக்கொள்ளவில்லை. 2016ஆம் ஆண்டின் இறுதியில், ஜெயலலிதா மறைந்தவுடன் இரு கட்சிகளும் மெல்ல, மெல்ல நெருங்க ஆரம்பித்தன.
முடிவில், 2019ஆம் ஆண்டில் நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கியபோது இரு கட்சிகளுக்கும் இடையில் கூட்டணி உருவானது. ஆனால், இந்தத் தேர்தலில் தேனி நாடாளுமன்றத் தொகுதியைத் தவிர, வேறு எந்த இடத்திலும் இந்தக் கூட்டணியால் வெல்ல முடியவில்லை.
இதற்குப் பிறகு 2021 சட்டமன்றத் தேர்தலின்போதும் இதே கூட்டணி தொடர்ந்தது. தேர்தலில் தி.மு.க. கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்த நிலையில், இந்தக் கூட்டணி சுமார் 75 இடங்களை மட்டுமே பெற்றது. இந்தத் தேர்தலில் பா.ஜ.கவுக்கு 20 இடங்கள் ஒதுக்கப்பட்டன. இதில் 4 இடங்களை பா.ஜ.க. கைப்பற்றியது.

இதற்குச் சில மாதங்களுக்குப் பிறகு, 2021ஆம் ஆண்டு ஜூலை மாதம் பா.ஜ.கவின் மாநிலத் தலைவராக அண்ணாமலை நியமிக்கப்பட்டார்.
இதற்கு அடுத்து வந்த உள்ளாட்சித் தேர்தலில் இரு கட்சிகளும் இணைந்து போட்டியிடவில்லை என்றாலும், தேசிய அளவில் இரு கட்சிகளுக்கும் இடையிலான நெருக்கம் தொடரவே செய்தது. மாநிலங்களவையில் பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை இல்லாத நிலையில், நான்கு இடங்களை வைத்திருக்கும் அ.தி.மு.க. அனைத்து மசோதாக்களை நிறைவேற்றுவதிலும் ஆதரவளித்து வந்தது.
ஆனால், சில மாதங்களுக்குப் பிறகு மெல்ல மெல்ல உரசல்கள் உருவாயின. 2023ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில், நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டியளித்த அண்ணாமலை, ஜெயலலிதா ஊழல் வழக்கில் சிறை சென்றவர் என்று குறிப்பிட்டார். இதற்கு அ.தி.மு.க. கடுமையான எதிர்வினையாற்றியது. அவரைக் கண்டித்து தீர்மானம் நிறைவேற்றியது.
இதற்குப் பிறகு, ஜூலை மாதத்தில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலை தமிழ்நாடு முழுவதற்குமான பாத யாத்திரையைத் துவங்கியபோது அதில் கலந்துகொள்ள அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
ஆனால், அதில் அவர் கலந்துகொள்ளவில்லை. உள்துறை அமைச்சர் அமித் ஷா இதில் பங்கேற்ற நிலையிலும் அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் மட்டும் பெயருக்கு வந்து சென்றார்.
மதுரையில் நடந்த அ.தி.மு.க.வின் மாநாடு குறித்து, கட்சிக்காரர்கள் இடையிலான கூட்டம் ஒன்றில் பேசிய அண்ணாமலை, "அ.தி.மு.கவினர் மக்களைக் கவர வேண்டும் என்பதற்காக, மதுரையில் மாநாடு நடத்தினர். பிரமாண்ட மாநாடு என்று கூறிக் கொள்கின்றனர். எனக்குத் தெரிந்த வரை, அதில் பிரமாண்டம் இல்லை. மாநாட்டுக்கு வந்தவர்களில் 10 சதவீதம் பேர்தான் கட்சிக்காரர்கள். மீதமுள்ள 90 சதவீதம் பேர் பணம் கொடுத்து அழைத்து வரப்பட்டவர்கள். இப்படிப்பட்ட மாநாடுகளால் மக்களிடம் எந்த ஈர்ப்பும் ஏற்படாது," என்று சொன்னதாக செய்திகள் வெளியாயின.

இதற்குப் பிறகு, முன்னாள் முதலமைச்சர் சி.என். அண்ணாதுரை தொடர்பாக கே. அண்ணாமலை வெளியிட்ட ஒரு தகவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அது தவறான தகவல் எனப் பலர் கூறியும் அதைப் பின்வாங்க மறுத்தார் அண்ணாமலை, இதற்குப் பிறகுதான், அந்தக் கூட்டணியில் இருந்து வெளியேறும் முடிவை அ.தி.மு.க அறிவித்தது.
கடந்த 2004ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தபோது, சிறுபான்மையினர் வாக்குகளை இழந்து விட்டதால்தான் தோல்வியடைந்ததாகக் கருதிய ஜெயலலிதா இனிமேல் பா.ஜ.கவுடன் கூட்டணி கிடையாது என அறிவித்தார். ஆனால், இப்போது சிறுபான்மையினர் வாக்குகள் தங்கள் கூட்டணிக்கு முழுமையாகக் கிடைக்குமா, கிடைக்காதா என்பதைப் பற்றிப் பெரிதாகக் கவலைப்பட மாட்டார்கள் என்கிறார் ப்ரியன்.
"கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் இருவரும்தான் கூட்டணி அமைத்திருந்தார்கள். பத்தாண்டு காலம் ஆட்சியில் இருந்ததால் ஏற்பட்டிருக்கக்கூடிய அதிருப்தியை மீறியும் சுமார் 75 இடங்களை அவர்களால் பெற முடிந்தது.
கடந்த 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, இருவரும் தனித்துப் போட்டியிட்டார்கள். அப்படியிருந்தும் சிறுபான்மையினர் வாக்குகள் அ.தி.மு.கவுக்கு கிடைக்கவில்லை. அந்த வாக்குகள் பெருமளவில் தி.மு.கவுக்கே கிடைத்தன.
இது தவிர, வரவிருக்கும் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகமும் நாம் தமிழர் கட்சியும் தனித்துப் போட்டியிட்டால், சிறுபான்மையினர் வாக்குகள் அந்தக் கட்சிகளுக்கும் பிரியும். ஆகவே அந்த வாக்குகளைப் பற்றிக் கவலைப்படாமல், இந்து வாக்குகளை ஒருங்கிணைக்கலாம்," என்கிறார் அவர்.
ஆனால், இந்தக் கூட்டணி அமையும் பட்சத்தில் அது எடப்பாடி கே. பழனிசாமிக்கு நிச்சயம் உதவிகரமாக இருக்கும் என்கிறார் ஷ்யாம். "தேர்தல் ஆணையத்தில் இருக்கும் இரட்டை இலை தொடர்பான வழக்கு முடிவுக்கு வந்துவிடும். அது அவருக்கு நிம்மதியாக இருக்கும்" என்கிறார் ஷ்யாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.












