'பூஜ்ய' நாளை நெருங்கும் டெஹ்ரான்: தண்ணீர் பற்றாக்குறையால் ஒரு கோடி பேர் தவிப்பு

டெஹ்ரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் சிஸ்தான்-பலூசிஸ்தான் மாகாணத்தில் நீர் பற்றாக்குறையை எதிர்த்துப் போராடிய ஒருவர் கையில், 'எச்சரிக்கை: குடிக்கத் தகுதியற்ற நீர்' என்று எழுதப்பட்ட பாட்டில்.
    • எழுதியவர், பிபிசி நியூஸ் பெர்ஸியன்
    • பதவி, பிபிசி உலக சேவை

"தண்ணீர் குறைப்பு மற்றும் நீர் அழுத்தத்தில் கடுமையான சரிவு காரணமாக அடுக்குமாடி குடியிருப்புகளில் தண்ணீர் விரைவாக தீர்ந்துவிடுகிறது அல்லது சுத்தமாக தண்ணீர் கிடைப்பதே இல்லை," என்று டெஹ்ரானில் வசிக்கும் ஒருவர் பிபிசி நியூஸ் பெர்சியனிடம் தெரிவித்தார்.

"மின்சாரம் துண்டிக்கப்படும்போது, இணையம் மற்றும் லிஃப்ட்-களும் வேலை செய்வதை நிறுத்தி விடுகின்றன...

"நிலைமை தாங்க முடியாததாகிவிடுகிறது, குறிப்பாக கோடை காலத்தில், கடுமையான காற்று மாசுக்கு மத்தியில். வீட்டில் ஒரு குழந்தை அல்லது வயதானவர் இருந்தால், அது இன்னும் மோசமானது, ஏனெனில் சில நேரங்களில் அவர்கள் இந்த நிலைமைகளை பல மணி நேரம் தாங்க வேண்டியிருக்கிறது," என்று தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத அந்த பெண்மணி கூறினார்.

இரான் முழுவதும், நீர் பற்றாக்குறை மற்றும் அடிக்கடி ஏற்படும் மின்வெட்டு ஆகியவை பொதுமக்கள் மத்தியில் அதிகரித்து வரும் விரக்திக்கு வழிவகுத்துள்ளன. .

தலைநகரில் உயரமான குடியிருப்புகளிலிருந்து குஸிஸ்தான் மற்றும் சிஸ்தான்-பலுசிஸ்தான் கிராமங்கள் வரை, வாழ்க்கை பொறுத்துக்கொள்ள முடியாத வகையில் பாதிக்கப்பட்டுள்ளதாக பலரும் சொல்கின்றனர்.

தொடர்ச்சியாக ஐந்து வறண்ட ஆண்டுகள் மற்றும் அதிக அளவிலான வெப்பத்திற்குப் பிறகு, டெஹ்ரானில் உள்ள நகராட்சி குழாய்களில் தண்ணீர் வற்றிவிடும் நிலை உருவாகியுள்ளது.

இரானின் வடக்கு அல்போர்ஸ் மலைத்தொடரில் உள்ள கராஜ் நதிக்கு அருகே அமைந்துள்ள அமீர் கபீர் அணைக்கு வரும் நீர்வழி, குறைந்த நீர் மட்டங்களைக் கொண்டுள்ளது. ஜூன் 1, 2025 அன்று எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், ஆற்றுப் படுகையின் பெரும்பகுதி வறண்டு காணப்படுகிறது. மிகக் குறைவான அளவிலேயே நீர், கால்வாய்கள் போன்ற சிறிய ஓடைகளாக மட்டுமே பாய்ந்து செல்கிறது.

பட மூலாதாரம், Atta Kenare / Getty Images

படக்குறிப்பு, ஜூன் 1, 2025-ல் எடுக்கப்பட்ட இந்த புகைப்படத்தில் கராஜ் ஆற்றின் மேற்பகுதியில் உள்ள அமிர் கபீர் அணைக்கு குறைவான தண்ணீர் பாய்கிறது.

நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் வரலாறு காணத அளவு குறைந்த அளவை எட்டியுள்ளது , மின்வெட்டு வழக்கமாகிவிட்டது, மேலும் மக்கள் பொறுமை இழந்து வருகின்றனர்.

அமீர் கபீர் அணை

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஜூலை 29, 2025 அன்று எடுக்கப்பட்ட படத்தில் நீர் வரத்துக் குறைந்ததால், அமீர் கபீர் அணையிலும் நீர்மட்டம் குறைந்து வருவது காணப்படுகிறது.

'பூஜ்ய நாள்'

கணிசமான நீர் பயன்பாட்டைக் குறைக்காமல் போனால், சில வாரங்களுக்குள் தலைநகரின் சில பகுதிகள் "பூஜ்ய நாள்" என்ற நிலையை எதிர்கொள்ளக்கூடும் என அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். அந்த நிலை ஏற்பட்டால், வீடுகளில் குழாய்கள் சுழற்சி முறையில் மூடப்பட்டு, தெருக்குழாய் மூலம் அல்லது டேங்கர்கள் மூலம் தண்ணீர் விநியோகிக்கப்படும்.

ஆண்டின் தொடக்கத்தில் அவர்கள் இந்த எச்சரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தினர் மற்றும் அவற்றை தொடர்ந்து மீண்டும் மீண்டும் கூறி வருகின்றனர்.

கோடைகாலத்தில் ஏற்பட்ட மிக உயர்ந்த வெப்பநிலை மற்றும் இரானின் பழமையான மின்சார கட்டமைப்பின் மீது அதிகரித்து வரும் அழுத்தத்தைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை வந்துள்ளது.

டெஹ்ரான் தண்ணீர் பஞ்சம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2014-ல் லார் அணை நீர்த்தேக்கம், கணிசமான நீர்மட்டத்துடன் காணப்பட்டது.

"இது ஒரு நீர் நெருக்கடி மட்டுமல்ல, 'நீர் திவால்நிலை' - சேதத்தை முழுமையாக மீட்க முடியாத அளவுக்கு அதிகப்படியான நீரைப் பயன்படுத்தியதன் விளைவு," என்று ஐக்கிய நாடுகள் பல்கலைக்கழக நீர், சுற்றுச்சூழல் மற்றும் சுகாதார நிறுவனத்தின் இயக்குனர் பேராசிரியர் காவே மதானி பிபிசி நியூஸ் பெர்சியனிடம் கூறினார்.

நீர் பற்றாக்குறை, நில தரமிழப்பு, காலநிலை மாற்றம் மற்றும் மோசமான ஆளுமை ஆகியவை ஒருங்கிணையும் போது என்ன நடக்கும் என்பதை இரான் படம்பிடித்து காட்டுவதாக, ஐ.நா. பாலைவனமாக்கலுக்கு எதிரான மாநாட்டின் (UN Convention to Combat Desertification - UNCCD) டேனியல் செகாய் கூறுகிறார்.

இது மற்ற நாடுகளுக்கு ஒரு கடுமையான எச்சரிக்கையாக இருக்கிறது என்று அவர் கூறுகிறார்.

இரானிய பெண்கள்

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானிய பெண்கள் காலநிலை மாற்றம் மற்றும் நீர் பற்றாக்குறை நெருக்கடிகள் குறித்து கவனத்தை ஈர்க்கும் வகையில், தற்போது வறண்டுபோன ஊர்மியா ஏரியின் படுகையில் போராட்டம் நடத்தினர்.

பூஜ்ஜிய நாள் டெஹ்ரானை என்ன செய்யும்?

நடைமுறையில், " பூஜ்ஜிய நாள்" என்ற நிலை ஏற்பட்டால், மருத்துவமனைகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அதேசமயம், வீடுகளில் தண்ணீர் ரேஷன் முறையில் வழங்கப்படும்.

அதிகாரிகள் சுழற்சி முறையில் குடியிருப்புகளுக்கு நீர் விநியோகத்தை நிறுத்தக்கூடும்.

செல்வம் படைத்த குடும்பங்கள் கூரையில் சேமிப்பு தொட்டிகளை நிறுவக்கூடும்; ஏழை குடும்பங்கள் போராட வேண்டியிருக்கும்.

"மனிதர்கள் மிகவும் மீள்திறனுள்ளவர்கள் என்பதால் விரைவாக மாற்றியமைத்துக் கொள்வார்கள்," என்று இரானின் சுற்றுச்சூழல் துறையின் முன்னாள் துணைத் தலைவரான பேராசிரியர் காவே மதானி கூறுகிறார்.

"எனது பெரிய கவலை என்னவென்றால்... அடுத்த ஆண்டும் வறண்டதாக இருந்தால், அடுத்த கோடை இன்னும் கடுமையானதாக இருக்கும்."

இரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நதிநீர் வற்றியதால், இரானின் இஸ்ஃபஹான் நகரில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க சி-ஓ-செ-போல் (33இஇன் பாலம்) பாலத்தின் அடியில் இருந்த ஜயந்தே ருட் நதி, 2025 பிப்ரவரி 22 அன்று வறண்டு காணப்பட்டது (மேல் படம்). ஆனால், 2023 ஜூன் 5 அன்று எடுக்கப்பட்ட கீழ் படத்தில், அதே பாலத்தின் அடியில் ஜயந்தே ருட் நதி பாய்ந்து கொண்டிருப்பதைக் காணலாம்.

பிபிசி, இரானின் வெளியுறவு அமைச்சகம், அதன் லண்டன் தூதரகம் மற்றும் லண்டனில் உள்ள துணைத் தூதரகம் ஆகியவற்றுக்கு நாட்டின் நீர் பற்றாக்குறை திட்டங்கள் குறித்துக் கருத்துத் தெரிவிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளது.

இருப்பினும், இந்த கோரிக்கை தொடர்பாக அவர்கள் மின்னஞ்சல்கள் மற்றும் தூதரகத்திற்கு நேரடியாக வழங்கப்பட்ட கடிதத்திற்கும் பதிலளிக்கவில்லை.

ஜயந்தே ரூரூட் ஆறு

பட மூலாதாரம், NurPhoto / Getty Images

படக்குறிப்பு, ஜயந்தே ரூரூட் ஆறு, வரலாற்று புகழ்மிக்க சுற்றுலா தலமான காஜு பால பகுதியில் வனவிலங்குகளை ஈர்த்து வந்தது, இது 18 டிசம்பர் 2020 அன்று (கீழே) காட்டப்பட்டுள்ளது, ஆனால் அதே இடத்தில், 14 டிசம்பர் 2021 அன்று (மேலே) புகைப்படம் எடுக்கப்பட்டபோது, அது வறண்டு போயுள்ளது.

கடுமையாக குறைந்த நீர்மட்டம்

இரானின் மிகப்பெரிய நகரமான தலைநகர் டெஹ்ரானில் சுமார் 10 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர்.

அந்நகரம் ஐந்து முக்கிய அணைகளை நம்பியுள்ளது.

அவற்றில் ஒன்றான லார் அணை, அதை நிர்வகிக்கும் நிறுவனத்தின்படி, அதன் இயல்பான நீர்மட்டத்தில் வெறும் 1% அளவிலேயே இயங்குகிறது.

டெஹ்ரான்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெஹ்ரானுக்கு தண்ணீர் வழங்கும் அமீர் கபீர் அணையில் நீர்மட்டம் ஜூலை 29, 2025 அன்று வரலாற்றில் இதுவரை இல்லாத அளவு குறைந்த அளவில் காணப்பட்டது.

அதிபர் மசூத் பெஸெஷ்கியன், பொதுமக்கள் தங்கள் நீர் பயன்பாட்டை குறைந்தது 20% குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, கடந்த ஆண்டைக் காட்டிலும் ஜூலை மாதத்தில் நீர் பயன்பாட்டின் தேவை 13% குறைந்துள்ளது.

ஆனால் செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்கள் முழுவதும் விநியோகத்தைத் தொடர மேலும் 12% குறைப்பு தேவை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

ஆற்றலைச் சேமிக்கும் நோக்கில் டெஹ்ரான் மற்றும் பிற நகரங்களில் உள்ள அரசு கட்டடங்கள் தொடர்ந்து மூடப்பட்டு வருகின்றன. இதனால் பொருளாதார பாதிப்பு ஏற்படுவதாக வணிக நிறுவனங்கள் புகார் தெரிவித்துள்ளன.

ஜயந்தே ருட் நதி

பட மூலாதாரம், NurPhoto / Getty Images

படக்குறிப்பு, வறண்டுபோன ஜயந்தே ருட் நதியின் ஆற்றுப் படுகையில் நீர் இல்லாததால், அரிக்கப்பட்டு அதன் அஸ்திவாரம் சேதமடைகிறது.

வறட்சியில் இருந்து 'நீர் திவால்நிலை' வரை

அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் கடந்த ஆண்டில் மழைப்பொழிவு நீண்ட கால சராசரியை விட 40-45% குறைவாக இருந்துள்ளதைக் காட்டுகின்றன.

சில மாகாணங்களில் இது 70% க்கும் அதிகமாகக் குறைந்துள்ளது. ஆனால், காலநிலை மட்டுமே இதற்கான முழுமையான காரணம் அல்ல.

"இது ஒரு நீர் நெருக்கடி அல்ல," என்று மதானி வாதிடுகிறார். "இது நீர் திவால்நிலை - அதாவது, ஏற்பட்ட சேதத்தை முழுமையாக மீட்க முடியாத மற்றும் அதை சரிசெய்யும் நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாத ஒரு நிலை."

பல தசாப்தங்களாக, இரான் இயற்கை வழங்குவதை விட அதிக நீரை பயன்படுத்தி வருகிறது. முதலில் ஆறுகள் மற்றும் நீர்த்தேக்கங்களை வறண்டு போகச் செய்து, பின்னர் நிலத்தடி நீர் இருப்புக்களையும் பயன்படுத்தியுள்ளது.

"வெறும் வறட்சி மட்டும் இதை ஏற்படுத்தவில்லை," என்று மதானி கூறுகிறார். "காலநிலை மாற்றம் இதை தீவிரப்படுத்துவதற்கு முன்பே, மோசமான நிர்வாகம் மற்றும் அதிகப்படியான பயன்பாடு ஆகியவை இந்த நெருக்கடியை உருவாக்கின."

இரானின் தண்ணீரில் சுமார் 90% விவசாயத்தால் பயன்படுத்தப்படுகிறது. இதில் பெரும்பாலானவை திறனற்ற நீர்ப்பாசன முறைகள் மூலம் பயன்படுத்தப்படுகின்றன. அரிசி மற்றும் கரும்பு போன்ற அதிக நீர் தேவைப்படும் பயிர்கள் வறண்ட பகுதிகளில் பயிரிடப்படுகின்றன.

ஹோஸ்-இ சுல்தான் உப்பு ஏரி கிட்டத்தட்ட வறண்டுவிட்டது.

பட மூலாதாரம், Anadolu via Getty Images

படக்குறிப்பு, ஹோஸ்-இ சுல்தான் உப்பு ஏரி கிட்டத்தட்ட வறண்டுவிட்டது.

கசிவுகள்

டெஹ்ரானில், சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 22% வரை சேதமடைந்த குழாய்களில் ஏற்படும் கசிவுகள் மூலம் வீணாவதாகக் கூறப்படுகிறது.

இருப்பினும், உலகெங்கிலும் உள்ள நீர் அமைப்புகளிலும் இதேபோன்ற வீணடிப்பு காணப்படுகிறது. வாட்டர் நியூஸ் ஐரோப்பா செய்தி நிறுவனத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தின் குடிநீரில் 25% கசிவுகள் மூலம் இழக்கப்படுகிறது.

அதேபோல், அமெரிக்காவின் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் 14-18% வீணாவதாக மெக்கின்சி & கம்பெனி நிறுவனம் தெரிவிக்கிறது. சில இடங்களில் 60% வரை கசிவுகள் மூலம் வெளியேறுவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இரானில் 1970கள் முதல் நிலத்தடி நீர் அதிக அளவில் எடுக்கப்பட்டு வருகிறது. சில மதிப்பீடுகளின்படி, நிலத்தடி நீர் இருப்பில் 70%க்கும் அதிகமாகத் தீர்ந்துவிட்டது.

சில மாவட்டங்களில், நிலத்தடி நீர் நிரம்பிய பாறை அடுக்குகளின் (aquifers) சரிவால், நிலம் ஆண்டுக்கு 25 சென்டிமீட்டர் வரை புதைந்து வருகிறது.

இது நீர் இழப்பை மேலும் துரிதப்படுத்துகிறது.

வறண்ட அணைகளால் மின்சார தட்டுப்பாடு

நீர் பற்றாக்குறை ஒரு ஆற்றல் நெருக்கடியைத் தூண்டியுள்ளது.

நீர்த்தேக்கங்கள் காலியாக இருப்பதால், நீர்மின் உற்பத்தி சரிந்துள்ளது. அதே சமயம், குளிர்சாதனப் பெட்டிகள் மற்றும் தண்ணீர் பம்புகளுக்குஅதிகரித்து வரும் தேவையைப் பூர்த்தி செய்ய எரிவாயுவில் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்கள் போராடுகின்றன.

தற்போது, அமீர் கபீர் அணையானது வரலாற்று ரீதியாக குறைந்த நீர்மட்டத்தைக் கொண்டுள்ளது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, தற்போது, அமீர் கபீர் அணையானது வரலாற்று ரீதியாக குறைந்த நீர்மட்டத்தைக் கொண்டுள்ளது.

இரானின் அரசு செய்தி நிறுவனமான IRNA, ஜூலை மாதத்தில் மின்சாரத் தேவை 69,000 மெகாவாட்டை எட்டியதாகத் தெரிவித்துள்ளது. இது நம்பகமான மின் விநியோகத்துக்குத் தேவையான சுமார் 62,000 மெகாவாட்டை விட மிக அதிகம்.

இதன் காரணமாக, ஒரு நாளைக்கு இரண்டு முதல் நான்கு மணி நேரம் வரை மின்வெட்டு ஏற்படுவது வழக்கமாகிவிட்டது. மின்வெட்டு காரணமாக ஏழை மக்களே அதிகம் பாதிக்கப்படுவதாகவும், வசதி படைத்தவர்கள் மட்டுமே ஜெனரேட்டர்களை வைத்திருப்பதால் அவர்களுக்குப் பெரிய பாதிப்பு இல்லை என்றும் அரசியல்வாதிகளும், செய்திகளும் தெரிவிக்கின்றன.

2025 ஏப்ரல் 23 அன்று, ஈரானின் மூன்றாவது பெரிய மற்றும் மிகப்பெரிய நன்னீர் ஏரியான வறண்டுபோன ஹமுன் ஏரியின் படுக்கையில், சுமார் 50 பேர் பதாகைகளை ஏந்தியபடி ஒன்றாக நின்று போராட்டம் நடத்தினர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானின் மிகப் பெரிய நன்னீர் ஏரியான ஹமுன் ஏரியைப் பாதுகாப்பதற்கான அரசின் கொள்கைகள் குறித்து புகார் தெரிவித்து, வறண்டுபோன அதன் படுகையில் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர்.

அரசின் பதில்

இரானின் எரிசக்தி அமைச்சர் அப்பாஸ் அலியாபாடி, "குடிநீரை வழங்குவதற்கு முன்னுரிமை அளிக்கிறோம் மற்றும் அனைத்து மக்களுக்கும் அது வழங்கப்பட வேண்டும்," என்று கூறினார்.

மேலும், தண்ணீர் சேமிப்பு முயற்சிகள் குறித்து பேசிய அலியாபாடி, "இந்த ஆண்டு எடுக்கப்பட்ட நடவடிக்கைகளால், நாங்கள் கொண்டு செல்லும் தண்ணீரை விட மூன்று மடங்கு தண்ணீரை சேமிக்க முடிந்தது," என்று தெரிவித்தார்.

அதே சமயம், நீர் மற்றும் மின்சாரப் பற்றாக்குறை நிலவும் இக்காலகட்டத்தில், அதிக மின்சாரம் தேவைப்படும் கிரிப்டோகரன்சி மைனிங் நடவடிக்கைகளைத் (மின்னணு நாணய உற்பத்தி) தொடர அனுமதித்ததற்காக அரசாங்கம் விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

சில கிரிப்டோ செயல்பாடுகளுக்கு அரசியல் தொடர்புகள் இருப்பதாகக் கூறப்படுகிறது.

கையில் மண்வெட்டியைச் சுமந்தபடி, வெள்ளை நிற தலைப்பாகை மற்றும் வெள்ளை அங்கி அணிந்த ஒரு நபர் போராட்டத்தில் ஈடுபட்டார். அவருடன் மற்ற போராட்டக்காரர்களும் அருகில் நின்றனர்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, ஹமுன் ஏரியைப் பாதுகாப்பதற்கான அரசின் கொள்கைகளுக்கு எதிராக பாரம்பரிய பலுச்சி உடையை அணிந்த ஒரு நபர் போராட்டம் நடத்துகிறார்.

மக்களின் கோபம் அதிகரிப்பு, புவிசார் அரசியல் தலையீடு

மிகவும் கடுமையான பற்றாக்குறை நிலவும் குஸெஸ்தான் மற்றும் சிஸ்தான்-பலூசிஸ்தான் உட்படப் பல மாகாணங்களில் போராட்டங்கள் வெடித்துள்ளன.

"நீர், மின்சாரம், மற்றும் வாழ்க்கை"க்கான அணுகல் ஒரு அடிப்படை உரிமை என்று ஆர்ப்பாட்டக்காரர்கள் கோஷமிடுகின்றனர்.

கிணறுகளும் கால்வாய்களும் வறண்டு போவதால், சுற்றுச்சூழல் சார்ந்த இடப்பெயர்வு அதிகரித்து வருகிறது. பல குடும்பங்கள் வேலைவாய்ப்பு, சேவைகள் மற்றும் சிறந்த உள்கட்டமைப்பைத் தேடி டெஹ்ரானுக்கு இடம் பெயர்கின்றன.

இடம் பெயர்ந்த மக்களை நகரம் உள்வாங்குவதால், இந்த போக்கு பெருகி வரும் உறுதியற்ற தன்மைக்கு வழிவகுக்கும் என்று ஆய்வாளர்கள் எச்சரிக்கின்றனர்.

டெஹ்ரானுக்கு வடக்கே உள்ள ஃபஷாம் பகுதியில், ஒரு காலத்தில் முழுமையாக நீர் நிறைந்திருந்த, ஆனால் தற்போது கிட்டத்தட்ட வறண்டுபோன ஆற்றுக்குள் மக்கள் பிக்னிக் கொண்டாடுகின்றனர். வறண்ட நதிப் படுகையில் சில நீரோடைகள் ஓடுவதை 2025 ஆகஸ்ட் 25 அன்று எடுக்கப்பட்ட இந்தப் படம் காட்டுகிறது.

பட மூலாதாரம், Abedin Tahernkenareh / EPA / Shutterstock

படக்குறிப்பு, டெஹ்ரானின் வடக்கே உள்ள ஃபஷாம் பகுதியில், ஒரு காலத்தில் நிரம்பி வழிந்திருந்த ஆனால் இப்போது கிட்டத்தட்ட வறண்டு போன ஆற்றில் ஆகஸ்ட் 25 அன்று மக்கள் பிக்னிக் செல்கின்றனர்

இந்த நெருக்கடி புவிசார் அரசியல் விவகாரங்களிலும் எதிரொலித்துள்ளது. 2025 ஜூன் மாதம் இஸ்ரேலுடனான மோதலுக்குப் பிறகு, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, தனது நாட்டின் கடல்நீர் சுத்திகரிப்பு மற்றும் மறுசுழற்சி தொழில்நுட்பங்களை எடுத்துரைத்தார்.

இரானியர்களை குறிவைத்த ஒரு செய்தியில், "உங்கள் நாடு சுதந்திரமாகும்போது," இந்த தொழில்நுட்பங்கள் மூலம் நீங்கள் பயனடையலாம் என்று அவர் கூறினார்.

டெஹ்ரான் இந்த கருத்துக்களை அரசியல் நாடகம் என்று நிராகரித்தது. அதிபர் பெஸெஷ்கியன் காஸாவின் மனிதாபிமான நெருக்கடியை சுட்டிக்காட்டினார்.

ஐ.நா பாலைவனமாதலை எதிர்த்துப் போராடுவதற்கான மாநாட்டின் டேனியல் செகாய், இப்பகுதியில் ஈரான் தனித்து இல்லை என்று கூறுகிறார்.

மேற்கு ஆசியா முழுவதும், பல ஆண்டுகால வறட்சிகள் உணவுப் பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை மற்றும் மனித உரிமைகளை அச்சுறுத்தி வருகின்றன. இது விவசாயம், எரிசக்தி, சுகாதாரம், போக்குவரத்து மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளையும் பாதிக்கிறது.

2025 ஜூன் 1 அன்று, இரானின் வடக்கு அல்போர்ஸ் மலைத்தொடரில் உள்ள கராஜ் நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அமீர் கபீர் அணைக்கு பின்னால் உள்ள நீர்த்தேக்கத்தின் பிரகாசமான நீல நிற நீர், உயரமான மலைகளால் சூழப்பட்டு காணப்படுகிறது.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, இரானின் வடக்கு அல்போர்ஸ் மலைத்தொடரில், கராஜ் நதிக்கு குறுக்கே கட்டப்பட்டுள்ள அமீர் கபீர் அணை, டெஹ்ரான் நகருக்குத் தண்ணீர் வழங்குகிறது.

உலகளாவிய எச்சரிக்கை

காலநிலை மாற்றம், நிலம் மற்றும் நீரின் அதிகப்படியான பயன்பாடு போன்றவற்றால் உலகம் மனிதனால் உருவாக்கப்பட்ட வறட்சி காலத்திற்குள் நுழைந்து வருவதாக டேனியல் செகாய் கூறுகிறார். மேலும், பற்றாக்குறை, நில சீரழிவு மற்றும் பலவீனமான நிர்வாகம் ஆகியவை ஒருங்கே நிகழும்போது என்ன நடக்கும் என்பதற்கு இரான் ஒரு எடுத்துக்காட்டு என்று அவர் வாதிடுகிறார்.

ஐக்கிய நாடுகள் சபையின் கூற்றுப்படி, 2000ஆம் ஆண்டு முதல் உலகளவில் வறட்சி 29% அதிகரித்துள்ளது. தற்போதைய போக்குகள் தொடர்ந்தால், 2050க்குள் நான்கு பேரில் மூன்று பேர் இதனால் பாதிக்கப்படக்கூடும்.

தென்னாப்பிரிக்க நகரமான கேப் டவுனில் 2015-2018 காலகட்டத்தில், ஒரு நபருக்கான தண்ணீரின் பயன்பாட்டிற்கு வரம்பை நிர்ணயித்து அதற்கான கட்டணங்களையும் உயர்த்தும் அளவு ஏற்பட்ட வறட்சி ஒரு முன்கூட்டிய மற்றும் செயல்திறன் மிக்க நடவடிக்கைக்கு ஒரு எடுத்துக்காட்டாக பெரும்பாலும் குறிப்பிடப்படுகிறது.

செகாய், "தொழில்நுட்ப தீர்வுகளை நாங்கள் அறிவோம். ஆனால், எங்களுக்குத் தேவைப்படுவது அறிவை கொள்கையாக்குவதும், கொள்கையை நடைமுறைப்படுத்தவும் வேண்டும்" என்று கூறுகிறார்.

"வறட்சி ஏற்படுமா என்பது கேள்வி அல்ல, அது எப்போது வரும் என்பதே கேள்வி" என்றும் அவர் குறிப்பிடுகிறார்.

மே 8, 2025 அன்று எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், டெஹ்ரானுக்குத் தண்ணீர் வழங்கும் லட்டியான் அணை குறைந்த நீர்மட்டத்தில் காணப்படுகிறது. ஏரியின் மையத்தில் மட்டும் நீர் இருப்பதைக் காணலாம்.

பட மூலாதாரம், AFP via Getty Images

படக்குறிப்பு, மே 8, 2025 அன்று எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், டெஹ்ரானுக்குத் தண்ணீர் வழங்கும் லட்டியான் அணை வரலாற்று ரீதியாகக் குறைந்த நீர்மட்டத்துடன் காணப்படுகிறது.

எதிர்காலம் நோக்கி

நீர், எரிசக்தி மற்றும் நிலம் தொடர்பான கொள்கைகளில் அவசரமாக ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் தேவை என்று வல்லுநர்கள் கூறுகின்றனர்.

மறுசுழற்சி, சொட்டுநீர்ப் பாசனம் மற்றும் நீர் விநியோக மேம்பாடுகள் மூலம், அடுத்த ஏழு ஆண்டுகளில் தேசிய நீர் பயன்பாட்டை ஆண்டுக்கு 45 பில்லியன் கன மீட்டராகக் குறைக்க இரான், உறுதியளித்துள்ளது.

இந்த லட்சிய இலக்குகள் சர்வதேச பொருளாதாரத் தடைகள், அதிகாரத்துவரும் சிக்கல்கள் மற்றும் முதலீடுகள் இல்லாததால் மந்தமடைந்துள்ளன.

"இறுதியில், இரான் தனது நீர் திவால் நிலையை ஏற்றுக்கொள்ள வேண்டும்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர் காவே மதானி கூறுகிறார்.

"அரசு தோல்வியை ஒப்புக்கொண்டு, ஒரு மாற்று மேம்பாட்டு மாதிரிக்கான நிதியை வழங்குவதை எவ்வளவு தாமதப்படுத்துகிறதோ, அந்த அளவு சீர்குலைவைத் தவிர்ப்பதற்கான வாய்ப்பு குறைவு" என்று அவர் எச்சரிக்கிறார்.

கோடை காலங்களில் டெஹ்ரானில் குழாய்களில் நீர் தொடர்ந்து வருமா என்பதை வானிலை தீர்மானிக்காது, ஆனால் அதிகாரிகள் எவ்வளவு விரைவாக செயல்படுகிறார்கள் என்பதே முக்கியம் என்று அவர் ஒரு கடுமையான எச்சரிக்கையை விடுக்கிறார்.

ஃபார்ஷாம் நகரில் உள்ள வறண்டுபோன ஆற்றின் படுகையில் இரான் மக்கள் விரிப்புகளை விரித்து ஓய்வெடுக்கின்றனர். ஆற்றுப் படுகையில் உள்ள கூழாங்கற்களுக்கு மத்தியில், ஒரு காலத்தில் முழுமையாக நீர் நிறைந்திருந்த நதியானது, தற்போது ஒரு சிறிய கால்வாயாக சுருங்கி, பாய்ந்து கொண்டிருக்கிறது.

பட மூலாதாரம், Abedin Tahernkenareh / EPA / Shutterstock

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு