சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டுப் பெண்களின் நிலையை எப்படி மாற்றியது?

சுயமரியாதை இயக்கம் தமிழ்நாட்டு பெண்களின் நிலையை எப்படி மாற்றியுள்ளது?

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

(சுயமரியாதை இயக்கத்தின் நூற்றாண்டை முன்னிட்டு பிபிசி தமிழ் வெளியிடும் சிறப்புத் தொடரின் இரண்டாம் கட்டுரை.)

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியதிலிருந்தே பெண்கள் அந்த இயக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தனர். அதேபோல அந்த இயக்கத்தின் செயல்திட்டங்களிலும் பெண்களின் முன்னேற்றத்திற்கு முக்கியப் பங்கு இருந்தது. பெண்களின் 2,000 ஆண்டுகால ஆற்றாமைக்கு சுயமரியாதை இயக்கம் ஒரு குரலைத் தந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

பெரியார் சுயமரியாதை இயக்கத்தைத் துவங்கியதிலிருந்து சமூக சீர்திருத்தத்திற்காக ஒவ்வொரு கூட்டத்திலும் சில முக்கியக் கருத்துகளை வலியுறுத்தி வந்தார். அவற்றில் பெண்களின் மேம்பாடு குறித்த சில கருத்துகள் அந்த காலகட்டத்தோடு பொருத்திப் பார்க்கையில் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்தன.

வரலாற்றாசிரியரான சுனில் கில்னானி Periyar: Sniper of Sacred Cows என்ற தனது கட்டுரையில், பெரியாரின் பெண்களின் மேம்பாட்டிற்கான செயல்பாடுகள் குறித்துப் பேசும்போது பின்வருமாறு குறிப்பிடுகிறார்.

"குடும்பத்தில் ஆணே பெரியவன் என போற்றப்பட்ட தேசத்தில், மிக வலுவாக பெண்களின் விடுதலைக்காகக் குரல் கொடுத்தவர் பெரியார். பெண் விடுதலையைப் பற்றி பேசும்போது ஆண்களிடம் பொதுவாகத் தென்படும், மேலாதிக்க உணர்வின்றி அதைச் செய்தார். தங்களைத் தியாகம் செய்யும் பெண்களை போற்றும் சமஸ்கிருத புராணங்களின் முட்டாள்தனத்தை பெரியார் கேலி செய்தார். பெண்கள் கல்வி கற்பதையும் காதல் திருமணம் செய்வதையும் அந்தத் திருமணம் ஒத்துவரவில்லையென்றால் விவாகரத்து செய்வதையும் பெண்களுக்குச் சொத்துரிமை அளிப்பதையும் பெரியார் ஆதரித்தார்.

இதையெல்லாம்விட பெண்களின் பாலியல் தேர்வையும் கருவுருதல் குறித்த உரிமையையும் அவர் ஆதரித்தார். உரிமைகள் தங்களுக்கு தானாக வழங்கப்படுமென பெண்கள் வெறுமனே காத்திருக்கக்கூடாது என்றார் பெரியார். பழங்கால வீராங்கனைகள், சக்திவாய்ந்த பெண் தெய்வங்கள், குறைந்த மகப்பேறு விகிதம் ஆகியவை ஏற்கனவே இருந்த ஒரு பிராந்தியத்தில் பெரியார் தன் கருத்தை முன்வைத்தார்".

ஈ.வே. ராமசாமி என்ற பெரியாரின் பொது வாழ்க்கையில், பெண்களின் மேம்பாட்டிற்காக அவர் மேற்கொண்ட முயற்சிகளின் ஒரு சுருக்கமாக சுனில் கில்னானியின் இந்தக் கருத்தைப் பார்க்கலாம்.

அதே சமயத்தில் அவரது சுயமரியாதை இயக்கம் பெண்களின் முன்னேற்றம் தொடர்பாக மேற்கொண்ட முயற்சிகளும் அதன் தாக்கமும் ஒரு விரிவான ஆய்வுக்கு உரியவை.

சுயமரியாதை இயக்கத்தில் பெண்களின் பங்கு

 பெரியார், சுயமரியாதை இயக்கம், பெண்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு
படக்குறிப்பு, சுயமரியாதை இயக்கத்தின் துவக்கத்திலிருந்தே பெண்களின் பங்கேற்பும், அவர்களது மேம்பாடு குறித்த அக்கறையும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.

1925ஆம் ஆண்டில் பெரியார் காங்கிரஸ் கட்சியிலிருந்து வெளியேறிய பிறகு சுயமரியாதை, மனிதர்கள் எல்லோரும் சமம், பெண்களின் மேம்பாடு ஆகியவற்றை முன்வைத்து செயல்பட ஆரம்பித்தார்.

இதுவே அடுத்த சில ஆண்டுகளில் சுயமரியாதை இயக்கமாக உருவெடுத்தது. ஆகவே, சுயமரியாதை இயக்கத்தின் துவக்கத்திலிருந்தே பெண்களின் பங்கேற்பும், அவர்களது மேம்பாடு குறித்த அக்கறையும் அந்த இயக்கத்தின் ஒரு பகுதியாகவே இருந்தது.

1929 பிப்ரவரி 17, 18ல் செங்கல்பட்டில் சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாகாண மாநாடு நடத்தப்பட்டது. அந்த மாநாட்டிலேயே நாகம்மையார், மூவலூர் ராமாமிருதத்தம்மாள் உள்ளிட்ட பெண்கள் உரை நிகழ்த்தினர்.

அந்த மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில் பெண்ணடிமைத் தனத்தைப் போக்குதல், கலப்புத் திருமணம், விதவைத் திருமணத்திற்கு ஊக்கம் அளித்தல் ஆகியவை இடம்பெற்றன.

ஆணுக்கும் பெண்ணுக்கும் சொத்தில் சம உரிமை வேண்டும் என்பது தீர்மானங்களில் ஒன்று. இது தமிழ்நாட்டில் சட்டமாக மேலும் 60 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியிருந்தது என்பதைப் பார்க்கும்போது, அந்த இயக்கத்தின் முன்னோக்கிய பார்வையை புரிந்துகொள்ள முடியும்.

இரண்டாவது சுயமரியாதை மாநாடு 1930ஆம் ஆண்டில் ஈரோட்டில் நடந்தது. அந்த மாநாட்டில் இளைஞர்கள் மாநாடும் பெண்கள் மாநாடும் தனித்தனியாக நடத்தப்பட்டன.

பெண்கள் மாநாட்டை பெண்களே முழுமையாக முன்னின்று நடத்தினர். 16 வயது வரை பெண்களுக்கு கட்டாயக் கல்வி தர வேண்டும், பால்ய விவாகத் தடுப்புச் சட்டத்தைத் தீவிரமாகவும் உடனடியாகவும் அமல்படுத்த வேண்டும், பெண்களைக் கோயிலுக்குப் பொட்டுக் கட்டி விடும் இழிவிற்கு முடிவுகட்ட வேண்டும் என்ற தீர்மானங்கள் அதில் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்கள் மாநாட்டிலும் பெண்ணுரிமைக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இளைஞர்கள் கணவனை இழந்த பெண்களையும் தேவதாசிப் பெண்களையும் திருமணம் செய்ய முன் வர வேண்டும் என்று அந்த மாநாடு கூறியது.

இதுமட்டுமல்லாமல் பல தருணங்களில் சுயமரியாதை இயக்க மாநாடுகளின் துவக்க உரையை நிகழ்த்தும் பொறுப்பு பெண்களுக்கு அளிக்கப்பட்டது.

உதாரணமாக, 1931ல் விருதுநகரில் நடந்த மூன்றாவது சுயமரியாதை மாநாட்டை இந்திராணி பாலசுப்பிரமணியம் துவக்கி வைத்தார். 1937ல் நடந்த திருநெல்வேலி மாவட்ட மூன்றாவது ஆதிதிராவிடர் மாநாட்டிற்கு மீனாம்பாள் சிவராஜ் தலைமை வகித்தார். 1938ல் மதுரையில் நடந்த சுயமரியாதை மாநாட்டை ராஜம்மாள் துவக்கிவைத்தார்.

"இந்த நடவடிக்கைகளால் சுயமரியாதை இயக்கத்தின் பெண் தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆர்வத்துடன் செயல்பட முன்வந்தனர். பேசவே தெரியாத பெண்ணாக இருந்தாலும் சில வார்த்தைகளாவது மாநாட்டு மேடையில் பேச வேண்டும் என்று பெரியார் வலியுறுத்தினார்" என்று குறிப்பிடுகிறார் சென்னை வளர்ச்சி ஆய்வு நிறுவனத்தின் முன்னாள் பேராசிரியர் எஸ். ஆனந்தி.

பெரியார் என்ற பட்டம் அளிக்கப்படுவதற்கு முன்பாக சில இடங்களில் அவர் பெரியார் எனக் குறிப்பிடப்பட்டாலும், 1938ல் சென்னையில் நடந்த முற்போக்கு பெண்கள் சங்க மாநாட்டில்தான் பெரியாருக்கு "பெரியார்" என்ற பட்டம் பெண்களால் முறையாக அளிக்கப்பட்டது. இந்த பட்டமே என்றென்றைக்குமாக அவருக்கு நிலைத்தது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பில் சுயமரியாதை இயக்கப் பெண்கள்

 பெரியார், சுயமரியாதை இயக்கம், பெண்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு

பட மூலாதாரம், DMK

படக்குறிப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான சுயமரியாதை இயக்கப் பெண்கள் பங்கேற்றனர்.

சுயமரியாதை இயக்கத்தைச் சார்ந்த பெண்கள், மாநாடுகளிலும் பிரசாரப் பணிகளிலும் ஈடுபடுவதோடு மட்டுமல்லாமல் போராட்டங்களிலும் தீவிரமாகப் பங்கெடுத்தனர் என்பதைச் சுட்டிக்காட்டுகிறார் எஸ். ஆனந்தி.

1937-ஆம் ஆண்டு இறுதியில் துவங்கி 1940-ஆம் ஆண்டின் துவக்கம்வரை நடந்த இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டங்களில் பெரும் எண்ணிக்கையிலான சுயமரியாதை இயக்கப் பெண்கள் பங்கேற்றனர்.

இது தொடர்பான ஊர்வலங்களிலும் பொதுக் கூட்டங்களிலும் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றனர். போராட்டம் தீவிரமடைந்தபோது, சுயமரியாதை இயக்கப் பெண்கள் கைக்குழந்தைகளோடு கைதாகவும் தயங்கவில்லை.

"இந்திப்‌ போரில்‌ சிறைசென்ற பெண்களின் எண்ணிக்கை 73. அவர்களுடன்‌ சிறைசென்ற அவர்களது குழந்தைகளின் எண்ணிக்கை 32" என மா. இளஞ்செழியன் எழுதிய 'தமிழன் தொடுத்த போர்' நூல் குறிப்பிடுகிறது.

சுயமரியாதை இயக்கம் தீவிரமாகச் செயல்பட்ட காலகட்டத்தில் இந்திய விடுதலைப் போராட்டமும் உச்சத்தை நோக்கி நகர்ந்துகொண்டிருந்தது. அந்த இயக்கத்திலும் பெண்கள் பங்கேற்றனர். ஆனால், பெண்களின் பங்களிப்பைப் பொறுத்தவரை இரு இயக்கங்களுக்கும் வித்தியாசம் இருந்தது என்கிறார்கள் ஆய்வாளர்கள்.

"விடுதலை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் இந்திய சமூகத்தின் முக்கிய அங்கமாக இருந்த ஜாதிக் கட்டுப்பாட்டை மீற வேண்டியதில்லை. ஆனால், சுயமரியாதை இயக்கத்தில் ஈடுபட்டவர்கள் ஜாதிக் கட்டுப்பாட்டை மீறி பங்கேற்க வேண்டியிருந்தது. அவர்கள் தாங்கள் எந்த சமூகத்திலிருந்து வந்தோமோ, அதே சமூகத்தின் எதிர்ப்பைத் தாங்கி நிற்க வேண்டியிருந்தது. இதுதான் பிற இயக்கங்களில் பங்கேற்ற பெண்களுக்கும் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்ற பெண்களுக்கும் இருந்த முக்கியமான வித்தியாசம்" என்கிறார் 'திராவிட இயக்க வீராங்கனைகள்' நூலின் ஆசிரியரும் பேராசிரியருமான மு. வளர்மதி.

இந்த இரு இயக்கங்களிலும் பங்கேற்ற பெண்களின் பங்களிப்பில் இருந்த மேலும் சில வித்தியாசங்களைச் சுட்டிக்காட்டுகிறார் எஸ். ஆனந்தி.

"இந்திய தேசிய இயக்கத்தைப் பொருத்தவரை, குறிப்பிட்ட தருணங்களில் தான் பெண்கள் பெரும் எண்ணிக்கையில் பங்கேற்றார்கள். ஆனால், சுயமரியாதை இயக்கத்தைப் பொருத்தவரை, சுயமரியாதை இயக்க மாநாடுகள் ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்பட்டபோது, அங்கெல்லாம் தனியாக பெண்கள் மாநாடுகளும் நடத்தப்பட்டன."

"இந்த மாநாடுகளில் பெண்கள் ஆயிரக்கணக்கில் பங்கேற்றனர். விடுதலை இயக்கத்தில் தேவதாசிகள் பங்கேற்றபோது, அதனை ஏற்பதில் அந்த இயக்கத்தைச் சேர்ந்தவர்களுக்கு தயக்கம் இருந்தது. அது குறித்து வெளிப்படையாகவே எழுதினார்கள். ஆனால், சுயமரியாதை இயக்கத்தில் தேவதாசி பெண்கள் பெரிய அளவில் பங்கேற்றனர். பொருளாதார ரீதியாகவும் ஜாதி ரீதியாகவும் எல்லாத் தரப்புப் பெண்களும் சுயமரியாதை இயக்கத்தில் பங்கேற்றனர்." என்று அவர் கூறுகிறார்.

மேலும், "இந்திய தேசிய இயக்கத்தில் பங்கேற்ற பெண்களோடு ஒப்பிட்டால், அதிலிருந்த பெண்களால் ஓரளவுக்குத்தான் சீர்திருத்தங்களை செய்ய முடிந்தது. பிராமண மேலாதிக்கத்தை, ஆணாதிக்கத்தை அவர்களால் எதிர்க்க முடியவில்லை. இந்து மதத்தில் இருந்த பெண்ணடிமைத் தனத்தைக் கேள்வி கேட்க முடியவில்லை. இங்கே அதைச் செய்ய முடிந்தது" என்கிறார் எஸ். ஆனந்தி.

காவல்துறையில் பெண்களை சேர்ப்பதற்கான கோரிக்கை

 பெரியார், சுயமரியாதை இயக்கம், பெண்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

பெண்களின் சீர்திருத்தம் தொடர்பான கருத்துகளை பெரியார் எங்கிருந்து பெற்றார்?

"அவர் தன் வாழ்பனுபவங்களில் இருந்தே பெற்றார். இப்போது மறுமணத்தை யாரும் தவறாக நினைப்பதில்லை. ஆனால், அந்த காலகட்டத்தில் நிறைய குழந்தை விதவைகள் இருந்தார்கள். அந்தப் பின்னணியில் தான் பெரியார் விதவைகள் மறுமணம் பற்றி பேசினார். அதேபோல, கள்ளுக்கடை மறியலின்போது பெண்களைக் கைது செய்த காவலர்கள் அவர்களிடம் மிக மோசமாக நடந்துகொண்டதைப் பார்த்த பெரியார், காவல்துறையில் பெண்களையும் சேர்க்க வேண்டுமென 1932லேயே எழுதினார். தற்போது காவல்துறையில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் பெண்கள் பணியாற்ற முக்கியக் காரணம், அப்போது எழுப்பிய குரல்தான்" என்கிறார் மு. வளர்மதி.

காவல்துறையில் பெண்களைச் சேர்ப்பது குறித்து தொடர்ந்து பேசியும் எழுதியும் வந்தார் பெரியார். 1934ல் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக ஈரோட்டில் பெண் ஒருவருக்கு ஒரு வருட தண்டனை விதிக்கப்பட்டது. அது தொடர்பாக 'புரட்சி' இதழில் எழுதிய பெரியார், "பெண்களின் பல வழக்குகளில் ஆண் போலீசார் சரியாக நடந்துகொள்வதில்லை என்பதே மெக்ஸிகோ, பிரான்ஸ், சைனா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் துணிந்த முடிவு. குற்றத்திற்கு ஆளான வாலிபப் பெண்களை ஆண் போலீசாரால் தக்கவாறு நடத்த இயலுமா?" எனக் கேள்வி எழுப்பினார். பெரியார் இப்படி எழுதி நாற்பதாண்டுகளுக்குப் பிறகு 1973ல் தமிழ்நாட்டில் முதல்முறையாக பெண்கள் காவல்துறையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர்.

சுயமரியாதை இயக்கத் திருமணங்கள்

 பெரியார், சுயமரியாதை இயக்கம், பெண்கள், இந்தித் திணிப்பு எதிர்ப்பு, தமிழ்நாடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சுயமரியாதை இயக்கம் தாலி போன்ற மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தது என்று கூறுகிறார் எஸ். ஆனந்தி.

சுயமரியாதை இயக்கத்தின் முக்கியச் சாதனையாக சுயமரியாதை இயக்கத் திருமணங்களைச் சுட்டிக்காட்டுகிறார் எஸ். ஆனந்தி.

"பெரும் எண்ணிக்கையில் கணவரை இழந்தவர்களின் மறுமணங்கள், சாதி கடந்த, மதம் கடந்த திருமணங்கள் சுயமரியாதைத் திருமணங்களாக நடந்தன. 1930-ஆம் ஆண்டிற்குள் 5,000 திருமணங்கள் வரை இப்படி நடந்ததாகச் சொல்லலாம். அது ஒரு மிகப் பெரிய சமூக நிகழ்வாக இருந்தது. மேலும் சுயமரியாதை இயக்கம் தாலி போன்ற மூடப் பழக்க வழக்கங்களைக் கடுமையாக எதிர்த்தது. பெண்களுக்கு கல்யாண விடுதலை (விவாகரத்து) வேண்டும் என்ற தீர்மானம் முதலில் சுயமரியாதை இயக்க மாநாட்டில்தான் நிறைவேற்றப்பட்டது." என்று கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "இதே போன்ற தீர்மானம் அகில இந்திய பெண்கள் காங்கிரஸில் 1931ல்தான் நிறைவேற்றப்பட்டது. அந்த வகையில் பார்த்தால், சுயமரியாதை இயக்கம் வரலாற்றைத் திருப்பிப்போட்ட இயக்கம். ஆர்ய சமாஜம் ஒரு சீர்திருத்த இயக்கமாக உருவானது என்றாலும் அவர்களுடைய திருமணத்தில் அக்னி சாட்சி என்பதை முன்வைத்தார்கள். அதனால் தான் ஆர்ய சமாஜ திருமணங்கள் இந்து திருமணச் சட்டத்திற்குள் ஏற்கப்பட்டன. ஆனால், சுயமரியாதைத் திருமணம், இந்து மதத்தை மறுதலித்தது, கேள்வி எழுப்பியது. அந்தக் காலகட்டத்தில் இந்தியாவில் வைதீக மத அடிப்படையில் அமைந்த ஆண்களின் மேலாதிக்கத்தை எதிர்த்த ஒரே இயக்கம் சுயமரியாதை இயக்கம் தான்" என்கிறார் எஸ். ஆனந்தி.

வேறு சில தனித்துவமான அம்சங்களும் சுயமரியாதை இயக்கத்திற்கு இருந்தன என்கிறார் அவர்.

"இந்தியாவில் பெண்களுக்கு என உருவான பல சமூக இயக்கங்களால் நீடிக்க முடியவில்லை. ஆல் இந்தியா விமன்ஸ் கான்ஃபரன்ஸ் போன்றவை என்ன ஆயின? ஆனால், சுயமரியாதை இயக்கம் இன்றுள்ள பல பிரச்னைகளுக்கு தீர்வுகளைச் சொல்கிறது. அந்த இயக்கத்தைப் போல வேறு யாருமே ஆண்களைப் பார்த்துக் கேள்வியெழுப்பவில்லை. பெரியார் மட்டுமே ஆண்களைப் பார்த்து சங்கடமான கேள்விகளை எழுப்பி வந்தார். பலரும் பெண்களின் நலன் குறித்துப் பேசினார்கள். ஆனால், பெரியார் பெண்களின் அடிப்படையான பிரச்னைகளையும் அதற்கான தீர்வுகளையும் முன்வைத்தார். அந்த வகையில் திராவிட இயக்கப் பெண்ணியம் என்பது தனித்துவம் வாய்ந்தது. அதற்கு இப்போதும் பல்வேறு வடிவங்களில் முக்கியத்துவம் இருக்கிறது" என்கிறார் எஸ். ஆனந்தி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

சுயமரியாதை இயக்கம் தோன்றி நூறாண்டுகள் கடந்துவிட்டன. பெண்கள் தொடர்பான விஷயங்களில் தமிழ்நாட்டில் அந்த இயக்கத்தின் தாக்கம் இன்னமும் இருக்கிறதா? பெண்களின் மீதான ஒடுக்குமுறை ஆங்காங்கே தொடரத்தானே செய்கிறது?

"தமிழ்நாட்டில் ஏதாவது மோசமாக நடக்கும்போது இது 'பெரியார் மண்ணா?' எனக் கேட்கிறார்கள். ஆனால், 2,000 வருட பிற்போக்குத் தனத்திலிருந்து இந்த ஒரு நூறாண்டுகளில் எவ்வளவு மாறியிருக்கிறோம் என்பதைப் பார்க்க வேண்டும். சுயமரியாதை இயக்கம் வந்தபோதுதான் பெண்களின் 2,000 ஆண்டு கால ஆற்றாமை வெளியில் வந்தது. இப்போது எவ்வளவு பெண்கள் படிக்கிறார்கள், மறுமணம் செய்கிறார்கள், தாலி போன்ற மூடத்தனத்திற்கு எதிராகப் பேசுகிறார்கள்? பெரியார் எதிர்பார்த்த மாற்றம் என்பது இதுதான்." என்கிறார் மு. வளர்மதி.

"பெரியார் பாதையைக் காட்டியிருக்கிறார். எது சரியானது எனச் சொல்லியிருக்கிறார். அதைப் பின்பற்றுவது சமூகத்தின் கையில் இருக்கிறது. வட இந்தியாவில் இருக்கும் பெண்களோடு தமிழ்நாட்டுப் பெண்களின் நிலையை ஒப்பிட்டுப் பார்த்தால் இது புரியும்"

இதே போன்ற கருத்தையே சுனில் கில்னானியும் முன்வைக்கிறார். "இவரது (பெரியார்) கருத்துகள் 20ஆம் நூற்றாண்டில் வட இந்திய மாநிலங்களுக்கும் தென்னிந்திய மாநிலங்களுக்கும் இடையிலான பிளவை இன்னும் ஆழமாக்கின. முரட்டுத்தனமான இந்த சிலை உடைப்பாளரை, கடுமையான நாவன்மை உடையவரை பற்றி நான் மேலும் மேலும் வாசிக்கும்போது என் மனதில் ஒரு கேள்வி எழுகிறது: இந்தியாவின் பிற பகுதிகளிலும் இதுபோன்ற ஆளுமைகள் இருந்திருந்தால், இந்தியப் பெண்கள் குடியரசு இன்னும் சிறப்பாக இருந்திருக்குமல்லவா?".

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு