வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியா காலமானார் - இந்தியாவுடன் அவரது உறவு எப்படி இருந்தது?

(இந்த பக்கம் தொடர்ந்து புதுப்பிக்கப்படுகிறது)

வங்கதேசத்தின் முன்னாள் பிரதமர் காலிதா ஜியா இன்று (30-12-2025 செவ்வாய்க்கிழமை) காலமானார். அவருக்கு வயது 80. வங்கதேச தேசியவாதக் கட்சியின் ஊடகப் பிரிவு அவரது மரணத்தை ஃபேஸ்புக் வாயிலாக அறிவித்தது.

"பிஎன்பி தலைவரும் முன்னாள் பிரதமருமான பேகம் காலிதா ஜியா இன்று அதிகாலை 6 மணிக்கு, ஃபஜ்ர் தொழுகைக்குப் பிறகு காலமானார்," என்று வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தனது எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில் குறிப்பிட்டுள்ளது.

அவருடைய மறைவுக்கு வங்கதேச இடைக்கால அரசாங்கத்தின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ், அந்நாட்டின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா மற்றும் இந்தியா, பாகிஸ்தான் பிரதமர்கள் உள்பட உலகம் முழுவதும் இருந்து பல்வேறு நாடுகளின் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் 17 ஆண்டுகளுக்குப் பிறகு டிசம்பர் 25-ஆம் தேதி லண்டனிலிருந்து டாக்கா திரும்பினார். அவர் திரும்பிய ஐந்து நாட்களுக்குப் பிறகு, காலிதா ஜியா தனது இறுதி மூச்சை விட்டுள்ளார்.

பல மாதங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த காலிதா ஜியா டாக்காவில் உள்ள எவர்கேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்த மாத தொடக்கத்தில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி அவரது உடல்நலனுக்காகப் பிரார்த்தனை செய்ததுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தார்.

காலிதா ஜியா நான்கு தசாப்தங்களுக்கும் மேலாக வங்கதேச அரசியலில் ஈடுபட்டுள்ளார். தனது கணவர் படுகொலை செய்யப்பட்ட பிறகு, பிஎன்பி கட்சியின் தலைமைப் பொறுப்பை அவர் ஏற்றார்.

1981-ல் வங்கதேசத்தின் அதிபராக இருந்த ஜியாவுர் ரஹ்மான் படுகொலை செய்யப்பட்டார். காலிதா ஜியா வங்கதேசத்தில் பல கட்சி ஜனநாயகத்தின் ஆதரவாளராக இருந்துள்ளார்.

பேகம் ஜியா 1991-ல் வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமரானார். 2001-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்த அவர் 2006-ஆம் ஆண்டு வரை பதவியில் இருந்தார். பிஎன்பி கடந்த மூன்று தேர்தல்களைப் புறக்கணித்துள்ளது. 2024-ல் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான இயக்கத்திற்கு காலிதா ஜியா ஆதரவளித்தார். பிஎன்பி தற்போது வங்கதேசத்தின் மிகப்பெரிய கட்சியாக உள்ளது, அடுத்த ஆண்டு தேர்தல்களில் அது ஆட்சிக்கு வரக்கூடும் என்று கணிக்கப்படுகிறது.

ஷேக் ஹசீனா பிரதமராக இருந்தபோது காலிதா ஜியா சிறையில் இருந்தார். அவரது மகன் தாரிக் ரஹ்மானும் பல வழக்குகளில் தண்டிக்கப்பட்டார், ஆனால் முகமது யூனுஸின் இடைக்கால அரசாங்கம் காலிதா மற்றும் அவரது மகனை விடுவித்தது.

காலிதா ஜியா அரசியல் பிரவேசம்

1975 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், வங்கதேசத்தின் சுதந்திர போராட்டத் தலைவர் மற்றும் முதல் பிரதமரான ஷேக் முஜிபுர் ரஹ்மான் அதிருப்தி ராணுவ அதிகாரிகளால் படுகொலை செய்யப்பட்டார். அவருடன், குடும்ப உறுப்பினர்கள் பெரும்பாலானோரும் கொலையுண்டனர்.

இந்தச் சம்பவம் இந்தியாவுக்கும் வங்கதேசத்துக்கும் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இந்தப் படுகொலைகள் வங்கதேசத்தில் ராணுவ ஆட்சியின் தொடக்கத்தைக் குறித்தன; குறிப்பாக 1976 முதல் 1981 வரை ஜியா-உர்-ரஹ்மான் தலைமையிலும் (இவரும் பின்னர் இராணுவத்தினரால் படுகொலை செய்யப்பட்டார்), பின்னர் 1982 முதல் 1990 வரை ஹுசைன் முஹம்மது எர்ஷாத் ஆட்சியின் கீழும் ராணுவ ஆட்சி நடைபெற்றது.

ஜியா-உர்-ரஹ்மான் படுகொலைக்குப் பின்னரே கலிதா ஜியா அரசியலில் நுழைந்தார்.

இந்தியாவுடன் அவரது உறவு எப்படி இருந்தது?

காலிதா ஜியாவின் ஆட்சிக்காலத்தில் இந்தியாவுடனான வங்கதேசத்தின் உறவுகள் அவ்வளவு சிறப்பாக இருக்கவில்லை. எனினும், மோதி அவருக்கு அனைத்து உதவிகளையும் வழங்க முன்வந்தபோது, பிஎன்பி கட்சி அதற்கு நன்றி தெரிவித்தது.

இந்திய அரசுக்கும் பிஎன்பிக்கும் இடையே இத்தகைய நன்மதிப்பு முன்பு இருந்ததில்லை. சொல்லப்போனால், இந்தியாவில் ஷேக் ஹசீனா இருப்பதால் இந்திய அரசை பிஎன்பி விமர்சித்து வந்தது.

2015-ஆம் ஆண்டு ஜூன் மாதம் இந்திய பிரதமர் மோதி வங்கதேசம் சென்றபோது காலிதா ஜியாவை சந்தித்தார். அப்போது, ஷேக் ஹசீனா ஆட்சியில் இருந்தார். அச்சமயத்தில் வங்கதேசத்துடன் எல்லை ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது. மேலும், அப்பயணத்தின் போது ஜதியா கட்சியை சேர்ந்த ரோஷன் எர்ஷத்தையும் மோதி சந்தித்தார்.

வங்கதேசத்தில் பொதுத் தேர்தல் எப்போது?

வங்கதேசத்தில் பிப்ரவரி 12ஆம் தேதி பொதுத் தேர்தல் நடைபெறுகிறது. அதில் பங்கேற்க ஷேக் ஹசீனாவின் அவாமி லீக் கட்சிக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், வங்கதேச தேசியவாதக் கட்சி (BNP) நாட்டில் ஆதிக்கம் செலுத்தும் அரசியல் சக்தியாக மாறியுள்ளது.

வரும் மாதங்கள் ரஹ்மானுக்கோ அல்லது அவரது கட்சிக்கோ கடினமாக இருக்கும் என்று வங்கதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கும்பல் வன்முறை, அதிகரித்து வரும் மத சகிப்பின்மையின் பகிரங்க வெளிப்பாடுகள், வாக்குப்பதிவு விதிகள் குறித்த கருத்து வேறுபாடுகள் மற்றும் அண்டை நாடான இந்தியாவுடனான உறவுகளில் ஏற்பட்ட விரிசல் ஆகியவற்றால் ஒரு குழப்பமான காலகட்டத்தில் இந்தத் தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரஹ்மான் நாடு திரும்பியதும் ஒரு பிரமாண்டமான பொதுக்கூட்டத்தில் உரையாற்றி, "ஜனநாயக மற்றும் பொருளாதார உரிமைகளை" மீட்டெடுக்க பாடுபடுவதாக உறுதியளித்தார்.

முகமது யூனுஸ் இரங்கல்

காலிதா ஜியா மறைவுக்கு அந்நாட்டின் இடைக்கால அரசாங்கத்தின் முதன்மை ஆலோசகர் முகமது யூனுஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.

"அவருடைய மறைவால் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளேன், மனம் உடைந்துபோயுள்ளேன்," என்று அவர் தெரிவித்துள்ளார்.

அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "காலிதா ஜியா ஒரு அரசியல் கட்சியின் தலைவர் மட்டுமல்ல, வங்கதேச வரலாற்றில் 'ஓர் முக்கியமான அத்தியாயம் அவர்" என்றும் குறிப்பிட்டார்.

இம்மாத தொடக்கத்தில் ஜியா நாட்டுக்கு அளித்த பங்களிப்புகள், நீண்ட போராட்டம் மற்றும் மக்களுடனான ஆழமான உணர்வுகளுக்காக அவரை நாட்டின் 'மிக முக்கியமான நபராக' அங்கீகரித்ததாக யூனுஸ் தெரிவித்துள்ளார்.

ஜனநாயகம் மற்றும் பல கட்சி அரசியல் கலாசாரம், வங்கதேச மக்களின் உரிமைகள் ஆகியவற்றுக்கான ஜியாவின் போராட்டங்கள் என்றென்றும் நினைவுகூரப்படும் எனவும் யூனுஸ் தெரிவித்துள்ளார்.

ஷேக் ஹசீனா இரங்கல்

வங்கதேச முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா, அந்நாட்டின் முன்னாள் பிரதமரும் பிஎன்பி கட்சியின் தலைவருமான காலிதா ஜியாவின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

"வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, நாட்டில் ஜனநாயகத்தை நிறுவுவதற்கான போராட்டங்கள் ஆகியவற்றில் அவருடைய பங்கு முக்கியமானது. அவை என்றென்றும் நினைவுகூரப்படும்." என ஷேக் ஹசீனா தெரிவித்துள்ளார்.

வங்கதேச அரசியல் மற்றும் பிஎன்பி கட்சியின் தலைமைக்கும் அவருடைய மறைவு பெரிய இழப்பு என அவர் தெரிவித்துள்ளார்.

காலிதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் மற்றும் அவரின் குடும்பத்தினருக்கு ஷேக் ஹசீனா இரங்கல் தெரிவித்துள்ளார்.

மோதி இரங்கல்

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோதி இரங்கல் தெரிவித்துள்ளார். காலிதா ஜியாவுடனான தனது சந்திப்பையும் அவர் நினைவுகூர்ந்துள்ளார்.

பிரதமர் மோதி தன் எக்ஸ் பக்கத்தில், "வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவர் பேகம் காலிதா ஜியாவின் மறைவுச் செய்தியறிந்து மிகுந்த வேதனையடைந்தேன்," என தெரிவித்துள்ளார்.

"அவருடைய குடும்பத்தினர் மற்றும் வங்கதேச மக்களுக்கு என்னுடைய ஆழ்ந்த இரங்கல்கள். ஈடுசெய்ய முடியாத அவரின் இழப்பை தாங்கும் வலிமையை கடவுள் அவருடைய குடும்பத்தினருக்கு அளிக்கட்டும்."

வங்கதேசத்தின் முதல் பெண் பிரதமராக, 'அந்த நாட்டின் வளர்ச்சி' மற்றும் 'இந்தியா-வங்கதேச உறவுகளை வலுப்படுத்துவதற்கான அவரது 'முக்கியமான பங்களிப்புகள் என்றென்றும் நினைவுகூரப்படும் என பிரதமர் மோதி தெரிவித்துள்ளார்.

"அவரை கடந்த 2015-ஆம் ஆண்டு டாக்காவில் நான் சந்தித்தேன். அவருடைய பார்வையும் பாரம்பரியமும் இருநாட்டு உறவுகளை வழிநடத்துவதில் தொடரும் என நம்புவோம்."

பாகிஸ்தான் பிரதமர் இரங்கல்

வங்கதேச முன்னாள் பிரதமர் காலிதா ஜியாவின் மறைவுக்கு பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீஃப் இரங்கல் தெரிவித்துள்ளார், காலிதா ஜியாவின் பங்களிப்புகள் நினைவுகூரப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.

ஷாபாஸ் ஷெரீஃப் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், "வங்கதேச தேசியவாத கட்சியின் தலைவரும் அந்நாட்டின் முன்னாள் பிரதமருமான பேகம் காலிதா ஜியாவின் மறைவை அறிந்து நான் மிகுந்த வேதனையடைந்தேன்." என தெரிவித்துள்ளார்.

"வங்கதேசத்தின் வளர்ச்சிக்கு அவர் ஆற்றிய பங்களிப்புகள் நினைவுகூரப்படும்."

"பாகிஸ்தானின் நல்ல நண்பர் பேகம் ஜியா. பாகிஸ்தான் அரசு மற்றும் மக்கள் இந்த வேதனையான தருணத்தில் வங்கதேச மக்களுடன் துணைநிற்கிறது."

"ஜியாவின் குடும்பம், நண்பர்கள் மற்றும் வங்கதேச மக்களுக்கு இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். இந்த இக்கட்டான சூழலில் எங்களின் பிரார்த்தனை அவர்களுடன் இருக்கிறது."

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு