டெல்லி சிறையில் உள்ள உமர் காலித்துக்கு நியூயார்க் மேயர் எழுதிய குறிப்பால் புதிய சர்ச்சை - பாஜக கூறியது என்ன?

சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (UAPA) கீழ் 2020-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் மாணவர் தலைவர் உமர் காலித்துக்கு, நியூயார்க் நகர மேயர் ஜோஹ்ரான் மம்தானி தனது ஆதரவைத் தெரிவித்துள்ளார்.

உமர் காலித்துக்கு கைப்பட ஒரு குறிப்பை எழுதியுள்ள மம்தானி, "நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று அதில் குறிப்பிட்டுள்ளார்.

நியூயார்க் நகர மேயராக மம்தானி பதவியேற்ற பிறகு, உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி இந்த குறிப்பை வியாழக்கிழமை அன்று சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கில் சிறையில் இருக்கும் உமர் காலித்துக்கு, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் டெல்லி உயர்நீதிமன்றம் ஜாமீன் வழங்க மறுத்தது.

இருப்பினும், டிசம்பர் மாதம் அவரது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்ள அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது.

பாஜக கூறியது என்ன?

பாரதிய ஜனதா செய்தித் தொடர்பாளர் கௌரவ் பாட்டியா செய்தியாளர் சந்திப்பு ஒன்றில் உமர் காலித்திற்கு மம்தானி எழுதிய குறிப்பு பற்றி பேசுகையில், "எந்தவொரு நபரும் குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஆதரவாக எதையாவது கூறினாலோ அல்லது இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்து தெரிவித்தாலோ, அது பொறுத்துக்கொள்ளப்படாது. இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் இந்திய நீதித்துறை மீது முழு நம்பிக்கை உள்ளது. நமது ஜனநாயகம் மற்றும் நீதித்துறையைக் கேள்வி கேட்க இந்த வெளிநாட்டவர் யார்?" என்று கூறினார்.

இந்தியாவைத் துண்டுதுண்டாகப் பிரிக்க விரும்புபவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது மிகவும் 'வருத்தமளிக்கிறது' என்றும் கௌரவ் பாட்டியா கூறினார்.

"இந்தியாவின் இறையாண்மை என்று வரும்போது, ​​140 கோடி இந்தியர்களும் நரேந்திர மோதியுடன் துணை நிற்பார்கள்." என்றார் அவர்.

ஜோஹ்ரான் மம்தானி என்ன எழுதியுள்ளார்?

உமர் காலித்தின் துணைவர் பனோஜோத்ஸ்னா லஹிரி, மேயர் மம்தானியின் குறிப்பை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

மம்தானி எழுதியுள்ள அந்தக் குறிப்பில், "அன்புள்ள உமர், கசப்புணர்வு குறித்தும், அது நம்மை ஆக்கிரமிக்க விடாமல் தடுப்பதன் முக்கியத்துவம் குறித்தும் நீங்கள் கூறிய வார்த்தைகளை நான் அடிக்கடி நினைத்துப் பார்க்கிறேன். உங்கள் பெற்றோரைச் சந்தித்ததில் எனக்கு மகிழ்ச்சி. நாங்கள் அனைவரும் உங்களுடன் இருக்கிறோம்," என்று குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழிடம் பேசிய பனோஜோத்ஸ்னா லஹிரி, ''11,700 கிலோமீட்டர் தூரம் இருந்தபோதிலும், இந்த கைப்பட எழுதப்பட்ட குறிப்பு சிறையிலுள்ள உமர் காலித்துக்கும், நியூயார்க் நகரத்தின் இந்திய வம்சாவளி மேயர் ஜோஹ்ரான் மம்தானிக்கும் இடையே ஒரு உணர்ச்சிகரமான பிணைப்பை உருவாக்கியுள்ளது'' என்று கூறினார்.

மேலும், "உமரின் பெற்றோர் மம்தானியையும் வேறு சிலரையும் அமெரிக்காவில் சந்தித்தனர். அவர்கள் அவர்களுடன் நீண்ட நேரம் செலவிட்டனர். அந்தச் சமயத்தில்தான் மம்தானி இந்தக் குறிப்பை எழுதினார்," என்றும் தெரிவித்துள்ளார்.

உமர் காலித் தனது சகோதரியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக மூன்று வாரங்களுக்கு முன்பு வீட்டிற்கு வந்திருந்தார்.

ஜாமீன் நிபந்தனைகள் காரணமாக, உமர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியவில்லை என்றும், அவர் தனது முழு நேரத்தையும் வீட்டிலேயே கழித்ததாகவும் லஹிரி கூறினார்.

அவரது கூற்றுப்படி, உமரின் பெற்றோர் கடந்த டிசம்பர் மாதம் அமெரிக்காவிற்குச் சென்று மம்தானி உட்பட பலரைச் சந்தித்தனர்.

உமரின் பெற்றோரான சஹிபா கானம் மற்றும் சையத் காசிம் ரசூல் இலியாஸ் ஆகியோர், அமெரிக்காவில் வசிக்கும் தங்களது மூத்த மகளைச் சந்திப்பதற்காக அங்கு சென்றிருந்தனர். அவர்களது மூத்த மகள் தனது தங்கையின் திருமணத்தில் கலந்து கொள்ள முடியாத நிலையில் இருந்ததால், திருமணத்திற்கு முன்பாக அவர்கள் இந்தப் பயணத்தை மேற்கொண்டனர் என்கிறார் அவர்.

உமர் காலித் எப்போது கவனம் பெற்றார்?

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் முனைவர் பட்ட மாணவரான உமர் காலித், டெல்லி கலவரம் தொடர்பான சதி குற்றச்சாட்டில் 2020 செப்டம்பரில் கைது செய்யப்பட்டார்.

டெல்லி உயர் நீதிமன்றம் ஒரு முதல் தகவல் அறிக்கையில் அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளிலிருந்து அவரை விடுவித்திருந்தாலும், UAPA (சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்பு சட்டம்) கீழ் பதிவு செய்யப்பட்ட மற்றொரு வழக்கில் அவர் இன்னும் நீதிமன்றக் காவலில் உள்ளார்.

கடந்த ஐந்து ஆண்டுகளில் அவரது ஜாமீன் மனுக்கள் பலமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. டிசம்பர் 2025-இல், உச்ச நீதிமன்றம் இந்த வழக்கின் தீர்ப்பைத் ஒத்திவைத்தது.

மம்தானி இதற்கு முன்பும் வெளிப்படையாக உமர் காலிதுக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

ஜூன் 2023-இல், பிரதமர் நரேந்திர மோதியின் அமெரிக்கப் பயணத்திற்கு முன்னதாக நியூயார்க்கில் நடைபெற்ற 'ஹவ்டி டெமாக்ரஸி' நிகழ்வில், உமர் காலித் சிறையிலிருந்து எழுதிய குறிப்புகளின் பகுதிகளை மம்தானி வாசித்தார்.

"வெறுப்பு மற்றும் கும்பல் கொலைகளுக்கு எதிராகப் பிரசாரம் செய்த டெல்லி ஜே.என்.யு ஆராய்ச்சி மாணவர் உமர் காலித்தின் கடிதத்தை நான் வாசிக்கப் போகிறேன். அவர் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் கீழ் சட்டத்தின் கீழ் 1,000 நாட்களுக்கும் மேலாக சிறையில் உள்ளார். அவரது ஜாமீன் மனுக்கள் மீண்டும் மீண்டும் நிராகரிக்கப்பட்ட நிலையில், அவரது வழக்கு விசாரணை இன்னும் தொடங்கவில்லை," என்று மம்தானி அப்போது மக்களிடையே பேசினார்.

உமர் காலித்தின் பெயர் முதன்முதலில் பிப்ரவரி 2016-இல் மாணவர் தலைவர் கன்ஹையா குமாருடன் இணைந்து தலைப்புச் செய்திகளில் இடம் பெற்றது.

அதற்குப் பிறகு, பல்வேறு விவகாரங்கள் மற்றும் அவர் வெளியிட்ட சில கருத்துகளால், உமர் காலித் தொடர்ந்து செய்திகளில் இடம் பெற்றுவருகிறார்.

மேலும், ஊடகங்கள் தன்னைப் பற்றிய ஒரு குறிப்பிட்ட பிம்பத்தை உருவாக்கியுள்ளன, அதன் காரணமாக சிலரின் வெறுப்புக்குப் பலியாகி வருகிறேன் என்று உமர் காலித் பலமுறை கூறியுள்ளார்.

2020 ஜனவரியில், உமர் காலித் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவுக்கு சவால் விடுத்து, '''டுக்டே-டுக்டே' கும்பலை தண்டிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உண்மையாக இருந்தால், மேலும் அவர் சொல்வதில் நேர்மையானவராக இருந்தால், 'டுக்டே-டுக்டே' உரை தொடர்பாக என்னை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய வேண்டும். அதற்குப் பிறகு, யார் வெறுப்பு பேச்சு பேசினார், யார் துரோகி என்பதும் தெளிவாகி விடும்." என்றார்

ஜூலை 2016-இல் ஹிஸ்புல் கமாண்டர் புர்ஹான் வானி கொல்லப்பட்டதைத் தொடர்ந்து காஷ்மீர் பள்ளத்தாக்கில் பரவலான வன்முறையும் போராட்டங்களும் வெடித்தன.

புர்ஹான் வானியின் இறுதி ஊர்வலத்தில் பெரும் கூட்டம் கூடியது.

அதனைத் தொடர்ந்து, ஃபேஸ்புக்கில் புர்ஹான் வானியைப் புகழ்ந்து உமர் காலித் ஒரு பதிவை எழுதியிருந்தார். அது பரவலாக விவாதிக்கப்பட்டது.

விமர்சனங்கள் அதிகரித்ததைத் தொடர்ந்து, சிறிது நேரத்திலேயே அந்தப் பதிவை உமர் காலித் நீக்கிவிட்டார்.

இருப்பினும், அதற்குள் சமூக ஊடகங்களில் எதிர்ப்புகள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அதே சமயம், பலரும் அவருக்கு ஆதரவாக நின்றனர்.

ஆகஸ்ட் 2018-இல், டெல்லி கான்ஸ்டிடியூஷன் கிளப் வெளியே அடையாளம் தெரியாத சிலரால் உமர் காலித் சுடப்பட்டதாகக் கூறப்படுகிறது. 'அச்சமில்லாத சுதந்திரத்தை நோக்கி' என்ற நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக அவர் அங்கு சென்றிருந்தார்.

வெள்ளை சட்டை அணிந்த ஒருவர் உமர் காலித்தை அணுகி, அவரைத் தள்ளிவிட்டு துப்பாக்கியால் சுட்டதாக நேரில் பார்த்தவர்கள் தெரிவித்தனர். இருப்பினும், உமர் காலித் கீழே விழுந்ததால் அவர் மீது குண்டு படவில்லை.

இந்தச் சம்பவத்திற்குப் பிறகு உமர் காலித் கூறுகையில், "அவர் என் மீது துப்பாக்கியை நீட்டியபோது நான் பயந்தேன், ஆனால் கௌரி லங்கேஷுக்கு என்ன நடந்தது என்பது எனக்கு நினைவுக்கு வந்தது," என்றார்.

காலித்துக்கு ஆதரவாக அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள்

மம்தானியைத் தவிர, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் பலர் உமர் காலிதுக்குத் தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஜிம் மெக்கவர்ன் மற்றும் ஜேமி ராஸ்கின் தலைமையில் உமர் காலித்துக்கு ஆதரவாக ஒரு கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

அமெரிக்காவிற்கான இந்திய தூதர் வினய் மோகன் குவாத்ராவுக்கு எழுதிய கடிதத்தில், உமர் காலித்துக்கு ஜாமீன் வழங்குமாறு இந்திய அதிகாரிகளுக்கு இவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், காலித்தின் வழக்கு விசாரணையை உடனடியாகத் தொடங்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

மெக்கவர்ன் மற்றும் ராஸ்கின் ஆகியோருடன் இணைந்து கிரிஸ் வான் ஹோலன், பீட்டர் வெல்ச், பிரமிளா ஜெயபால், ஜான் ஷாகோவ்ஸ்கி, ரஷிதா த்லைப் மற்றும் லாயிட் டோகெட் ஆகிய ஜனநாயகக் கட்சியை சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

மேலும், விசாரணை ஏதுமின்றி காலித் தொடர்ந்து காவலில் வைக்கப்படுவது சர்வதேச சட்ட நெறிமுறைகளை மீறும் செயல் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

மெக்கவர்ன் இந்தக் கடிதத்தை எக்ஸ் சமூக ஊடகத் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

இம்மாத தொடக்கத்தில் உமர் காலித்தின் பெற்றோரைச் அமெரிக்காவில் சந்தித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க மக்கள் பிரதிநிதிகளின் இந்தக் கடிதம் குறித்து கருத்து தெரிவித்துள்ள இந்தியாவின் முன்னாள் வெளியுறவுச் செயலாளர் கன்வல் சிபல், இது இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடும் செயல் என்று கூறியுள்ளார்.

இதுகுறித்து கன்வல் சிபல் எக்ஸ் தளத்தில் கூறுகையில், "இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் அமெரிக்க அரசியல்வாதிகள் மேற்கொள்ளும் இத்தகைய தலையீடுகள், ஏற்கனவே டிரம்பின் கொள்கைகளால் கடும் அழுத்தத்தில் இருக்கும் இந்தியா-அமெரிக்க உறவுகளை மேலும் மோசமாக்குகின்றன" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், "இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் செனட்டர்கள் இந்தியாவில் உள்ள தீவிரவாதிகள் மற்றும் பயங்கரவாதிகளின் செய்தித் தொடர்பாளர்களாக மாறுவதற்குப் பதிலாக, அமெரிக்காவின் சொந்தப் பிரச்னைகளில் கவனம் செலுத்த வேண்டும். இத்தகைய வெளிநாட்டுத் தலையீடுகள் இந்தியாவில் உள்ள தேசவிரோத சக்திகளுக்கு எதிராகவே அமையும், ஏனெனில் தேசவிரோத சக்திகள் இந்தியாவின் பாதுகாப்பைக் குறிவைக்கும் ஒரு பெரிய அமைப்பின் அங்கமாகக் கருதப்படுகிறார்கள்" என்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு