நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் விமர்சனம்: தனுஷ் இயக்கிய 3வது படம் எப்படி இருக்கிறது?

பட மூலாதாரம், Wunderbar Films
தனுஷ் இயக்கத்தில் பவிஷ் நாராயணன், மேத்யூ தாமஸ், அனிகா சுரேந்திரன், பிரியா பிரகாஷ் வாரியர் போன்ற இளம் தலைமுறை நடிகர்கள் நடிப்பில் 'நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்' திரைப்படம் இன்று (பிப்ரவரி 21) திரையரங்குகளில் வெளியானது.
இந்தப் படத்தில் சரத்குமார், சரண்யா பொன்வண்ணன் ஆகிய மூத்த கலைஞர்களும் நடித்துள்ளனர்.
பவர் பாண்டி, ராயன் ஆகிய படங்களுக்குப் பிறகு தனுஷ் மூன்றாவது முறையாக இந்தப் படத்தில் இயக்குநராகக் களமிறங்கியுள்ளார். இந்தப் படத்தை தனுஷ் மற்றும் அவரது பெற்றோரான கஸ்தூரி ராஜா, விஜயலக்ஷ்மி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையில் இந்தப் படத்தின் பாடல்கள் ஏற்கெனவே வெளியாகி ரசிகர்களின் ஆர்வத்தைக் கூட்டியது. அடுத்து டிரெய்லரும் வெளியாகி ஜென் Z தலைமுறையினரின் காதல் வாழ்க்கையைப் பிரதிபலிக்கும் ஒன்றாக இந்தப் படம் இருக்கும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.
அந்த எதிர்பார்ப்புகளை இந்தப் படம் பூர்த்தி செய்ததா? படம் எப்படி இருக்கிறது என்பது குறித்து ஊடக விமர்சனங்கள் கூறுவது என்ன?

படத்தின் கதை என்ன?
சமையல் கலை மாணவரான பிரபு (பவிஷ்) ஒரு பார்ட்டியில் நிலாவை(அனிகா) சந்திக்கிறார். இருவரும் காதலித்து வந்த நிலையில், ஒரு கட்டத்தில் குடும்ப சூழ்நிலையின் காரணமாக அவர்களின் உறவு முறிகிறது.
இந்நிலையில் தனது பள்ளிப் பருவ தோழியான ப்ரீத்தியுடன் (பிரியா வாரியர்) பிரபுவுக்கு திருமணம் நிச்சயிக்கப்படுகிறது. ஆனால் நிலாவுடனான தனது காதலை பிரபுவால் மறக்க முடியவில்லை.
சில மாதங்கள் கழித்து நிலாவின் திருமண அழைப்பிதழ் பிரபுவுக்கு கிடைக்கிறது. அந்தத் திருமணத்துக்குச் செல்லுமாறு ப்ரீத்தி பிரபுவை கோவா அனுப்பி வைக்கிறார். இதன் பிறகு என்ன நடக்கிறது என்பதே படத்தின் கதை.
இளம் தலைமுறையின் காதல் கதை

பட மூலாதாரம், Wunderbar Films
"தமிழ் சினிமாவில் எப்போதும் இருக்கும் காதல் கதைகளில் இருந்து மாறுபட்டு புத்துணர்ச்சியூட்டும் வகையில் இந்தத் திரைப்படம் இருக்கிறது. அது மட்டுமின்றி, காதல் மற்றும் திருமணம் குறித்து தற்போதைய இளம் தலைமுறையினரின் அணுகுமுறையை பிரதிபலிக்கும் வகையில் இந்தப் படத்தை தனுஷ் உருவாக்கியுள்ளார்" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா இந்தப் படம் குறித்து தெரிவித்துள்ளது.
"இந்தப் படத்தை எழுதி இயக்கிய தனுஷ், தனது திரைப்படங்கள் மற்றும் தனிப்பட்ட வாழ்வில் இருந்து குறிப்புகளை இந்தப் படத்தில் பயன்படுத்தியுள்ளார். ரிங்டோனில் வேலையில்லா பட்டதாரி படத்தின் 'ஊதுங்கடா சங்கு' பாடல் மற்றும் நாய்க்கு 'ஹாரி பாட்டர்' என்ற பெயர், இளையராஜாவா ஏ.ஆர்.ரஹ்மானா என்ற விவாதம் போன்ற தனுஷின் படங்களில் இருந்து பல குறிப்புகள் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ளன," என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் குறிப்பிட்டுள்ளது.
ஆனால், டிரெய்லரின் துள்ளலும் சுவாரஸ்யமும் படத்தின் பெரும்பாலான இடங்களில் தென்படவில்லை என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
அதன் விமர்சனத்தில், "ஒரு கதைக்கு உணர்ச்சிப்பூர்வமான தொடர்பு மிகவும் முக்கியம். அது இந்தப் படத்தில் எந்த இடத்திலும் கைகொடுக்கவில்லை. நாயகன் காதலில் விழும்போதும், பிரிவைச் சந்திக்கும்போது, அழும்போதும், சிரிக்கும்போதும் அது படம் பார்ப்பவர்கள் மீது எந்தவித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை" என்று விமர்சித்துள்ளது.
படத்தில் நடிப்பு எப்படி?

பட மூலாதாரம், Wunderbar Films
"தனுஷின் சகோதரியின் மகனான பவிஷ் கிட்டத்தட்ட தனுஷின் க்ளோன் போலவே இருக்கிறார். தனுஷ் போலவே பேசுகிறார். தனுஷ் போலவே ஆடுகிறார். ஏற்கெனவே ஒரு தனுஷ் இருக்கும்போது இன்னொரு தனுஷ் எதற்கு எனத் தோன்றுவதைத் தடுக்க இயலவில்லை" என்றும் இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
அதோடு, "படம் முழுக்க ஹீரோவின் நண்பனாக கலக்கியுள்ளார் மேத்யூ தாமஸ். அவரது கவுன்டர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இரண்டாம் பாதியில் கோவாவில் அவருக்கான காட்சிகள் சரவெடியாக இருந்தன," என்றும் பாராட்டியுள்ளது.
"அனிகா, தனது கதாப்பாத்திரத்துக்கு இளமையாகத் தெரிகிறார். ஒரு பதின்பருவ பெண்ணை தனது வயதைவிட மூத்த கதாபாத்திரத்தில் நடிக்க வைத்தது போல இருக்கிறது. ஹீரோ-ஹீரோயின் இடையிலான கெமிஸ்ட்ரியும் காதலை வெளிப்படுத்தவில்லை; மாறாக சகோதர-சகோதரி போன்ற உணர்வையே தருகிறது" என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா விமர்சித்துள்ளது.
அதேவேளையில், "மற்ற நடிகர்கள் தங்களுடைய கதாபாத்திரங்களுக்கு ஏற்ப சிறப்பாக நடித்துள்ளனர். இந்தப் படம் தமிழ் சினிமாவுக்கு புதிய நடிகர்களை வழங்கும் வகையில் கட்டமைக்கப்பட்டுள்ளது" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் குறிப்பிட்டுள்ளது.
'புது வகை ரொமான்ஸ்'

பட மூலாதாரம், Wunderbar Films
"பவர் பாண்டி படத்தில் முதியவர்களின் காதலையும், ராயன் படத்தில் இயல்பான ஒரு காதலையும் இயக்கிய தனுஷ், இந்தப் படத்தில் ஒரு வித்தியாசமான ரொமான்ஸ் கதையை இயக்கியுள்ளார். ஆனால் இந்த வகை காதலை அவர் முழு வீச்சில் கையாளவில்லை" என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சித்துள்ளது.
"லியோன் பிரோட்டோவின் ஒளிப்பதிவு ஒரு காட்சியில் நன்றாக இருந்தாலும், மற்றொன்றில் அது எடுபடவில்லை. ஜி.கே. பிரசன்னாவின் படத்தொகுப்பு படத்தைத் தளர்வாக்குகிறது மற்றும் கதாபாத்திரங்களின் உணர்ச்சிகளை ஆழமாகப் பதிய வைக்கவில்லை.
இதன் விளைவு என்னவென்றால், யூட்யூப் வீடியோ அல்லது இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் போன்றே ஒரு படத்தைப் பார்ப்பது போன்ற தாக்கத்தை ஏற்படுத்துகிறது," என்று டைம்ஸ் ஆஃப் இந்தியா குறிப்பிட்டுள்ளது.
"ஜி.வி.பிரகாஷின் பாடல்களும், பின்னணி இசையும் சிறப்பு. 2கே தலைமுறையின் வாழ்வியலைப் படமாக எடுக்க வேண்டும் என்ற தனுஷின் முடிவு, தகுந்த திரைக்கதை அமைப்பு இல்லாததாலும், நடிகர்களின் சிறப்பான நடிப்பைப் பெறாததாலும், இந்த 'வழக்கமான காதல் கதை' ஒரு 'அவுட்டேட்டட்' காதல் கதையாக மாறிவிட்டது" என்று இந்து தமிழ் திசை விமர்சித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












