முஸ்லிம்கள் பற்றிய பிரதமர் மோதியின் பேச்சு - சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

பட மூலாதாரம், JAGADEESH NV/EPA-EFE/REX/SHUTTERSTOCK
இந்தியாவில் மக்களவைத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில், இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வெள்ளிக்கிழமை நடைபெற உள்ளது. அடுத்தகட்ட வாக்குப் பதிவுக்கான தேர்தல் பிரசாரம் மும்முரமாக நடந்து வருகிறது.
தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சிக்கு வர ஆளும் கட்சியான பாஜக தீவிரமாகப் பிரசாரம் செய்து வருகிறது. அதே நேரம், காங்கிரசும் தேர்தலில் வெற்றிபெற, முழு முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இப்படியான சூழலில், அரசியல் கட்சித் தலைவர்களின் பேச்சுகள், பிற கட்சித் தலைவர்கள் குறித்து வெளியிடும் அறிக்கைகள் ஆகியவை செய்தி ஊடகங்களில் ஒவ்வொரு நாளும் தலைப்புச் செய்திகளாகின்றன.
குறிப்பாக, முதல்கட்ட வாக்குப்பதிவுக்குப் பிறகு பிரதமர் மோதி ஆற்றிய உரை விவாதப் பொருளாக மாறியது. இந்திய ஊடகங்கள் மட்டுமின்றி சர்வதேச ஊடகங்களும் மோதியின் மேடைப் பேச்சை விமர்சித்து வருகின்றன.
பிரதமர் மோதியின் உரையில் குறிப்பிட்ட சில வார்த்தைகள் பயன்படுத்தப்பட்டதால், தேர்தல் ஆணையத்திடம் அவர் மீது புகார் செய்யவும் இந்தப் பேச்சு காரணமாக அமைந்தது. மோதி மீது தேர்தல் ஆணையத்திடம் புகார் அளித்துள்ள காங்கிரஸ் தலைவர்கள், நாட்டில் வெறுப்பு விதைகளை பிரதமர் விதைத்து வருவதாகக் குறிப்பிட்டுள்ளனர்.
காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேசுகையில், “மக்கள் பிரதிநிதித்துவ சட்டம், உச்சநீதிமன்ற முடிவுகள், தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவது உள்ளிட்டவை தொடர்பாக தேர்தல் ஆணையத்திடம் 16 புகார்களை அளித்துள்ளோம்,” என்றார்.
பஞ்சாபில் பாஜகவின் கூட்டணிக் கட்சியான சிரோமணி அகாலி தளத்தின் தலைவர் சுக்பீர் சிங் பாதலும் பிரமர் மோதியின் உரையை விமர்சித்துள்ளார். ”அமைதி மற்றும் இனவாத ஒருங்கிணைப்பைப் பாதுகாப்பது என்பதை சர்தார் பிரகாஷ் சிங் பாதலிடம் இருந்து பிரதமரும் பாஜகவும் கற்றுக்கொள்ள வேண்டும்,” என்று குறிப்பிட்டார்.
பிரதமர் மோதி கூறியது என்ன?
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
முதல் கட்ட வாக்குப்பதிவு ஏப்ரல் 19ஆம் தேதி முடிவடைந்ததைத் தொடர்ந்து, ஏப்ரல் 21ஆம் தேதி ராஜஸ்தான் மாநிலம் பன்ஸ்வாராவில் நடைபெற்ற தேர்தல் பரப்புரையில் பேசிய பாஜக தலைவரும், பிரதமருமான நரேந்திர மோதி, முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையை மேற்கோள் காட்டி முஸ்லிம்கள் குறித்து கருத்து தெரிவித்தார்.
பிரதமர் மோதி தனது உரையில், ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரைப் பற்றி 'நாட்டுக்குள் ஊடுருவியவர்கள்” என்றும் ”அதிக குழந்தைகளைப் பெற்றவர்கள்” என்றும் பேசினார்.
மோதி தனது உரையில், "முன்பு, அவர்களது அரசு ஆட்சியில் இருந்தபோது, நாட்டின் சொத்தில் முஸ்லிம்களுக்கே முதல் உரிமை என்று கூறினர். அதாவது சொத்துகளை வசூலித்த பிறகு, அதை யாருக்குப் பங்கிட்டுக் கொடுப்பார்கள்?
அதிக குழந்தை பெற்றவர்களுக்கும் நாட்டில் ஊடுருவியவர்களுக்கும் சொத்தைப் பகிர்ந்தளிப்பதில் உங்களுக்குச் சம்மதமா? உங்கள் கடின உழைப்பில் சம்பாதித்த பணம் நாட்டுக்குள் ஊடுருவியவர்களுக்கு வழங்கப்படும் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்களா?”
“காங்கிரஸ் தேர்தல் அறிக்கையின்படி, தாய்மார்கள், சகோதரிகள் ஆகியோரிடம் இருக்கும் தங்கத்தைக் கணக்கிட்டு, அதைப் பற்றிய தகவல்களைப் பெற்று, பின்னர் மன்மோகன் சிங் அரசு ‘சொத்தில் முஸ்லிம்களுக்கு முதல் உரிமை உண்டு’ என்று சொன்னதைப் போல பகிர்ந்தளிப்போம் என்று கூறுகிறது. சகோதர, சகோதரிகளே, இந்த 'அர்பன் நக்சல்' எண்ணங்கள் உங்கள் தாலியைக்கூட விட்டு வைக்காது. அவர்கள் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் செல்வார்கள்," என்றார்.
ஆனால், பிரதமர் மோதி குறிப்பிட்டுள்ள மன்மோகன் சிங்கின் 18 ஆண்டு காலத்துக்கு முந்தைய உரையில், முஸ்லிம்களுக்கு முதல் உரிமை வழங்குவது குறித்து மன்மோகன் சிங் பேசவில்லை.
கடந்த 2006ஆம் ஆண்டு மன்மோகன் சிங் கூறியதாவது: “பட்டியலிடப்பட்ட சாதிகள் மற்றும் பழங்குடியினருக்கு மறுமலர்ச்சி தேவை. புதிய திட்டங்களைக் கொண்டு வந்து சிறுபான்மையினர், குறிப்பாக முஸ்லிம்கள் முன்னேற்றம் அடையவும், வளர்ச்சியின் பலன்களைப் பெறவும் உறுதி செய்யவேண்டும். அவர்கள் அனைத்து வளங்களிலும் முதல் பாத்தியதை பெற வேண்டும்,” என்றார்.
மன்மோகன் சிங் ஆங்கிலத்தில் ஆற்றிய உரையில் 'கிளைம்' என்ற வார்த்தையைப் பயன்படுத்தியிருந்தார்.
சர்வதேச ஊடகங்கள் சொல்வது என்ன?

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து கடந்த ஏப்ரல் 22ஆம் தேதி அமெரிக்க நாளிதழான 'வாஷிங்டன் போஸ்ட்' தனது இணையதளத்தில், ”தேர்தல் பொதுக் கூட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்ததாக மோதி மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது,” என்ற தலைப்பில் கட்டுரை ஒன்றை வெளியிட்டது.
அந்தக் கட்டுரையில் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள பிரதமர் மோதியின் உரையை வெளியிட்டதுடன் அதற்கு காங்கிரஸின் எதிர்வினை பற்றியும் வாஷிங்டன் போஸ்ட் விவரித்துள்ளது. மேலும், இது தொடர்பாக காங்கிரஸ் கட்சி சார்பில் ஏப்ரல் 22ஆம் தேதி தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டதாக காங்கிரஸ் தலைவர் அபிஷேக் மனு சிங்வி தெரிவித்துள்ளார் எனவும் குறிப்பிட்டுள்ளது.
மோதி, ஏப்ரல் 22 அன்று உத்தர பிரதேசத்தின் அலிகாரில் பன்ஸ்வாராவில் முஸ்லிம்களை குறிப்பிட்டுப் பேசியதைப் போன்று, மற்றொரு உரையை நிகழ்த்தினார் என்றும் வாஷிங்டன் போஸ்ட் எழுதியுள்ளது.
இந்தக் கட்டுரையில் இந்தியாவின் குடியுரிமை சட்டம் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளனர். இந்தச் சட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாக நாட்டில் சர்ச்சை எழுந்ததாக எழுதப்பட்டுள்ளது. இந்தச் சட்டம், நாட்டின் மதச்சார்பின்மையின் அடிப்படைக் கோட்பாடுகளில் இருந்து வேறுபட்டு, மதத்தின் அடிப்படையில் குடியுரிமை வழங்குவது பற்றிப் பேசுவதாக விமர்சிக்கப்பட்டுள்ளது.
'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' என்ற சீன செய்தி இணையதளம், தேர்தலில் வெற்றி பெறுவதற்காக மோதி முஸ்லிம்களுக்கு எதிராகப் பேச ஆரம்பித்துவிட்டார் எனத் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளது.
`பாஜகவின் செயல்பாடுகள் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப இல்லை என்ற பாஜகவின் கூற்றுகளுக்கு மத்தியில், பிரதமர் மோதி மீண்டும் தேர்தல் பிரசாரங்களில் மத அரசியலைக் கையில் எடுக்கிறார். மேலும் இந்திய முஸ்லிம்களுக்கு எதிரான தனது வெறுப்பு பிரசாரத்தைத் தீவிரப்படுத்தியுள்ளார்’ என்றும் அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளனர். அவரது பரப்புரைகள் காரணமாக, தேர்தல் விதிமுறைகள், நடத்தை விதிகள் ( code of conduct) மீறப்பட்டதாக விமர்சனங்கள் எழுந்துள்ளன."
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் இணைப் பேராசிரியர் அஜய் குடபோர்த்தி ,"மக்கள் இப்போது சலிப்படைந்துவிட்டனர், இந்து-முஸ்லீம் பிரச்னை தேர்தல் களத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தாது" என்று பேசியதை 'சௌத் சைனா மார்னிங் போஸ்ட்' வெளியிட்ட கட்டுரையில் மேற்கோள் காட்டியுள்ளது.

பட மூலாதாரம், ANI
அரசியல் ஆய்வாளர் அபூர்வானந்த் "முஸ்லிம்களுக்கு எதிராக இனவாத வெறுப்பு உணர்வுகளைத் தூண்டுவதையே மோதி தொடர்ந்து செய்து வருகிறார். தேர்தல் பிரசாரம் தொடங்கியதில் இருந்து முஸ்லிம்களுக்கு எதிரான கருத்துகளைப் பேசி வருகிறார். ஆனால், ஊடகங்களில் அவை காட்டப்படுவதில்லை.
உதாரணத்திற்கு, உத்தர பிரதேசத்தில் ஓர் உரையில், முஸ்லிம்களால் இந்துக்கள் வீடுகளை விட்டு வெளியேற நேரிடுகிறது என்று மோதி குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸின் தேர்தல் அறிக்கை குறித்து, 'அதன் ஒவ்வொரு பக்கமும் நாட்டைத் துண்டு துண்டாக உடைப்பதைப் பற்றிப் பேசுகிறது' என்றும் மோதி பேசினார்.” இவ்வாறு அபூர்வானந்த் பேசியதையும் சீன இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.
'டைம்' பத்திரிகையும் இதுகுறித்து கட்டுரை வெளியிட்டுள்ளது. இந்தியாவின் மக்கள்தொகை 1.44 பில்லியன் என்றும், அண்டை நாடான வங்கதேசம் மற்றும் மியான்மர் ஆகிய நாடுகளைச் சேர்ந்த முஸ்லிம்கள் உட்பட ஒட்டுமொத்த முஸ்லிம் சமூகத்தையும் வெளிநாட்டினராகப் பார்ப்பதற்காக மோதியின் பாஜக மீது விமர்சனம் எழுந்துள்ளதாக அந்தக் கட்டுரையில் பதிவு செய்துள்ளது.
மோதியின் கருத்துகள் பிளவுபடுத்தும் இந்து தேசியவாதத்தின் அடிப்படையிலானது என்றும், அதன் வேர்கள் ஆளும் பாஜகவுடன் இணைந்திருப்பதாகவும் விமர்சகர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். மூன்றாவது முறையாக ஆட்சி அமைக்கப் போவதாக பாஜக கூறுவதாக அந்தக் கட்டுரையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பட மூலாதாரம், ANI
`அமெரிக்காவில் உள்ள முஸ்லிம்களின் உரிமைகளுக்காகப் பணியாற்றும் குழுவான 'கவுன்சில் ஆஃப் அமெரிக்கன் இஸ்லாமிக் ரிலேஷன்ஸ்' (சிஏஐஆர்) வெளியிட்டுள்ள அறிக்கையில், மோதியின் பேச்சு விமர்சிக்கப்பட்டுள்ளது’ என்றும் டைம்ஸ் கட்டுரையில் எழுதப்பட்டுள்ளது.
முஸ்லிம்கள் மற்றும் சிறுபான்மையினரை வித்தியாசமாக நடத்துவதால் இந்தியாவை "குறிப்பிட்ட அக்கறை கொண்ட நாடு" (Country of Particular Concern) என்ற பட்டியலில் சேர்க்குமாறு அமெரிக்க அதிபர் ஜோ பைடனை அந்த அமைப்பு கேட்டுக் கொண்டுள்ளது.
`கடந்த 2002ஆம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது, குஜராத்தில் நரேந்திர மோதியின் ஆட்சி இருந்தது. பின்னர் 2005ஆம் ஆண்டு அமெரிக்கா அவரை நாட்டிற்குள் நுழையத் தடை விதித்தது’ என்ற தகவலும் அந்தக் கட்டுரையில் சேர்க்கப்பட்டுள்ளது.
வாஷிங்டனில் உள்ள 'இந்தியா ஹேட் லேப்' என்ற ஆய்வுக் குழுவின் தரவையும் இந்த இதழ் தனது கட்டுரையில் இணைத்துள்ளது. இந்தக் குழு இந்தியாவில் மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்புப் பேச்சுகளைக் கண்காணித்து வருகிறது.
அதன் அறிக்கைப்படி, `2023ஆம் ஆண்டில் நாட்டில் இதுபோன்ற 668 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன, அவற்றில் 255 வழக்குகள் 2023 முதல் ஆறு மாதங்களில் பதிவாகியுள்ளன. அடுத்த ஆறு மாதங்களில், இதுபோன்ற 413 வழக்குகள் பதிவாகியுள்ளன. இது முந்தைய ஆறு மாதங்களைவிட 63 சதவீதம் அதிகம்.’

பட மூலாதாரம், Getty Images
இதுகுறித்து நியூயார்க் டைம்ஸ் ஊடகமும் ஏப்ரல் 23ஆம் தேதி செய்தி வெளியிட்டது. அந்த இணையதளம் வெளியிட்ட செய்தியின் தலைப்பு - ” மோதி இந்திய முஸ்லிம்களை ‘ஊடுருவியர்கள்’ என்று ஏன் அழைக்கிறார்? ஏனெனில் அவரால் அது முடியும்”
”அவரது ஆட்சி பாதுகாப்பானது என்று கருதி, பிரதமர் மோதி நாட்டின் பொருளாதாரம் மற்றும் ராஜ்ஜீய மட்டத்தில் வளர்ச்சிக்கான உலகளாவிய தலைவராக தன்னைக் காட்டிக் கொள்கிறார். இதன் மூலம் கட்சியில் நிலவும் பிளவு மனப்பான்மையில் இருந்து தன்னை விலக்கிக் கொள்கிறார்.”
”இதற்கிடையில், அடிப்படைவாத குழுக்கள் இந்து அல்லாத சமூகங்களைக் குறிவைத்துப் பேசுகின்றனர், அவரது சொந்த கட்சியைச் சேர்ந்தவர்களே இனவாத மற்றும் வெறுப்பு பேச்சுகளை நாடாளுமன்றத்தில் பேசுகின்றனர். இதுபோன்ற விஷயங்களில் அவர் அமைதியாகி விடுவது வழக்கம்.”
நீண்ட காலமாகவே, அவர் நாட்டிற்குள் நடக்கும் இதுபோன்ற நிகழ்வுகளில் இருந்து விலகி இருப்பதையும், வெளிநாட்டில் தனது நற்பெயரைத் தக்க வைத்துக் கொள்வதையும் செய்து வந்தார். ஆனால் ஞாயிற்றுக்கிழமை மாலை, தேர்தல் உரையில், 'அதிக குழந்தைகளைப் பெற்றுள்ள முஸ்லிம்கள்’, ’ஊடுருவல்காரர்கள்' என்று அவர் முஸ்லிம்களை விமர்சித்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது” என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது.
நாட்டிற்குள் உள்ள ஒழுங்குமுறை அமைப்புகள் பாஜகவின் விருப்பப்படி செயல்படுவதாகவும், வெளிநாடுகளில் உள்ள இந்தியாவின் கூட்டாளி நாடுகள், சீனாவை சமாளிப்பதற்காக இந்தியாவை முக்கியமானதாகக் கருதுவதால் மோதி கண்மூடித்தனமாக இருப்பதாகவும் அந்த இணையதளம் விமர்சித்துள்ளது.
யுஎஸ் இன்ஸ்டிடியூட் ஆஃப் பீஸ் அமைப்பின் தெற்காசிய பிரிவைச் சேர்ந்த டேனியல் மார்கி கூறுகையில், "மோதி அனுபவம் கொண்ட தலைவர். இப்படிப் பேசினால், அவரால் இந்த அரசியல் களத்தில் பிழைக்க முடியாது என்று எண்ணியிருந்தால், அவர் ஒருபோதும் இதுபோன்ற கருத்துகளைப் பேசியிருக்க மாட்டார். இருப்பினும், மோதியின் விமர்சனம் 'அமெரிக்காவில் வாழும் இந்திய சமூகத்தின் கோபத்திற்கு ஆளாக விரும்பாத' அமெரிக்க அரசியல்வாதிகளுக்குப் பின்னடைவை ஏற்படுத்தக்கூடும்," என்று கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
கடந்த 1925இல் உருவாக்கப்பட்ட ராஷ்ட்ரிய ஸ்வயம்சேவக் சங்கத்தின் (ஆர்எஸ்எஸ்) நோக்கம் இந்தியாவை இந்து நாடாக மாற்றுவது என்று நியூயார்க் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. அரசியலுக்கு வருவதற்கு முன், மோதி பத்தாண்டுகளாக இந்த சங்கத்தின் ஒரு பகுதியாக இருந்தார். பிரிவினையின்போது இரு நாடுகளை உருவாக்க இந்தியா ஒப்புக் கொண்டதை தேசத்துரோகம் என்று இந்த அமைப்பு கருதுகிறது.
மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்ட அல்ஜசீரா ஊடகம் இது தொடர்பாக ஏப்ரல் 22ஆம் தேதி விரிவான செய்தியை வெளியிட்டது. அதில் பிரதமரின் சர்ச்சைக்குரிய பேச்சுக்குப் பிறகு, அவர் முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பைப் பரப்புவதாகக் குற்றம் சாட்டப்பட்டதாக எழுதப்பட்டுள்ளது.
மோதியின் தேர்தல் பிரசாரத்தை ரத்து செய்து அவரைக் கைது செய்யக் கோரி மோதியின் பேச்சு தொடர்பான இரண்டு புகார்கள் தங்களுக்கு வந்துள்ளதாக உள்ளூர் தேர்தல் அதிகாரிகள் உறுதி செய்துள்ளதாகவும் அல் ஜசீரா குறிப்பிட்டுள்ளது.
”இந்தியாவின் சமீபத்திய வரலாற்றில் பதவியில் இருக்கும் ஒரு பிரதமர் இப்படி ஒரு மதத்துக்கு எதிராக வெறுப்பு பிரசாரம் செய்வது இதுதான் முதல்முறை. அவரின் பேச்சு தேர்தல் களத்தில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது," என்று அரசியல் ஆய்வாளரான அசிம் அலி பேசியதை அந்த இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.
மற்றொரு அரசியல் ஆய்வாளரான ஜயத் மஸ்ரூர் கான், "பிரதமர் காங்கிரஸை குறிவைத்ததாகப் பலர் கூறலாம். ஆனால் இறுதியில் அவர் பேசியது முஸ்லிம்களை மட்டுமே தாக்கியுள்ளது," என்று பேசியதையும் இணையதளம் மேற்கோள் காட்டியுள்ளது.
இது குறித்து அல்ஜசீரா வீடியோ ஒன்றையும் வெளியிட்டது. அதில் மோதியின் பேச்சும், காங்கிரஸின் எதிர்வினையும் விவரிக்கப்பட்டுள்ளது. மோதியில் சர்ச்சைப் பேச்சு தொடர்பாக ஆயிரக்கணக்கானோர் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதியுள்ளதாக அந்த வீடியோவில் கூறப்பட்டிருந்தது.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் பழைய உரையின் ஒரு பகுதியும் வீடியோவில் இடம்பெற்றுள்ளது. மன்மோகன் சிங் 2006இல் தேசிய வளர்ச்சி கவுன்சில் (என்டிசி) கூட்டத்தில் பேசியது பகிரப்பட்டுள்ளது.
Fact checker சித்தார்த் ஷரத் ”முன்னாள் பிரதமர் முஸ்லிம்களை பற்றி மட்டுமல்ல, அனைத்து தாழ்த்தப்பட்ட பிரிவினரைப் பற்றியும் பேசுகிறார்” என்று கூறியதையும் பாஜகவின் மறுப்பும் வீடியோவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாஜக செய்தித் தொடர்பாளர் மோகன் கிருஷ்ணா கூறும்போது, “கட்சி சிறுபான்மை, பெரும்பான்மை என்ற பாகுபாடு பார்ப்பதில்லை, ஒரு இந்தியர் நமக்கு இந்தியர் மட்டுமே,” என்கிறார்.
துருக்கியை சேர்ந்த டிஆர்டி வேர்ல்ட், “தேர்தல் வாக்குகளுக்காக முஸ்லிம்களை ஊடுருவல்காரர்கள் என்று மோதி கூறியது சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது” என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டுள்ளது.
அந்த இணையதள செய்தியின்படி, மோதியின் வலதுசாரி கட்சியின் செய்தித் தொடர்பாளர் அவரது கருத்தை ஆதரித்து, அவர் பேசியது சரி என்று கூறியதாக எழுதப்பட்டுள்ளது.
அதேநேரத்தில், காங்கிரஸ் தனது தேர்தல் உரையில் ``இது சிறுபான்மை முஸ்லிம்களை குறிவைக்கும் முயற்சி என்று வெளிப்படையாகக் குறிப்பிட்டுள்ளது,” என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Getty Images
தேர்தல் ஆணையத்திடம் அளித்த புகாரில், "ஒரு குறிப்பிட்ட மதத்தினரைக் குறிவைப்பது, பிரிவினையை ஏற்படுத்தும். இது ஆட்சேபனைக்குரிய மற்றும் தீங்கிழைக்கும் செயல்பாடாகும்," என்று காங்கிரஸ் கூறியுள்ளது. மேலும் இது அப்பட்டமான நடத்தை விதி மீறல் என அக்கட்சி கூறியுள்ளது.
டிஆர்டி தனது கட்டுரையில், முந்தைய அரசில் பிரதமராக இருந்த மன்மோகன் சிங்கின் பழைய உரையை மோதி குறிப்பிட்டு, "நாட்டின் சொத்தில் முஸ்லீம்களுக்கே முதல் உரிமை உண்டு" என்று முன்னாள் பிரதமர் கூறியதாக தவறாகக் கூறியதாக எழுதியுள்ளது.
டிஆர்டி தனது கட்டுரையில், "செப்டம்பரில் 1950இல் பிறந்த மோதிக்கு ஆறு உடன்பிறப்புகள். அவர்களில் மோதி மூன்றாவது நபர். அப்படியிருக்க, பிரதமர் உட்பட ஆளும் பாஜக தரப்பு முஸ்லிம்கள்தான் அதிகமாக குழந்தை பெற்றுக் கொள்வதாக பொய்ப் பிரசாரம் செய்து வருகிறது,” எனக் குறிப்பிட்டுள்ளது.
இந்திய முஸ்லிம்கள் அதிக குழந்தைகளைப் பெற்றுக் கொள்கின்றனர் என்றும் அவர்களின் மக்கள்தொகை விரைவில் பெரும்பான்மை இந்துக்களைவிட அதிகமாக இருக்கும் என்றும் பாஜக மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற வலதுசாரி கட்சிகள் குற்றம் சாட்டுவதாக எழுதப்பட்டுள்ளது.
மோதி மீண்டும் ஆட்சிக்கு வருவார் என நிபுணர்கள் எதிர்பார்ப்பதாக டிஆர்டி அறிக்கையில் எழுதப்பட்டுள்ளது. இதற்கான காரணங்களும் அந்தக் கட்டுரையில் பட்டியலிடப்பட்டுள்ளன. அதில் விவரிக்கப்பட்டுள்ள காரணங்கள்:
"முதலாவதாக, பாஜகவின் எதிர் கட்சிகள் இன்னும் மோதிக்கு எதிராக பிரதமர் பதவிக்கு போட்டியிடுபவர்களின் பெயரை அறிவிக்கவில்லை.
இரண்டாவதாக, எதிர் கட்சியினர் பலர் மீது குற்றவியல் விசாரணை நடக்கிறது.
மூன்றாவதாக, வரி விசாரணையும் நடக்கிறது. இந்த விவகாரத்தில் காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன."
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












