சாதிவாரி கணக்கெடுப்பு: தேசிய அளவில் ஓ.பி.சி. அரசியலுக்கான புதிய தொடக்கமாகுமா?

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சந்தன் குமார் ஜஜ்வாடே
    • பதவி, பிபிசி செய்தியாளர், பாட்னாவிலிருந்து

பிகாரில் ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு புள்ளிவிபரம் வெளியிடப்பட்டுள்ளது.

இந்தப் புள்ளிவிவரங்களின்படி, பீகாரின் மொத்த மக்கள் தொகை 13 கோடியே 7 லட்சத்து 25 ஆயிரத்து 310 என தெரிவிக்கப்பட்டுள்ளது.

திங்களன்று அரசாங்கத்தால் வெளியிடப்பட்ட புள்ளிவிவரங்களின்படி, மாநிலத்தில் மிகப்பெரிய மக்கள்தொகை மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்கள். இது மாநிலத்தின் மொத்த மக்கள்தொகையில் சுமார் 36% ஆகும்.

பிகாரின் சாதிவாரி கணக்கெடுப்பின் தரவுகள்

பிகார் சாதிவாரி கணக்கெடுப்பு

பட மூலாதாரம், ANI

புள்ளிவிவரங்களின் அடிப்படையில், பிகாரில்:

மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 36.01%

பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் - 27.12%

பட்டியல் சாதி - 19.65%

இடஒதுக்கீடு இல்லாத உயர் சாதியினர் - சுமார் 15.52%,

பட்டியல் பழங்குடி மக்கள் - 1.68%

ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பில் கிடைத்திருக்கும் தரவுகளின் படி, மத நம்பிக்கைகளின் அடிப்படையில் பீகாரில் இந்துக்கள் அதிகம் உள்ளனர். மாநிலத்தில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 82%.

அதேசமயம்,

முஸ்லிம்கள் - 17.7%

கிறிஸ்தவர் - 0.05%

பௌத்தர்கள் - 0.08%

சீக்கியர்கள் - 0.01%

இது தவிர, சமணர்கள் மற்றும் வேறுசில மதத்தினரும் பிகாரில் உள்ளனர். எந்த மதத்தையும் பின்பற்றாதோர் 2,146 பேர் அதாவது 0.0016% பேர் மட்டுமே உள்ளனர்.

பிகாரின் முக்கிய உயர் சாதியினரைப் பற்றி நாம் பேசினால், மாநிலத்தில் பிராமணர்களின் அதிக மக்கள் தொகை உள்ளது.

பிராமணர் மக்கள் தொகை - 3.65%

ராஜபுத்திரர் மக்கள் தொகை - 3.45%

பூமிஹார் மக்கள் தொகை - 2.86%

இந்தக் கணக்கெடுப்பில், பீகாரில் திருநங்கைகளின் மொத்த எண்ணிக்கை 825 என குறிப்பிடப்பட்டுள்ளது.

பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, இப்போது பீகாரில் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்

ஆரம்பமான அரசியல் போட்டி

பிகாரில் சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி எளிதாக நடந்துவிடவில்லை.

இந்த வகையான மக்கள்தொகைக் கணக்கெடுப்பிற்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது. இது பாட்னா உயர் நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரை சென்றது.

ஆனால், இப்போது பிகாரில் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் வெளியானதை அடுத்து, காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி தனது கருத்தைத் தெரிவித்துள்ளார்.

அவர் சமூக தளமான X-இல், “பிகாரில் ஓ.பி.சி. + எஸ்.சி.+ எஸ்.டி. - 84% என்று சாதி மக்கள் தொகை கணக்கெடுப்பு காட்டுகிறது. மத்திய அரசின் 90 செயலாளர்களில், 3 பேர் மட்டுமே ஓ.பி.சி. வகுப்பைச் சேர்ந்தவர்கள். அவர்கள் இந்தியாவின் பட்ஜெட்டில் 5% மட்டுமே கையாளுகின்றனர். எனவே, இந்தியாவின் சாதிப் புள்ளி விவரங்களை அறிந்து கொள்வது அவசியம். அதிக மக்கள் தொகை, அதிக உரிமைகள், இது எங்கள் உறுதிமொழி,” என்று பதிவிட்டிருந்தார். ராகுல்காந்தியின் சமூக வலைதளப் பதிவு, தேசிய அளவில் ஓ.பி.சி. அரசியலுக்கான புதிய தொடக்கமாகுமா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.

பிகாரில், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின் தரவுகள், ஏழை மக்களுக்கு அரசுத் திட்டங்களைத் தயாரிப்பதற்கு உதவும் என்று பீகார் அரசு கூறி வந்திருக்கிறது.

இந்தக் கணக்கெடுப்பின் தரவை அக்டோபர் 2 ஆம் தேதி திங்கட்கிழமை, அதாவது அரசு விடுமுறை நாளன்று வெளியிட்டது பிகார் அரசு.

இதன் புள்ளி விவரங்கள் வெளியானதையடுத்து, இதை நிகழ்த்தி முடித்ததற்கான பெருமையை கோருவதில் பல்வேறு தரப்பினருக்கும் இடையே போட்டி துவங்கியுள்ளது.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவரும் பிகார் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ், “ஆரம்பத்திலிருந்தே இதைக் கோரி வந்தோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த நாளில் இது வெளியாகியுள்ளது. இந்தப் பணிக்கு பாஜக பல தடைகளை ஏற்படுத்த முயற்சித்துள்ளது. எங்களின் கோரிக்கையை பிரதமர் நிராகரித்தார். மக்களவையில் நிராகரிக்கப்பட்டது, மாநிலங்களவையில் நிராகரிக்கப்பட்டது. இந்தப் புள்ளிவிவரங்கள் ஒவ்வொரு வகுப்பினரின் பொருளாதார நிலையையும் வெளிப்படுத்தியுள்ளன,” என்று அவர் கூறியுள்ளார்.

தற்போது இத்தரவுகளின் அடிப்படையில் சிறப்புத் திட்டங்களை உருவாக்கி மக்களுக்கு பலன்களை வழங்க அரசு முயற்சிக்கும், என்கிறார் அவர்.

பிகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, லாலு பிரசாத் யாதவ் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பிகாரில் அரசியலின் மையத்தில் இருந்து வருகின்றார்

அரசியல் விவாதங்கள்

ஐக்கிய ஜனதா தளத்தின் தலைமைச் செய்தித் தொடர்பாளர் நீரஜ் குமார் பிபிசியிடம் பேசுகையில், நிதிஷ் குமார் சொன்னதைச் செய்பவர் என்றும், பாஜக அதைத் தடுக்க முயல்கிறது என்றும், கூறினார்.

இந்த ஆண்டு ஜனவரியில், முதல் கட்ட ஜாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பிற்காக, மாநிலம் முழுவதும் உள்ள வீடுகளின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதில், குடும்பத் தலைவரின் பெயர் பதிவு செய்யப்பட்டு, வீடுகள் அல்லது கட்டடங்களுக்கு எண்கள் வழங்கப்பட்டன.

இதில், சுமார் 2 கோடியே 59 லட்சம் குடும்பங்களின் பட்டியல் தயாரிக்கப்பட்டது. கணக்கெடுப்பின் இரண்டாம் கட்டப் பணி ஏப்ரல் 15ஆம் தேதி தொடங்கி மே 15ஆம் தேதி முடிவடைய இருந்தது, ஆனால் மே முதல் வாரத்தில் பாட்னா உயர்நீதிமன்றம் தடை விதித்தது.

பாட்னா உயர்நீதிமன்றம் இந்தத் தடையை ஆகஸ்ட் மாதம் நீக்கியதையடுத்து, கணக்கெடுப்புப் பணி தொடர்ந்தது. ஆனால், உயர்நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு இந்த வழக்கு மீண்டும் உச்ச நீதிமன்றத்திற்கு வந்தது. முதற்கட்டமாக, மனுதாரர்களை பாட்னா உயர் நீதிமன்றத்திற்குச் செல்லுமாறு உச்ச நீதிமன்றம் கூறியது.

இந்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது, ஆனால் நீதிமன்றம் இதற்கு எந்தவித தடையும் விதிக்க மறுத்துவிட்டது.

பாஜக எம்பி சஞ்சய் ஜெய்ஸ்வால், “இந்தக் கணக்கெடுப்பில் நிதீஷ் குமாரும், லாலு பிரசாத்தும் குல்ஹாரியா, ஷேர்ஷாபாதி போன்ற உயர் சாதி முஸ்லிம்களைப் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரில் சேர்த்து, பிற்படுத்தப்பட்ட வகுப்பினரை வஞ்சித்திருக்கின்றனர் ,” என்று குற்றம் சாட்டினார்.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம், பாஜக கூட்டணியில் இருந்து நிதிஷ்குமார் பிரிந்து ராஷ்ட்ரீய ஜனதா தளம் மற்றும் பிற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தார்.

பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'INDIA' நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது

தேசிய அளவில் ஓ.பி.சி. அரசியலுக்கான தொடக்கம் ஆகுமா?

பிகாரில், 36% மக்கள்தொகை கொண்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சாதிகள் இதில் மிக முக்கியமான பங்கை வகிக்க முடியும். பிகாரில் மொத்தம் 113 சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட்டுள்ளன.

தற்போது பிகார் சட்டப் பேரவையில் 7 சதவீத எம்எல்ஏக்கள் மட்டுமே இப்பிரிவைச் சேர்ந்தவர்கள்.

அரசியல் நோக்கர் பேராசிரியர் வித்யார்த்தி விகாஸ் கூறும்போது, முன்பு பீகார் அரசியலில் உயர் சாதியினர் ஆதிக்கம் செலுத்தினர், அதன் பிறகு ஓபிசி சமூகத்தினர் செல்வாக்கு பெற்றுள்ளனர், என்றார். “இப்போது வந்துள்ள புள்ளிவிவரங்களின் மூலம், மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகம் ‘இது எங்கள் முறை’ என்று கூறலாம், மேலும் பீகாரில் அரசியலில் பங்கேற்பது குறித்து இந்த வர்க்கம் ஒரு புதிய உரிமையைக் கோர முடியும்,” என்றார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக, லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி மற்றும் நிதிஷ் குமார் ஆகியோர் பீகாரில் அரசாங்கத்தின் தலைவர்களாக உள்ளனர்.

பீகாரில், யாதவர்களின் மக்கள் தொகை 14% உள்ளது, குர்மி மக்கள் தொகை 3%-க்கும் குறைவாக உள்ளது.

ஆனால் இதையும் மீறி, ஆரம்ப நாட்களில் உயர் சாதியினர் பிகாரில் அதிகார மையத்தில் இருந்தனர், அதன் பிறகு லாலு-நிதீஷ் கிட்டத்தட்ட 33 ஆண்டுகளாக பீகாரில் அரசியலின் மையத்தில் இருந்து வருகின்றனர்.

சாதி ஏற்றத்தாழ்வு பற்றிய புரிதல் ஏற்படுமா?

சமூக அரசியல் பார்வையாளர் யோகேந்திர யாதவ், சாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்பின் உண்மையான முக்கியத்துவம் ஒவ்வொரு சாதியினரின் பொருளாதார, சமூக மற்றும் கல்வி நிலையை மதிப்பிடுவது என்கிறார்.

“எந்தச் சாதியில் எத்தனை பட்டதாரிகள் இருக்கிறார்கள், படிக்காதவர்கள் எத்தனை பேர், எத்தனை பேருக்கு கார் இருக்கிறது, எத்தனை பேர் அரசு வேலையில் இருக்கிறார்கள், எத்தனை பேர் தனியார் வேலையில் இருக்கிறார்கள், என்பது தெளிவாகும்,” என்கிறார்.

யோகேந்திர யாதவ் கூறுகையில், சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பின் மூலம், சாதி ஏற்றத்தாழ்வுகள் இன்று இருக்கிறதா இல்லையா என்பதை அறிய விரும்புவதாகக் கூறுகிறார்.

பீகார் சாதிவாரிக் கணக்கெடுப்பு

பட மூலாதாரம், ANI

பா.ஜ.க.வின் வாக்கு வங்கி வலுவிழக்குமா?

பிகாரில் ஆளும் மகா கூட்டணியின் கூட்டணிக் கட்சிகள் நாடு முழுவதும் ஜாதி அடிப்படையிலான மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் கோரியுள்ளன. ஜூலை 18-ஆம் தேதி பெங்களூருவில் நடந்த இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சிகளின் கூட்டத்திற்குப் பிறகு, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'INDIA' நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று கோரிக்கை விடுத்தது.

காங்கிரஸ் கட்சியின் பல பெரிய தலைவர்கள் ஜாதிவாரி கணக்கெடுப்பு விவகாரத்தை சமீபகாலமாக உரக்க எழுப்பி வருகின்றனர். சாதிவாரி கணக்கெடுப்புடன், 'எண்ணிக்கை அதிகமாக இருந்தால், பங்கு அதிகம்' என்ற கோஷமும் எழுப்பப்படுகிறது.

2011-ஆம் ஆண்டு ஜாதிவாரி கணக்கெடுப்பு விவரங்களை வெளியிடவும், பிற்படுத்தப்பட்டோர், தலித் மற்றும் பழங்குடியினருக்கு அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்கவும் ராகுல் காந்தி பலமுறை கோரிக்கை விடுத்துள்ளார்.

உண்மையில், ஜாதி எண்களின் அடிப்படையில் இடஒதுக்கீடு கோருவதன் மூலம், எதிர்க்கட்சிகள் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் பெரும் வாக்குகளை தனக்கு ஆதரவாகக் கொண்டுவர விரும்புகின்றன. இது பாஜகவின் இந்து வாக்கு வங்கியையும் பலவீனப்படுத்தும் என்று நம்பப்படுகிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)