ஒரு டிரில்லியன் டாலர் நாணயம்: கடன் நெருக்கடியைத் தீர்க்க அமெரிக்காவுக்கு உதவுமா?

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவை கடன் நெருக்கடியிலிருந்து காப்பாற்ற குடியரசுக் கட்சியினருக்கும் ஜனநாயகக் கட்சியினருக்கும் நேரம் வேகமாக குறைந்து கொண்டிருக்கிறது.

ஜூன் மாதத்திற்கு முன் கடன் வரம்பை அதிகரிப்பதில் உடன்பாடு ஏற்படவில்லையென்றால், அமெரிக்கா டீஃபால்ட் செய்யும் நிலைக்கு தள்ளப்படும். ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தின் மையப்புள்ளியாக அமெரிக்கா இருப்பதால் அது உலகப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

சமீபத்திய நாட்களில் அதிபர் மாளிகையும், காங்கிரஸில் உள்ள குடியரசுக் கட்சியினரும், பேச்சுவார்த்தைகள் நேர்மறையான திசையில் நகர்வதாக சுட்டிக்காட்டியுள்ளனர். ஆனாலும் மக்கள் மத்தியில் அமைதியின்மை நிலவுகிறது.

அத்தகைய சூழ்நிலையில் கடைசி முயற்சியாக ’ஒரு டிரில்லியன் அமெரிக்க டாலர்’ மதிப்புள்ள பிளாட்டினம் நாணயம் பற்றி சில அறிஞர்கள் மற்றும் ஆய்வாளர்கள் விவாதிக்கத் தொடங்கியுள்ளனர், இது நாட்டை டீஃபால்ட் நிலையிலிருந்து காப்பாற்ற முடியும்.

எந்தவொரு காரணத்திற்காகவும் எந்த மதிப்பிலும் பிளாட்டினம் நாணயங்களை அச்சிட 1997 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டம் அமெரிக்க நிதியமைச்சரை அனுமதிக்கிறது.

கடன் வரம்பை அதிகரிக்க காங்கிரஸ் சம்மதிக்கவில்லையென்றால் இதன் மூலம் அமெரிக்க அரசு தன் செலவை ஏற்று திவாலாவதைத் தவிர்க்கலாம் என்று பிளாட்டினம் நாணயத்தை அச்சிடுவதற்கு ஆதரவாக வாதிடுபவர்கள் கூறுகிறார்கள்.

நிதியமைச்சர் ஜேனட் யெல்லென் இந்த யோசனையை நிராகரித்துவிட்டார். ஆனாலும் பைடன் நிர்வாகத்தின் சில அதிகாரிகள் இந்த யோசனைக்கு சாதகமாக உள்ளனர்.

அரசு அத்தகைய முடிவை எடுத்தால், ஒரு டிரில்லியன் டாலர் மதிப்புள்ள நாணயத்தை, நாணய அச்சிடும் அமைப்பு வெளியிடும்.

நாணயம்

பட மூலாதாரம், Getty Images

1 டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிடுவது எப்படி?

இருப்பினும் அமெரிக்க கடன் உச்சவரம்பை அதிகரிப்பதற்கு இது ஒரு தீர்வாக இருந்ததில்லை.

ஆனால் பொது மக்கள் வாங்கக்கூடிய சிறப்பு பதிப்பு நாணயங்களை வெளியிட நிதியமைச்சருக்கு உரிமை உண்டு.

ஒரு டிரில்லியன் டாலர் பிளாட்டினம் நாணயத்தை அச்சிட முடிவு செய்தால் என்ன நடக்கும்?

"அவர்கள் செய்ய வேண்டியது என்னவென்றால், நாணயத்தில் ஒரு டிரில்லியன் டாலர் என்று எழுதி ஃபெடரல் ரிசர்வ் வங்கிக்கு அனுப்ப வேண்டும்" என்று அமெரிக்க நாணயம் அச்சிடும் அமைப்பின்(மின்ட்) முன்னாள் தலைவர் ஃபிலிப் டீல் கூறுகிறார்.

இவ்வளவு அதிக மதிப்புள்ள பிளாட்டினம் நாணயம் மிகப் பெரியதாகவும் கனமாகவும் இருக்கும் என்று ஒருவர் கற்பனை செய்யக்கூடும். ஆனால் உண்மையில் ஒரு பாக்கெட்டில் வைத்து எடுத்துச் செல்லக்கூடிய கால் டாலர் நாணயத்தின் அளவிலேயே அது இருக்கும்.

நாணயத்தில் டிரில்லியனில் உள்ள பூஜ்ஜியங்களை எழுத வேண்டிய அவசியமில்லை. ஒரு டிரில்லியன் டாலர் என்று எழுதினால் மட்டும் போதும்.

இப்போது கேள்வி என்னவென்றால், நாணயத்தின் மதிப்பை எழுதுவதன் மூலம் நிர்ணயிக்க முடியும் என்றால் அதற்கு பிளாட்டினம் நாணயம் ஏன் வேண்டும்?

அது ஏனென்றால் அமெரிக்க சட்டத்தின்படி 50 டாலருக்கு மேல் மதிப்புள்ள நாணயங்களுக்கு பிளாட்டினம் உலோகத்தைப் பயன்படுத்துவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

"திவாலாவதற்கும் கரன்சி அச்சிடுவதற்கும் இடையே நீங்கள் தேர்வு செய்ய வேண்டியிருந்தால், நீங்கள் என்ன செய்வீர்கள் ... நாடு டீஃபால்ட் செய்வதை அனுமதிக்க முடியாது," என்று ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை உருவாக்கும் யோசனையை வெளியிட்ட வில்லமேட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ரோஹன் க்ரே கூறுகிறார்.

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

யோசனை எப்படி வந்தது?

உண்மையில் டீஃபால்ட் நிலையைத் தவிர்க்க ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிடுவதற்கான யோசனை முதன்முதலில் 2010 இல் கார்லோஸ் மூச்சா என்ற அட்லாண்டா வழக்கறிஞர் மூலம் ஒரு வலைப்பதிவில் அளிக்கப்பட்டது.

1997 ஆம் ஆண்டின் நாணயச் சட்டத்தின் கீழ், பிளாட்டினம் நாணயங்களை அச்சிட அனுமதிக்கப்பட்டுள்ளது என்பதை கார்லோஸ் அறிந்தார்.

"சுவாரசியமான விஷயம் என்னவென்றால் ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை அச்சிட காங்கிரஸ் ஏற்கனவே கருவூலத்திற்கு அங்கீகாரம் அளித்துள்ளது," என்று அவர் தனது கட்டுரையில் எழுதினார்,

அவர் முன்வைத்த யோசனை அதிபர் மாளிகையிலும், கேபிடல் ஹில்லிலும் கூட விவாதிக்கப்படும் என்பது மூச்சாவுக்குத் தெரியாது.

”கார்லோஸின் திட்டம் உண்மையில் வேலை செய்யக்கூடியது,” என்று சில நாட்களுக்குப் பிறகு முன்னாள் மின்ட் இயக்குனர் ஃபிலிப் டீலிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்தது.

இந்த விஷயம் வைரலானது மற்றும் வலைப்பதிவின் ஆதரவாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியது. ஆனால் பராக் ஒபாமாவின் முதல் பதவிக்காலத்தில் கடன் நெருக்கடி வரும் வரை அதாவது 2011 ஆம் ஆண்டு வரை இது பொது விவாதத்தின் அங்கமாக மாறவில்லை.

அந்த நாட்களில் 7,000 கையெழுத்துகளுடன் ஒரு கடிதம் வெளியிடப்பட்டது, அதில் நோபல் பரிசு பெற்ற பால் க்ரூக்மேன் மற்றும் ஃபிலிப் டீல் போன்ற முக்கிய பொருளாதார நிபுணர்கள் இதை ஆதரித்தனர்.

#MintTheCoin என்ற ஹேஷ்டேக்குடன் ட்விட்டரில் ஒரு பிரச்சாரம் கூட தொடங்கப்பட்டது. ஆனால், அப்போது அரசியல் நெருக்கடிக்கு தீர்வு காணப்பட்டதால் இந்த விஷயம் முன்னே செல்லவில்லை.

1 டிரில்லியன் டாலர் நாணயம்

பட மூலாதாரம், Getty Images

அமெரிக்காவில் கடன் வரம்பை அதிகரிப்பதற்கான நெருக்கடியில், ஜோ பைடனின் அரசு அத்தகைய மாற்று வழி எதையும் பரிசீலிக்க மறுத்துவிட்டது.

நிதியமைச்சர் ஜேனட் யெலன் சில நாட்களுக்கு முன்பு, "இது ஒரு ஏமாற்று வேலை என்று நான் நினைக்கிறேன்," என்றார்.

ஒரு டிரில்லியன் டாலர் நாணயத்தை வெளியிட முன்மொழிவது குடியரசுக் கட்சியினருடனான பேச்சுவார்த்தையில் ஜனநாயகக் கட்சியின் அம்புக்கூட்டில் மேலும் ஒரு அம்பு சேரக்கூடும் என்று சில நிபுணர்கள் வாதிடுகின்றனர்.

கடன் வரம்பை அதிகரிப்பதற்கான ஜோ பைடனின் கோரிக்கையை குடியரசுக் கட்சியினர் ஏற்றுக்கொள்ளவில்லை. பொதுச் செலவுகள் குறைக்கப்பட வேண்டும் என்று அவர்கள் கூறுகின்றனர்.

ஜூன் 1 ஆம் தேதிக்குள் இரு தரப்பினரும் ஒரு உடன்பாட்டை எட்டவில்லையென்றால் அமெரிக்கா பேய்மெண்டுகளை செய்யமுடியாமல் போகும்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: