அறங்காவலர் நியமனம்: ‘தெய்வ நம்பிக்கை அவசியம்’ – உயர் நீதிமன்ற தீர்ப்பு கூறுவது என்ன?

temple

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன்
    • பதவி, பிபிசி தமிழ்

தெய்வ பக்தி இல்லாதவர்களை கோவில் அறங்காவலர்களாக நியமிப்பதை அனுமதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது. தமிழக கோயில்களில் அறங்காவலர்களை நியமிக்கும்போது, நியமிக்கப்படும் நபரின் அரசியல் சார்பு குறித்த விவரங்களை கட்டாயம் பெறவேண்டும் என்றும் இந்துஅறநிலையதுறைக்கு உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவு அரசியல்வாதிகளின் தலையீடுகளை குறைக்கும் என்றும், நாத்திகவாதியாக இருப்பது இந்து மதத்தின் ஒரு கோட்டுப்பாடு என்பதால், வெளிப்படையான தெய்வபக்தியை மட்டுமே ஒரு அறங்காவலரின் தகுதியாக எடுத்துக்கொள்ளக்கூடாது என்றும் இருவிதமான வாதங்கள் வைக்கப்படுகின்றன. அறங்காவலர்களாக இருந்த ஒருசிலர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ஏற்கிறார்கள் அதேநேரம், அறநிலையத்துறையில் மாற்றம் வேண்டி வழக்கு தொடுத்த சிலர், இந்த தீர்ப்பை நீதிபதிகள் மீண்டும் ஆலோசிக்கவேண்டும் என்ற கருத்தை முன்வைக்கிறார்கள். 

தமிழக கோயில்களில் அறங்காவலர்கள் நியமனம் தொடர்பான பல்வேறு வழக்குகளை விசாரித்து வரும் சென்னை உயர்நீதிமன்றம், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தில் தெய்வபக்தி மற்றும் அரசியல் சார்பு உள்ளிட்ட விவரங்களைப் பெறவேண்டும் என்றும் அறங்காவலர் நியமனம் தொடர்பான விரிவான அறிக்கையை அறநிலையத்துறை தாக்கல் செய்யவேண்டும் என்றும்கூறி, விசாரணையை ஜனவரி 25ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது. 

அறங்காவலர் நியமனம் குறித்து நீதிமன்றம் சொல்வது என்ன?

தற்போது சென்னை உயர்நீதிமன்றத்தில் அறங்காவலர் நியமனம் தொடர்பான வழக்கை விசாரித்த நீதிபதிகள் மகாதேவன் மற்றும் ஆதிகேசவலு ஆகியோர், அறங்காவலர்கள் தேர்வுக்கான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வி ஏன் இடம் பெறவில்லை என்று கேட்டனர். அந்த வழக்கில் கடந்த முறை நடைபெற்ற விசாரணையின் போது, தெய்வ பக்தி கொண்டவர் அரசியல் கட்சியைச் சேர்ந்தவராக இருந்தால் அவரை அறங்காவலராக நியமிக்கலாம் என நீதிமன்றம் தெரிவித்ததைச் சுட்டிக்காட்டி, அதனால் அரசியல் சார்பு பற்றிய கேள்வியை குறிப்பிடவில்லை என்று அறநிலையத்துறை சார்பில் வாதிடப்பட்டது. 

அப்போது, நீதிபதிகள், தெய்வ பக்தி இல்லாத ஒரு நபரை அறங்காவலர்களாக நியமிக்க அனுமதிக்க முடியாது என தெரிவித்தனர். மேலும், அறங்காவலர் தேர்வு தொடர்பான விண்ணப்பத்தில் அரசியல் சார்பு குறித்த கேள்வியைச் சேர்க்க வேண்டும் என்றும் தெரிவித்தனர்.

அறங்காவலராக இருப்பதற்கான தகுதிகள் என்ன?

கோயில் அறங்காவலர் குறித்து இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டம்(1951)நான்கு விதிகளைச் சொல்கிறது. இந்த சட்டத்தின் பிரிவு 25(ஏ)கீழ், 

  • கடவுள் மீது நம்பிக்கை கொண்டவர். 
  •  அவர் நன்னடத்தை மற்றும் நற்பெயரைக் கொண்டவராகவும், குறிப்பிட்ட கோவில் அமைந்துள்ள பகுதியில் அவர் மரியாதைக்குரியவராகவும் இருக்கவேண்டும்.
  • குறிப்பிட்ட கோவில் விவகாரங்களில் கலந்துகொள்வதற்கு நேரமும், ஆர்வமும் உள்ள நபராக இருக்கவேண்டும். 
  • கோவில் நிர்வாகம் தொடர்பாக பிற தகுதிகள் கொண்டிருப்பவர். 
எஸ்.பாபு, அறங்காவலர்
படக்குறிப்பு, எஸ்.பாபு

சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை வரவேற்கும் நபர்களில் ஒருவர் எஸ்.பாபு. கடலூர் மாவட்டம் வரதராஜ பெருமாள் கோயில் மற்றும் வீர ஆஞ்சநேயர் கோயில் உள்ளிட்ட கோயில்களில் அறங்காவலர் குழுவின் தலைவராக இருந்தவர் பாபு.

பிபிசி தமிழிடம் பேசிய பாபு, ''கோவில் நிர்வாகத்தில் இருப்பவர் தெய்வ நம்பிக்கை கொண்டவராக இருக்கவேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து தேவையில்லை. நம்பிக்கை கொண்டவராக இருந்தால்தான் அதீத பொறுப்புடன் கோயில் நிர்வாகத்தை நடத்தமுடியும். அறங்காவலர் என்பவர், கோவிலின் வரவு செலவு கணக்குகளை பார்க்கவேண்டும், அறங்காவலர் குழுவின் மாதாந்திர கூட்டத்தை நடத்தவேண்டும், கோவில்களில் நடைபெறவேண்டிய விழாக்கள், விழாவுக்கான ஏற்பாடுகளைச் செய்வது குறித்து தீர்மானம் கொண்டுவரவேண்டும், கோவில் தொடர்பான ஏலத்தை பொறுப்புடன் நடத்தவேண்டும். இதுபோன்ற வேலைகளைச் செய்பவர், கோவில் மீது பற்றுள்ள நபராகத்தான் இருக்கமுடியும்,''என்கிறார். 

''ஒவ்வொரு கட்சி ஆட்சிக்கு வரும்போதும், அறங்காவலர் பதவியை தங்களது கட்சி சார்பான ஆட்களுக்குத் தரவிரும்புகிறார்கள். ஆனால் கோவிலுக்கு வேலை செய்யும் நபரைத்தான் தேர்வு செய்யவேண்டும். உயர்நீதிமன்றம் கூறியபடி, அரசியல் சார்பு கொண்ட நபர் தெய்வ நம்பிக்கை இல்லாதவர் என்றால், அவரை அறங்காவலராக நியமிக்கக்கூடாது என்ற உத்தரவு, என்னைப் போன்ற முன்னாள் அறங்காவலர்களுக்கு கிடைத்த வெற்றி,''என்கிறார் பாபு. 

வழக்கறிஞர் துரைசாமி
படக்குறிப்பு, வழக்கறிஞர் துரைசாமி

நாத்திகமும் இந்து மதத்தில் அடங்கும் என்பதால் அறங்காவலர் நியமனத்தில் வெளிப்படையாகத் தெரியும் தெய்வநம்பிக்கை என்பதை மட்டுமே வைத்து முடிவு செய்யக்கூடாது என்கிறார் வழக்கறிஞர் துரைசாமி.

இவர் இந்துசமயஅறநிலையத்துறை நிர்வாகம் தொடர்பான வழக்குகளை நடத்தியுள்ளார். தந்தை பெரியார் திராவிட கழகத்தைச் சேர்ந்த துரைசாமி, ''இந்து மதம் என்பதில் நாத்திகமும் அடங்கியுள்ளது என்பதற்கு ராமாயணத்தில் குறிப்பு உள்ளது. தன்னை எதிர்க்கும் நாத்திகர்கள் பற்றிப் பேசும்போது, நாத்திகமும் இந்துமதத்தின் ஒரு கோட்பாடு என்று ராமன் சொல்வதாக குறிப்பு வருகிறது. கடவுள் மறுப்பைக் காட்டும் பல சித்தர் பாடல்கள் இன்றளவும் பயன்பாட்டில் உள்ளது. அதனால், நாத்திகம் என்பதை இந்து மதத்தின் கூராகப் பார்ப்பதுதான் சரி,''என்கிறார் துரைசாமி. 

கோயிலை வேலை செய்யும் இடமாக நாத்திகர் பார்ப்பதால், அங்கு நடக்கும் பிரச்னைகளை உடனடியாக களையமுடியும் என்றும் கூறுகிறார் துரைசாமி. ''கோயில்களில் உள்ள பிரச்னைகளை களையவேண்டும் என்பதற்காக தனித்துறையை கொண்டுவந்தது நாத்திகர்கள் அடங்கிய திமுக என்ற கட்சி. கோயிலில் நடக்கும் பிரச்னைகளை தீர்ப்பதற்கு நாத்திகர் ஒருவர்தான் தேவை. அவர் எந்த பக்கமும் சாராமல் முடிவு செய்வார்,''என்கிறார்.

பாஜகவின் நிலைப்பாடு என்ன?

 சென்னை உயர்நீதிமன்றத்தின் உத்தரவை உடனடியாக அமல்படுத்தவேண்டும் என இந்து மக்களின் பிரதிநிதியாக அடையாளப்படுத்திக் கொள்ளும் பாஜக தெரிவிக்கின்றது. 

பாஜக, நாராயணன் திருப்பதி

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY FACEBOOK PAGE

படக்குறிப்பு, நாராயணன் திருப்பதி

பாஜகவின் மாநில துணைத்தலைவரான நாராயணன் திருப்பதி பேசுகையில், ''இறைநம்பிக்கை இருப்பவருக்குதான் கோயில் மீது மரியாதை இருக்கும். இந்து அறநிலையத்துறை என்பது ஒரு கண்காணிக்கும் அமைப்புதான். கோயில் விவகாரங்களை ஊர் மக்கள்தான் முடிவு செய்யவேண்டும். பக்தியுடன் கோயிலுக்கு வருபவர்கள்தான் முடிவுசெய்யவேண்டும். முடிவு எடுக்கும் பொறுப்பை தெய்வநம்பிக்கை இல்லாதவர் எப்படி சிறப்பாகச் செய்யமுடியும்?.

முதலில், கோயில் நிர்வாகத்தை ஊர் மக்களிடம் அரசு ஒப்படைக்கவேண்டும். பல இடங்களில் கோயில் சொத்துக்கள் பறிபோனதற்கு அரசு ஊழியர்கள்தான் துணை நின்றுள்ளனர். கோயில் என்பது பொதுஇடம், மக்களுக்கான இடம் என்பதால், அந்த ஊர்களுக்கு ஏற்றவாறு கோயிலை நடத்துவதற்கு தெய்வநம்பிக்கை உள்ள அந்த ஊரைச் சேர்ந்த ஒருவர்தான் அறங்காவலராக இருக்கவேண்டும். அதனை உயர்நீதிமன்றம் எடுத்துரைத்திருப்பது சிறந்தது,''என்கிறார்.

நீதிமன்ற தீர்ப்பு குறித்து இந்து அறநிலையத்துறையின் நிலைப்பாடு என்ன?

இதுகுறித்து பிபிசி தமிழிடம் பேசிய மூத்த அதிகாரி ஒருவர், சென்னை உயர்நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பை அமல்படுத்துவதில் சிக்கல்கள் இல்லை என்று தெரிவித்தார். ''இந்து சமய மற்றும் அறநிலைய அறக்கட்டளை சட்டத்தில் உள்ள விதிகளில் அறங்காவலர் தகுதிகள் என்ற பட்டியலில் கடவுள் நம்பிக்கை உள்ளவராக இருக்கவேண்டும் என்ற விதி இருப்பதால், அதனை நாங்கள் பின்பற்றுவோம். தற்போது உயர்நீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இதில் எங்களுக்கு வேறு கருத்து இல்லை,''என்று தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: