சென்னையில் கையில் கிடைத்த வெற்றியை நழுவ விட்ட பாகிஸ்தான் - இந்தியாவை முந்திய தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images
உலகக் கோப்பை தொடரின் பாகிஸ்தான்- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான இன்றைய போட்டியில், ஒரு விக்கெட் வித்தியாசத்தில் தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் ரசிகர்களின் பேராதரவுடன் விளையாடிய பாகிஸ்தான் அணி கடைசி வரை வெற்றிக்காக போராடியது.
ஒரு கட்டத்தில் பாகிஸ்தான் வெற்றி பெற்றதாகவே கருதப்பட்டது. ஆனால், நடுவரின் முடிவால் கடைசி விக்கெட் தப்பிப் பிழைக்க நூலிழையில் தென் ஆப்ரிக்க அணி வெற்றி பெற்றது.
பாகிஸ்தான் டாஸ் வென்று முதல் பேட்டிங்

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணி டாஸில் வென்றதும், முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தது. அந்த அணியின் அப்துல்லா ஷஃபீக்கும், இமாம் உல் ஹக்கும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர். இந்த போட்டியிலும் பாகிஸ்தான் அணிக்கு தொடக்கம் சிறப்பானதாக அமையவில்லை.
ஆட்டத்தின் 5-வது ஓவரிலேயே ஜான்சென் வீசிய பந்தில் அப்துல்லா ஷஃபீக் ஆட்டமிழந்தார். அவர் 17 பந்துகளில் 9 ரன் மட்டுமே சேர்த்தார். நடப்பு உலகக்கோப்பையில் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் மட்டுமே பாகிஸ்தான் தொடக்க ஜோடி 100 ரன்களை கடந்துள்ளது.
பின்னர் வந்த கேப்டன் பாபர் ஆசம் வழக்கம் போல் களத்தில் நிலைநிறுத்திக் கொள்ள சற்று நிதானம் காட்டினார். ஆனால் மறுமுனையில் இமாம் உல் ஹக் சிறிது நேரத்தில் ஜான்சென் பந்துவீச்சில் அவுட்டாகி வெளியேறினார். பின்னர் நடப்பு உலகக்கோப்பையில் பாகிஸ்தான் அணிக்கு ஆபாத்பாந்தவனாக திகழும் முகமது ரிஸ்வான் உள்ளே வந்தார்.
மீண்டும் ஏமாற்றம் தந்த பாபர் ஆசம்

பட மூலாதாரம், Getty Images
அவரும், பாபர் ஆசமும் சேர்ந்து பாகிஸ்தான் அணியை சரிவில் இருந்து மீட்டனர். நல்ல பார்மில் உள்ள ரிஸ்வான் தொடக்கம் முதலே சற்று அதிரடி காட்டினாலும் அது நீண்ட நேரம் நிலைக்கவில்லை. 31 ரன்களிலேயே அவர் அவுட்டாகிப் போனார்.
அதேபோல், நடப்பு தொடரில் 4 போட்டிகளில் மூன்றாவது அரை சதத்தை எட்டிய பாபர் ஆசமும் அதனை பெரிய ஸ்கோராக மாற்றாமல் வெளியேறினார். விராட் கோலிக்கு நிகராக வைத்து பாகிஸ்தான் ரசிகர்களால் பேசப்படும் பாபர் ஆசம் அந்த உச்சபட்ச எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில் இன்னும் ஆட்டத்தை வெளிப்படுத்தாதது அவர்களுக்கு ஏமாற்றமே.
பாகிஸ்தான் அணியில் ஒருவர் கூட அதிரடியாக ஆடி ரன் சேர்க்கவில்லை. இதனால், ஆட்டம் முழுவதுமே அந்த அணியின் ரன் ரேட் மந்தமாகவே இருந்தது. முடிவில் அந்த அணி 47-வது ஓவரிலேயே 270 ரன்களுக்கு ஆல் அவுட்டாகிப் போனது.
அதிரடியாக ஆரம்பித்த தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images
பாகிஸ்தான் அணி இந்தப்போட்டியில் தோல்வியடைந்தால் அரையிறுதிக்கு செல்வது கடினமாக இருக்கும்.
271 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இரண்டாவதாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணி, தொடக்கம் முதலே நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது.
தென் ஆப்பிரிக்காவின் பேட்ஸ்மேன் க்விண்டன் டி காக் 24 ரன்கள் எடுத்திருந்தபோது, பாகிஸ்தானின் ஷஹீன் ஷா அப்ரிடியின் பந்துவீச்சில் ஆட்டமிழந்திருந்தாலும், தென் ஆப்பிரிக்கா அணியின் மொத்த ஸ்கோர் ஒன்பது ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 66 ஆக இருந்தது.
இந்தக் கட்டத்தில், அணியின் தொடக்க ஆட்டக்காரரான பவுமா அதிராடியாக அடி வந்தார். இதனால், அடுத்த இரண்டு ஓவர்களிலேயே பவுமாவும் ஆட்டமிழந்தார்.
மார்க்ரம் அசத்தல்

பட மூலாதாரம், Getty Images
அடுத்தடுத்து வந்த வீரர்கள் சொற்ப ரன்களிலேயே ஆட்டமிழந்தாலும், தென் ஆப்பரிக்கா அணியின் ஓட்டுமொத்த ரன் ரேட் குறையாமல் மார்க்ரம் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அதனால், அணியில் ரன் ரேட் 6க்கு குறையாமல் இருந்தது.
தென் ஆப்பிரிக்கா அணி, 40 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது, 41 வது ஓவரில் உஸாமாவின் பந்துவீச்சில் அதிரடியாக ஆடிவந்த மார்க்ரம் ஆட்டமிழந்தார். இவர், 93 பந்துகளில் 91 ரன்கள் அடித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஐந்து ஓவரில் 10 ரன்கள் மட்டுமே எடுத்த தென் ஆப்பிரிக்கா

பட மூலாதாரம், Getty Images
மார்க்ரம் ஆட்டமிழந்த பிறகு, தென் ஆப்பிரிக்கா அணி 10 ஓவரில் 21 ரன்கள் எடுக்க வேண்டும் என்றிருந்த நிலையில், பாகிஸ்தான் பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சைத் தாக்குபிடிக்க முடியாமல், தென் ஆப்பிரிக்கா அணியினர் திணறி வந்தனர்.
பார்க்ரம், 40.2 ஓவரில் ஆட்டமிழக்கும்போது அணியின் மொத்த ரன் 250 ஆக இருந்தது. ஐந்து ஓவர்களுக்குப் பிறகு தென் ஆப்பிரக்கா அணி 10 ரன்கள் மட்டுமே எடுத்து 260-8 என்ற நிலையில் இருந்தனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சாளர் அப்ரிடி, 10 ஓவர்கள் பந்துவீசி 45 ரன்கள் கொடுத்து மூன்று விக்கெட்டுகள் எடுத்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
கடைசியில் போராடி வென்ற தென் ஆப்ரிக்கா

பட மூலாதாரம், Getty Images
தொடர்ந்து, களமிறங்கிய நிகிடி, நான்கு ரன்கள் மட்டுமே எடுத்திருந்த நிலையில் ஹரிஸ் ராவுப் பந்து வீச்சில் ஆட்டமிழந்தார். அடுத்தடுத்த பந்துகளின் பெரியளவில் ரன் சேர்க்க முடியாவிட்டாலும், கிடைக்கும் வாய்ப்பில் ஒவ்வொரு ரன்னாக சேர்த்து ஆட்டமிழிக்கமால் இருந்தனர் மகாராஜூம், ஷமியும்.
இறுதியாக 45வது ஓவரில் முகமது நவாஸ் பந்துவீச்சின் இரண்டாவது பந்தில் ஒரு பவுண்டரியின் மூலம் வெற்றியை எட்டியது தென் ஆப்பிரிக்கா அணி. தென் ஆப்பிரிக்கா அணியில் பார்க்ரம் தவிர மற்ற அனைத்து வீரர்களும் 30 ரன்களுக்கு குறைவாகவே ரன் சேர்த்திருந்தனர்.
தென் ஆப்பிரிக்கா அணியில் அதிகபட்சமாக 10 ஓவர்கள் பந்துவீசி நான்கு விக்கெட்டுகள் எடுத்திருந்த ஷம்ஸிக்கு ஆட்டநாயகன் விருது வழங்கப்பட்டது.
நூலிழையில் கண்டம் தப்பிய தென் ஆப்ரிக்கா
தென் ஆப்ரிக்க அணி வெற்றிக்காக போராடிக் கொண்டிருந்த கடைசிக் கட்டத்தில் நூலிழையில் ஆட்டம் பாகிஸ்தானுக்கு சாதகமாக முடியவிருந்தது. ஹாரிஸ் ரஃப் வீசிய 46-வது ஓவரின் கடைசி பந்தில், கடைசி விக்கெட் ஜோடியாக நின்றிருந்த ஷாம்சியின் கால் காப்பில் பந்து பட்டது. உடனே சற்றும் தாமதிக்காமல் ஹரிஸ் ரஃப் எல்.பி.டபிள்யூ கேட்டு அப்பீல் செய்தார். ஆனால் நடுவரோ அவுட் கொடுக்க மறுத்துவிட்டார்.
இதையடுத்து, எதிர்பார்க்கப்பட்ட படியே பாகிஸ்தான் கேப்டன் பாபர் ஆசம் மூன்றாவது நடுவருக்கு முறையீடு செய்தார். மூன்றாவது நடுவர் கேமராவின் வெவ்வேறு கோணங்களில் அந்த பந்தின் திசையை ஆராய்ந்து பார்த்தார். அப்போது, பந்து லெக் ஸ்டம்பை லேசாக உரசிச் செல்வது போல் தெரிந்தது. எனினும், அது உறுதியாக இல்லாததால் கள நடுவரின் தீர்ப்பே இறுதியாகிவிட்டது. இதனால், கண்டம் தப்பிய ஷாம்சி அந்த அணியை வெற்றிகரமாக இலக்கை எட்ட வைத்தார்.
பாகிஸ்தானின் தொடர் வெற்றிக்கு முற்றுப்புள்ளி
நடப்பு உலகக்கோப்பையில் தொடக்க வெற்றிகளுக்குப் பிறகு ஹாட்ரிக் தோல்விகளால் தடுமாறி வந்தாலும் பாகிஸ்தான் அணி, தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான தனது சிறப்பான வரலாற்றை தக்க வைக்கும் நம்பிக்கையுடன் இருந்தது. அதாவது, தென் ஆப்ரிக்கா அணி கடைசியாக 1999-ஆம் ஆண்டு உலகக் கோப்பையில்தான் பாகிஸ்தானை வென்றிருந்தது.
அதன்பின் 24 ஆண்டுகளாக பாகிஸ்தான் அணியை ஒருநாள் மற்றும் இருபது ஓவர் உலகக் கோப்பைத் தொடர்களில் தென் ஆப்ரிக்கா வென்றதே இல்லை. இந்த 24 ஆண்டு கால வரலாற்றை தென் ஆப்ரிக்கா மாற்றி எழுதியுள்ளது. இதுவரை உலகக் கோப்பையில் பாகிஸ்தான் 2 வெற்றிகளையும், தென் ஆப்ரிக்கா 3 வெற்றிகளையும் பெற்றுள்ளன.
இந்தியாவை முந்தி தென் ஆப்ரிக்கா முதலிடம்
இந்த வெற்றியின் மூலம் தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் முதல் இடம் பிடித்து, இந்தியாவை இரண்டாம் இடத்திற்கு தள்ளியுள்ளது.
இதுவரை ஆறு போட்டிகளில் விளையாடியுள்ள தென் ஆப்பிரிக்கா அணி, ஐந்து போட்டிகளில் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன், நெட் ரன் ரேட் +2.032 கொண்டுள்ளது. இந்தியாவுடனான போட்டியில் தென் ஆப்பிரிக்கா அணி தோல்வியடைந்தது.
இந்தியா இதுவரை விளையாடியுள்ள ஐந்து போட்டியில் ஐந்திலும் வெற்றி பெற்று 10 புள்ளிகளுடன், நெட் ரன் ரேட் +1.353 கொண்டுள்ளது. புள்ளிகள் சம அளவில் இருந்தாலும், இந்தியாவைவிட அதிக நெட் ரன் ரேட் கொண்டுள்ளதால், தென் ஆப்பிரிக்கா அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












