You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
வாட்ஸ்ஆப் மூலம் அரங்கேறும் புதுவித மோசடி - தடுப்பதற்கான 5 எளிய வழிகள்
- எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்
- பதவி, பிபிசி தமிழ்
சென்னை அம்பத்தூரில் வசிக்கும் திரைப்பட உதவி இயக்குநர் ஒருவருக்கு கடந்த வாரம் நேர்ந்த அனுபவம் இது.
'50 ஆயிரம் ரூபாய் அவசரமாக தேவைப்படுகிறது' என தனக்கு நெருக்கமான அரசு மருத்துவரின் வாட்ஸ்ஆப் எண்ணில் இருந்து உதவி இயக்குநருக்கு தகவல் வந்துள்ளது.
பணத்தை அனுப்பிய அடுத்த நொடி, 'மேலும் 15 ஆயிரம் ரூபாய் தேவைப்படுகிறது' என வாட்ஸ்ஆப் தகவல் தெரிவித்தது. அந்தப் பணத்தையும் அனுப்பிவிட்டு சற்று சந்தேகத்துடன் மருத்துவரின் எண்ணை தொடர்பு கொண்டுள்ளார்.
" எனக்கு அப்படி எந்த தேவையும் இல்லையே?" என, மருத்துவர் பதில் அளித்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த உதவி இயக்குநர் மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவு காவல்துறையில் புகார் அளித்துள்ளார். தனது புகாரில் மேற்கூறிய விவரங்களை அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேபோன்ற மோசடியில் சிக்கியதாக கடந்த ஓராண்டில் மட்டும் 3,161 புகார்கள் வந்திருப்பதாகவும் சில நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து எளிதில் தற்காத்துக் கொள்ள முடியும்" எனவும் டிஜிபி சந்தீப் மிட்டல் கூறியுள்ளார்.
வாட்ஸ்ஆப்பை பயன்படுத்தி நடக்கும் மோசடிகளில் இருந்து தற்காத்துக் கொள்வது எப்படி?
உதவி இயக்குநரின் புகாரில் இருந்தது என்ன?
சென்னை மைலாப்பூர் இணைய குற்றப் பிரிவில் திரைப்பட உதவி இயக்குநர் அளித்துள்ள புகாரில், கோபாலபுரத்தில் உள்ள தனது அலுவலகத்தில் இருந்தபோது தனக்கு வேண்டிய அரசு மருத்துவரிடம் இருந்து வாட்ஸ்ஆப் மெசேஜ் ஒன்று வந்ததாகக் கூறியுள்ளார்.
அரசு மருத்துவரின் பெயரைப் பயன்படுத்தி தன்னிடம் இருந்து மர்ம நபர்கள் 65 ஆயிரம் ரூபாயைப் பறித்துவிட்டதாக அவர் புகார் மனுவில் கூறியிருந்தார். இதுகுறித்து இணைய குற்றப்பிரிவு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது, "வழக்கின் விவரங்களை தெரிவிக்க இயலாது" என்று மட்டும் பதில் அளித்தார்.
"இந்த விவகாரத்தில் திரைப்பட உதவி இயக்குநரின் செல்போன் ஹேக் செய்யப்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயன்.
'தகவலை யாரும் சரிபார்ப்பதில்லை'
"செல்போன் ஹேக் செய்யப்பட்டிருந்தால் அதில் உள்ள தகவல்களை மோசடி நபர்கள் ஆராய்வார்கள். யார் சொன்னால் இந்த நபர் கேட்பார் என்பதைக் கண்டறிந்து பணம் பறிக்கின்றனர்" என்கிறார் அவர்.
தொடர்ந்து பேசிய கார்த்திகேயன், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் பயனருக்கு நெருக்கமான நபரின் பெயரை எவ்வாறு பதிவு செய்து வைத்திருக்கிறார் என்பதைப் பார்த்தும் அவரது வாட்ஸ்ஆப் புகைப்படத்தைப் பயன்படுத்தியும் மோசடி செய்கின்றனர்" எனக் கூறுகிறார்.
"ஓர் எண்ணில் இருந்து மெசேஜ் வரும்போது அந்த எண்ணை யாரும் சரிபார்ப்பதில்லை" எனக் கூறும் அவர், "தான் பதிவு செய்த எண்ணில் இருந்து வரும் நபரின் புகைப்படத்தைப் பார்த்து ஏமாறுகின்றனர். பண இழப்பு ஏற்பட்ட பிறகு தொடர்பு எண்ணை சரிபார்க்கின்றனர்" என்கிறார்.
இதே தகவலைக் குறிப்பிடும் சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப், "ஹேக் செய்யப்பட்ட செல்போனில் வாட்ஸ்ஆப் செயலிக்கு வரும் தகவல்கள், அவர் யாரிடம் எல்லாம் தொடர்பில் இருக்கிறார், யார் சொன்னால் பணம் கிடைக்கும் என்பதை துல்லியமாக கணித்த பிறகே மோசடி நடக்கிறது" என்கிறார்.
"வாட்ஸ்ஆப்பை நேரடியாக ஹேக் செய்யாமல் ஆன்டிராய்டு செல்போனை ஹேக் செய்வதன் மூலம் பயனரின் வாட்ஸ்ஆப்பில் உள்ள முழு விவரங்களையும் அவர்களால் எளிதாக அணுக முடியும்" எனவும் அவர் குறிப்பிட்டார்.
'கவனக்குறைவால் ஏற்படும் பாதிப்புகள்'
"இது உதாரணம் தான்" என்கிறார், இணைய குற்றப் பிரிவில் பணிபுரியும் காவல்துறை அதிகாரி ஒருவர். பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசி தமிழிடம் பேசிய அவர், "வாட்ஸ்ஆப்பில் அடையாளம் தெரியாத நபர்களிடம் இருந்து வரும் லிங்கை கிளிக் செய்தால் அவற்றின் செயல்பாடு வேறொரு நபரின் கட்டுப்பாட்டுக்குள் சென்றுவிடக்கூடும்" எனக் கூறுகிறார்.
வாட்ஸ்ஆப்பில் பயனர்களின் கவனக்குறைவைப் பயன்படுத்தி ஹேக்கிங் தொடர்பான மோசடிகள் அதிகரித்து வருவதாகவும் அந்த அதிகாரி தெரிவித்தார்.
தமிழ்நாடு இணைய குற்றப்பிரிவின் டிஜிபி சந்தீப் மிட்டல் ஆங்கில நாளேடு ஒன்றுக்கு அளித்துள்ள பேட்டியிலும் இதைக் குறிப்பிடுகிறார். "கவனக்குறைவாக இருந்தால் பண இழப்பு, மனஅழுத்தம், பெயருக்குக் களங்கம், உயிரிழப்பு எனக் கடுமையான விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்கிறார் அவர்.
"வாட்ஸ்ஆப்பில் கிரெடிட் கார்டு விவரங்கள், வங்கிக் கணக்கு விவரம், பாஸ்வேர்டு, வங்கிக் கணக்கு புத்தகத்தின் முகப்பு, தனிப்பட்ட விவரங்கள் ஆகியவற்றைப் பதிவு செய்து வைக்கக் கூடாது" எனக் கூறுகிறார், சைபர் தொழில்நுட்ப வல்லுநர் பிரதீப்.
"முன்பு கணினியில் வாட்ஸ்ஆப் வெப் தளத்துக்கு பாஸ்வேர்டு இல்லாமல் இருந்தது. தற்போது பாஸ்வேர்டு வந்துவிட்டதால் அதைப் பயன்படுத்துவது நல்லது" எனவும் தெரிவித்தார்.
'ஒரே ஆண்டில் 3,161 புகார்கள்'
வாட்ஸ்ஆப் ஹேக்கிங் மோசடி பற்றி 2025 ஆம் ஆண்டில் மட்டும் தமிழ்நாடு இணைய குற்றப் பிரிவுக்கு 3161 புகார்கள் வந்துள்ளதாகக் கூறுகிறார், டிஜிபி சந்தீப் மிட்டல்.
சில பாதுகாப்பு நடவடிக்கையின் மூலம் இதுபோன்ற மோசடிகளில் இருந்து மக்கள் தங்களை எளிதாக பாதுகாத்துக் கொள்ள முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
"வாட்ஸ்ஆப் செயலியில் தொடர்பு எண்களை இலக்காக வைத்து தகவல் அனுப்பி மோசடி நடப்பது ஒருபுறம் இருந்தாலும் சம்பந்தப்பட்ட நபர் பேசுவதுபோல காணொளி தயாரித்து ஏமாற்றும் வேலைகளும் நடக்கின்றன" எனக் கூறுகிறார், இணைய குற்றப் பிரிவின் அதிகாரி ஒருவர்.
பெயர் குறிப்பிட விரும்பாமல் பேசிய அவர், "ஒரு செயலியை பதிவிறக்கம் செய்யும்போது தொடர்பு எண்கள், புகைப்படங்கள், வீடியோ, இருப்பிடம், மைக்ரோ போன் உள்பட அனைத்துக்கும் அனுமதி அளிக்கிறோம்" என்கிறார்.
"அதைப் பற்றி யாரும் யோசிப்பதில்லை" எனக் கூறும் அவர், "வாட்ஸ்ஆப் பயன்படுத்தும் போது ஐந்து விஷயங்களில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்" என்கிறார்.
தடுப்பதற்கான 5 எளிய வழிகள்
- தொடர்பில்லாத எந்த லிங்க் வந்தாலும் அதைத் திறந்து பார்க்கக் கூடாது.
- வாட்ஸ்ஆப்பில் இணைக்கப்பட்ட சாதனங்களை (Linked devices) அவ்வப்போது சரிபார்க்க வேண்டும். அறிமுகம் இல்லாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருந்தால் அந்த இணைப்பை துண்டித்துவிட (log out) வேண்டும்.
- பொது இடங்களில் இலவச வைஃபை கிடைக்கிறது என்பதற்காக பயன்படுத்தக் கூடாது.
- பொது இடங்களில் உள்ள செல்போன் சார்ஜரை பயன்படுத்தக் கூடாது. அது என்ன மாதிரியான சார்ஜர் என்பதை அறியாமல் பயன்படுத்தினால், வெளிநபர்களுக்கு தரவுகள் பரிமாறப்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளன.
- இலவச செயலிகள், இலவச விளையாட்டு செயலிகள் என வந்தால் அதைப் பதிவிறக்கம் செய்வதற்கு முயற்சிக்கக் கூடாது. எதையும் ஒருவர் இலவசமாக கொடுப்பதற்கு வாய்ப்பில்லை என உணர வேண்டும்.
தற்காத்துக் கொள்ளும் வழிகள் என்ன?
வங்கிகள் மற்றும் அரசு அமைப்புகளின் பெயர்களில் வாட்ஸ்ஆப் மோசடிகள் பெருகிவருவதாக தூத்துக்குடி மாவட்ட காவல்துறை செய்திக் குறிப்பு ஒன்றின் மூலம் எச்சரித்துள்ளது.
ஆதார் அப்டேட், டிராஃபிக் இ-சலான் என நம்பகமான குழுக்கள் போன்று வாட்ஸ்ஆப் குழுவை உருவாக்கி இதனை அனுப்புவதாகக் கூறியுள்ள தூத்துக்குடி காவல்துறை, 'Rewards', 'KYC updates', 'cashback offers' எனக் கூறி APK file அல்லது இணைப்பை (Links) அனுப்புகின்றனர்' எனத் தெரிவித்துள்ளது.
இதனை செல்போனில் பதிவிறக்கம் செய்யும்போது செல்போனை ஹேக் செய்யும் மோசடி நபர்கள், அதில் உள்ள வாட்ஸ்ஆப் செய்திகள், வங்கிக் கணக்கு விவரங்கள், தனிப்பட்ட விவரங்களைத் திருடுவதாக தூத்துக்குடி காவல்துறை கூறியுள்ளது.
ஹேக் செய்யப்பட்ட செல்போனில் உள்ள தொடர்பு எண்களில் புதிய வாட்ஸ்ஆப் கணக்கை உருவாக்கி மோசடி செய்வதாகவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
'ஏபிகே மென்பொருளை வாட்ஸ்ஆப், இமெயில், எஸ்.எம்.எஸ் என எந்த வழியாக வந்தாலும் அதைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம்' எனவும் தூத்துக்குடி மாவட்ட காவல்துறை தெரிவித்துள்ளது.
மோசடிகளில் தற்காத்துக் கொள்ளும் வழிமுறைகளையும் காவல்துறை பட்டியலிட்டுள்ளது.
- Apk file அல்லது இணைப்புகளை (link) திறக்கவோ பதிவிறக்கம் செய்யவோ கூடாது.
- வாட்ஸ்ஆப்பில் இருமுறை உறுதிப்படுத்தல் (Two-Step Verification) நிறுவுவதன் மூலம் உங்கள் கணக்கு ஹேக் செய்யப்படாமல் பாதுகாக்கலாம்.
- நிதி இழப்பு அல்லது இணைய மோசடி நடந்திருந்தால் 1930 என்ற எண் அல்லது www.cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்கலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு