You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
'அவர்கள் கேக் சாப்பிடட்டும்': மக்களால் வெறுக்கப்பட்ட மகாராணி தலை துண்டித்து கொல்லப்பட்ட கதை
- எழுதியவர், டெபோரா நிக்கோல்ஸ்-லீ
ஒருகாலத்தில் ஐரோப்பாவில் மிகவும் வெறுக்கப்பட்ட பெண்ணாக இருந்தவர் மேரி அன்டோனெட்.
அவரை தலைக்கனம் கொண்டவர், சதிகாரர், பொறுப்பற்ற முறையில் செலவு செய்பவர் என்று மக்கள் குற்றம் சாட்டினர்.
இறுதியில், பொதுமக்கள் முன்னிலையில் அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டது.
இப்போது, அவரைச் சுற்றியுள்ள பல்வேறு புரளிகள் மற்றும் கட்டுக்கதைகளை ஆராயும் முயற்சி நடக்கிறது.
1770 ஏப்ரலில், ஆஸ்திரியாவின் பேரரசி மரியா தெரசா, தனது 14 வயது மகள் மரியா அன்டோனியாவிடம், "அனைவரின் பார்வையும் உன் மீதே இருக்கும்"என்று கூறினார்.
அந்தச் சிறுமி பின்னர் மேரி அன்டோனெட் என அழைக்கப்பட்டார்.
அவர் வெர்செய்ல்ஸ் அரண்மனையில் பிரான்சின் வருங்கால மன்னர் 16-ஆம் லூயிஸை திருமணம் செய்தார்.
திருமணத்திற்குப் பிறகு மேரி அன்டோனெட்டின் வாழ்க்கை மிகக் கடுமையான விமர்சனங்களும் அவதூறுகளும் நிறைந்ததாக மாறியது.
அவர் அதிகமாக செலவு செய்தார், பொறுப்பற்ற வாழ்க்கை வாழ்ந்தார், சதிகளில் ஈடுபட்டார் என்ற குற்றச்சாட்டுகள் பரவின.
அவரது ஆடம்பர வாழ்க்கை நாட்டை திவாலாக்கியதாகக் கூறப்பட்டது .
இந்தக் குற்றச்சாட்டுகள் பின்னர் பிரெஞ்சு புரட்சிக்கு வழிவகுத்தன.
இறுதியில், ஒரு ராணிக்கு பொதுமக்கள் முன்னிலையில் மரண தண்டனை நிறைவேற்றப்படுவது போன்ற அதிர்ச்சியூட்டும் வரலாற்றுச் சம்பவம் நிகழ்ந்தது.
மேரி அன்டோனெட்டைச் சுற்றியுள்ள ஈர்ப்பு நூற்றாண்டுகள் கடந்தும் குறையவில்லை.
ஆனால் இன்று, அவரது வாழ்க்கையைப் பற்றி கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
அவர் உண்மையில் வெறுக்கப்பட வேண்டியவரா?
அல்லது பல்வேறு அரசியல், சமூக நலன்களின் மோதலில் சிக்கி, பொய்களால் அழிக்கப்பட்ட ஒரு தியாகியா?
செப்டம்பர் 20-ஆம் தேதி வி&ஏ அருங்காட்சியகத்தில் தொடங்கிய 'மேரி அன்டோனெட் ஸ்டைல்' ('Marie Antoinette Style') என்ற கண்காட்சியின் பொறுப்பாளரான டாக்டர் சாரா கிராண்ட், மேரி அன்டோனெட்டை "வரலாற்றில் மிகவும் நாகரிகமான, அதிகம் ஆராயப்பட்ட மற்றும் சர்ச்சைக்குரிய ராணி" எனக் கூறுகிறார்.
இந்த கண்காட்சி, மேரி அன்டோனெட்டின் 270வது பிறந்த நாளை முன்னிட்டு, அவரது தனிப்பட்ட பாணியை கொண்டாடுகிறது. கூடவே, அவரைச் சுற்றியுள்ள பொய்கள் மற்றும் கட்டுக்கதைகளையும் ஆராய்கிறது.
மேரி அன்டோனெட்டைச் சுற்றியுள்ள மிகப் பிரபலமான புரளிகளில் ஒன்று, அவர் கூறியதாக பரவி வந்த "அவர்கள் கேக் சாப்பிடட்டும்" என்ற வாசகம்.
பிரான்சில் பசியால் வாடிய மக்களை 'ரொட்டி இல்லாவிட்டால் கேக் சாப்பிடுங்கள்' என்று அவர் அக்கறையற்று பதிலளித்ததாக பரவியது.
ஆனால் உண்மையில் இதற்கான எந்த ஆதாரமும் இல்லை.
இந்த வாசகம் 1765-ல் எழுதப்பட்ட Confessions என்ற நூலில், "ஒரு சிறந்த இளவரசி" கூறியதாக முதன்முதலில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அப்போது மேரி அன்டோனெட்டுக்கு வயது வெறும் 10 தான். அவர் அதுவரை ஆஸ்திரியாவில் தான் இருந்தார்.
எனவே, அந்த வாசகத்தை அவர் கூறியிருப்பதற்கான வாய்ப்பு குறைவு.
அதேபோல், 1785–1786-இல் நடந்த "வைர நெக்லஸ் விவகாரம்" என்பதும் மற்றொரு போலிச் செய்தி.
600-க்கும் மேற்பட்ட வைரங்களைக் கொண்ட விலைமதிப்பற்ற நெக்லஸ், ராணியின் பெயரில் பொய்யாக ஆர்டர் செய்யப்பட்டதாக கூறப்பட்டது.
விசாரணையில் அவர் குற்றமற்றவர் என நிரூபிக்கப்பட்டபோதிலும், இந்தச் சம்பவம் அவருக்கு 'அதிகப்படியான ஆடம்பர வாழ்க்கை வாழ்ந்த ராணி' என்ற பெயரை பெற்றுக் கொடுத்தது.
இந்த நெக்லஸின் பிரதி, அசல் கற்களைக் கொண்டதாகக் கூறப்படும் சதர்லேண்ட் நெக்லஸ் உடன் தற்போது நடைபெறும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.
அவரது ரசனையையும் பாணியையும் பிரதிபலிக்கும் பல பொருட்களும் அங்கே காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
1800–1890 கால கட்டத்தில் பிரெஞ்சு மறுமலர்ச்சி காலத்தில் உருவாக்கப்பட்ட ஆடம்பரமான உபயோகப் பொருட்கள் மற்றும் இயக்குநர் சோபியா கொப்போலாவின் ஆஸ்கார் வென்ற Marie Antoinette (2006) திரைப்படத்திற்காக மனோலோ பிளானிக் வடிவமைத்த அழகான இளஞ்சிவப்பு பூக்களுடன் கூடிய காலணிகளும் அங்கே வைக்கப்பட்டுள்ளன.
"அவரைக் குறிக்கும் எல்லா விஷயங்களும் இன்னும் என்னை ஈர்க்கின்றன" என்று அந்தக் கண்காட்சிக்கான பட்டியலின் முன்னுரையில் மனோலோ பிளானிக் எழுதியுள்ளார்.
இளம் ராணி மேரி அன்டோனெட்டின் ஆடம்பர வாழ்க்கை, பட்டினியால் வாடிய ஏழைகளின் மனக்காயங்களை மேலும் காயப்படுத்தியது.
அவர் ஒரு பலவீனமான மனநிலை கொண்ட, சுறுசுறுப்பற்ற கணவரை திருமணம் செய்து கொண்டார். அவர், மனைவியை விட வேட்டையாடுவதில் அதிக ஆர்வம் கொண்டிருந்தார். மருத்துவ காரணங்களால் அவர்கள் திருமணத்தின் முதல் ஏழு ஆண்டுகள் உடலுறவு கொள்ள முடியவில்லை.
இந்த தனிமையும் மன அழுத்தமும் மேரி அன்டோனெட்டை ஆடம்பரமான விருந்துகள், சூதாட்டம், ஃபேஷன் மற்றும் அழகுசாதன உலகில் மூழ்கடித்தது.
அவர் அணிந்த ஆடைகள் மிகவும் கற்பனையுடன் அலங்கரிக்கப்பட்டவை.
அவர் உடையணிந்த பாணி பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும் ஃபேஷன் உலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
மடோனா, ரிஹானா போன்ற பாப் நட்சத்திரங்களையும், விவியென் வெஸ்ட்வுட், டியோர், மோசினோ போன்ற பிரபல ஆடை வடிவமைப்பாளர்களையும் மேரி அன்டோனெட்டின் பாணி ஈர்த்தது.
'மேடம் டெஃபிசிட்' எனும் புனைப்பெயர்
மேரி அன்டோனெட்டுக்கு "மேடம் டெஃபிசிட்" (Madame Déficit) என்ற பெயர் வழங்கப்பட்டது . ஆனால் அது முற்றிலும் நியாயமற்ற ஒரு பெயர்.
அவர் மன்னரின் சகோதரர்களை விட குறைவாகவே செலவழித்தார்.
ஆடம்பரமாக வாழ்ந்தது அவர் ஒருவர் மட்டும் அல்ல. பிரான்சின் அரச குடும்பம் தலைமுறை தலைமுறையாகவே ஆடம்பரத்துக்குப் பெயர் பெற்றது தான்.
ஆனால், வெளிநாட்டில் பிறந்த ராணியாக இருந்ததால், மேரி அன்டோனெட் பிரெஞ்சு அரசாங்கத்தின் நிதி மேலாண்மை தோல்விக்கான பலிகடாவாக மாறினார்.
"உண்மையில், பிரான்ஸை திவாலாக்கியது ராணியின் ஆடம்பர செலவுகள் அல்ல. போர்களுக்காக செய்யப்பட்ட பெரும் செலவுகள் தான்," என்று வரலாற்றாளர் கிராண்ட் பிபிசியிடம் கூறுகிறார்.
"மேரி அன்டோனெட்டின் ஆடை மற்றும் ஆபரணங்களுக்கான வருடாந்திர பட்ஜெட் இன்றைய கணக்கில் சுமார் ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களுக்கு சமமாக இருக்கும். ஆனால் அதேநேரத்தில், பிரான்ஸ் அமெரிக்க சுதந்திரப் போருக்கு மட்டும் 11.25 பில்லியன் டாலர் செலவழித்தது," என்றும் அவர் கூறுகிறார்.
மேரி அன்டோனெட் தனது ஆடம்பரச் செலவுகளை குறைக்க முயன்ற போது, அதுவே அவருக்கு புதிய சிக்கல்களை உருவாக்கியது.
"அவர் பட்டாடைகளை அணிவதை நிறுத்தியவுடன், பட்டு உற்பத்தி செய்யும் தொழிலாளர்கள் பெரும் அதிருப்தியடைந்தனர். ஏனெனில் அவர்களின் வாழ்வாதாரம் ஆபத்தில் இருந்தது," என்கிறார் வரலாற்றாளர் கிராண்ட்.
1783ஆம் ஆண்டு, மேரி அன்டோனெட் தன்னை ஆடம்பரமற்ற, இயல்பான தோற்றத்தில் வெளிப்படுத்த முயன்றார்.
அவர் 'நாட்டுப்புற' பாணியில், எளிய உடை அணிந்த உருவப்படம் ஒன்றை வரையச்செய்தார். அந்த பாணி பின்னர் பெரிதும் பிரபலமானது.
ஆனால் விரைவிலேயே அந்த ஓவியம் அரண்மனையிலிருந்து அகற்றப்பட்டது.
அதற்கு பதிலாக, வழக்கம்போல் அரச மரியாதை நிறைந்த, ஆடம்பரமான புதிய உருவப்படம் வைக்கப்பட்டது.
"அவர் எப்போதுமே ஒரு அரச மரியாதைமிக்க தோற்றத்தை வெளிப்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கப்பட்டது" , "அதுவே முடியாட்சி தனது அதிகாரத்தையும் மரியாதையையும் காத்துக்கொள்ளும் வழியாக இருந்தது"என்கிறார் கிராண்ட்.
மேரி அன்டோனெட்டைச் சுற்றியுள்ள பல கதைகள், அவரது மனிதநேய பக்கத்தை பெரும்பாலும் மறந்துவிடுகின்றன.
அவர் ஒவ்வொரு ஆண்டும் தன் ஆடைகளை மறுசுழற்சி செய்து, அவற்றை தன் அரண்மனை ஊழியர்களுக்கு பகிர்ந்தளித்தார்.
அவர் பல குழந்தைகளைத் தத்தெடுத்தார். அதில் செனகல் நாட்டைச் சேர்ந்த ஜீன் அமில்கார் என்ற சிறுவனும் இருந்தார். அந்தக் குழந்தையை அடிமைத்தனத்திலிருந்து விடுதலை செய்தவர் மேரி அன்டோனெட் தான்.
அவர் "தனது கணவரிடமிருந்து விலையுயர்ந்த பரிசுகளை ஏற்க மறுத்தார்" என்றும், பல தொண்டு நிறுவனங்களுக்கு தாராளமாக நன்கொடைகள் அளித்தார் என்றும் வரலாற்றாசிரியரும் எழுத்தாளருமான மெலனி பரோஸ் (முன்பு கிளெக்) பிபிசியிடம் தெரிவித்துள்ளார்.
"அவர் அடிக்கடி சித்தரிக்கப்படுவது போல ஒரு முட்டாள் அல்ல. மாறாக, நல்ல எண்ணம் கொண்ட, தாராள மனமும், கருணை நிறைந்தவருமாக இருந்தார்" என்று பர்ரோஸ் கூறுகிறார்.
ஆஸ்திரியாவுடனான நீண்டகால விரோதத்திற்குப் பிறகு, சமாதானத்தின் அடையாளமாக மேரி அன்டோனெட் பிரான்ஸ் அரசவைக்கு அனுப்பப்பட்டார்.
ஆனால், அவர் ஆஸ்திரியாவுடன் கொண்டிருந்த உறவுகள் பின்னர் அவருக்கு எதிராகத் திரும்பின.
அவர், ஆஸ்திரியாவுக்கு ராணுவ ரகசியங்களை பகிர்ந்ததாக சந்தேகிக்கப்பட்டார். அவர் பிரெஞ்சு மக்கள் மீது அக்கறையற்றவர் என சித்தரிக்கப்பட்ட விதம் , பொதுமக்களிடையே அவர் மீது பெரும் அவநம்பிக்கையை உருவாக்கியது.
கேலிச் சொல்லான "L'Autri-chienne" என்று அவரை இழிவாக அழைத்தனர்.
இந்த இழிவான பெயர், அவர் மீதான வெறுப்பையும் அவநம்பிக்கையையும் பிரெஞ்சு சமூகத்தில் மேலும் தீவிரப்படுத்தியது.
மன்னனுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது, ஆனால் ஒரு ராணி அரசியலில் தலையிடக் கூடாது, பின்னணியில் இருப்பதே மரபு என்று கருதப்பட்டது.
ஆனால் மேரி அன்டோனெட் அந்த மரபை மீறியதாகக் கூறப்பட்டது. அவர் மிகத் துடிப்பானவராகவும், அரசியல் விவகாரங்களில் தலையிட்டவராகவும் சித்தரிக்கப்பட்டார்.
அவர் தனது வசீகரத்தையும் செல்வாக்கையும் பயன்படுத்தி அமைச்சர்களிடம் மறைமுக தாக்கத்தைச் செலுத்தினார் என்றும், நாட்டுக்குத் தேவையான அரசியலமைப்பு சீர்திருத்தங்களுக்கு எதிராக இருந்தார் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
இதனால் அவரது எதிரிகள் அவரை வீழ்த்த வேண்டும் என்ற எண்ணத்தில் செயல்படத் தொடங்கினர்.
அவதூறான துண்டு பிரசுரங்கள் பரப்பப்பட்டன. அவற்றில் சில ஆபாசமானவையாக இருந்தன.
அவற்றில் அவர் ஒழுக்கக்கேடானவர், கேளிக்கைகளில் ஈடுபட்டவர், பெண்களுடன் உறவு வைத்தவர் என்றும் தனது குடும்பத்தினருடன் கூட தவறான உறவுகள் கொண்டவர் என்றும் குற்றம் சாட்டப்பட்டது.
உண்மையில், அவருடைய அறியப்பட்ட காதலர், கவுண்ட் ஆக்செல் வான் ஃபெர்சன் மட்டுமே.
இந்த வதந்திகள் அனைத்தும் "ஆணாதிக்கத்தால் தூண்டப்பட்டவை," என்று வரலாற்றாளர் கிராண்ட் கூறுகிறார்.
"அவரைப் பற்றிய பெரும்பாலான புரளிகள் 19ஆம் நூற்றாண்டில் எழுதப்பட்ட வாழ்க்கை வரலாறுகளிலிருந்து வந்தவை. அவை அனைத்தும் ஆண்களால் எழுதப்பட்டவை," என்றும் அவர் கூறுகிறார்.
பர்ரோஸின் கூற்றுப்படி, அவர் உண்மையில் மிகவும் விவேகமானவர்.
அவர் அரிதாகவே மதுபானம் அருந்தினார். மேலும் "தனது சொந்த பணியாளர்கள் கூட தன்னை நிர்வாணமாக பார்ப்பதை வெறுத்தார்."
ஆனாலும் , அவரைச் சுற்றி தொடர்ந்து தவறான கதைகள் பரப்பட்டன.
2020ல் வெளியான மேரி அன்டோனெட்டின் உலகம்: சூழ்ச்சி, துரோகம் மற்றும் வெர்செய்ல்ஸ் அரண்மனையில் நடந்த பாலியல் தொழில் என்ற நூலில் வரலாற்றாசிரியர் வில் பாஷோர், அவரது நீண்டநாள் கருப்பை ரத்தப்போக்கு, பாலியல் நோயால் ஏற்பட்டதாக ஊகிக்கிறார்.
அதே நேரத்தில், அவர் "உளவியல் ரீதியாக துஷ்பிரயோகம் செய்யப்பட்டவர்", "சலித்துப்போனவர்", "புறக்கணிக்கப்பட்டவர்" என்றும் குறிப்பிடுகிறார்.
திருமணத்திற்கு வெளியே இன்பத்தைத் தேடியவர் என்று குற்றம் சாட்டினாலும், முடிவில், "அவர் மன்னிக்கப்பட வேண்டியவர்" என்கிறார் வில் பாஷோர்.
உண்மையில், மேரி அன்டோனெட் ஒரு அன்பும் அர்ப்பணிப்பும் நிறைந்த தாய் என்று நார்தம்ப்ரியா பல்கலைக்கழகத்தின் நவீன ஐரோப்பிய வரலாற்றாசிரியர் முனைவர் லாரா ஓ'பிரையன் கூறுகிறார்.
தனது குழந்தைகளுடன் அவர் கொண்டிருந்த உறவு "மென்மையானதும் உணர்ச்சிப்பூர்வமானதுமாக" இருந்தது. அது அவர் வளர்க்கப்பட்ட முறைக்கு நேர்மாறானது.
அவர் தாய்ப்பால் கொடுத்த முதல் பிரெஞ்சு ராணியாகவும், தனது ஓவியங்களில் காணப்பட்டபடி, எளிய, தாய்மையின் சின்னமாகிய ஆடை அணிந்த ராணியாகவும் இருந்தார்.
ஐரோப்பாவின் மிகவும் வெறுக்கப்பட்ட ராணியாக இருந்த மேரி அன்டோனெட்டின் மீதான ஈர்ப்பு இன்னும் குறையவில்லை.
அதற்குக் காரணம், அவரது வாழ்க்கையின் சோகக் கதைதான்.
ஒரு அரச குடும்பத்தைச் சேர்ந்த சிறுமி, இளம் வயதிலேயே ஒரு அசாத்தியமான நிலைக்கு தள்ளப்பட்டார்.
இறுதியில், வெள்ளை ஆடை அணிந்த சோகமான உருவமாக, தலைமுடி மழிக்கப்பட்ட நிலையில், ஒரு வண்டியில் ஏற்றி மரண தண்டனையை நிறைவேற்ற அழைத்துச் செல்லப்பட்டார்.
புரட்சியாளர்களுக்கு, பிரான்ஸ் மாற்றிக்கொள்ள வேண்டிய அனைத்திற்கும் மேரி அன்டோனெட் ஒரு சின்னமாக மாறினார்.
1793 ஆம் ஆண்டில் அவருக்கு வழங்கப்பட்ட மரண தண்டனை, பிரான்ஸை பழைய அரசாட்சியின் (Ancien Regime) தீமைகளிலிருந்து சுத்தப்படுத்தும் முயற்சியாகக் கருதப்பட்டது.
ஆனால், அவரது மரணத்தால் அவரது செல்வாக்கை குறைக்க முடியவில்லை.
அதற்கு பின், குறுகிய "முள்ளம்பன்றி" பாணியிலான முடி வெட்டும் முறையும் , கில்லட்டினை நினைவூட்டும் ரத்த சிவப்பு நிற கழுத்தணிகளும் (chokers) ஃபேஷனாக மாறின.
அவரைப் பற்றிய வதந்திகளை நம்பியவர்கள் அவரை வெறுத்தனர். ஆனால் பலரும் அவரைப் போற்றினர். இன்று வரை அவரது புகழ் நீடித்துள்ளது.
"இந்தக் கண்காட்சி நடப்பது எனது கனவு நனவானது போல உள்ளது", "இது மேரி அன்டோனெட்டின் மறுபிறப்பு" என்கிறார் புகழ்பெற்ற வடிவமைப்பாளர் மனோலோ பிளானிக்.
'Marie Antoinette Style' என்ற இந்தக் கண்காட்சி லண்டனின் சவுத் கேன்சிங்டனில் உள்ள விக்டோரியா அண்ட் ஆல்பர்ட் அருங்காட்சியகத்தில் கடந்த செப்டம்பர் 20-ஆம் தேதி முதல் நடைபெறுகிறது. இந்த கண்காட்சி, 2026 மார்ச் 22 வரை நடைபெறுகிறது. இக்கண்காட்சியுடன் V&A பப்ளிஷிங் மூலம் ஒரு புத்தகமும் வெளியிடப்பட்டுள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு