பாகிஸ்தானில் இந்தியா குறிவைத்த டி.ஆர்.எஃப் தீவிரவாதக் குழுவின் முழு பின்னணி

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு தக்க பதிலடி கொடுத்த இந்திய ராணுவ நடவடிக்கைகள்

பட மூலாதாரம், ANI

பஹல்காம் தாக்குதல் மற்றும் அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் மேற்கொண்ட நடவடிக்கைகள் சர்வதேச தலைப்புச் செய்திகளாகியுள்ள நிலையில், டி.ஆர்.எஃப் அல்லது தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரன்ட் (The Resistance Front) என்ற அமைப்ப்பின் பெயர் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

இந்திய ராணுவ நடவடிக்கை தொடர்பாக மே 7ஆம் தேதி காலை இந்திய பாதுகாப்பு அமைச்சகம் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இந்திய வெளியுறவுச் செயலாளர் விக்ரம் மிஸ்ரி பேசும்போது TRF என்ற பெயரும் இடம் பெற்றிருந்தது.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட தீவிரவாத அமைப்பான லஷ்கர்-இ-தொய்பாவின் முன்னணி அமைப்பாக டிஆர்எஃப் அமைப்பு இருப்பதாக மிஸ்ரி தெரிவித்தார். ஆனால், அவர் அப்போது, இரு அமைப்புகளுக்கும் உள்ள தொடர்புக்கான ஆதாரங்கள் எதையும் கூறவில்லை.

இருப்பினும், பஹல்காம் தாக்குதலை பாகிஸ்தானியர்கள் மற்றும் பாகிஸ்தானில் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் மேற்கொண்டதாக இந்திய வெளியுறவுச் செயலாளர் கூறினார். ஆனால், இதை பாகிஸ்தான் மறுத்தது.

பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு, டிஆர்எஃப் சமூக ஊடகங்களில் வெளியிட்ட ஒரு பதிவில் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது. ஆனால், பிறகு அதை மறுத்ததோடு, தங்கள் சமூக ஊடகக் கணக்கை யாரோ ஹேக் செய்து தாக்குதலுக்குப் பொறுப்பு ஏற்றதாகக் கூறப்படும் பதிவைப் பதிவிட்டதாக விளக்கம் அளித்தது.

இன்று இந்தியா தரப்பு மேற்கொண்ட பத்திரிகையாளர் சந்திப்பில் பஹல்காம் தாக்குதலில் டி.ஆர்.எஃப் அமைப்புக்குத் தொடர்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளது.

டி.ஆர்.எஃப் அமைப்பின் பின்னணி என்ன?

பாதுகாப்புப் படையினரின் ரோந்துப்பணி

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, பாதுகாப்புப் படையினரின் ரோந்துப் பணி

கடந்த 2019ஆம் ஆண்டில் சட்டப்பிரிவு 370 ரத்து செய்யப்பட்ட பிறகு டி.ஆர்.எஃப் உருவானது. முதலில் ஆன்லைனில் பிரசாரம் செய்யத் தொடங்கிய அந்த அமைப்பு, பின்னர் ஆயுதமேந்திய நடவடிக்கைகளுக்கு மாறிவிட்டதாகக் கூறப்படுகிறது.

அண்மைக் காலங்களில், காஷ்மீரில் மக்கள் மீதும், இந்திய படைகள் மீதும் தாக்குதல்களை நடத்தியதாக இந்தக் குழு பொறுப்பேற்றுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில், வடக்கு காஷ்மீரின் ஹிந்த்வாரா நகரில் இந்த அமைப்பு மேற்கொண்ட ஒரு தாக்குதலில் ராணுவ கர்னல் ஒருவர், ஒரு மேஜர் மற்றும் ஒரு காவல்துறை துணை ஆய்வாளர் கொல்லப்பட்டனர்.

ஆகஸ்ட் 2023இல், குல்காமின் ஹாலன் மஞ்ச்காம் பகுதியில் நடத்தப்பட்ட டி.ஆர்.எஃப் தாக்குதலில் இந்திய ராணுவ வீரர்கள் மூவர் கொல்லப்பட்டனர்.

அனந்த்நாக் மாவட்டம் கோக்கர்நாக்கில் 2023 செப்டம்பரில் இரண்டு இந்திய ராணுவ அதிகாரிகள் மற்றும் ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் ஒரு டிஎஸ்பியை இந்த அமைப்பு கொன்றதாகப் பொறுப்பேற்றது.

மேலும், 2024 அக்டோபர் 20ஆம் தேதியன்று, கந்தர்பாலில் ஒரு சுரங்கப் பாதையில் பணிபுரிந்த ஆறு புலம்பெயர் தொழிலாளர்கள், ஒரு மருத்துவர் என ஏழு பேர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதலுக்கும் தி ரெசிடன்ஸ் ஃபிரன்ட் அமைப்பு பொறுப்பேற்றது.

உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, உயிரிழந்த ராணுவ வீரர்களுக்கு மரியாதை

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டில் UAPA சட்டத்தின் கீழ் இந்திய அரசு இந்தக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது. மேலும், டி.ஆர்.எஃப் நிறுவனர் ஷேக் சஜ்ஜாத் குல் தீவிரவாதியாக அறிவிக்கப்பட்டார்.

இளைஞர்களைத் தங்கள் அமைப்பில் சேரத் தூண்டியது, தீவிரவாதத் தகவல்களை இணையத்தில் பரப்பியது, ஜம்மு காஷ்மீருக்குள் சட்டவிரோத ஆயுதங்களைக் கடத்துவது எனப் பல குற்றச்சாட்டுகள் இந்த அமைப்பின் மீது சுமத்தப்பட்டுள்ளன.

"டி.ஆர்.எஃப் அமைப்பின் செயல்பாடுகள் இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் இறையாண்மைக்கு அச்சுறுத்தலாக உள்ளது" என்று கூறிய இந்திய அரசு அந்த அமைப்பைத் தீவிரவாத அமைப்பாக அறிவித்தது.

காஷ்மீரில் ஏற்கெனவே சில தீவிரவாத அமைப்புகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய குழுவை உருவாக்க வேண்டிய அவசியம் என்ன?

தனது பெயரை வெளியிடவேண்டாம் என்ற கோரிக்கையுடன் ஜம்மு காஷ்மீர் காவல் படையின் மூத்த அதிகாரி ஒருவர் இந்தக் கேள்விக்குப் பதிலளித்தார்.

"கடந்த 2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச தீவிரவாதத்தைக் கையாளும் நிதி நடவடிக்கை பணிக்குழு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. உலக சக்திகள் பாகிஸ்தானை கருப்புப் பட்டியலில் சேர்க்கும் அபாயமும் இருந்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இத்தகைய சூழ்நிலையில், காஷ்மீரில் ஆயுதமேந்திய வன்முறைக்கு உள்ளூர் நிறம் கொடுத்து, அதை ஒரு மத இயக்கமாக இல்லாமல் உள்ளூர் எதிர்ப்பாக இந்தியாவில் காட்டுவதற்குத் திட்டமிடப்பட்டது. ஆகையால், லஷ்கர்-இ-தொய்பா டி.ஆர்.எஃப் வடிவத்திலும், ஜெய்ஷ்-இ-முகமது அமைப்பு மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி (People's Anti-Fascist Front) என்ற வடிவத்திலும் தீவிரமாகச் செயல்பட்டன" என்றார் அவர்.

உள்ளூர் காவல்துறையின் கருத்துப்படி, காஷ்மீர் பள்ளத்தாக்கில் டி.ஆர்.எஃப் தீவிரமாகச் செயல்படுகிறது என்றால், மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி ஜம்முவின் ராஜௌரி மற்றும் பூஞ்ச் பகுதிகளில் தீவிரமாகச் செயல்படுகிறது.

ராணுவ வரலாற்றாசிரியர் ஸ்ரீநாத் ராகவன் பிபிசி செய்தியாளர் சௌதிக் பிஸ்வாஸிடம் பேசும்போது, லஷ்கர்-இ-தொய்பாவின் ஒரு கிளைதான் டி.ஆர்.எஃப் என்று கூறினார்.

"அவர்கள் ராணுவத்திடம் இருந்து சிறிது தூரத்தில் இருந்தாலும், தாங்கள் சுறுசுறுப்பாக இருப்பதாகக் காட்டுகிறார்கள். அத்தகைய குழுக்கள் தங்கள் செல்வாக்கை இழக்கத் தொடங்கும்போது, தம் ஆதரவாளர்களுக்குத் தாங்கள் இன்னும் சுறுசுறுப்பாக இருப்பதைக் காட்டுவதற்காகத் தாக்குதல்களை நடத்துகிறார்கள்" என்று ஸ்ரீநாத் ராகவன் கூறுகிறார்.

TRF மற்றும் PAFF உருவான பின்னணி

பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பாகிஸ்தான் நிர்வகிக்கும் காஷ்மீரின் தலைநகரான முசாஃபராபாத் உள்ளிட்ட ஆறு இடங்களில் இந்தியா தாக்குதல் நடத்தியதாக பாகிஸ்தான் கூறுகிறது.

இந்திய அரசு ஆகஸ்ட் 2019இல் ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அரசமைப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அதை ஜம்மு-காஷ்மீர், லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாகப் பிரித்தது.

அந்த நேரத்தில், ஹிஸ்புல் முஜாஹிதீன், லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஷ்-இ-முகமது போன்ற தீவிரவாத அமைப்புகள் காஷ்மீரில் தீவிரமாகச் செயல்பட்டு வந்தன. இந்நிலையில், 2019 முதல் TRF, PAFF போன்ற அமைப்புகள், அந்தப் பிராந்தியங்களில் நடைபெற்ற தாக்குதல்களுக்குப் பொறுப்பேற்கத் தொடங்கின.

கடந்த 2023 மார்ச் மாதத்தில் நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விக்கு உள்துறை அமைச்சகம் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், "சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சத்தமான UAPA-வின் கீழ் டி.ஆர்.எஃப், மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணி ஆகியவை தீவிரவாத அமைப்புகளாக அறிவிக்கப்பட்டுள்ளன" என்று கூறியிருந்தது. இந்த அமைப்புகள் "கடத்தல்கள் மற்றும் பிற வன்முறைச் சம்பவங்களிலும் ஈடுபட்டுள்ளன" என்றும் தெரிவித்திருந்தது.

ஜம்மு காஷ்மீர் காவல்துறையின் மூத்த அதிகாரி ஒருவர், பெயர் வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் பிபிசியிடம் பேசுகையில், "2016ஆம் ஆண்டுக்குப் பிறகு, சர்வதேச பயங்கரவாதத்தைக் கையாளும் நிதி நடவடிக்கைப் பணிக்குழு, பாகிஸ்தானுக்கு அழுத்தம் கொடுக்கத் தொடங்கியது. மேலும், அவர்கள் கருப்புப் பட்டியலில் சேர்க்கப்படும் அபாயத்திலும் இருந்தனர்," என்று கூறினார்.

காஷ்மீரில் நடக்கும் ஆயுத வன்முறைக்கு உள்ளூர் நிறம் கொடுத்து, அதை மத இயக்கமாக இல்லாமல் உள்ளூர் போராட்டமாகக் காட்ட, லஷ்கர்-இ-தொய்பா டி.ஆர்.எஃப் வடிவத்திலும், ஜெய்ஷ்-இ-முகமது மக்கள் பாசிச எதிர்ப்பு முன்னணியின் வடிவத்திலும் தீவிரமாகச் செயல்பட்டு வருவதாக அவர்கள் கூறுகிறார்கள்.

-இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு