டெல்லி அரசு பங்களாவில் இருந்து முதலமைச்சர் ஆதிஷி வெளியேற்றம் - என்ன நடந்தது?

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், @AtishiAAP

படக்குறிப்பு, பொதுப்பணித்துறை தன்னை அரசு இல்லத்தில் இருந்து வெளியேற்றியதாக டெல்லி முதல்வர் ஆதிஷி குற்றம் சாட்டியுள்ளார். ஆதிஷி இத்துறையின் அமைச்சராகவும் உள்ளார்.
    • எழுதியவர், தில்நவாஸ் பாஷா
    • பதவி, பிபிசி நிருபர்

டெல்லியில் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தங்கியிருந்த ‘6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை’ இல்லம் மீண்டும் செய்திகளில் இடம்பிடித்துள்ளது.

அக்டோபர் 4ஆம் தேதி அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வீட்டை காலி செய்தார், அதன் பிறகு ஆதிஷி அங்கு வசிக்கச் சென்றார். ‘6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை’ இல்லத்தில் இருந்து முதல்வர் ஆதிஷி வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டுள்ளதாக, இப்போது டெல்லியில் ஆளும் கட்சியாக உள்ள ஆம் ஆத்மி குற்றம்சாட்டியுள்ளது.

வியாழக்கிழமை, டெல்லி முதல்வர் அலுவலகம் ஆதிஷியின் ஒரு புகைப்படத்தை வெளியிட்டது. அதில் தனது தனிப்பட்ட வீட்டில் கோப்புகளில் கையெழுத்திடுகிறார் ஆதிஷி. அவரைச் சுற்றி பேக் செய்யப்பட்ட பொருட்கள் வைக்கப்பட்டுள்ளன.

துணைநிலை ஆளுநரின் உத்தரவின் பேரில் டெல்லியில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர், அவரது அதிகாரப்பூர்வ இல்லத்தில் இருந்து தூக்கி எறியப்பட்டதாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியது.

இதுகுறித்து துணைநிலை ஆளுநர் அலுவலகத்தில் இருந்து எந்த எதிர்வினையும் இல்லை.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வியாழக்கிழமை அன்று பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், “நவராத்திரி விழா சமயத்தில், பெண் முதல்வரின் வீட்டில் இருந்த பொருட்களை தூக்கி வீசியுள்ளது பாஜக. 27 ஆண்டுகளாக டெல்லியில் ஆட்சியைப் பிடிக்க முடியாத பாஜக, இப்போது தேர்தலில் வெற்றி பெறாமல் முதல்வர் இல்லத்தைக் கைப்பற்ற நினைக்கிறது.” என்று கூறினார்.

அதே சமயத்தில், இந்த இல்லம் தான் முதல்வர் இல்லம் என்று எந்த விதியின் கீழும் குறிப்பிடப்படவில்லை என்று பாரதிய ஜனதா கட்சி தெரிவித்துள்ளது.

இது குறித்து டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், “விதிகளை புறக்கணித்து இந்த ஷீஷ்மஹாலை (6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை இல்லம்) தனக்காக வைத்திருக்க ஆம் ஆத்மி விரும்புகிறது” என்றார்.

‘விஜிலென்ஸ் விசாரணை நடந்து வருகிறது’

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், Delhi Police

படக்குறிப்பு, டெல்லி முதல்வர் ஆதிஷி

புதன்கிழமை, டெல்லியின் பொதுப்பணித் துறை அதிகாரிகள் '6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்தை' தங்கள் கட்டுப்பாட்டில் எடுத்துக்கொண்டனர். முதல்வர் ஆதிஷி இத்துறையின் அமைச்சராகவும் உள்ளார்.

டெல்லியின் முன்னாள் முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் அக்டோபர் 4ஆம் தேதி இந்த வீட்டை காலி செய்து அதன் சாவியை பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்தார்.

பொதுப்பணித் துறைக்கு கேஜ்ரிவால் எழுதிய குறிப்பில், தற்போதைய முதல்வர் ஆதிஷிக்கு இந்த வீட்டை ஒதுக்க வேண்டும் என்று விருப்பம் தெரிவிக்கப்பட்டது.

பொதுப்பணித்துறை என்பது டெல்லியில் உள்ள அரசு வீடுகளின் கட்டுமானம் மற்றும் பராமரிப்புக்கு பொறுப்பான துறையாகும். இத்துறையே அமைச்சர்களுக்கு பங்களாக்களை ஒதுக்குகிறது.

பொதுப்பணித்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இந்த வீடு ஆதிஷிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து சஞ்சய் சிங்கிடம் கேட்டபோது, "இது முதல்வரின் வீடு என்று நாங்கள் ஆரம்பத்தில் இருந்தே கூறி வருகிறோம். ஆதிஷியின் உடைமைகள் இரண்டு சிறிய டெம்போக்களில் கொண்டு வரப்பட்டு வீட்டில் வைக்கப்பட்டிருந்ததை அனைவரும் பார்த்தனர். கேள்வி என்னவென்றால், பொதுப்பணித்துறை சாவியை கொடுக்காமல் ஆதிஷியின் இந்த உடைமைகள் எப்படி முதல்வரின் இல்லத்தில் வைக்கப்பட்டன?” என்று கூறினார்.

தொடர்ந்து பேசிய சஞ்சய் சிங், "உண்மையில் இவர்கள் டெல்லியின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தை ஏற்க விரும்பவில்லை, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசாங்கத்தின் தலைவர்களை அவமானப்படுத்துவது போன்ற உத்திகள் எல்லா நேரத்திலும் பின்பற்றப்படுகின்றன. ஒரு பெண் முதல்வரின் வீட்டிலிருந்து அவரது உடைமைகளை காலி செய்து அவரை அவமானப்படுத்தியுள்ளனர்” என்று கூறினார்.

இதுகுறித்து பொதுப்பணித்துறை தரப்பில், “6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை இல்லத்தின் கட்டுமானம் தொடர்பாக, சில விஜிலென்ஸ் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இத்தகைய சூழ்நிலையில், பொதுப்பணித்துறை அதை முழுமையாக விசாரித்து, தங்குமிடத்தை மீண்டும் ஒதுக்குவதற்கு முன்பு அங்கு இருக்கும் பொருட்களின் பட்டியலைத் தயாரிக்க வேண்டியது அவசியம்.” என்று கூறப்படுகிறது.

வீட்டை மாற்றும் பணி முடிவடையவில்லை என்றும், பொதுப்பணித் துறையிடம் ஒப்படைக்கப்பட்ட இந்த வீட்டின் சாவி சிறிது நேரம் கழித்து மீண்டும் வாங்கப்பட்டதாகவும் பொதுப்பணித்துறை தெரிவித்துள்ளது.

அக்டோபர் 6ஆம் தேதி முதல்வரின் சிறப்பு செயலாளர் பர்வேஷ் ரஞ்சனுக்கு எழுதிய கடிதத்திலும், பொதுப்பணித்துறை இந்த வீட்டின் சாவியைக் கோரியிருந்தது.

துணைநிலை ஆளுநர் மூலம் பாஜக வீட்டை காலி செய்தது: ஆம் ஆத்மி

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், AAP

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் முதல்வர் இல்லத்தில் இருந்து வெளியேறும் போது...

வியாழக்கிழமை அன்று செய்தியாளர்களிடம் பேசிய ஆம் ஆத்மி கட்சித் தலைவர் சஞ்சய் சிங், "பொதுப்பணித் துறை ஞாயிற்றுக்கிழமை அன்று ஆதிஷிக்கு சாவியை வழங்கி, அதன் பிறகு அவரது உடைமைகள் அந்த வீட்டில் வைக்கப்பட்டிருந்த நிலையில், டெல்லியின் துணைநிலை ஆளுநர் எந்த அதிகாரத்தில் அவற்றை வெளியே எடுத்தார்" என்று கேள்வி எழுப்பினார்.

டெல்லி முதல்வரை வீட்டிலிருந்து வெளியேற்ற, துணைநிலை ஆளுநர் பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததாக ஆம் ஆத்மி கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

"துணைநிலை ஆளுநரின் உதவியுடன் முதல்வர் இல்லத்தை கைப்பற்ற பாஜக விரும்புகிறது. 62 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவுடன் முதல்வராக பதவியேற்ற ஒருவரின் உடைமைகளை துணைநிலை ஆளுநர் அகற்றியுள்ளார்." என்கிறார் சஞ்சய் சிங்.

இந்த வீட்டை அரவிந்த் கேஜ்ரிவால் பொதுப்பணித்துறையிடம் ஒப்படைத்ததாக ஒரு கடிதத்தைக் காட்டி சஞ்சய் சிங் கூறினார்.

"இந்த கடிதத்தில் இருந்து கேஜ்ரிவால் அக்டோபர் 4ஆம் தேதி வீட்டை காலி செய்தார் என்றும், அவருக்கு எந்த நிலுவைத் தொகையும் இல்லை என்றும் தெளிவாகத் தெரிகிறது" என்று சிங் கூறினார்.

‘ஆம் ஆத்மிக்கு ஏன் இந்த வீடு தேவை?’- பாஜக கேள்வி

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், AAP

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவால் அக்டோபர் 4ஆம் தேதி இந்த வீட்டை காலி செய்தார்

அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வீட்டை காலி செய்த பிறகு, டெல்லியின் தற்போதைய முதல்வர் ஆதிஷி இந்த வீட்டில் வசிக்கச் சென்றார். அக்டோபர் 6ஆம் தேதி முதல், ஆதிஷி இங்கு வசிக்கத் தொடங்கினார், கூட்டங்களும் இங்கு நடத்தப்பட்டன.

ஆம் ஆத்மி கட்சியின் குற்றச்சாட்டை நிராகரித்துள்ள பாரதிய ஜனதா கட்சி, சம்பந்தப்பட்ட வீடு முதல்வர் இல்லமாக ஒதுக்கப்படவில்லை என்று கூறியுள்ளது.

டெல்லி பாஜக தலைவர் வீரேந்திர சச்தேவா கூறுகையில், "முதல்வருக்காக தான் ‘6 ஃபிளாக்ஸ்டாஃப் சாலை’ இல்லம் ஒதுக்கப்பட்டுள்ளது என்று குறிப்பிடப்பட்டுள்ள அரசு ஆவணத்தை அவர்கள் காட்ட வேண்டும். சட்ட நடைமுறைகளை முடிக்க வேண்டும் என்பதால் அதை காலி செய்ய வேண்டிய கட்டாயம் உள்ளது.” என்றார்.

தொடர்ந்து பேசிய சச்தேவா, "ஆதிஷி அந்த வீட்டில் வசிக்க விரும்புகிறார், அதில் யாருக்கும் எந்த பிரச்னையும் இல்லை, ஆனால் அவர் சட்டப்பூர்வ கடமைகளை நிறைவேற்ற வேண்டும். இந்த வீட்டின் உரிமை பொதுப்பணித்துறையிடம் உள்ளது.”

“அரவிந்த் கேஜ்ரிவால் இந்த வீட்டை காலி செய்யும் போது உடைமைகள் குறித்து ஒரு பட்டியலை உருவாக்கியிருக்க வேண்டும், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. எனவே இல்லத்தின் பொருட்கள் குறித்த ஒரு கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், அதற்கு முன்னதாகவே பொதுப்பணித்துறை இல்லத்தை வேறு ஒருவருக்கு எவ்வாறு ஒதுக்க முடியும்?” என்று கூறினார்.

“அரவிந்த் கேஜ்ரிவால் மறைக்க விரும்பும் அளவுக்கு அந்த ஷீஷ்மஹாலில் என்ன இருக்கிறது? ஷீஷ்மஹாலில் உள்ளதை பொதுமக்கள் பார்க்கக் கூடாது என்பதற்காக ஆதிஷி சட்டங்களை மீறி அதில் நுழைய விரும்புகிறார்.” என்கிறார் சச்தேவா.

புதன்கிழமை அன்று மூடப்பட்ட வீடு

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், AAP

படக்குறிப்பு, அரவிந்த் கேஜ்ரிவாலின் மனைவி சுனிதா கேஜ்ரிவால் வீட்டின் சாவியை வழங்கும் படத்தை ஆம் ஆத்மி கட்சி வெளியிட்டுள்ளது

இந்த சமீபத்திய நடவடிக்கைகள், டெல்லியில் முதல்வர் இல்லம் தொடர்பான சர்ச்சையை மேலும் பெரிதாக்கியுள்ளது.

ஆதிஷி வீட்டை விட்டு வெளியேற்றப்பட்டது எதிர்பாராத ஒன்று என விவரித்து, முதல்வர் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்திய வரலாற்றில் முதல்முறையாக, ஒரு முதல்வர் தனது வீட்டை காலி வேண்டுமென கூறப்பட்டுள்ளது. இந்த வீட்டை பெரிய பா.ஜ.க தலைவர் ஒருவருக்கு வழங்குவதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. டெல்லியில் 27 ஆண்டுகளாக ஆட்சியில் இல்லாத பா.ஜ.க தற்போது முதல்வர் இல்லத்தை கைப்பற்ற விரும்புகிறது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், முதல்வர் அலுவலகத்தின் இந்தக் குற்றச்சாட்டுகளுக்கு டெல்லி துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனாவின் அலுவலகம் பதிலளிக்கவில்லை.

இந்த வீடு ஆதிஷிக்கு அதிகாரப்பூர்வமாக ஒதுக்கப்பட்டதா என்ற கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங், “இந்த வீடு ஆதிஷிக்கு ஒதுக்கப்படவில்லை என்றால், அவருக்கு ஏன் சாவி கொடுக்கப்பட்டது?” என்று கேள்வி எழுப்பினார்.

டெல்லி அமைச்சராக இருந்த ஆதிஷிக்கு முன்னரே வேறு வீடு ஒதுக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே ஒரு வீடு இருந்தால் அவர்களுக்கு வேறு வீடு ஒதுக்க முடியுமா?

இந்த கேள்விக்கு பதிலளித்த சஞ்சய் சிங், “அந்த வீடு அவருக்கு அமைச்சர் என்ற முறையில் ஒதுக்கப்பட்டது. இப்போது அவர் முதல்வராக இருக்கிறார், எனவே முதல்வர் இல்லத்தில் தான் வசிப்பார்” என்றார்.

எவ்வாறாயினும், “வீட்டின் சாவி ஆதிஷியிடம் இருந்ததாகவும், ஆனால் அவருக்கு அதிகாரப்பூர்வமாக வீடு ஒதுக்கப்படவில்லை என்றும்” இந்தியன் எக்ஸ்பிரஸ் ஆங்கில நாளிதழிடம் பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதுதொடர்பாக பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் பிபிசி கேள்வி எழுப்பியது, ஆனால் எந்த பதிலும் கிடைக்கவில்லை.

இந்த வீடு தற்போது பூட்டி இருக்கிறது, ஆனால் வேறு யாருக்காவது ஒதுக்கப்பட்டுள்ளதா என்ற கேள்விக்கு பொதுப்பணித்துறை பதில் அளிக்கவில்லை.

தகவல்களின்படி, பொதுப்பணித்துறை அதிகாரிகள் புதன்கிழமை அன்று வீட்டிற்குச் சென்று அதன் சாவியை மீட்டனர்.

புதிய கட்டுமானம் தொடர்பான குற்றச்சாட்டுகள்

டெல்லி முதல்வர் இல்லம் சர்ச்சை

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங்

இந்த இல்லம் 2015 ஆம் ஆண்டு கேஜ்ரிவாலுக்கு ஒதுக்கப்பட்டது, அதன் பின்னர் டெல்லியில் முதல்வரின் இல்லமாக அது இருந்து வருகிறது.

இந்த வீடு 2020-21ஆம் ஆண்டில் புனரமைக்கப்பட்டது. பாஜக மற்றும் காங்கிரஸும் கூட இதற்கு முன்பாக, அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் ஆம் ஆத்மி கட்சியை குறிவைத்து, இந்த வீட்டில் உருவாக்கப்பட்ட புதிய வசதிகள் மற்றும் அதன் கட்டுமானத்தில் முறைகேடுகள் நடந்ததாகவும் குற்றம் சாட்டின.

இந்த வீட்டை நிர்மாணிப்பதில் அதிக செலவு செய்யப்பட்டுள்ளதாக ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு பாஜகவும் இதை ஒரு பிரச்னையாக்க முயற்சித்தது.

முறைகேடுகள் மற்றும் அதிக செலவு செய்ததாக புகார் எழுந்ததை அடுத்து, பொதுப்பணித் துறையின் விஜிலென்ஸ் துறை விசாரணையைத் தொடங்கியது. இந்த விசாரணையின் கீழ் வந்த பல பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுக்கப்பட்டது.

தற்போது, ​​பொதுப்பணித் துறையின் விஜிலென்ஸ் விசாரணை மட்டுமின்றி, இந்த வீடு கட்டுவதில் நடந்த முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணையும் நடந்து வருகிறது.

இந்த இல்லத்தின் புதிய கட்டுமானங்கள் பொதுப்பணித் துறை அல்லது வேறு எந்த அதிகாரியிடமும் அனுமதி பெறாமல் கட்டப்பட்டதாகவும், அதன் நிறைவு சான்றிதழும் வழங்கப்படவில்லை என்றும் பொதுப்பணித்துறை கூறியுள்ளது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)