பாலியல் வன்புணர்வுக்கு பின், சிறுமிக்கு பிறந்த குழந்தையின் தந்தை யார்? டிஎன்ஏ பரிசோதனையில் அதிர்ச்சி

பாகிஸ்தான் - பாலியல் வன்கொடுமை - டிஎன்ஏ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், எதேஷாம் அஹமது ஷமி
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(எச்சரிக்கை: இக்கட்டுரையில் தற்கொலை குறித்த விவரணைகள் உள்ளன)

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் இருந்து டிசம்பர் முதல் வாரத்தில் ஒரு செய்தி வந்தது. பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளிக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியதையடுத்து, பாதிக்கப்பட்டவர் தற்கொலைக்கு முயன்றார் என்று அச்செய்தியில் குறிப்பிடப்பட்டிருந்தது.

பாகிஸ்தானின் கசூர் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தைச் சேர்ந்த பெண், காவல் துறையில் கான்ஸ்டபிளாக பணிபுரியும் ஒரு நபர் மீது பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு சுமத்தியிருந்தார். அந்த நபரும் வேலையில் இருந்து நீக்கப்பட்டார்.

17 வயது நிரம்பிய அந்தப் பெண் பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு கர்ப்பமாகி ஒரு குழந்தையையும் பெற்றெடுத்தார். அந்தக் குழந்தை பின்னர் இறந்து விட்டது.

ஆனால், பஞ்சாப் தடய அறிவியல் நிறுவனம் ஒரு அறிக்கையை வெளியிட்டபோது, ஒரு அதிர்ச்சியூட்டம் விஷயம் வெளிச்சத்திற்கு வந்தது.

அந்த குழந்தையின் டிஎன்ஏ, பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்குள்ளான போலீஸ் கான்ஸ்டபிளின் டிஎன்ஏவுடன் பொருந்தவில்லை என்று கூறப்பட்டிருந்தது.

இந்த அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, குற்றம் சாட்டப்பட்டவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இந்த நீதிமன்ற முடிவுக்குப் பிறகு, பாதிக்கப்பட்ட அந்தப் பெண் தற்கொலைக்கு முயற்சி செய்து பலத்த காயமடைந்தார்.

இருப்பினும், குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கப்பட்ட பிறகும், போலீஸ் விசாரணை முடிவடையவில்லை. சந்தேகத்தற்குரிய ஐந்து நபர்களுக்கு டிஎன்ஏ பரிசோதனைகள் நடத்தப்பட்டு, அதன் பிறகே போலீசார் குழந்தையின் உண்மையான தந்தையை கண்டடைந்தனர்.

முழு விஷயமும் வெளிச்சத்திற்கு வந்த பிறகு, குற்றம் சாட்டப்பட்டவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார், அங்கு அவர் மூன்று நாள் போலீஸ் காவலுக்கு அனுப்பப்பட்டார்.

இந்த சிக்கலான வழக்கைப் புரிந்து கொள்ள, மூன்று ஆண்டுகளுக்குப் பின் செல்வோம்... அப்போது பாதிக்கப்பட்ட பெண்ணின் தந்தையின் புகாரின் பேரில், அவரது மகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமை வழக்கில் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டது. அதனால் அந்த விவகாரம் நீதிமன்றத்தை எட்டியது."

எஃப்ஐஆரில் என்ன கூறப்பட்டுள்ளது?

2022-ஆம் ஆண்டு மே 7 அன்று கசூர் மாவட்டத்தின் கந்தா சிங்க்வாலா காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரில், புகார் கொடுத்த பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை, ஒரு காவலர் மற்றும் அவரின் இரு பெண் உறவினர்கள் மீது புகார் அளித்துள்ளனர்.

எஃப்ஐஆரின் படி, அந்த சிறுமி சில வேலைகளுக்காக ஒரு பெண்ணின் வீட்டிற்கு சென்றதாகக் கூறப்படுகிறது. அந்தப் பெண், சிறுமியை ஒரு அறையில் அமர வைத்து குடிக்க ஜூஸ் கொடுத்துள்ளார். ஜூஸ் குடித்தவுடன் சிறுமி மயங்கி விழுந்துள்ளார். அதன் பின்னர், அந்தப் பெண் வீட்டின் வெளியே காவல் பார்த்துக் கொண்டிருக்க, குற்றம் சாட்டப்பட்ட காவலர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், "பாதிக்கப்பட்ட சிறுமி மயக்கம் தெளிந்தபோது கத்த முயன்றார். ஆனால் குற்றம் சாட்டப்பட்ட காவலர், துப்பாக்கியை காட்டி, 'இது பற்றி யாரிடமும் சொன்னால் அவளையும் அவளது பெற்றோர்களையும் கொன்றுவிடுவேன்' என்று மிரட்டியுள்ளார். அதனால் பயந்த சிறுமி, நடந்ததை யாரிடமும் சொல்லாமல் இருந்தார்" என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் தகவல் அறிக்கையின்படி, சம்பவம் நடந்த மூன்று மாதங்களுக்கு பிறகு, அந்த காவலரின் சகோதரி பாதிக்கப்பட்ட சிறுமியின் வீட்டிற்கு வந்து, அவளது பெற்றோரிடம் கருக்கலைப்பு மாத்திரையை கொடுத்து, "உங்கள் மகளின் கர்ப்பத்தை கலைக்கவில்லை என்றால், முழு கிராமமும் அவமானப்படுத்தப்படும்." என்று கூறியதாக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்குப் பிறகுதான் பெற்றோருக்கு அந்த சம்பவம் குறித்து தெரிந்தது. அதன் பின்னர் அவர்கள் தங்கள் மகளை ஒரு பெண் மருத்துவரிடம் பரிசோதனைக்கு அழைத்துச் சென்றனர். அந்த மருத்துவர். அந்த சிறுமி கர்ப்பமாக இருப்பதாக தெரிவித்தார்.

முதல் தகவல் அறிக்கையில், குற்றம் சாட்டப்பட்ட காவலர் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் பாலியல் வன்கொடுமை குற்றம் பதிவு செய்யப்பட்டது. இதே நேரத்தில், இந்த வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட மற்ற இரண்டு பெண்கள் மீது பாகிஸ்தான் தண்டனைச் சட்டத்தின் கீழ் உடந்தையாக இருந்ததற்கான குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

பாகிஸ்தான் - பாலியல் வன்கொடுமை - டிஎன்ஏ

பட மூலாதாரம், Getty Images

சந்தேகப்படும் நபரின் டிஎன்ஏவுடன் குழந்தையின் டிஎன்ஏ பொருந்தவில்லை

இவ்வளவு கடுமையான குற்றச்சாட்டில் சிக்கியதையடுத்து, கசூர் காவல்துறை அந்தக் காவலரை கைது செய்ததோடு மட்டுமல்லாமல், பணியிலிருந்தும் நீக்கியது.

காவல் துறையின் விசாரணையும் குற்றப்பத்திரிகையும், குற்றம் சாட்டப்பட்டவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்றும், அதற்கான தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருந்தன.

எனினும், டிசம்பர் 5-ஆம் தேதி அன்று நடைபெற்ற நீதிமன்ற விசாரணையில், கூடுதல் செஷன்ஸ் நீதிபதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு ஜாமீன் வழங்கி, அவரை விடுதலை செய்ய உத்தரவிட்டார்.

லாகூரில் உள்ள பஞ்சாப் தடய அறிவியல் நிறுவனம் (Punjab Forensic Science Agency) அனுப்பிய அறிக்கையின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர் விடுவிக்கப்பட்டார்.

பாலியல் வன்கொடுமையின் விளைவாக பாதிக்கப்பட்டவருக்கு பிறந்த குழந்தையின் டிஎன்ஏ மாதிரியை, காவல் துறை விசாரணைக் குழு பரிசோதனைக்காக ஆய்வகத்துக்கு அனுப்பியிருந்தது.

ஆய்வகத்தின் அறிக்கையில், அந்தக் குழந்தையின் டிஎன்ஏ குற்றம் சாட்டப்பட்டவரின் டிஎன்ஏவுடன் பொருந்தவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

பஞ்சாப் தடய அறிவியல் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, பாதிக்கப்பட்ட சிறுமிக்கு பிறந்த குழந்தை, எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ள கான்ஸ்டபிளின் குழந்தை அல்ல.

அந்த அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, அது யாருடைய குழந்தை என்ற கேள்வி எழுந்தது.

பாதிக்கப்பட்ட அந்தப் பெண், டிசம்பர் 5-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராகிவிட்டு மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் இருந்து தனது கிராமத்திற்கு தனது தந்தையுடன் திரும்பிக் கொண்டிருந்தபோது தற்கொலைக்கு முயன்றார்.

இந்தச் சம்பவம் செய்திகளில் இடம்பிடித்துவிட, பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ், இந்த விவகாரத்தில் உயர்மட்ட மறு விசாரணைக்கு உத்தரவிட்டார்.

மேலும், 'காவல்துறை தங்கள் பணியாளர்களைப் பாதுகாக்க முயல்கிறது என்று தோன்றிவிடக்கூடாது' என்பதற்காக உண்மையைக் கண்டறியும் குழுவையும் அமைத்தார்.

பஞ்சாப் முதல்வரின் உத்தரவின் பேரில், பஞ்சாப் பெண்கள் பாதுகாப்பு ஆணையத் தலைவர் ஹினா பர்வேஸ் பட், கசூருக்குச் சென்று வழக்கு விவரங்களைக் கேட்டறிந்தார்.

பின்னர், அவர் லாகூர் ஜின்னா மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்ட சிறுமியிடம் பேசினார்.

சந்தேகத்திற்குரிய 5 பேருக்கு டிஎன்ஏ பரிசோதனை

பாகிஸ்தான் - பாலியல் வன்கொடுமை - டிஎன்ஏ

பட மூலாதாரம், Getty Images

'பாலியல் வன்கொடுமைக்குப் பிறகு பிறந்த குழந்தையின் தந்தை அந்த காவலர் அல்ல என்றால், பாதிக்கப்பட்டவர் ஏன் அவரை குற்றம் சாட்டுகிறார்? அப்படியானால் அந்த பாலியல் வன்கொடுமைக்கு வேறு யார் குற்றவாளியாக இருக்க முடியும்?' என்பதே விசாரணைக் குழுவுக்கு முன்னிருந்த மிகப் பெரிய கேள்வியாக இருந்தது.

காவலரின் டிஎன்ஏ பொருந்தவில்லை என்பது தெரிய வந்ததன் பிறகு, மாவட்ட அரசு வழக்கறிஞர் மாவட்ட காவல்துறைக்கு ஒரு கடிதம் எழுதினார். அதில், விசாரணையின் வரம்பை விரிவுபடுத்தவும், முக்கிய குற்றவாளியை அடையாளம் கண்டு தண்டிக்க ஒரு மூத்த அதிகாரியை விசாரணைக்காக நியமிக்கவும் அவர் கோரிக்கை விடுத்தார்.

பஞ்சாப் முதலமைச்சர் மரியம் நவாஸ் உத்தரவின் பேரில், எந்தவிதமான பிழைக்கும் இடமில்லாத வகையில் அந்த காவலருக்கு மீண்டும் ஒருமுறை டிஎன்ஏ பரிசோதனை நடத்தப்பட்டது என்றும், அந்த சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படும் பிற நபர்களுக்கும் டிஎன்ஏ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன என்றும், கசூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் முகம்மது ஈசா கான் பிபிசியிடம் தெரிவித்தார்.

முகமது ஈசா கான் கருத்துப்படி, அந்தப் பெண்ணை அணுகக்கூடியவர்கள், அதாவது வீட்டில் வசிப்பவர்கள், நெருங்கிய உறவினர்கள் மற்றும் அக்கம்பக்கத்தினர் போன்றவர்கள் மட்டுமே இத்தகைய செயலைச் செய்திருக்க முடியும்.

"காவல்துறையினர் தங்கள் புலனாய்வு வலையமைப்பு மூலம் வழக்கைக் கண்டறிந்து, இச்செயலைச் செய்திருக்கக்கூடிய ஐந்து சந்தேகத்திற்குரிய நபர்களின் பட்டியலைத் தயாரித்தனர். அவர்கள் அனைவரும் கூட்டுக் குடும்பமாக வசிப்பதால், அந்த ஐந்து பேரில் பெண்ணின் சித்தப்பா ஒருவரும் இருந்தார்," என்று அவர் கூறினார்.

ஆய்வகத்திலிருந்து அறிக்கை வந்தபோது, குழந்தையின் டிஎன்ஏ அந்தப் பெண்ணின் சித்தப்பாவுடன் பொருந்தியது. இதையடுத்து, காவல்துறையினர் உடனடியாக குற்றம் சாட்டப்பட்டவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, மூன்று நாள் காவலில் வைப்பதற்கான உத்தரவைப்பைப் பெற்றனர்.

பாதிக்கப்பட்ட சிறுமி காவலர் மீது சுமத்திய குற்றச்சாட்டுகள் குறித்துக் கேட்டபோது, காவலருக்கும் பாதிக்கப்பட்ட சிறுமிக்கும் இடையே உறவு இருந்தது விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளதாக முகமது ஈசா கான் தெரிவித்தார்.

"அந்தக் காவலரிடம் பரம்பரைச் சொத்தாக நான்கு முதல் ஐந்து ஏக்கர் விவசாய நிலமும் இருந்ததுடன், அவர் அரசு வேலையிலும் இருந்தார். அவர் அந்தச் சிறுமியைத் திருமணம் செய்து கொள்வதாக உறுதியளித்திருந்தார்," என்று அவர் கூறினார்.

"பாதிக்கப்பட்ட பெண்ணின் சித்தப்பா, அந்த மைனர் பெண் ஒரு போலீஸ் கான்ஸ்டபிளுடன் தொடர்பு வைத்திருப்பதை எப்படியோ அறிந்து கொண்டார். எனவே அவர் அந்தப் பெண்ணை பிளாக்மெயில் செய்து கற்பழிக்கத் தொடங்கினார். இது சிறுமி கர்ப்பமாக வழிவகுத்தது," என்றும் அவர் கூறினார்.

டிஎன்ஏ அறிக்கை வந்த பிறகு, போலீஸ் கான்ஸ்டபிளுக்கு தன்னுடன் இருந்த உறவால் தான் கர்ப்பமாகி விட்டதாக கருதியதாக அந்தப் பெண் போலீசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளார்.

"டிஎன்ஏ அறிக்கையில் எதிர்மறை முடிவு குற்றம் சாட்டப்பட்டவரின் சட்ட நிலையை ஒரு அளவுக்கு மேம்படுத்தியிருந்தாலும், காவல் துறையினர் தங்களின் அறிக்கைகளில் அவரை சிறுமியுடன் சட்டவிரோத உறவில் ஈடுபட்டவர் என்று குற்றவாளியாகக் கூறியுள்ளனர்," என்றார் கசூர் மாவட்ட அரசு வழக்கறிஞர்.

"குற்றம் சாட்டப்பட்டவர் மீது தனி சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது. பதிலாக, சாட்சி நிலை முடிந்த பிறகு, அவரை அதே குற்றப் பத்திரிகையின் அடிப்படையில் நீதிமன்றம் தண்டிக்க முடியும்," என்றும் அவர் கூறினார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப்
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தந்தைக்கு நடத்தப்பட்ட பாலிகிராஃப் பரிசோதனை

காவல் துறை, பாதிக்கப்பட்ட சிறுமியின் தந்தை பொய் சொல்லியிருக்கலாம் என சந்தேகித்து, அவர்மீது ஒரு பாலிகிராஃப் (polygraph) பரிசோதனை நடத்தியது. அதில் அவர் பொய் சொல்லவில்லை என்று அறியப்பட்டது.

மேலும், காவல் துறை சிறுமியின் தற்கொலை முயற்சியின் வீடியோ கிளிப்பையும் கண்டுபிடித்தது.

தனது சொந்த சகோதரனே இதைச் செய்ததை அவரால் கற்பனைகூட செய்ய முடியவில்லை என்று சிறுமியின் தந்தை காவல்துறையிடம் தெரிவித்தார்.

"என் சகோதரருக்கு நான்கு குழந்தைகள் இருக்கின்றனர், நாங்கள் இருவரும் ஒரே வீட்டில் வாழ்கிறோம். அவரது குழந்தைகள் என்னை 'படே அப்பு' (பெரியப்பா) என்று அழைக்கின்றனர். டிஎன்ஏ பொருந்தியிருக்குக்கும் நிலையில், இனி நான் என் குழந்தைகளைப் பார்க்க முடியும். ஆனால், என் சகோதரரின் குழந்தைகளைப் பார்க்கமுடியாது" என்றும் அவர் கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், "தந்தைக்குப் பிறகு, குழந்தைகளுக்கு மிகவும் நம்பகமான உறவு என்பது சித்தப்பாவின் உறவுதான். என் சகோதரன் இந்த ரத்த உறவை அழிக்கப்போகிறார் என்று நான் கூட கற்பனை செய்ததில்லை. என் மகளை பாலியல் வன்கொடுமை செய்ததல்லாமல், அவரை மிரட்டியிருக்கிறார். என் மகளின் வாழ்க்கையை நாசமாக்கிய அந்த நபரை நான் மன்னிக்க முடியாது.

என் சகோதரன் சொன்ன விஷயங்கள் அனைத்தும், காவலருக்கு எதிராக என் மனதை அவன் எவ்வாறு தயார்படுத்தினார் என்பதும் இப்போது எனக்கு நினைவுக்கு வருகிறது. என் மனம் அந்தக் காவலரைத் தவிர வேறு எங்கும் செல்ல முடியாதபடி அவர் எப்போதும் பேசினார்" என்று கூறினார்.

மேலும், தங்களது மைனர் மகளை திருமணம் செய்வதாக ஏமாற்றி, மானத்துடன் விளையாடிய போலீஸ் கான்ஸ்டபிளை மன்னிக்கவே முடியாது என்றும் அவர் கூறியுள்ளார்.

"முழு பிரச்னையும் குற்றம் சாட்டப்பட்ட அந்த காவலரால்தான் தொடங்கியது. அவருக்கு எதிராக நான் எல்லா சட்டப் போராட்டங்களையும் நடத்துவேன்."

"என் மகளின் உலகம் முழுக்க மாறிவிட்டது. ஆனால் அனைத்து பெற்றோர்களுக்கும் நான் சொல்ல விரும்புவது, உங்கள் குழந்தைகளை நீங்கள் தான் பாதுகாக்க வேண்டும். இன்றைய காலத்தில் இரத்த உறவுகளைக்கூட நம்பக்கூடாது," என்றும் அவர் கூறினார்.

(தற்கொலை என்பது ஒரு மிகக் கடுமையான மனநல மற்றும் சமூக பிரச்சினையாகும்.

நீங்களும் மனஅழுத்தம் அல்லது மன வேதனையில் இருந்தால், இந்திய அரசின் 1800 233 3330 என்ற உதவி எண்ணை தொடர்பு கொண்டு உதவி பெறலாம்.

மேலும், உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களுடன் மனம் திறந்து பேசுவதும் முக்கியம்)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு