You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
அமைச்சர் எ.வ. வேலு வீட்டில் நடந்த சோதனையில் கிடைத்தது என்ன? அவர் கண் கலங்கியது ஏன்?
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழகப் பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் துறை அமைச்சர் எ.வ.வேலு தொடர்புடைய இடங்களில் நவம்பர் 3-ஆம் தேதி முதல் நடைபெற்றுவந்த வருமான வரித்துறையினரின் சோதனைகள் முடிவுக்கு வந்திருக்கின்றன.
எ.வ. வேலு தொடர்பான மொத்தம் 80 இடங்களில் 240 அதிகாரிகள் இந்தச் சோதனைகளை நடத்தினர். சென்னையில் ஆழ்வார்ப்பேட்டை, கோட்டூர்புரம், தி.நகர், அண்ணாநகர் உள்ளிட்ட இடங்களில் உள்ள எ.வ.வேலுவின் வீடு, அவரது மகன் கம்பன், உறவினர்களுக்கு சொந்தமான இடங்கள், அருணை கல்விக் குழும நிறுவனங்கள், எ.வ. வேலுவின் மகன் கம்பன் நடத்திவரும் தொழில்நிறுவனங்கள், கோயம்புத்தூர், கரூர் மாவட்டங்களில் சில தி.மு.க. நிர்வாகிகளின் வீடுகள் ஆகியவற்றில் ஒரே நேரத்தில் சோதனைகள் நடத்தப்பட்டன.
எங்கெல்லாம் சோதனைகள் நடந்தன?
தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள தானிப்பாடியில் வசிக்கும் கம்பி வியாபாரி ஜமால், நெல் - அரிசி வியாபாரி முருகேசன் ஆகியோரது வீடு, அலுவலகம், கிடங்கு ஆகியவற்றிலும் சோதனைகள் நடந்தன.
திருவண்ணாமலையைச் சேர்ந்த 'அருணை கன்ஸ்ட்ரக்ஷன்’ என்ற நிறுவனத்தின் உரிமையாளர் வெங்கட் என்பவரது வீடு, அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
எ.வ. வேலுவின் மகன்கள் கம்பன், குமரன் ஆகியோரது வங்கி லாக்கர்களும் வருமானவரித் துறையினரின் சோதனைக்கு உட்படுத்தப்பட்டன.
அதேபோல, சென்னை தியாகராய நகரில் உள்ள அப்பாசாமி ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் அலுவலகம், உரிமையாளர் வீடு, அந்நிறுவனம் தொடர்புடைய பிற இடங்கள், திருவான்மியூரில் உள்ள காஸா கிராண்ட் கட்டுமான நிறுவனத்தின் அலுவலகங்கள், ஊழியர்களின் வீடுகள் ஆகியவற்றிலும் சோதனைகள் நடந்தன.
மற்றொரு பக்கம், அண்ணா நகர், செனாய்நகர், வேப்பேரி, புரசைவாக்கத்தில் உள்ள பொதுப்பணிகள் துறை ஒப்பந்ததாரர்கள், அவர்களுக்கு கடன் கொடுப்பவர்கள் வீடுகளிலும் சோதனைகள் நடந்தன.
இந்தச் சோதனைகள் அனைத்தும் செவ்வாய்க்கிழமை இரவில் முடிவுக்கு வந்தன.
எ.வ.வேலு கண்கலங்கியது ஏன்?
இந்தச் சோதனைகள் முடிவுக்கு வந்த பிறகு திருவண்ணாமலையில் செய்தியாளர்களைச் சந்தித்தார் எ.வ. வேலு. அப்போது பேசிய அவர், தனக்குச் சொந்தமான இடங்களில் இருந்து சல்லடை போட்டுச் சலித்தும் ஒரு பைசாவைக்கூட எடுக்கவில்லை என்று தெரிவித்தார்.
"என்னுடைய நேர்முக உதவியாளர் சுப்பிரமணியனை தனிமையில் வைத்து என்னோடு சம்பந்தப்படுத்தி பல்வேறு கேள்விகளை கேட்டு வருமான வரித்துறையினர் தொந்தரவு செய்திருக்கிறார்கள். அவர் கண்ணீர் விட்டு அழும் அளவிற்கு துன்புறுத்தியிருக்கிறார்கள். அதேபோல எனது ஓட்டுநரையும் தனிமைப்படுத்தி விசாரித்திருக்கிறார்கள். விழுப்புரம், கரூர் வந்தவாசி, கோவை, திருவண்ணாமலையிலும் பல்வேறு நபர்களுக்கு என்னைத் தொடர்பு படுத்தி தொந்தரவு கொடுத்துள்ளனர். வருமான வரித்துறையினர் மீது எனக்கு எவ்வித கோபமும் இல்லை. இவர்கள் அம்புதான். எய்தவர்கள் எங்கேயோ இருக்கிறார்கள்" என்று கூறினார்.
இந்தச் செய்தியாளர் சந்திப்பின்போது பல இடங்களில் கண்ணீர் மல்கப் பேசிய அவர், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலின் பொழுது தி.மு.க. தலைவர் திருவண்ணாமலையில் பிரச்சாரம் மேற்கொண்டிருந்த நிலையில், தனது வீட்டில் வருமானவரித் துறையினர் சோதனை செய்ததாகவும் இதனால் இரண்டு நாட்களுக்கு தனது தேர்தல் பணிகளை மட்டுமே முடக்க முடிந்ததாகவும் கூறினார்.
மீனா ஜெயக்குமார் குறித்த கேள்விக்கு என்ன சொன்னார் எ.வ.வேலு?
காசா கிராண்ட் நிறுவனத்திற்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை என்றும் அவர்கள் யார் என்றே தனக்குத் தெரியாது என்றும் தெரிவித்த அமைச்சரிடம், கோவையைச் சேர்ந்த மீனா ஜெயக்குமாருக்கும் தங்களுக்கும் தொடர்பு உள்ளதா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர்.
இதற்குப் பதிலளித்த எ.வ. வேலு, "ஜெயக்குமார் என்பவர் திருவண்ணாமலை சேர்ந்தவர். அவரது சகோதரர் முருகன் கட்சி நிர்வாகியாக இருக்கிறார். சிறுவயதிலேயே ஜெயக்குமார் கோவைக்குச் சென்று பல்வேறு தொழில்களை செய்து தொழிலதிபராக இருக்கிறார். முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமிதான் தனக்கு முதன் முதலில் ஜெயக்குமாரை உள்ளூர்காரர் என அறிமுகம் செய்து வைத்தார். அதன் அடிப்படையில்தான் நான் கோவை செல்லும்போதெல்லாம் அவர் என்னைச் சந்திப்பார். இது கொலை குற்றமா? இப்படியிருக்கும்போது அவர்கள் குடும்பத்தையும் தனது குடும்பத்தையும் தொடர்பு படுத்தி பேசுவது எவ்விதத்தில் நியாயம்?" என்றார் எ.வ. வேலு.
சோதனையில் என்ன சிக்கியது?
எ.வ. வேலு தொடர்புடைய இடங்களில் இருந்து எவ்வளவு தொகையும் ஆவணங்களும் எடுக்கப்பட்டன என்பது குறித்து வருமான வரித்துறை அதிகாரபூர்வமாக இதுவரை எந்தத் தகவலையும் வெளியிடவில்லை.
யார் இந்த எ.வ.வேலு?
திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டுக்கு அருகில் உள்ள குடலூர் கிராமத்தில் 1951-ஆம் ஆண்டு, மார்ச் 15-ஆம் தேதி பிறந்தவர் எ.வ.வேலு. முதலில் திருவண்ணாமலையில் அச்சகம் ஒன்றை நடத்திய அவர், பிறகு சொந்தமாக லாரி ஒன்றை வாங்கி இயக்கிக் கொண்டிருந்தார்.
இதற்குப் பிறகு, திரைப்பட விநியோகத்தில் இறங்கினார். பிறகு சில படங்களைத் தயாரிக்கவும் செய்தார். இதற்குப் பிறகு, 1991-ஆம் ஆண்டு சரஸ்வதி அம்மாள் அறக்கட்டளை என்ற ஒன்றைத் துவங்கி, கல்வி நிறுவனங்களை ஆரம்பித்தார்.
அ.தி.மு.க.வின் ஆரம்ப காலத்தில் இருந்து அந்தக் கட்சியில் இருந்துவந்த எ.வ.வேலு முதன்முறையாக 1984-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் தண்டராம்பட்டு சட்டமன்றத் தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
எம்.ஜி.ஆர். இறந்த பிறகு ஜானகி அணிக்குச் சென்றார். அதற்குப் பிறகு நடிகர் பாக்யராஜ் ஆரம்பித்த எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து அதன் கொள்கை பரப்புச் செயலாளராகப் பதவிவகித்தார்.
தொடர் தேர்தல் வெற்றிகள்
அதற்குப் பிறகு, ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க.வில் செயல்பட்டாலும் பதவிகள் ஏதும் கிடைக்காத நிலையில், 1997-இல் தி.மு.கவில் இணைந்தார். 2001-ஆம் ஆண்டுத் தேர்தலில் மீண்டும் தண்டராம்பட்டு சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடும் வாய்ப்பளிக்கப்பட்டது. இதிலும் வெற்றிபெற்றார். பிறகு,2006-இல் நடைபெற்ற தேர்தலிலும் போட்டியிட்டு வென்றார்.
2006-இல் தி.மு.க. தலைமையில் ஆட்சி அமைந்தபோது, அதில் உணவுத் துறை அமைச்சராக்கப்பட்டார். 2011, 2016, 2021 ஆகிய சட்டமன்றத் தேர்தல்களில் திருவண்ணாமலை தொகுதியில் தொடர்ந்து போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார்.
2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் வெற்றிபெற்ற பிறகு, பொதுப்பணிகள், நெடுஞ்சாலை, சிறு துறைமுகங்கள் என்ற வலுவான துறை இவருக்கு வழங்கப்பட்டது.
கடந்த சில மாதங்களில் அமைச்சர் செந்தில் பாலாஜி, நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத்ரட்சகன், அமைச்சர் எ.வ. வேலு ஆகியோர் மீது வருமான வரித்துறை சோதனை நடத்தியிருக்கிறது. இதில் செந்தில் பாலாஜி மீது அமலாக்கத் துறை மேற்கொண்ட நடவடிக்கைகளில் அவர் கைதுசெய்யப்பட்டிருக்கிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)