You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
நிர்மலாதேவிக்கு 10 ஆண்டு சிறை - ஆளுநர் மாளிகை வரை பெயர் அடிபட்ட வழக்கின் விசாரணையில் என்ன நடந்தது?
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
கல்லூரி மாணவிகளை தவறாக வழிநடத்த முயன்ற வழக்கில் பேராசிரியை நிர்மலாதேவிக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் 2.42 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டிருக்கிறது. நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா விரைவு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. இந்த வழக்கில் என்ன நடந்தது? அதன் முழு பின்னணி என்ன?
நீதிமன்றம் தீர்ப்பு
கடந்த 2018-ஆம் ஆண்டு, துணைப் பேராசிரியை நிர்மலா தேவி, உதவிப் பேராசிரியர் முருகன் ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய மூன்று பேர் மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு வழக்கின் விசாரணையை சிபிசிஐடி போலீசார் நடத்தி குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் விருதுநகர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றம் திங்கள்கிழமை தீர்ப்பு வழங்கியது.
துணைப் பேராசிரியையாக இருந்த நிர்மலா தேவி, காமராஜர் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகியோர் நீதிபதி பகவதி அம்மாள் முன்பு ஆஜராகினர்.
இதில் நிர்மலா தேவி குற்றவாளி என நீதிபதி அறிவித்தார். உதவிப் பேராசிரியராக இருந்த முருகன், ஆய்வு மாணவர் கருப்பசாமி ஆகிய இருவர் மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால் விடுதலை செய்வதாக நீதிபதி உத்தரவு வழங்கினார்.
என்ன சம்பவம்?
விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையில் இருக்கும் தேவாங்கர் கல்லூரியில் கணிதத் துறையின் துணைப் பேராசிரியராக பணியாற்றி வந்தவர் நிர்மலா தேவி. இவர் கடந்த 2018-ஆம் ஆண்டு அக்கல்லூரியில் இளங்கலை பயின்ற 4 மாணவிகளிடம் தவறான வழிக்கு அழைப்பது போன்ற ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இது தொடர்பாக மாணவிகளின் பெற்றோர் புகார் தெரிவித்தபோது கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறப்பட்டது.
பேராசிரியையும் மாணவிகளும் பேசும் இந்த ஆடியோ சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து பல்வேறு அமைப்புகள் பேராசிரியைக்கு எதிராகவும் கல்லூரிக்கு எதிராகவும் போராடத் தொடங்கினர். இதனையடுத்து, கல்லூரி நிர்வாகம் துணைப் பேராசிரியை நிர்மலா தேவியை 15 நாட்களுக்கு பணியிடை நீக்கம் செய்தது.
6 மணிநேரம் போராடி பேராசிரியரை கைது செய்த போலீசார்
சமூக வலைதளங்களில் ஆடியோ வெளியானதைத் தொடர்ந்து பல்வேறு தரப்பினர் எதிப்பு தெரிவித்து பேராசிரியரைக் கைது செய்ய வேண்டுமெனக் குரல் கொடுத்தனர்.
இதனையடுத்து, கடந்த 2018-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 16-ஆம் தேதி வீட்டில் இருந்த பேராசிரியை நிர்மலாதேவியை ஆறு மணிநேரப் போராட்டத்திற்கு பிறகு கைது செய்தனர்.
பின்னர் வழக்கு தமிழ்நாடு காவல்துறையிலிருந்து சிபிசிஐடி-க்கு மாற்றப்பட்டது.
இந்த வழக்கில் அப்போது இருந்த தமிழ்நாடு ஆளுநர் மாளிகைக்கும் தொடர்பு இருப்பதாக பேசப்பட்டது. அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் இந்த வழக்கை விசாரிக்க ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சந்தானம் இந்த விவகாரத்தை விசாரிக்க நியமித்தார்.
சிபிசிஐடி டிஜிபி மாற்றத்தால் சர்ச்சை
அப்போது சிபிசிஐடி-யின் கூடுதல் டிஜிபி-யாக இருந்த ஜெயகாந்த் முரளி மாற்றப்பட்டு அமரேஷ் பூஜாரி நியமனம் செய்யப்பட்டார். இது உண்மையான விசாரணையை மறைக்க வழிவகுக்கும் என மு.க ஸ்டாலின், ராமதாஸ் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதனையடுத்து, அப்போதைய ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நியமித்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான சந்தானம் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்திற்கு நேரில் சென்று அப்போதைய துணைவேந்தர் செல்லத்துரையிடம் விசாரணை நடத்தினார்.
“நிர்மலா தேவியின் பின்னணி குறித்து அறிவதும், எந்தப் பின்னணியில் அவர் மாணவிகளை அணுகினார் என்பது குறித்து தெரிந்துகொள்வதுமே தனது விசாரணையின் நோக்கம்,” என அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.
பேராசிரியர், ஆய்வு மாணவர் கைது
இந்த விவகாரத்தில் சிபிசிஐடி போலீசார் துணைப் பேராசிரியர் நிர்மலா தேவியைக் கைது செய்து அவரிடம் விசாரணை நடத்தினர். இதில் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக பணிபுரிந்து வந்த முருகன் மற்றும் ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி ஆகியோருக்கு இந்த வழக்கில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. இதனையடுத்து கடந்த 2018-ஆம் ஆண்டு, ஏப்ரல் 24-ஆம் தேதி உதவி பேராசிரியர் முருகனை சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர்.
ஆராய்ச்சி மாணவரான கருப்பசாமி மதுரை மாவட்ட நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
குரல் சோதனையில் உறுதியான நிர்மலாதேவி குரல்
பேராசிரியை நிர்மலாதேவி தொடக்கத்தில் அந்த ஆடியோவில் பேசியது தான் இல்லை என மறுத்துவந்தார்.
இதனையடுத்து சிபிசிஐடி போலீசார் குரல் சோதனை நடத்தினர்.
இதில் அது நிர்மலாதேவியின் குரல் தான் என்பது உறுதி செய்யப்பட்டது. தொடர்ந்து சிபிசிஐடி போலீசார் பேராசிரியை நிர்மலா தேவி, முருகன், கருப்பசாமி ஆகியோர் மீது இந்திய குற்றவியல் சட்டத்தின் பிரிவுகள் 370 (1), (3) 120 (B) 354 (A) உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் குற்றப்பத்திரிக்கையும் தாக்கல் செய்தனர்.
1,300 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல்
இந்த வழக்கை விசாரணை செய்த சிபிசிஐடி போலீசார் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூலை 13-ஆம் தேதி 1,160 பக்கங்கள் கொண்ட முதல்கட்ட குற்ற பத்திரிகையை விருதுநகர் குற்றவியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.
மேலும் இதுதொடர்பாக இரண்டாம் கட்டமாக 200 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கையை சிபிசிஐடி போலீசார் கடந்த செப்டம்பர் 7-ஆம் தேதி தாக்கல் செய்தனர். மொத்தமாக மூன்று பேருக்கும் எதிராக 1,360 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்
இந்த வழக்கில் தொடர்புடைய பேராசிரியர் முருகன், ஆய்வு மாணவரான கருப்பசாமி ஆகிய இருவருக்கும் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. ஆனால் பேராசிரியை நிர்மலா தேவிக்கு ஜாமீன் வழங்க மறுத்துவிட்டது. இதனை எதிர்த்து அவர் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடுத்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் 2019 ஆம் ஆண்டு மார்ச் 4ஆம் தேதி அவருக்கு ஊடகங்களிடம் பேசக்கூடாது, விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் ஆகிய நிபந்தனையுடன் ஜாமீன் வழங்கியது.
இந்த வழக்குத் தொடர்பாக மாணவிகள், அவர்களது பெற்றோர், காமராஜர் பல்கலைக்கழகத்தின் நிர்வாகிகள், அருப்புக்கோட்டை கல்லூரியின் பேராசிரியர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டவர்களிடம் ஸ்ரீவில்லிபுத்தூர் மாவட்ட மகிளா விரைவு நீதிமன்றத்தில் விசாரணை நடத்தப்பட்டது.
வழக்கின் தீர்ப்பு
வழக்கின் விசாரணைகள் முடிவடைந்ததை தொடர்ந்து தீர்ப்பு ஏப்ரல் 26-ஆம் தேதி அறிவிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அன்றைய தினம் உடல்நலக் குறைவு காரணமாக நிர்மலா தேவி ஆஜராகவில்லை.
எனவே, இந்த வழக்கின் மீதான தீர்ப்பு ஏப்ரல் 29-ஆம் தேதி திங்கட்கிழமை வழங்கப்படும் என நீதிபதி தீர்ப்பை ஒத்தி வைத்தார்.
அதன் தொடர்ச்சியாக, நிர்மலாதேவி குற்றவாளி என்று நேற்று தீர்ப்பு வழங்கிய நீதிமன்றம், இன்று தண்டனை விவரத்தை அறிவித்தது.
அதன்படி, நிர்மலா தேவி மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதியப்பட்டிருந்தது. ஐந்து வழக்குகளிலும் அவர் குற்றவாளி என தீர்ப்பு வழங்கப்பட்டது.
இதில் அதிகபட்சமாக, கடத்தல் முயற்சி மற்றும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி குற்ற சம்பவத்தில் ஈடுபட்டது ஆகிய வழக்குகளில் தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து வழக்குகளுக்கும் சேர்த்து மொத்தமாக ரூ.2.42 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)