கருப்பை நார்த்திசு கட்டிக்கும் இதய நோய்க்கும் என்ன தொடர்பு? ஆய்வில் புதிய தகவல்

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

பெண்களுக்கு ஏற்படும் கருப்பை நார்த்திசு கட்டிகளுக்கும் Atherosclerotic Cardiovascular Disease (ASCVD) எனப்படும் இதய பெருந்தமனி தடிப்பு நோய்க்கும் இடையேயான தொடர்பு குறித்து ஓர் முக்கிய ஆய்வுக்கட்டுரை அமெரிக்க இதய சங்கத்தின் ஆய்விதழில் கடந்தாண்டு டிசம்பர் மாதம் வெளியானது.

27 லட்சத்துக்கும் அதிகமான பெண்களிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், இத்தகைய கட்டிகள் உள்ள 4.5 லட்சம் பெண்களும் கட்டிகள் இல்லாத 22.5 லட்சம் பெண்களும் அடங்குவர். இந்த பெண்களின் சராசரி வயது 41.

பத்து ஆண்டுகள் மேற்கொள்ளப்பட்ட, ஒருங்கிணைந்த இந்த ஆய்வில், கருப்பை நார்த்திசு கட்டிகள் உள்ள பெண்களுக்கு ASCVD எனும் இதய நோய் ஏற்படுவதற்கான வாய்ப்பு அதிகமிருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது, கருப்பை நார்த்திசு கட்டி இல்லாதவர்களைவிட, அது இருப்பவர்களுக்கு இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகம் என கண்டறியப்பட்டுள்ளது.

கருப்பை நார்த்திசு கட்டி ஒரு பெண்ணுக்கு இருப்பதாக கண்டறியப்பட்ட ஓராண்டில் இதற்கான வாய்ப்பு அதிகம் இருப்பதாக கூறப்பட்டுள்ள அதேவேளையில், 10 ஆண்டுகளுக்குப் பிறகும் கூட இதய நோய் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரித்த நிலையிலேயே உள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆபத்து கரோனரி தமனி நோய் (coronary artery disease), பெருமூளை ரத்த நாள நோய் (cerebrovascular disease), புற தமனி நோய் (peripheral artery disease) போன்ற அனைத்து முக்கியமான இதய நோய்களுக்கும் பொருந்தும் என்றும் இந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆபத்து அனைத்து வயதினர், இனத்தவருக்கும் பொருந்தும் என்றும் ஆய்வில் கூறப்பட்டுள்ளது.

இதய நோய் ஏற்படும் ஆபத்து கொண்ட பெண்களுக்கு ஆரம்பக்கட்ட முக்கியமான எச்சரிக்கை அறிகுறியாக கருப்பை நார்த்திசு கட்டிகள் இருப்பதாக அந்த ஆய்வு பரிந்துரைக்கிறது.

கருப்பை நார்த்திசு கட்டி என்பது என்ன, இதற்கும் இதய நோய்களுக்கும் என்ன சம்பந்தம் என்பதை மருத்துவ நிபுணர்கள் இங்கே விளக்குகின்றனர்.

கருப்பை நார்த்திசு கட்டி என்பது என்ன?

கருப்பை தசையின் திசுவிலிருந்து வளரும் கட்டிதான் கருப்பை நார்த்திசு கட்டி. இந்த கட்டி பெரும்பாலும் அறிகுறிகள் இல்லாமலேயே தோன்றும் என்கிறார் மகப்பேறு மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

"வேறு ஏதேனும் பரிசோதனைக்கு செல்லும்போதுதான் இந்தக் கட்டி குறித்து தெரியவரும். இந்த நார்த்திசு கட்டி என்றாலே ஆபத்தானது என்று பொருளில்லை. என்றாலும், இந்த பிரச்னை இப்போது அதிக பெண்களிடத்தில் காணப்படுகிறது. இதில் ஈஸ்ட்ரோஜன், புரொஜெஸ்டிரான் என இரு ஹார்மோன்களும் முக்கிய பங்கு வகிக்கின்றன." என விளக்குகிறார் அவர்.

அனைத்து வயதினரிடையே இது தோன்றினாலும் 40 வயதுகளில் மெனோபாஸ் மற்றும் மெனோபாஸ் முந்தைய நிலையில் (perimenopause) இது அதிகமானோருக்கு ஏற்படுவதாக அவர் தெரிவித்தார்.

"மெனோபாஸுக்கு முன்பு அறிகுறிகளே இல்லாமல் இருந்து, பின்னர் மெனோபாஸ் நிலையில் அதற்கான அறிகுறிகள் தென்படலாம்."

கருப்பை நார்த்திசு கட்டிக்கும் இதய நோய்க்கும் என்ன சம்பந்தம்?

"இந்த கட்டிகள் இருக்கும் இடத்தில் அழற்சியை ஏற்படுத்தும் வேதிப்பொருட்கள் உருவாகின்றன. அந்த வேதிபொருட்களாலும் இதய நோய்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன." என விளக்குகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

"எஸ்ட்ரோஜன் எனும் ஹார்மோன் சுரக்கும் வரை இதய நோய்கள் வராமல் அது தடுக்கும். மெனோபாஸ் நிலைக்கு பிறகு எஸ்ட்ரோஜன் ஹார்மோன் குறைய ஆரம்பிக்கும். மெனோபாஸ் நிலையை அடைந்த எல்லா பெண்களுக்கும் இதய நோய் வரும் என்பதல்ல, என்றாலும் சமீப காலமாக மெனோபாஸ் நிலையை அடைந்தவர்களிடையே இதய நோய் பாதிப்பு அதிகமாக காணப்படுகிறது."

இதையே இதயவியல் துறையில் ஓய்வுபெற்ற பேராசிரியரான கே.எஸ். கணேசன் கூறினார்.

"பொதுவாக மெனோபாஸ் நிலையின் போது எஸ்ட்ரோஜனின் அளவு குறையும். அதனால், அவர்களுக்கு இதய நோய்கள் ஏற்படுவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது. இது கருப்பை உள்ள பெண்களுக்கும் கருப்பை அல்லாத பெண்களுக்கும் பொருந்தும்." என கூறுகிறார் அவர்.

பொதுவான அறிகுறிகள்

  • மாதவிடாயின்போது அதிகப்படியான ரத்தப்போக்கு
  • மாதவிடாய் காலத்தில் அதிகமான வலி
  • குழந்தையின்மை
  • அடிக்கடி சிறுநீர் கழித்தல்

உள்ளிட்ட அறிகுறிகள் தென்படலாம்.

யாருக்கெல்லாம் வரலாம்?

பொதுவாக என்ன காரணத்துக்காக இந்த கட்டிகள் ஏற்படுகின்றன என கூறுவது கடினம் என கூறுகிறார் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத். எனினும், இது ஏற்படுவதற்கான ஆபத்து உள்ளவர்களாக சில பிரிவினரை அவர் பட்டியலிடுகிறார். அதன்படி,

  • உடல்பருமன் இருப்பவர்களுக்கு இது வருவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது.
  • மிகவும் இளம் வயதில் பூப்பெய்தியவர்களுக்கு வரலாம்.
  • மிகவும் தாமதமாக மெனோபாஸ் நிலையை எட்டுபவர்கள்

"இந்த கட்டி, கர்ப்ப காலத்தில் இன்னும் பெரிதாகி, குழந்தைப்பேறுக்குப் பிறகு மீண்டும் சிறியதாகும். அதேபோன்று, மெனோபாஸ் நிலையிலும் சிறிதாகும்." என அவர் விளக்கினார்.

தடுப்பது எப்படி?

உடல் பருமன் இதில் முக்கிய பங்கு வகிப்பதாகக் கூறும் மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத், என்னென்ன செய்ய வேண்டும் என்பதை கூறினார்.

  • உயரத்திற்கேற்ற உடல் எடை இருக்க வேண்டும்.
  • புகைப்பழக்கத்தை தவிர்க்க வேண்டும்.
  • மன அழுத்தத்தை தவிர்த்து ஆரோக்கியமான வாழ்வியல் முறைகளை கடைபிடிக்க வேண்டும்.
  • போதிய தூக்கம்
  • அல்ட்ராசவுண்ட் உள்ளிட்ட பரிசோதனைகளை மேற்கொண்டு கருப்பையின் எந்த இடத்தில், என்ன அளவில் இக்கட்டி இருக்கிறது என்பதை கண்டறிந்து அதற்கான சிகிச்சைகளை பெற வேண்டும்.

"இந்தியா முழுவதும் பெண்களிடையே உடல் பருமன் அதிகரித்துள்ளது. எனவே, இந்தியாவில் கருப்பை நார்த்திசு கட்டி - இதயநோய்கள் தொடர்பு குறித்த தனித்த ஆராய்ச்சி தேவை." என்கிறார், மருத்துவர் சாந்தி ரவீந்திரநாத்.

2025ம் ஆண்டு வெளியான லான்செட் ஆய்வின்படி, 2050-ஆம் ஆண்டுக்குள் சுமார் 45 கோடி இந்தியர்கள் உடல்பருமனுடன் (overweight and obesity) இருப்பார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இதய நோய் வராமல் தடுக்க பெண்கள் என்ன செய்ய வேண்டும்?

"சமீப காலமாக பெண்கள் அதிகமானோர் இதய நோய்களுடன் வருவதைப் பார்க்க முடிகிறது. பெண்களுக்கு இதய நோய்களுக்கான அறிகுறிகள், சிகிச்சை எல்லாவற்றிலும் மாறுபாடுகள் உள்ளன, பரவலான ஆய்வு தேவைப்படும் தனித்த பிரிவாகவே இது உள்ளது" என கூறுகிறார் ஓய்வுபெற்ற இதயவியல் பேராசிரியர் கே.எஸ். கணேசன்.

பெரிமெனோபாஸ் நிலையிலேயே இதய நோய்கள் வருவதற்கான ஆபத்து அதிகரிக்கிறது என்றும் நிறைய பெண்களுக்கு இதய நோய்கள் அறிகுறிகளே இன்றி வரும் என்றும் அவர் தெரிவித்தார்.

மெனோபாஸ் நிலையை கடந்த பெண்களும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.

"பெண்களுக்கு ஆண்களைவிட ரத்த நாளங்கள் மிகச் சிறியதாக இருக்கும். இதனாலேயும் மிக அதிகமான ரத்த உறைவு நிலை (hyper coagulation) ஏற்படும்போது உடனடியாக மாரடைப்பு ஏற்படக்கூடிய ஆபத்து உண்டு என அவர் எச்சரிக்கிறார்."

40 வயதுக்கு மேலான பெண்கள் இதற்கென கட்டாயமாக எடுக்க வேண்டிய பரிசோதனைகளாக அவர் சிலவற்றை குறிப்பிடுகிறார்.

அதன்படி,

  • ஹார்மோன் பரிசோதனை (Hormone assay)
  • கொலஸ்ட்ரால் உள்ளிட்டவற்றின் அளவை கண்டறியும் லிப்பிட் சோதனை (lipid profile)
  • மரபணு ஆய்வு (Genetic study)
  • ரத்தம் உறையும் அளவை சோதிக்கும் ரத்தம் உறைவு விவர பரிசோதனை (coagulation profile)
  • ஹோமோசிஸ்டின் அளவை கண்டறியும் பரிசோதனை (homocysteine)

இந்த பரிசோதனைகளை எடுத்து ஏதேனும் பிரச்னைகள் இருப்பது தெரிந்தால் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என அவர் கூறுகிறார்.

பொதுவாக, இதய நோய் ஆபத்து அதிகம் உள்ள பெண்கள் மருத்துவர்களின் பரிந்துரைப்படி, சில மாத்திரைகளை வாழ்நாள் முழுவதும் எடுத்துக்கொள்ள வேண்டும் என மருத்துவர் கே.எஸ். கணேசன் கூறுகிறார். ஒரு மணி நேர நடைபயிற்சி செல்வதை பெண்கள் கட்டாயமாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் அவர் பரிந்துரைக்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு