பிரிட்டிஷ் மகாராணிக்கே நெருக்கமான இந்திய மன்னர் கடைசியில் வறுமையில் வாடியது ஏன்?

பட மூலாதாரம், Hulton Archive/Getty Images, olympiaauctions.com
- எழுதியவர், ஆலிஸ் கன்னிங்ஹம்
- பதவி, பிபிசி செய்தியாளர், சஃபக்
சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி ஆட்சியாளரான துலீப் சிங்கிற்குச் சொந்தமான 19ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த இரண்டு நாற்காலிகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன.
இந்த இரண்டு நாற்காலிகளும் 8,000 பவுண்டுகளுக்கு (சுமார் 9 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய்) ஏலம் போனதாக ஒலிம்பியா ஆக்ஷன்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.
துலீப் சிங்குக்கு (1838-1893) ஐந்து வயதிலேயே சீக்கிய மகாராஜா என்ற பட்டம் கொடுக்கப்பட்டது. ஆனால், 1849-இல் பிரிட்டிஷார் சீக்கிய சாம்ராஜ்யத்தைக் கைப்பற்றிய பிறகு, அவர் சஃபக்-நார்ஃபோக் எல்லையில் எல்வெடன் ஹாலுக்கு அனுப்பப்பட்டார்.
சமீபத்தில் ஏலம் விடப்பட்ட நாற்காலிகள் துலீப் சிங்கின் உடைமைகளில் ஒரு பகுதியாக இருந்தன.
ஏலத்திற்கு முன்பு பேசிய ஒலிம்பியா ஆக்ஷன்ஸ் நிபுணர் நிக்கோலஸ் ஷா, இந்த நாற்காலிகள் மீது மக்கள் மத்தியில் "கணிசமான ஆர்வம்" இருக்கும் என்று நம்புவதாகக் கூறியிருந்தார்.
மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகன்

பட மூலாதாரம், Universal History Archive/Getty Images
1799-இல் பஞ்சாபில் சீக்கிய சாம்ராஜ்யத்தை நிறுவிய மகாராஜா ரஞ்சித் சிங்கின் இளைய மகன் தான் துலீப் சிங்.
துலீப் சிங் 15 வயதில் பிரிட்டனுக்கு நாடு கடத்தப்பட்டார். இங்கிலாந்தில் தங்கியிருந்த காலத்தில், அவர் அப்போதைய பிரிட்டன் மகாராணி விக்டோரியாவின் நெருங்கிய நண்பர் ஆனார்.
1863-ஆம் ஆண்டில் அவர் எல்வெடன் எஸ்டேட் சொத்தை வாங்கினார். 1893-இல் 55 வயதில் அவர் இறந்த பிறகு, இந்தச் சொத்தை மதுபான தொழிலில் இருந்த புகழ்பெற்ற கின்னஸ் குடும்பத்தைச் சேர்ந்த எட்வர்ட் செசில் கின்னஸ் வாங்கினார்.
ஏலம் விடப்பட்ட இரண்டு நாற்காலிகள் பம்பாயில் (தற்போதைய மும்பை) 1850-களில் உருவாக்கப்பட்டவை. எட்வர்ட் கின்னஸ், துலீப் சிங்கின் சொத்தை வாங்கிய பிறகு, இந்த நாற்காலிகள் அங்கேயே இருந்தன.
ஒலிம்பியா ஆக்ஷன்ஸ் நிறுவன தகவல்படி, இந்த நாற்காலிகள் அடர் நிற பம்பாய் பிளாக்வுட் எனப்படும் மரத்தால் ஆனவை மற்றும் இந்திய வடிவமைப்பு மற்றும் அகான்தஸ் இலை வடிவங்களைக் கொண்டுள்ளன.
"இந்த நாற்காலிகள் மகாராஜா துலீப் சிங்கின் இந்திய பாரம்பரியம் மற்றும் ஆங்கில சமுதாயத்தின் தாக்கம் இரண்டையும் இணைக்கும் மிகச் சிறந்த கைவினைத்திறனைக் காட்டுகின்றன," என நிக்கோலஸ் ஷா கூறுகிறார்.
நாற்காலிகளின் சிறப்பு என்ன?

பட மூலாதாரம், olympiaauctions.com
எல்வெடன் எஸ்டேட்டில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட 40 ஆண்டுகளுக்குப் பிறகு, இந்த நாற்காலிகள் முதல் முறையாக ஏலம் விடப்பட்டுள்ளன.
இந்த நாற்காலிகள் தயாரிக்கப்பட்ட "பம்பாய் பிளாக்வுட்" என்பது 1840-களின் விக்டோரியன் மாதிரியின்படி உருவாக்கப்பட்ட விரிவான வேலைப்பாடுகளுடன் கூடிய மரச்சாமான்களைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது.
இந்த நாற்காலிகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மரம் முக்கியமாக பிளாக்வுட் எனப்படும் கருங்காலி மரம் ஆகும். இது பம்பாயின் மீடோ ஸ்ட்ரீட் மற்றும் அதைச் சுற்றியுள்ள மர ஆலைகளுக்காக மலபார் கடற்கரையில் இருந்து கொண்டு வரப்பட்டது.
இந்த மரச்சாமான்கள் 18ஆம் நூற்றாண்டில் பிரான்ஸ் மன்னர் பதினைந்தாம் லூயி காலத்திய மரச்சாமான்கள் அடிப்படையிலான வேலைப்பாடுகளைக் கொண்ட ரோகோகோ ரிவைவல் பாணியில் உள்ளன.
இந்த இரண்டு நாற்காலிகளும் 1984-இல் எல்வெடன் எஸ்டேட்டின் ஒரு பகுதியாக ஏர்ல் ஆஃப் ஐவேக்கின் சார்பில் கிறிஸ்டீஸ் நிறுவனத்தால் விற்கப்பட்டன.
அந்த விற்பனையில் சேர்க்கப்பட்ட இந்திய மரச்சாமான்களின் சில எடுத்துக்காட்டுகளில் இவை இருந்தன. துலீப் சிங் இறந்த பிறகு, வீட்டில் மீதமிருந்த சில பொருட்களில் இந்த நாற்காலிகளும் இருந்ததாக நம்பப்படுகிறது.
சீக்கிய சாம்ராஜ்யத்தின் கடைசி மகாராஜா
துலீப் சிங் 1838-இல் சீக்கிய ஆட்சியாளர் மகாராஜா ரஞ்சித் சிங்கிற்கு மகனாகப் பிறந்தார்.
அவர் பிறந்த அடுத்த ஆண்டே அவரது தந்தை இறந்தது, பஞ்சாபில் உள்நாட்டுப் போர் மற்றும் அமைதியின்மையை ஏற்படுத்தியது.
ஐந்து வயதில் துலீப் சிங் ஷேர்-இ-பஞ்சாப் அரியணையில் அமர்த்தப்பட்டார். ஆனால், உண்மையான ஆட்சி அதிகாரம் அவரது தாயார் மற்றும் தாய்வழி மாமாவின் கைகளில் இருந்தது.
எனினும், உள்நாட்டுப் போர் நின்றபாடில்லை, மாறாக அது மேலும் மேலும் தீவிரமானது. சீக்கியர்களுக்கும் பிரிட்டிஷாருக்கும் இடையே இரண்டாவது போர் வெடித்த போது, அது உச்சத்தை அடைந்தது. பஞ்சாபைக் கைப்பற்ற பிரிட்டிஷார் முழுவதும் தயாராக இருந்தனர்.
1849-இல் பஞ்சாப் பிரிட்டிஷ் இந்தியாவுடன் இணைக்கப்பட்டது. மகாராஜா துலீப் சிங் அரியணையில் இருந்து இறக்கப்பட்டார்.
அவர் சீக்கிய சாம்ராஜ்ஜியத்தின் கடைசி மகாராஜா ஆவார். துலீப் சிங் சிறையில் அடைக்கப்பட்டிருந்த தனது தாயார் மகாராணி ஜிந்த் கௌரை பிரிந்திருந்தார்.

பட மூலாதாரம், BRITISH LIBRARY
மே 1854-இல் அவர் பிரிட்டனுக்கு அழைத்து செல்லப்பட்டு, மகாராணி விக்டோரியாவுக்கு அறிமுகப்படுத்தப்பட்டார். முதல் சந்திப்பிலேயே மகாராணி விக்டோரியாவுக்கு துலீப் சிங்கை பிடித்துவிட்டது.
மெல்லமெல்ல அவர் ராணியின் நெருங்கிய நண்பரானார். தனது பதவிக்கு ஏற்ற 'மரியாதையையும்' அவர் பெற்றார்.
தனிப்பட்ட வாழ்க்கையில் அவர் ஒரு பிரிட்டிஷ் நிலப்பிரபுவாக மாறிவிட்டார். அதே நேரத்தில் பொதுவெளியில் அவர் தன்னை ஒரு இந்திய இளவரசராகவே தொடர்ந்து வெளிப்படுத்தினார்.
இங்கிலாந்தில் அவர் 'கருப்பு இளவரசர்' என்று அழைக்கப்பட்டார்.
1861-இல் அவர் தனது தாயார் மகாராணி ஜிந்த் கௌரை மீண்டும் சந்தித்தார். அதன் பிறகு ஜிந்த் கௌர் தனது மகனுடன் பிரிட்டனில் இரண்டு ஆண்டுகள் கழித்தார்.
அதற்கு முன், தாயும் மகனும் ஒருவருக்கொருவர் கடிதங்கள் எழுதியிருந்தனர். அவற்றில் இரண்டு கடிதங்கள் பிரிட்டிஷ் நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, ஜிந்த் கௌர் காலமானார்.
துலீப் சிங், எகிப்தின் கெய்ரோவில் பிறந்த பம்பா முல்லரை மணந்தார். பம்பா, கிறிஸ்தவ விழுமியங்களில் ஆழ்ந்த நம்பிக்கை கொண்டிருந்தார். துலீப் சிங் மற்றும் பம்பாவுக்கு ஆறு குழந்தைகள் பிறந்தன. அவர்கள் சஃபக்கின் தொலைதூரப் பகுதியான எல்வெடன் ஹாலில் குடியேறினர்.
பாரிஸில் நிகழ்ந்த மரணம்

பட மூலாதாரம், BRITISH LIBRARY
1870-களில் துலீப் சிங் பொருளாதார நெருக்கடியில் தவித்தார். ஆறு குழந்தைகளை வளர்ப்பது மற்றும் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் இருந்து கிடைக்கும் ஓய்வூதியத்தில் வாழ்வது அவருக்குக் கடினமாக இருந்தது. அவர் பெரும் கடனில் மூழ்கியிருந்தார்.
அவர் இந்தியாவில் உள்ள தனது நிலம் மற்றும் சொத்துகளைத் திரும்ப ஒப்படைக்கக் கோரி பிரிட்டிஷ் அரசை வலியுறுத்தத் தொடங்கினார். பஞ்சாப் நேர்மையற்ற முறையில் ஆக்கிரமிக்கப்பட்டது என்றும் அவர் வாதிட்டார்.
இந்தியாவில் உள்ள தனது நிலத்திற்கு இழப்பீடு கோரி அரசாங்கத்திற்கு எண்ணற்ற கடிதங்களை எழுதினார். ஆனால், அவருக்கு எந்தப் பலனும் கிடைக்கவில்லை.
1886-ஆம் ஆண்டு மார்ச் இறுதியில், அவர் தனது வாழ்க்கையின் மிகத் துணிச்சலான நடவடிக்கையை எடுத்தார். அவர் தனது குடும்பத்துடன் இந்தியாவுக்குக் கிளம்பினார். தான் மீண்டும் சீக்கிய மதத்தை நிலைநிறுத்துவதாகவும், தனது நிலத்தின் பங்கை மீட்டெடுப்பதாகவும் அவர் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம் கூறினார்.
இதனால் கிளர்ச்சிக்கு சாத்தியம் உள்ளது என எண்ணிய பிரிட்டிஷ் அரசாங்கம் அந்த அபாயத்தைத் தவிர்க்க விரும்பியது. இந்தியாவிற்கு வரும் வழியில் மகாராஜா துலீப் சிங் பயணித்த கப்பல் ஏடனை அடைந்தபோது, அவர் தடுத்து நிறுத்தப்பட்டார்.
துலீப் சிங்கின் குடும்பம் பிரிட்டனுக்குத் திரும்பிய நிலையில் அவர் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
பஞ்சாபின் கடைசி மகாராஜாவான துலீப் சிங் தனது வாழ்க்கையின் கடைசி காலத்தில் வறுமையில் வாடினார். பாரிஸில் 1893-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் தனது 55-வது வயதில் அவர் காலமானார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு












