குடும்பமே பலியான சோகம்: ஆமதாபாத் விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் பின்னணி

ஏர் இந்தியா, போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஆமதாபாத், ஆமதாபாத் விமான விபத்து,

பட மூலாதாரம், Family Handout

படக்குறிப்பு, மகள் சாராவுடன் இந்தியாவுக்கு வந்த நானாபாவா குடும்பத்தினர்

குஜராத்தில் இருந்து லண்டனின் கேட்விக் விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில நொடிகளிலேயே விபத்தில் சிக்கியது.

இந்த விபத்தில் பயணிகள் மற்றும் விமானப் பணியாளர்கள் குழுவினர் உட்பட 241 பேர் உயிரிழந்தனர் என ஏர் இந்தியா விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.

விமானத்தில் பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் உட்பட 242 பேர் பயணித்தனர். அதில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் பிரிட்டன் குடிமக்கள். 7 பேர் போர்த்துக்கீசிய நாட்டினர், ஒருவர் கனடாவைச் சேர்ந்தவர்.

மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கியதால் அந்த பகுதியில் குடியிருந்த மக்கள் சிலர் இறந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் கூறினர்.

இந்த பயணிகளில் பிரிட்டன் குடிமகனான விஷ்வாஷ் குமார் ரமேஷ் மட்டுமே உயிர்பிழைத்தார். அவர் மருத்துவமனையில் காயங்களுக்கு சிகிச்சை பெற்று வருகிறார்.

இறந்தவர்கள் குறித்த தகவல்கள் வெளியாகி வருகின்றன. பிபிசியால் உறுதி செய்யப்பட்ட சில பயணிகள் குறித்த தகவல்கள் இங்கே!

குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி

இந்திய விமானப் போக்குவரத்து அமைச்சர் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய போது, குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி இந்த விபத்தில் சிக்கி உயிரிழந்ததாக தெரிவித்தார்.

குஜராத்தின் முதல்வராக 2016 முதல் 2021 ஆண்டு வரை பதவி வகித்தார் விஜய் ரூபானி. அவர் ஆளும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்.

ஏர் இந்தியா, போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஆமதாபாத், ஆமதாபாத் விமான விபத்து, விஜய் ரூபானி

பட மூலாதாரம், Hindustan Times via Getty Images

படக்குறிப்பு, விஜய் ரூபானி

நானாபாவா குடும்பத்தினர்

பிரிட்டன் நாட்டின் குளூசெஸ்டர்ஷையர் பகுதியை சேர்ந்த அகீல் நானாபாவா, அவருடைய மனைவி ஹன்னா வோராஜி மற்றும் அவர்களின் நான்கு வயது மகள் சாரா நனபவா ஆகியோர் இந்த விபத்தில் உயிரிழந்தனர்.

'குளூசெஸ்டர்ஷையர் முஸ்லீம் சொசைட்டி' அமைப்பு இரங்கல் செய்தியை வெளியிட்டிருந்தது.

"எந்த வார்த்தையும் இந்த இழப்பின் வலியை குறைக்காது. உலகின் பல பகுதிகளில் இருந்து வரும் தோழமை மற்றும் அன்பின் உதவியில் இவர்களை இழந்து வாடும் குடும்பத்தினர் ஆறுதலை பெறட்டும். இறந்தவர்களின் நினைவுகள் குடும்பத்தினருக்கு தேவையான ஆறுதலை வழங்கட்டும். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடையட்டும்," என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஏர் இந்தியா, போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஆமதாபாத், ஆமதாபாத் விமான விபத்து,

பட மூலாதாரம், Reuters

தாஜூ குடும்பத்தினர்

ஆதாம் தாஜூ(72), அவரின் மனைவி ஹசீனா தாஜூ (70) ஆகியோர் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு அவர்களின் மருமகன் அல்தாஃப்ஹுசேன் படேலுடன் கிளம்பினர். அவர்கள் அனைவரும் லண்டனில் வசித்து வந்தனர்.

இவர்களின் இறப்புச் செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்ததாக பிளாக் பர்னில் தனது பெற்றோருடன் வசித்து வரும் அவர்களின் பேத்தியான ஆம்ரா தாஜூ கூறினார்.

தனது தந்தை அல்தாஃப் அவரின் சகோதரியுடன் இருக்க லண்டன் கிளம்பியதாகவும் அப்போது இந்த செய்தி வந்ததாகவும் ஆம்ரா தாஜூ கூறினார்.

ஃபியோன்கல், ஜேமி க்ரீன்லா மீக்

பிரிட்டனை சேர்ந்த ஃபியோன்கலும் மற்றும் ஜேமி க்ரீன்லா மீக்கும் திருமணம் செய்துக்கொண்டவர்கள். அவர்கள் ஆன்மீக நல மையம் ஒன்றை லண்டனில் வைத்து நடத்தி வந்தனர்.

விமானம் ஏறுவதற்கு முன்பாக அவர்கள் இருவரும் இன்ஸ்டகிராமில் வீடியோ ஒன்றை பதிவிட்டனர். அதில் அவர்கள் தங்களின் நாட்டிற்கு திரும்ப உள்ளதாக விமான நிலையத்தில் இருந்து பதிவிட்டனர்.

இந்தியாவுக்கு அவர்கள் சுற்றுலா வந்தது குறித்து மகிழ்ச்சியோடு பேசிய அந்த வீடியோவை அவர்கள் இன்ஸ்டகிராமில் பதிவிட்டனர்.

ஏர் இந்தியா, போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஆமதாபாத், ஆமதாபாத் விமான விபத்து,

பட மூலாதாரம், Instagram

படக்குறிப்பு, ஃபியோன்கல், ஜேமி க்ரீன்லா மீக் தம்பதி

சையத் குடும்பத்தினர்

விபத்துக்குள்ளான விமானத்தில் ஜாவேத் சையத், அவருடைய மனைவி மரியம் ஆகியோரும் இருந்தனர். அவர்கள் தங்களின் இரண்டு சின்னஞ்சிறு குழந்தைகளுடன் விமானத்தில் பயணித்தனர்.

மரியம், ஹர்ரோட்ஸ் நிறுவனத்திலும், ஜாவேத் ஹோட்டலிலும் பணியாற்றி வந்தனர். அவர்கள் மேற்கு லண்டனில் வசித்து வந்தனர்.

ஏர் இந்தியா, போயிங் 787-8 ட்ரீம்லைனர், ஆமதாபாத், ஆமதாபாத் விமான விபத்து,

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, ஜாவேத் சையத், மனைவி மரியம் சையத்

அஜய் குமார் ரமேஷ்

இந்த விமான விபத்தில் உயிர் பிழைத்த ஒரே ஒரு பயணியின் சகோதரர் அஜய் குமார் ரமேஷ்.

அவருடைய உறவினர் அஜய் வால்கி பிபிசியிடம் பேசிய போது, விஷ்வாஷ்குமார் ரமேஷ் விபத்து நடந்த பிறகு அவரின் குடும்பத்தினரை அழைத்து நலமுடன் இருப்பதாக கூறியதாகவும், அவரின் சகோதரர் அஜய் குமார் ரமேஷ் எங்கே இருக்கிறார் என்று தெரியவில்லை என தெரிவித்ததாகவும் கூறினார்.

ஷார்ட் வீடியோ
காணொளிக் குறிப்பு, ஆம்புலன்ஸுக்கு நடந்தே சென்ற அந்த 'ஒருவன்' - விமான விபத்தில் உயிர் பிழைத்தவர் சொன்னது என்ன?

சிங்சன்

ஏர் இந்தியா 171 எண் விமானத்தில் பணியாற்றிய விமான ஊழியர்களில் ஒருவர் சிங்சன் என்று அவரின் குடும்ப உறுப்பினர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமதாபாத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு வெளியே காத்துக் கொண்டிருந்த அவருடைய உறவினரான டி. தங்கலிங்கோ ஹாவோகிப் பிபிசியிடம் பேசிய போது, சிங்சன் குறித்த தகவல்களைப் பெற மேற்கொண்ட முயற்சிகள் தோல்வி அடைந்ததாக தெரிவிக்கிறார்.

சிங்சனின் சகோதரர் மற்றும் அம்மா அவரை நம்பியே வாழ்ந்து வந்ததாக தெரிவிக்கும் அவர், இந்த குடும்பத்தில் வருமானம் ஈட்டிக் கொண்டிருந்த ஒரே ஒரு குடும்ப உறுப்பினர் சிங்சன் என்றும் தெரிவித்தார்.

இரண்டு வயது பேரனுடன் பலியான பாட்டி

உயிரிழந்த ரக்சா மோதா கணவர் கிஷோர் மோதாவுடன்

பட மூலாதாரம், Facebook

படக்குறிப்பு, உயிரிழந்த ரக்சா மோதா கணவர் கிஷோர் மோதாவுடன்

இந்த விபத்தில் பிரிட்டனை சேர்ந்த ரக்சா மோதாவும் அவரது இரண்டு வயது பேரன் ருதராவும் உயிரிழந்தனர்.

கடந்த ஏப்ரல் மாதம் புற்றுநோயால் உயிரிழந்த ரக்சா மோதாவின் கணவர் கிஷோர் மோதாவின் நினைவஞ்சலி நிகழ்வுக்காக அவர்கள் பிரிட்டன் கிளம்பியதாக கூறப்படுகிறது.

கிஷோர் மோதா புற்றுநோய் காரணமாக இந்தியாவின் உயிரிழந்தார். அவரின் நினைவஞ்சலி நிகழ்வு பிரிட்டனின் வெலிங்பரோவில் ஜூன் 22 அன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது என கூறப்படுகிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு