You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
திருடு போன நகையை மீட்க மதுரை கிராம மக்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலா’
- எழுதியவர், தங்கதுரை குமாரபாண்டியன்
- பதவி, பிபிசி தமிழ்
ஒரு வீட்டில் களவு நகை, பணம் ஆகியவை களவுபோய்விடுகிறது. திருடியது சுற்றத்தில் யாரோதான் என்பதும் தெரிந்துவிடுகிறது.
அந்த நகையையும் பணத்தையும் மீட்க மக்கள் ஒரு யோசனை செய்கிறார்கள். அரைமணிநேரம் விளக்குகள் அணைக்கப்படும். திருடியவர் அதனை ஒரு பொது இடத்தில் கொண்டுவந்து வைக்க வேண்டும்.
இது தமிழ் சினிமாவில் பார்த்த காட்சி தானே, என்கிறீர்களா?
அதுதான் இல்லை.
மதுரையில் ஒரு கிராமத்தில் சமீபத்தில் நடந்த உண்மைச் சம்பவம் இது.
மதுரை திருமங்கலத்தை அடுத்த பெரிய பொக்கம்பட்டி கிராமத்தில், ஒரு விவசாயின் வீட்டில் 26 சவரன் தங்க நகை, 20,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடுபோனது.
அதைக் கண்டுபிடிக்க, அக்கிராம மக்கள், ஆதி காலத்தில் அவர்கள் பயன்படுத்திய ‘அண்டா ஃபார்முலாவை’ மீண்டும் உபயோகித்தனர். அதை வைத்து 48 மணி நேரத்தில் தங்கம், நகையை மீட்டுக் காவல்துறைக்கு வேலையில்லாமல் செய்துள்ளனர்.
விவசாயி வீட்டில் பகல் திருட்டு
மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் இருந்து 12கி.மீ. தொலைவில் உள்ளது பெரிய பொக்கம்பட்டி கிராமம். அங்கு பெரிய அளவிலான நவீன வசதிகள் ஏதும் இல்லை. கால்நடை வளர்ப்பு, விவசாயம், 100 நாள் வேலைத் திட்டம் போன்றவற்றை பிரதான பணியாகச் செய்து வருகிறார்கள்.
அந்தக் கிராமத்தைச் சேர்ந்த ராகவன், பாண்டியம்மாள் தம்பதியினர் விவசாயம், கால்நடை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
கடந்த நவம்பர் 24-ஆம் தேதி அதிகாலை வழக்கமான விவசாய வேலைக்குச் சென்று, பணியை முடித்து விட்டு காலை 10 மணியளவில் வீட்டுக்குத் திரும்பி வந்த பார்த்த போது வீட்டின் முன்புற கதவின் பூட்டு உடைக்கப்பட்டு, வீடு திறந்து கிடந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சியடைந்த ராகவன் மற்றும் பாண்டியம்மாள் வீட்டிற்குள் சென்று பீரோவை திறந்து பார்த்த போது அதில் வைக்கப்பட்டு இருந்த 26 சவரன் நகை, 20,000 ரொக்கப் பணம் ஆகியவை திருடு போனது தெரியவந்தது.
இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த இருவரும் அலறியபடியே வெளியே ஓடி வந்து, கிராம மக்களிடம் நடந்ததைத் தெரிவித்தனர். இது தொடர்பாக சிந்துபட்டி போலீசில் புகார் செய்தனர்.
நகை, பணத்தை மீட்க பழைய வழி
கிராமத்திற்கு மோப்ப நாய், கை ரேகை நிபுணர்கள் ஆகியோருடன் வந்த காவல்துறை தீவிரமாக சோதனை செய்தனர். இதில் மோப்ப நாய் வீட்டில் இருந்து ஊரின் மையப் பகுதியில் இருக்கும் பள்ளி வரை சென்று நின்றது.
திருட்டுச் சம்பவத்தில் ஈடுபட்டவர் உள்ளூர் நபர் என்பதைப் போலீசார் உறுதி செய்து, அதனை கிராம மக்களிடம் தெரிவித்தனர்.
திருடியவர் உள்ளூர் ஆள் என்பதை உணர்ந்து, கிராமத்தில் போலீசார் விசாரணை செய்து திருட்டுச் சம்வத்தில் ஈடுபட்டவரை கைது செய்தால் ஊரின் பெயர் கெட்டுப் போகும் என எண்ணிய கிராமவாசிகள் ஒரு யோசனை செய்தனர்.
அதன்படி, அவர்களது ஊரில், அண்டாவை வைத்து திருடு போன பொருளை மீட்கும் வழக்கத்தைப் போலீசாரிடம் கூறினர்.
‘அண்டா ஃபார்முலா’
கிராம மக்களின் யோசனையை ஏற்று ‘அண்டா ஃபார்முலாவிற்கு’ போலீசார் அனுமதி வழங்கினர்.
திருட்டுச் சம்பவம் நடந்த அன்றே, ஊரில் உள்ள எல்லோரது வீட்டிற்குற்கும் சென்று ஒரு போஸ்ட் கவர் அளிக்கப்பட்டது. அதில், ‘திருட்டு நகையை வைத்திருந்தால், இந்தக் கவரில் போட்டு விளக்கு அணைக்கப்படும் நேரத்தில் அண்டாவிற்குள் போட்டு விடலாம்’ என எழுதப்பட்டிருந்தது.
அதன்பின், இரவு 8 மணிக்கு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் பெரிய அண்டா வைக்கப்பட்டது.
அதன்பின் கிராமத்தின் மத்தியில் இருக்கும் தெரு விளக்குகளுக்கு அரை மணி நேரம் மின் இணைப்புத் துண்டிக்கப்பட்டது.
விளக்குகள் மீண்டும் போடப்பட்டபின் அண்டாவிற்குள் பார்த்தபோது அதில் கவர்கள் கிடந்தன. ஒவ்வொன்றாக திறந்து பார்த்தபோது 23 சவரன் நகை மட்டுமே சிக்கியது. இதனை ஊர் பெரியவர் போலீசாரிடம் ஒப்படைக்க, நகையை போலீசார் ராகவனிடம் வழங்கினர்.
ஆனால் திருடு போன மீதி 3 சவரன் நகை, 20,000 பணம் ஆகியவை திரும்பி வரவில்லை.
திருடனுக்கு கடைசி வாய்ப்பு
திருடன் பாதி நகையை மட்டுமே அண்டாவிற்குள் வைத்ததால், கடைசியாக ஒரு முறை அண்டாவை வைத்து பணத்தை மீட்கப் பார்க்கலாம், அல்லது காவல்துறை திருடனைத் தேடி கைது செய்துக் கொள்ளலாம் என கிராம பெரியவர்கள் கூடி பேசி முடிவெடுத்து போலீசிடம் கூறினர்.
இதனை ஒப்புக் கொண்ட காவல்துறையினர் அடுத்தநாள் (நவம்பர் 25) மீண்டும் அண்டா முறையைச் செயல்படுத்தினர்.
இரண்டாம் முறை கவர்களை ஒன்றன் பின் ஒன்றாகப் பார்த்த போது, அதில் மீதமுள்ள 3 சவரன் நகையும், 20,000 ரொக்கமும் கிடைத்தது.
இதனை கிராமப் பெரியவர்கள் காவல்துறை அதிகாரிகளிடம் கொடுத்தனர். அதனைப் பெற்றுக் கொண்ட காவலர்கள் அதனை ராகவனிடம் வழங்கினர்.
48 மணி நேரத்திற்குள் முடிந்த வழக்கு
போலீசார் அளித்தத் தகவலைப் புரிந்து கொண்ட கிராம மக்கள், ஆதி காலத்து அண்டா முறையைப் பின்பற்றி நகை, பணத்தை மீட்டு வழக்கை முடித்து வைத்தனர்.
மோப்ப நாய் மட்டும் வரவில்லை என்றால் எனது நகை பணத்தை இழந்து இருப்பேன் என்கிறார் விவசாயி ராகவன்.
"எனது வீட்டில் திருடு போனது குறித்த தகவலை போலிசில் இருக்கும் எனது உறவினரிடம் கூறினேன். உடனடியாக சிந்துபட்டி காவல் ஆய்வாளர், டி.எஸ்.பி வசந்த் குமார் மோப்ப நாய், கைரேகை நிபுணர்களுடன் விரைந்து வந்தார். மோப்ப நாய் வீட்டில் இருந்து வெளியே வந்து கிராமத்தின் மையப் பகுதி வரையில் சென்று நின்றது", என்கிறார்.
தொடர்ந்து பேசிய அவர், "போலீசார் மோப்ப நாயின் நடவடிக்கைகளைப் பார்த்து நகையைத் திருடியது உள்ளூர் நபர் என சொன்னதால்தான் எங்களால் நகை மற்றும் பணத்தை மீட்க முடிந்தது. கிராம மக்களின் அண்டா முறைக்கு போலீசாரும், மக்களும் ஒத்துழைப்பு வழங்கினர்," என பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்.
சாணி உருண்டைக்கு பதில் போஸ்ட் கவர்
அண்டாவை வைத்து திருடு போன பொருளை கண்டுபிடிக்கும் இந்த முறையில், முன்பெல்லாம் அனைவருக்கும் சாணி உருண்டை கொடுக்கப்படும் என்றும், தற்போது அதற்கு பதிலாக தபால் கவர் வழங்கப்பட்டுள்ளது, என்றும் கிராம மக்கள் கூறுகின்றனர்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ஊர் பெரியவர் வேலுசாமி, “எங்களது கிராமத்தில் சிறு,சிறு நகைகள் மாயமாகும் போது ஊருக்கு மத்தியில் அண்டா வைத்து வீடுதோறும் சாணி உருண்டை வழங்கி அண்டாவில் வைக்கச் சொல்வோம். பின் தண்ணீரை ஊற்றிச் சாணி உருண்டைகளைக் கரைக்கும் போது தொலைந்து போன தங்கப் பொருட்கள் கிடைத்து விடும்,” என்றார்.
“26 சவரன் நகை, 20,000 பணம் திருட்டு போயிருப்பது இதுவே முதல் முறை. காவல்துறைக்கு எங்களது ஊர் வழக்கத்தைக் கூறினோம். அவர்களும் அதற்கு அனுமதி வழங்கியதால் சாணி உருண்டைக்கு பதிலாக போஸ்ட் கவர் கொடுத்து நகை, பணத்தை மீட்டிருக்கிறோம்," என்று கூறினார்.
இது குறித்து பிபிசி தமிழிடம் பேசிய சிந்துபட்டி காவல் நிலையத்தின் அதிகாரி ஒருவர், அண்டா நடைமுறையிலேயே நகை மற்றும் பணம் மீட்கப்பட்டதால் இந்தச் சம்பவத்தில் வழக்குப்பதிவு ஏதும் செய்யப்படவில்லை, என்றார். மேலும், கிராம மக்களுக்கு வீட்டை பூட்டி விட்டு அதனை சாவியை வீட்டின் அருகிலேயே வைக்க வேண்டாம் என விழிப்புணர்வு செய்யப்பட்டதாக குறிப்பிட்டார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)