பனி படர்ந்த இமயமலையில் இந்தியா, பாகிஸ்தான், சீனாவை அச்சுறுத்தும் பொது எதிரி

சுற்றுச்சூழல் சார்ந்த புகைப்படக் கலைஞரும், எழுத்தாளருமான ஆரத்தி குமார்-ராவ், இந்திய துணைக்கண்டத்தின் நிலப்பரப்பு மாறி வருவதைப் பதிவுசெய்ய, அனைத்து பருவகாலங்களிலும் தெற்காசியா முழுவதும் பயணம் செய்கிறார்.

இமயமலைத் தொடரின் உருகும் பனிப்பாறைகளுக்குக் கீழே நிச்சயமற்ற எதிர்காலத்தை எதிர்கொண்டிருக்கின்றனர் லடாக் பகுதி மக்கள். இவர்களது வாழ்க்கை மற்றும் வாழ்வாதாத்தை பருவநிலை மாற்றம் எப்படி அச்சுறுத்துகிறது என்பதைத் தனது சொந்த புகைப்படங்களாலும் வார்த்தைகளாலும் இங்கு அவர் விவரிக்கிறார்.

ஆரத்தி குமார்-ராவ், ‘பிபிசி 100 பெண்கள்’ பட்டியலில் இந்த ஆண்டு காலநிலை முன்னோடிகளில் ஒருவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்.

2010ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 5-ஆம் தேதி இரவு. அந்த நாள் லடாக் மக்களின் நினைவில் இன்னும் பசுமையாக உள்ளது. அப்பகுதியின் தலைநகரான ‘லே’வை சுற்றியுள்ள பகுதியில் ஒரு மேக வெடிப்பு நடந்தது போல உணர்ந்தேன்.

அந்தக் குளிர் பாலைவனத்தில், இரண்டே மணிநேரத்தில் ஓராண்டுக்கான மழை பெய்தது. பெரும் சேற்றுப் பெருக்கு, பாதையில் உள்ள அனைத்தையும் விழுங்கியது. தப்பி ஓடிய மக்கள் அதன் அடியில் புதைந்தனர்.

அந்த இரவுக்குப் பின், பல நூறு பேர் கண்டுபிடிக்கப்படவே இல்லை.

இந்தியாவின் வடகோடி பீடபூமியிலுள்ள லடாக் பகுதி கடல் மட்டத்திலிருந்து 3,000மீ (9,850 அடி) உயரத்தில் அமைந்துள்ளது. இந்தியாவின் மற்ற பகுதிகளில் பெய்யும் பருவமழை இந்தப் பகுதிக்கு வராமல் இமய மலைகள் தடுக்கின்றன.

சமீப காலம் வரை, லடாக்கில் ஆண்டுக்கு 300 நாட்கள் சூரிய ஒளிதான் இருக்கும். மலைகளும் பாறைகளும் நிறைந்த இப்பகுதியில் இதுவரை நான்கு இன்ச் மழை பெய்துள்ளது. வெள்ளம் ஏற்பட்டதே இல்லை.

கடந்த 2010ஆம் ஆண்டில், பேரழிவு நிகழ்த்திய வெள்ளத்தைத் தொடர்ந்து 2012, 2015 மற்றும் 2018 ஆகிய ஆண்டுகளிலும் வெள்ளங்கள் ஏற்பட்டன.

கடந்த 70 ஆண்டுகளாக நடக்காத ஒன்று, 10 ஆண்டுகளுக்குள் நான்கு முறை நடந்தேறியுள்ளது. இது காலநிலை மாற்றத்தின் விளைவு என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

லடாக் நிலப்பரப்பு 15 ஆண்டுகளுக்கு முன் ஒரு வழக்கமான தாளகதியில் இயங்கிக் கொண்டிருந்தது. இது அங்கு வசிப்பவர்களுக்கு நிலையான நீர் ஆதாரத்தை வழங்கியது.

குளிர்காலப் பனி உருகி, ஓடைகளானது, அதேபோல் பனிப்பாறைகளில் இருந்து வரும் நீர் வசந்த காலத்தில் விவசாயத்திற்குப் பயன்பட்டது.

காலநிலை மாற்றம் கடந்த 40 ஆண்டுகளில் லடாக்கின் சராசரி குளிர்கால வெப்பநிலையை சுமார் 1 டிகிரி செல்ஷியஸ் உயர்த்தியுள்ளது.

பனிப்பொழிவு மேன்மேலும் கணிக்க முடியாததாக ஆகிவிட்டது. பனிப்பாறைகள் சிகரங்களை நோக்கி வெகுதூரம் பின்வாங்கிவிட்டன, அல்லது முற்றிலும் மறைந்துவிட்டன.

நான் முதன்முதலில் 2018ஆம் ஆண்டு லடாக் சென்றேன். 2019இல் மீண்டும் இந்த ஆண்டு வசந்த காலத்தில் அங்கு சென்றேன். கொரோனா பேரிடர் காரணமாக அதற்கு இடைப்பட்ட காலத்தில் அங்கு செல்ல முடியவில்லை.

இரண்டு பயணங்களுக்கு இடையே நான் அங்கு கண்ட மாற்றம் என்னைத் திடுக்கிட வைத்தது.

பனி இப்போது வேகமாக உருகுகிறது. இதனால், வசந்த காலத்தில் மக்களுக்கு தண்ணீர் கிடைக்காமல் போகிறது. பனிப்பாறைகள் இப்போது மலைகளில் மிகவும் உயரமாக உள்ளதால், அவை ஆண்டின் பிற்பகுதியில் உருகுகின்றன. முன்பெல்லாம் லடாக்கின் வசந்த காலம் பசுமையாகவும் வளமாகவும் இருக்கும். இந்த ஆண்டு அது வறண்டு அமைதியாக இருந்தது.

தண்ணீர் பற்றாக்குறையால் புல்வெளிகள் குறைந்திருக்கின்றன. பாஷ்மினா ஆட்டு மந்தைகளை வைத்திருப்பது சாத்தியமற்றதாகி வருகிறது. சாங்பா இனத்தைச் சேர்ந்த மேய்ப்பர்கள் தங்கள் பாரம்பரிய தொழிலைக் கைவிட்டு, இந்தியாவின் பிற பகுதிகளுக்கு வேறு வேலை தேடிச் செல்கின்றனர்.

பார்லி, மற்றும் ஆப்ரிகாட் பயிர்களுக்குப் போதிய பழங்களுக்கு தண்ணீர் இல்லாமல் விவசாயிகள் கூட்டம் கூட்டமாக வெளியேறி வருகின்றனர்.

காலநிலை மாற்றம் இந்த அழிவுகளை ஏற்படுத்தியபோதும், பூகோள வகையில் தனித்திருக்கும் இந்தப் பகுதிக்கு இன்னும் நம்பிக்கை உள்ளது.

மார்ச் 2019இல் லடாக்கிற்கு இரண்டாவது முறையாகச் சென்றிருந்தபோது, சோனம் வாங்சுக் என்ற பொறியாளரைச் சந்தித்தேன்.

கடந்த 2013ஆம் ஆண்டு பள்ளத்தாக்குகள் வழியாகச் சென்றபோது, ஒரு பாலத்திற்கு அடியில், சூரிய ஒளி விழாத இடத்தில், உருகாத ஒரு பனிக்கட்டி பெரிய மேடுபோல இருப்பதைக் கண்டதாக அவர் கூறினார்.

அந்தச் சிறிய பனிக் கோபுரத்தைப் பார்த்ததும் அவருக்கு ஒரு யோசனை தோன்றியது.

"பள்ளிக் கணிதம், ஒரு கூம்பு வடிவம்தான் தீர்வு என்று நமக்குச் சொல்கிறது," என்று அவர் என்னைப் பார்த்து சிரித்தார்.

குளிர்காலத்தில் தண்ணீரை உறைய வைத்துச் சேமித்து அதை வசந்த காலத்தில் பயன்படுத்த கிராம மக்களுக்கு அவர் உதவ விரும்பினார்.

கூம்பு வடிவில் தண்ணீரை உறைய வைத்தால், சூரிய வெப்பத்திற்கு வெளிப்படும் அதன் ஒவ்வொரு சதுர மீட்டர் மேற்பரப்புக்கும் உள்ளே அதில அளவிலான பனியைச் சேகரிக்கலாம். அது உருகுவதற்கு எடுத்துக்கொள்ளும் நேரத்தையும் அதிகரிக்கும்.

பொறியாளர் வாங்சுக் உள்ளூர் மக்களை ஒரு குழுவாகக் கூட்டி, பனிக்கூம்புகளை உருவாக்குவதற்கு ஒரு வழியைத் தேடத் துவங்கினார். இறுதியில், அவர்கள் அதற்கான ஒரு சரியான வழியைக் கண்டுபிடித்தனர்.

ஒரு மலை ஓடையில் இருந்து குழாய் மூலம் பள்ளத்தாக்கில் தண்ணீரைச் செலுத்தினர். பிறகு அக்குழு ஒரு செங்குத்தான குழாய் வழியே, அதன் முனையில் இணைக்கப்பட்ட ஒரு குறுகிய துளையின் மூலம் தண்ணீரை மேல்நோக்கிப் பீய்ச்சியடித்தது.

குழாய் வழியாக மேலே சென்ற நீர், நுண்ணிய ஷவர்போல முனை வழியாக வெளியேறியது.

இரவு நேரத்தில் -30 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலையில், குழாயிலிருந்து வெளியேறும் இந்த நீர் உறைந்து பனியானது. படிப்படியாக, மேலும் மேலும் நீர் வெளிப்பட்டு பனிக்கட்டியாக மாறியதால், அது ஒரு கூம்பு போல மாறத் தொடங்கியது.

பௌத்த தியான மண்டபங்கள் ஸ்தூபிகள் என்று அழைக்கப்படுவதுபோல இவை இப்போது ‘பனி ஸ்தூபிகள்’ என்று அழைக்கப்படுகின்றன. இப்போது அவை லடாக் முழுவதும் பிரபலமடைந்துள்ளன. 100அடி (30மீ) உயரத்தில் உள்ள சில ஸ்தூபிகள், காலநிலை மாற்றத்தால் பாதிப்படைந்திருக்கும் இந்தச் சமூகத்திற்கு நீர் ஆதாரங்களாக விளங்குகின்றன.

அதே நேரம், இவை சுவாரஸ்யமான பொழுதுபோக்காகவும் இருக்கின்றன. ஒவ்வோர் ஆண்டும் மிக உயரமான ஸ்தூபிக்கான போட்டிகள் நடைபெறுகின்றன.

ஆனால் இந்தச் சூழ்நிலையின் அநீதியை வாங்சுக்கோவும் அவரது குழுவினரும் மறக்கவில்லை. உலகம் முழுவதும் வெளியிடப்படும் கரிம உமிழ்வுகளுக்கு லடாக் மக்களான இவர்கள் விலை கொடுக்கிறார்கள்.

இந்தியா, பாகிஸ்தான், சீனாவை அச்சுறுத்தும் பொது எதிரி

"தொழில்நுட்ப கண்டுபிடிப்புகள் மூலம் பிரச்னைகளுக்குத் தீர்வு காண்பது மட்டும் போதாது. நம் வாழ்க்கை முறையில் மாற்றம் தேவை. அதை உலகிற்கு உணர்த்தவும் இந்தப் பனி ஸ்தூபிகளைப் பயன்படுத்த விரும்புகிறேன்,” என்று வாங்சுக் என்னிடம் கூறுகிறார்.

தெற்காசியாவின் பரந்த நிலப்பரப்புகளில் பயணம் செய்திருக்கிறேன். அதனால், காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்தப் போராட்டத்தில் லடாக் தனியாக இல்லை என்பதை அறிவேன்.

வரலாற்றில் முதன்முறையாக, இந்தியாவும் அதன் அண்டை நாடுகளான சீனாவும் பாகிஸ்தானும் பொதுவான ஒரு எதிரியை எதிர்கொள்கின்றன. அதன் பெயர் காலநிலை மாற்றம். இதனால் ஆற்றுப் படுகைகள் அழிந்து உலகின் அதிக மக்கள் தொகை கொண்ட பகுதிகளுக்குப் பெரும் பாதிப்பு ஏற்படும் சாத்தியம் உள்ளது.

இந்தப் பெரும் எதிரியைச் சமாளிக்க அனைவரும் ஒன்றுபட வேண்டிய நேரம் இது.

[தயாரிப்பு: ரெபெக்கா தார்ன், பிபிசி 100 பெண்கள்]

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)