10 கோடி மரங்கள் நடுவதற்காக தேசிய விடுமுறை அறிவித்த நாடு எது தெரியுமா?

    • எழுதியவர், பசில்லோ ருகாங்கா
    • பதவி, பிபிசி செய்திகள், நைரோபி

கென்ய மக்களுக்கு கடந்த நவம்பர் 13-ஆம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.

எதற்காகத் தெரியுமா?

10 கோடி மரங்களை நடுவதற்காக.

கென்ய அரசின் இந்த முயற்சி அடுத்த பத்தாண்டுகளில் 1500 கோடி மரங்களை உள்ளடக்கிய காடுகளை வளர்ப்பதற்கான லட்சிய திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

அதன் தொடக்கமாக விடுமுறையின் முதல்நாளில் 100 மில்லியன் மரங்கள் என்ற இலக்கை அடைவதற்காக ஒவ்வொரு கென்ய குடிமக்களும் குறைந்தபட்சம் 2 மரங்களையாவது நட்டிருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

காலநிலை மாற்றத்திற்கு எதிரான இந்த முன்னெடுப்பில் கண்டிப்பாக ஒவ்வொரு கென்யரும் பொறுப்புணர்வுடன் பங்கேற்பார்கள் என்று கூறியுள்ளார் கென்ய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சொய்பன் தூயா.

ஆக்சிஜனை வெளியிடும் போது காற்றில் உள்ள கார்பன் டை ஆக்ஸைடை உறிஞ்சி கொள்வதன் மூலம் புவி வெப்பமடைதலை குறைக்க உதவுகிறது.

குறிப்பிடப்பட்ட இடங்களில் மரங்களை விதைப்பதற்காக அரசு பொதுப் பண்ணைகள் மற்றும் கென்ய வனத்துறை முகாம் மையங்களில் 150 மில்லியன் விதைகளை இலவசமாக வழங்க ஏற்பாடு செய்திருந்தது அரசு.

அதே சமயம் கென்ய மக்கள் தங்கள் சொந்த நிலங்களில் பயிரிட இரண்டு விதைகளையாவது வாங்குமாறு கேட்டுக் கொண்டது.

மக்களின் ஆதரவு

கென்யாவின் கிழக்குப் பகுதியில் உள்ள மகுவேனி நகரத்தில் இந்த முன்னெடுப்பைத் தொடங்கி வைத்தார் கென்ய அதிபர் வில்லியம் ரூடோ.

அந்நாட்டின் மாவட்ட கவர்னர்கள் மற்றும் பிற அதிகாரிகளோடு இணைந்து நாட்டின் இதர பகுதிகளில் இந்த முன்னெடுப்பை தொடங்கி வைக்க அமைச்சர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்.

இந்த முன்னெடுப்பிற்காகக் கென்யாவின் இரண்டாவது பெரிய நதியான ‘அதி’ நதிக்கு அருகில் உள்ள இடத்தில் ராணுவ வீரர்கள், குடியிருப்புவாசிகள் உள்ளிட்ட டஜன் கணக்கான மக்கள் கூடியிருந்தனர். அதில் சிலர் தங்கள் குடும்பத்தோடு வந்திருந்தனர்.

இதுகுறித்து பிபிசியிடம் பேசிய விக்ளிஃப் கமாவ் என்ற மாணவர், “சுற்றுசூழல் மீதான எனது ஈடுபாட்டை வெளிப்படுத்துவதற்காக இங்கு நான் இருப்பதில் மகிழ்ச்சியடைகிறேன்,” என்று கூறினார்.

ஸ்டீபன் செலுலேய் என்ற உள்ளூர் குடியிருப்புவாசி பேசுகையில், “எங்கள் நிலத்தடி நீரின் அளவு மிகவும் குறைந்துள்ளதால் நான் இங்கு மரங்களை நடுவதற்காக வந்துள்ளேன். இங்கு ஆற்றின் மூலம் நீர் கிடைத்தாலும், மரங்களை அதிகமாக வெட்டியதால் நிலத்தடி நீர் மிகவும் குறைந்துவிட்டது,” என்று கூறினார்.

“காலநிலை மாற்றத்தை நாம் சரி செய்ய வேண்டும். அப்போதுதான் நமது காலத்திற்கு பிறகு நமது குழந்தைகள் வாழ இடம் இருக்கும்.”

இந்த மரம் நடும் முன்னெடுப்பு, ‘Jaza Miti’ என்ற இணையச் செயலி வாயிலாக கண்காணிக்கப்படும். இது நடப்பட்ட மரங்களின் எண்ணிக்கை, நடப்பட்ட தேதி உள்ளிட்ட விவரங்களை கண்காணிக்க உதவுகிறது.

மேலும் இது விதைகள் நடுவதற்கு சரியான நிலங்களை தேர்வு செய்யவும் உதவும் என்று கூறியுள்ளது கென்யச் சுற்றுச்சூழல் அமைச்சகம்.

உள்ளூர் தொலைக்காட்சிச் சேனல் ஒன்றிடம் கென்ய அமைச்சர் தூயா பேசுகையில், இத்திட்டத்திற்கு மக்களிடம் கிடைத்திருக்கும் வரவேற்பு ஆச்சரியமளிக்கிறது என்றும் அந்த நாளில் மட்டும் 20 லட்சம் பயனர்கள் செயலி வழியாகப் பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார்.

திட்டம் குறித்த விமர்சனங்கள்

ஆனால், நகரங்களில் இருக்கும் பலர் இதில் கலந்து கொள்ள வாய்ப்பில்லை என்றும் சிலருக்கு இது இன்னொரு ஓய்வுக்கான நாள் மட்டுமே என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

பிபிசியிடம் பேசிய கென்யாவைச் சேர்ந்த சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் தெரசா, “இது ஒரு சிறந்த முன்னெடுப்பு, ஆனால், எல்லா கென்யர்களும் மரங்களை நடுவதற்கு உகந்தபடி இது ஒருங்கிணைக்க படவில்லை,” என்று கூறுகிறார்.

“பல மக்கள் தங்கள் உணவுக்காக உழைப்பைத் தொடர வேண்டியுள்ளது. நாட்டின் பொருளாதாரம் சரியில்லாத சூழல் மற்றும் பலரும் பொருளாதார ரீதியாகப் போராடிக் கொண்டிருக்கும் போது இந்தத் திட்டம் அறிமுகப் படுத்தப் பட்டுள்ளது,” என்கிறார் அவர்.

மேலும், பொதுப் பண்ணைகளில் இருக்கும் 15 கோடி மரங்களில் பல வெளிநாட்டு வகையைச் சேர்ந்தவை. சரியான இடத்தில் சரியான மரங்களை விதைக்க வேண்டியது மிக முக்கியம் என்றும் அவர் குறிப்பிட்டார்.

மரம் வளர்க்கும் அதே நேரத்தில் காடுகளில் சட்டவிரோதமாக மரம் வெட்டுவதைக் கட்டுப்படுத்த தவறியதற்காகவும், ஏற்கனவே இருந்தத் தடையைச் சமீபத்தில் நீக்கியதற்காகவும் கென்ய அரசு மீது விமர்சனமும் எழுந்துள்ளது.

ஆனால் அமைச்சர் தூயா அந்த முடிவை ஆதரித்துப் பேசியுள்ளார். ஒட்டுமொத்த காடுகளின் பரப்பளவில் 5% மட்டுமே வணிக பயன்பாட்டுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளார்.

கட்டுமானத்திற்கான மரப் பலகைகள் மறும் விறகுக்கான உள்ளூர் தேவைகள் மற்றும் வேலைவாய்ப்புகளை உருவாக்குவதற்கு இந்த முடிவு அவசியமானது என்றும் கூறியுள்ள அவர் மற்ற காடுகளில் சட்டவிரோதமாக மரம் வெட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருவதாகக் கூறியுள்ளார்.

சிறப்பு விடுமுறை தினத்தைத் தாண்டியும் மரம் நடும் செயல்பாடு தொடரும் என்றும், மழைக் காலமான டிசம்பர் மாத இறுதிக்குள் 50 கோடி மரங்கள் நடப்பட்டிருக்கும் என்று நம்புவதாகவும் தூயா கூறியுள்ளார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)