"மாமன்னன் படத்தில் வடிவேலுதான் ஹீரோ" - இசை வெளியீட்டு விழாவில் நடந்த சுவாரஸ்யம்

‘மாமன்னன்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் பிரமாண்டமாக நடந்தது. இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், நடிகர்கள் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், இயக்குநர் மாரி செல்வராஜ் உள்ளிட்ட படக்குழுவினருடன் கமல்ஹாசன், சிவகார்த்திகேயன், கே.எஸ்.ரவிக்குமார், ஹெச்.வினோத், பா.இரஞ்சித் என தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரங்கள் பலரும் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

பறை இசையுடன் தொடங்கிய மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் ஏ.ஆர்.ரஹ்மான் தனது இசைக்குழுவினருடன் படத்தில் இடம்பெற்றுள்ள பாடல்களை பாட, ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகம் ஏற்பட்டது.

தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு பேசுகையில், நடிகர் உதயநிதி ஸ்டாலின் நாளைய நம்பிக்கை நட்சத்திரம் எனவும், மாமன்னன் திரைப்படம் மாபெரும் வெற்றியை ஈட்டித் தரும் எனவும் தெரிவித்தார்.

மேலும், இந்தப் படத்தின் கதையைக் கேட்டதுமே, இயக்குநரை கட்டியணைத்துப் பாராட்டு தெரிவித்ததாகவும் அவர் மேடையில் குறிப்பிட்டார்.

"இரண்டு பிரமாண்டமான படங்களை மாரி செல்வராஜ் கொடுத்துள்ளார். இந்தப் படம் புரட்சிகரமான கருத்துகளைச் சொல்லும் படமாக இருக்கும் என்பது பாடல்கள் மூலம் தெரிகிறது எனக் குறிப்பிட்டு பேசிய இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ், துப்பாக்கி படம் வெளியான இரண்டாவது நாள் பெரும் பிரச்னை ஏற்பட்டது. அதை உதயநிதி ஸ்டாலின்தான் தலையிட்டு முடிவுக்கு கொண்டு வந்தார்," என்றார்.

காட்சிகளை நீக்கச் சொன்ன பா. ரஞ்சித்

மாரி செல்வராஜின் முதல் படமான ‘பரியேறும் பெருமாள்’ படத்தைத் தயாரித்த இயக்குநர் பா.ரஞ்சித்தும், அவரது முதல் இரண்டு படங்களுக்கு இசையமைத்த சந்தோஷ் நாராயணனும் ஆகியோர் ஒரே நேரத்தில் மேடை ஏறினர்.

'எஞ்சாய் எஞ்சாமி’ பாடலால் தெருக்குரல் அறிவுடன் ஏற்பட்ட சர்ச்சைக்குப் பிறகு இருவரும் ஒன்றாகப் பணியாற்றாத நிலையில், ஒன்றாக மேடைக்கு வந்தது பார்வையாளர்களிடத்தின் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ந்து பேசிய இயக்குநர் பா. ரஞ்சித், மாரி செல்வராஜுக்கு இவ்வளவு பெரிய மேடை ஏற்படுத்திகொடுத்த உதயநிதிக்கு நன்றி. ‘பரியேறும் பெருமாள்’ படம் எடுத்தபோது பயமும் பதட்டமும் இருந்தது.

அந்தப் படத்தைச் சரியாக மக்களிடம் கொண்டு சேர்க்க ஆசைப்பட்டோம். அது சரியாக நடந்தது. அரசியல் பின்பலம் இருந்தாலும் மாரி செல்வராஜ் உடன் இணைந்து பணியாற்றுபவர்களுக்கு நன்றி சொல்கிறேன்.

படத்தின் சில காட்சிகளைப் பார்த்தேன். சில காட்சிகளை நீக்க சொன்னேன். ஆனால் மாரி செல்வராஜ் இல்லை, சரியாக இருக்கும் எனக் கூறினார். மேலும், ‘மாமன்னன்’ படத்தில் மாரி செல்வராஜ் பேசியிருக்கும் அழுத்தமான கதை மக்களுக்கும் பிடிக்கும் என நம்புவதாகவும் அவர் தெரிவித்தார்.

வடிவேலு - நகைச்சுவை குறித்து PhD

இயக்குநர் மிஷ்கின் பேசுகையில், "நடிகர் வடிவேலு ஒரு ஜீனியஸ், இதை கமல்ஹாசனை வைத்துகொண்டே சொல்கிறேன்.

நாகேஷுக்குப் பிறகு உடல்மொழியை சிறப்பாகச் செய்பவர். மதுரை மண்ணின் உடல்மொழிக்கான ஒரு வடிவத்த்தை உருவாக்கி நம்மை ரசிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார் எனவும், 20 ஆண்டுகளுக்குப் பிறகு நகைச்சுவை பற்றி PhD செய்பவர்கள் வடிவேலுவின் நடிப்பு குறித்த அதிகம் ஆராய்ச்சி செய்வார்கள்," எனப் புகழாராம் சூட்டினார்.

மேலும், "உதய் மூன்று ஆண்டுகளாக சினிமாவை விட்டு போவதாக பயமுறுத்துகிறார். ஆனால், அவர் சினிமாவில் நீடிக்க வேண்டும், ஓராண்டில் 40 நாட்கள் நடித்தால்கூட போதுமானதாக இருக்கும்," எனவும் இயக்குநர் மிஷ்கின் தெரிவித்தார்.

இயக்குநரும் உதயநிதியின் மனைவியுமான கிருத்திகாவை மேடைக்குப் பேச அழைத்தபோது முதலில் மறுத்து, பிறகு துர்கா ஸ்டாலின் சொன்னதும் மேடை ஏறினார்.

அப்போது, "இரண்டு நாட்களுக்கு முன்பே ’மாமன்னன்’ படத்தை பார்த்துவிட்டேன். இதில் வடிவேலுதான் ஹீரோ" எனப் பேசினார். மேலும், "உதயநிதி ஸ்டாலினின் பயணம் மிகப் பெரியது, சினிமாவைத் தாண்டிய அந்த பயணத்திற்காகத் தான் காத்திருப்பதாகவும்" தெரிவித்தார்.

நடிகரும் இயக்குநருமான விஜய் ஆண்டனி, இங்கு பேசியவர்கள் அனைவரும் உதயநிதியை சினிமாவை விட்டுப் போக வேண்டாம் எனக் கூறுகிறார்கள். ஆனால் நான் அவரை வாழ்த்தி, மகிழ்ச்சியுடன் அனுப்பி வைக்கிறேன். நீங்கள் அங்கயே இருங்கள் எனக் கூறினார்.

தமிழ் சினிமாவில் சமூக நீதி

இயக்குநர் வெற்றிமாறன் வருகையின்போது, அரங்கம் அதிரும் அளவிற்கு பார்வையாளர்கள் வரவேற்பு தெரிவித்தனர்.

அவர் மேடையேறிப் பேசும்போது, "சமூக நீதியைப் படமாக எடுத்து வசூல் ரீதியாக வெற்றியடைய முடியும் என்பது தமிழகத்தில் மட்டும்தான் நடக்கும் எனவும், தமிழ் சினிமாவில் இருக்கும் மிக குறைந்த ஒரிஜினல் நடிகர்களில் வடிவேலு ஒருவர்" எனவும் குறிப்பிட்டார்.

அதோடு, "மாமன்னனில் உதயநிதி டைட்டில் ரோல் பண்ணவில்லை. வடிவேலு ஐயாதான் டைட்டில் ரோல் பண்ணியிருக்கிறார். சமூக நீதியை சினிமாவில் பேசியதால்தான், சமூக நீதிக்கு எதிரானவங்களை நாம் எதிர்க்க முடிகிறது," எனக் குறிப்பிட்டார்.

”விளையாட்டா படம் பண்ணத் தொடங்கினேன் எனச் சொல்லிருந்தீங்க, ஆனா இப்ப விளையாட்டுத் துறைக்கே அமைச்சராகிருக்கீங்க” என தனக்கே உரிய ஸ்டைலில் கலகலப்பாகப் பேசினார் நடிகர் சிவகார்த்திகேயன்.

மேலும், "நீங்கள் இருக்கும் துறை நிறைய வீரர்களை உருவாக்கும் துறை, பெருமையைச் சேர்க்கும் துறை. அதை இன்னும் சிறப்பாகச் செய்ய வேண்டும் எனவும் நினைக்கிறீர்கள். அதனால், மாமன்னனுக்கு இந்த மாவீரனின் வாழ்த்துகள்," எனத் தெரிவித்தார்.

"என்னுடைய படத்திற்கு இவ்வளவு பெரிய மேடை கிடைக்குமா எனத் தெரியவில்லை. அதனால் என்னுடைய படத்தையும் புரமோட் செய்துகொண்டேன்.

மாமன்னன் படத்தின் நாயகி கீர்த்தி சுரேஷ், உதயநிதியின் சினிமா மற்றும் அரசியல் பயணத்திற்கு ‘மாமன்னன்’ முக்கியமான திரைப்படமாக இருக்கும்," என்றார்.

பாடகர் வடிவேலு

நடிகர் வடிவேலு, மாமன்னன் படம் அல்ல, இது நிஜம் எனக் கூறி பேச்சைத் தொடங்கினார்.

"ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் நான் பாட வேண்டும் என்று உதயநிதி, மாரி செல்வராஜ் ஆகியோர்தான் வற்புறுத்தினர். எனக்கு “ஆத்தாடி” என ஆகிவிட்டது. பிறகு ஒரு டியூன் அனுபினார்கள். அதைக் கேட்டால் ஹேர்பின் பெண்ட் போல் இருந்தது," என்று வடிவேலு சொல்லவே அரங்கம் முழுக்க சிரிப்பலை.

தொடர்ந்து பேசிய அவர், "எங்க இருந்தாலும் இவன கட்டி தூக்கி வாங்கனு சொல்லிட்டார். ஸ்டூடியோவில் உள்ள போனதும் வேர்த்து ஊத்திடுச்சி. பக்கெட் வெச்சிருந்தா நிரம்பியிருக்கும். அதுக்கு அப்பறம் ஏ.ஆர்.ரஹ்மான் பாடிக் காட்டியதை நான் பாடினேன்," என்றார்.

மேலும், "இயக்குநர் மாரி செல்வராஜ், ஊசி முனையைவிடக் கூர்மையாக காட்சிகளை எடுக்கிறார். படத்தில், அவர் பேசியிருக்கும் வலி எல்லா மனிதர்களிடமும் உள்ளது.

உண்மையில், மாரி செல்வராஜ் தான் மாமன்னன், உதயநிதி ஸ்டாலின் மன்னாதி மன்னன். கமல்ஹாசன் இயக்கத்தில் நடிப்பதாக இருந்தது. அந்தப் படத்தைப் பண்ண வேண்டும் என்பது என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்," என கமல்ஹாசனிடம் கோரிக்கையும் வைத்தார்.

வடிவேலு தான் மாமன்னன்

மாமன்னன் படத்தின் நாயகன் உதயநிதி ஸ்டாலின் பேசும்போது, "நடிகர் வடிவேலு இந்தப் படத்தில் நடிக்க மறுத்தால், வேறு படம் எடுப்போம் என நானும் மாரி செல்வராஜூம் முடிவெடுத்தோம். இந்தப் படத்தின் மாமன்னன் வடிவேலுதான். அவர் இல்லை என்றால் மாமன்னன் கிடையாது," என்றார்.

மேலும், "இப்போதைக்கு இதுதான் கடைசி படம். இன்னும் மூன்று ஆண்டுகள் கழித்து படம் நடிக்க வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் மாரி செல்வராஜ் படத்தில்தான் நடிப்பேன்,' எனக் குறிப்பிட்டார்.

"மாமன்னன் கதையை யோசிக்கும்போது, இது படமாகுமா என்ற சந்தேகம் இருந்து. ஆனால் இன்று படமாகி, இந்தக் கட்டத்திற்கு வந்துள்ளது எனப் பெருமிதத்துடன் பதிவு செய்தார் இயக்குநர் மாரி செல்வராஜ்.

எனக்குள் ஒரு தாழ்வு மனப்பான்மை இருக்கும். அதற்குக் காரணம் வாழ்கையில் நான் பட்ட அடிகள். ஆனால் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பேசும்போது அது மாறிவிட்டதாகவும்" தெரிவித்தார்.

மேலும், "மாமன்னன் என்னுடைய அப்பா. அதை வடிவேலுவிடம் சொல்லித்தான் கதை கூறினேன். அதை முழுமையாக உள்வாங்கிகொண்டு, படத்தில் பிரதிபலித்திருக்கிறார். நான் வன்முறையை விரும்பும் ஆள் கிடையாது. இது ஒரு நிஜ வன்முறையின் சிறு விஷயம்தான்," என மாரி செல்வராஜ் தெரிவித்தார்.

‘மாரி அரசியல்’

இறுதியாக மேடை ஏறினார் கமல்ஹாசன்

இறுதியில் மேடை ஏறிய கமல்ஹாசன், "மாமன்னன் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்பது என் ஆசை. இது மாரி அரசியல் என்று சொன்னார்.

ஆனால், இது நம்ம அரசியல் என்றுதான் சொல்ல வேண்டும். இந்தியா எந்தப் பாதையில் செல்ல வேண்டும் என்று தீர்மானிக்கும் தலைமுறையில் இருக்கிறோம். என்னைப் பொறுத்தவரையில் இது என்னுடைய அரசியலும்தான்," எனப் பேசினார்.

தொடர்ந்து பேசிய கமல்ஹாசன், வடிவேலு இதில் மாமன்னனாக இருக்கிறார். தேவர் மகன் படத்தின் இறுதிக் காட்சியில் என்னுடைய காட்சியையும் தாங்கிப்பிடித்தவர் வடிவேலு.

கீர்த்தி சுரேஷ் அழகாக இருக்கிறார் என்று கூறினார்கள். அழகோடு அறிவும் சேர்ந்தால்தான் பேரழகு. இந்தப் படத்தைத் தேர்வு செய்து நடித்ததால் அது தெரிகிறது.

அழகும் இருக்கிறது அறிவும் இருக்கிறது. மாரி செல்வராஜ் எதிர்த் தரப்பிற்கும் சம உரிமை கொடுக்கிறார். அதில் அவருடைய சம உரிமை தெரிகிறது," என்று படக்குழுவினரை வாழ்த்திவிட்டு, ’மாமன்னன்’ படத்தின் சமூக நீதி சார்ந்த உரையாடலை அனைவரும் கேட்டே ஆகவேண்டும் எனவும் தெரிவித்தார்.

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ்: